உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 1976இல் முழுநேர முனைவர் பட்ட மாணவனாகச் சேர்ந்தேன். ‘தென்னார்க்காடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்’ என்பது என் ஆய்வுத் தலைப்பு. அப்போது தமிழில் வெளிவந்த நாட்டுப்புறப் பாடல் தொகுப்புகளையும் ஆய்வுகளையும் தேடித் தேடிப் படித்தேன். ‘ஆராய்ச்சி’, ‘தாமரை’ போன்ற இதழ்களையும் படித்தேன். பேராசிரியர் நா.வானமாமலையின் கட்டுரைகளும் நாட்டுப்புறப் பாடல் பதிப்புகளும் கதைப்பாடல் பதிப்புகளும் என் மனதுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தேன். அப்போது பேராசிரியர் தர்வாட் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவரோடு தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டேன். சென்னை வரும்போதெல்லாம் அவரைச் சந்தித்து உரையாடினேன்.

இந்தக் காலகட்டத்தில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய கங்காணி, சிவகாசிக் கலகம் பற்றிய கட்டுரைகளைப் படித்தேன். அக்கட்டுரைகளை மிகச் சிறந்தவையாக நான் கருதினேன். இப்படித்தான் எனக்கும் பேராசிரியர் ஆ.சி.க்குமான அறிவார்ந்த அறிமுகம் ஏற்பட்டது.

aa sivasubramanian 378நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளராக இருந்தபோது 1986இல் அப்போதைய துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியன் அவர்களின் அனுமதியோடு ‘நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள்’ என்ற பொருண்மையில் கருத்தரங்கு நடத்தினேன். அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்குமாறு ஆ.சி. அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். சிறந்ததொரு கட்டுரையை வழங்கினார். 21-05-1986 அன்று அவர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வந்தபோது நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. என் நூல்கள் வாயிலாகவும் பேராசிரியர் நா.வா. வாயிலாகவும் அவரும் என்னை நன்கு அறிந்திருந்தார். அது இன்றுவரை தொடர்கிறது.

நான் பொறுப்பேற்று நடத்தும் கருத்தரங்குகளில் அவரைத் தவறாமல் அழைப்பதுண்டு. என் மாணவர்களை அவர்களின் ஆய்வுத் தலைப்பு குறித்து அவருடன் உரையாடுமாறு கூறுவேன். குறிப்பாக அவருடைய ‘மந்திரம் சடங்குகள்’, ‘அடித்தள மக்கள் வரலாறு’, ‘பூச்சியம்மன் வில்லுப்பாட்டு’, ‘தமிழகத்தில் அடிமை முறை’ போன்ற நூல்களை வாசிக்கவேண்டும் என்பேன். அவருடைய சிறு வெளியீடுகளான ‘பிள்ளையார் அரசியல்’, ‘விலங்கு உயிர்ப்பலிச் சட்டத்தின் அரசியல்’, ‘பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள்’ போன்றவற்றையும் படிக்குமாறு மாணவர்களிடம் கூறுவேன். இவை எல்லாம் நான் படித்து மகிழ்ந்தவை. அவை ஆ.சி. அவர்களின் ஆய்வுத் திறனையும் சமூக அக்கறையையும் பரந்துபட்ட களப்பணிச் செயல்பாடுகளையும் வெளிப்படுத்துபவை.

எப்போதும் எங்கள் கருத்துகள் ஒன்றுபட்டிருக்கும். 01-03-1990இல் திருவனந்தபுரத்தில் நடந்த கருத்தரங்குக்குச் சென்றிருந்தோம். இருவரும் ஒரே தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம். உள்ளடக்கம் ஒன்றாக இருந்தது. ஒருவர் மட்டுமே கட்டுரை படித்தால் போதுமானது என்று கூறி என்னைக் கட்டுரை படிக்கச் சொன்னார் ஆ.சி. இப்படிப் பல நேரங்களில் நடப்பதுண்டு. செயலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றில் இருவரும் கலந்து கொள்ளும் போது ஒரே அறையில் தங்கியிருப்போம். கருத்துப் பரிமாற்றம் நடக்கும். தூத்துக்குடியில் அவர் இல்லத்துக்குச் சென்ற போதெல்லாம் அவர் நூலகத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இவற்றைப் பற்றியெல்லாம் கூறினால் அது நூலாக விரியும் என்பதால் அவரோடு இணைந்து பணியாற்றிய அனுபவத்தை மட்டு இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்’ பத்துத் தொகுதிகள் வெளியிடும் திட்டம் குறித்து நான் என் பேராசிரியர் ‘பதிப்புச் செம்மல்’ ச.மெய்யப்பன் அவர்களிடம் கூறியபோது பதிப்பாசிரியர் குழுவை முடிவு செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்வதற்கு எனக்குச் சுதந்திரம் வழங்கினார். ஐந்து தொகுதிகள் என் சேகரிப்பிலிருந்தும் ஐந்து தொகுதிகள் ஐந்து நாட்டுப்புறவியல் அறிஞர்களின் சேகரிப்பிலிருந்தும் வெளியிடுவது எனத் தீர்மானித்து, பத்தாவது தொகுதியின் பதிப்பாசிரியராக இருக்குமாறு ஆ.சி. அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். சிறந்த பதிப்புமுறை உருவாக்கப் பெற்று அதன்படி அனைவரும் பணிகளை மேற்கொண்டோம். அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி அதுவரை செய்யப்பட்ட பணிகளை முதன்மைப் பதிப்பாசிரியர் என்ற முறையில் சீர்தூக்கிப் பார்த்து ஆலோசனைகள் கூறுவேன்.

