புலவர், பேராசிரியர், ஆசி, சிவம், சிவசு என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஆ.சிவசுப்பிரமணியன் ஒரு நடமாடும் வரலாற்றுக் களஞ்சியம். நேர்ப் பேச்சிலும், தொலைபேசி உரையாடல்களிலும் அவர் அள்ளிக்கொட்டும் தகவல்கள் ஏராளம். தமிழ்நாட்டில் அவரின் கால்கள் செல்லாத இடங்கள் மிகக் குறைவு. குறிப்பாகத் தென்தமிழ்நாட்டின் கடற்கரையில் வீசும் அறிவுச்சூறாவளி அவர். எளிமையும் தன்னை முன்னிலைப்படுத்தாத் தன்மையும் அவரின் இயல்புகள். கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியற்ற ஆளுமை. அவரின் ஞானமும், கோபமும் தோழர்களால் ஒரேவிதத்தில் கொண்டாடப்படும். அரை நூற்றாண்டு அறிவு வேலை அவருடையது. தமிழ்நாட்டின் சமூக வரலாறும், பண்பாட்டு வரலாறும் இவரைத் தவிர்த்து உருவாகிவிட முடியாது. ஆ.சிவசுப்பிரமணியனின் நேர்காணல்கள் “தனித்து ஒலிக்கும் குரல்” என்று தொகுக்கப்பட்டுள்ளன.

aa sivasubramanian interviewsபெரும்பாலும் நேர்காணல்கள் என்பவை தமிழ்ச் சூழலில் சுயவெளிப்பாடாக மட்டுமே அமைந்துவிடுகின்றன. இந் நேர்காணல்கள் யாவையும் இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. இவற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது இப்