ஆ.சி. அவர்கள் என்னிலும் மூத்த, என் மதிப்பிற்குரிய நண்பர். அவரிடம் திரும்பத் திரும்பத் திருத்தம் சொல்லக் கூறுவதில் எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால், ஒரு நாளும் அவர் என் செயலைத் தவறாக எடுத்துக் கொள்ளவோ முகம் சுளிக்கவோ இல்லை. பதிப்பு சிறப்பாக வரவேண்டும் என்று நான் முயல்வதை அவர் புரிந்து கொண்டு எத்துணை முறை திருத்தம் கூறினாலும் அதனை ஏற்றுச் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இதனை அடுத்து நான் முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்து மேற்கொண்ட ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ திட்டத்திலும் அவர் ஒரு தொகுதியை (தொகுதி 10) முடித்துக் கொடுத்தார். முந்தைய திட்டத்தில் வழங்கிய அதே ஒத்துழைப்பு. சிக்காகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஏ.கே.இராமானுஜம் தன்னோடு இணைந்து பணியாற்றுமாறு எங்களை அழைத்தார். இராமானுஜத்தின் மறைவால் அப்பணி நிறைவு பெறாமல் போய்விட்டது.

பேராசிரியர் ஆ.சி. மிகச்சிறந்த கள ஆய்வாளர். தமிழகமெங்கும் ஓடிஓடிக் களஆய்வு செய்தவர். பல அரிய தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தியவர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தொன்றில் அவருடைய கால் பாதிக்கப்பட்டது. களப்பணிக்கான ஓட்டம் தடைப்பட்டது. ஆனால் ஆய்வுகள் தடைப்படவில்லை. அவரால் எழுத இயலாது. அவர் சொல்லச் சொல்ல பிறர்தான் எழுதுவர். இதுவும் அவர் ஆய்வைத் தடைப்படுத்தவில்லை. அவர் ஆய்வுப் பயணம் தொடர்கிறது. அதன் பிறகு ‘பனைமரமே! பனைமரமே!’ உள்ளிட்ட சிறந்த நூல்கள் வெளிவந்துள்ளன; இன்னும் வெளிவர உள்ளன. அவர் வெளியிடும் அனைத்துக் கட்டுரைகளையும் நூல்களையும் உடனுக்குடன் எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவை என்னை வியக்க வைக்கின்றன. எந்த ஒன்றையும் நுணுக்கமாகப் பார்க்கும் பார்வை அவருடையது. எந்த ஒரு ஆய்வும் சமூக மேம்பாட்டிற்கு உதவ வேண்டும் என்பது அவர் நோக்கமாக உள்ளது. சமூக அக்கறையில்லாத ஆய்வுகளை அவர் விமர்சிக்கத் தவறுவதே இல்லை. சிறந்த ஆய்வாளர்களை அவர் பாராட்டத் தயங்குவதும் இல்லை.

அண்மையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (D.Litt.) வழங்கிப் பெருமைப்படுத்தியது. இதற்காக அமைச்சர் மாண்பமை பாண்டியராஜன் அவர்களையும் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களையும் தொடர்புடைய அனைவரையும் பாராட்டுகிறேன். பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் இதற்கு மேலும் தகுதியானவர். என் மதிப்பிற்குரிய நண்பர் பல்லாண்டு பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து தமிழ்ப் பணியாற்ற வாழ்த்துகிறேன்.

- முனைவர் ஆறு.இராமநாதன்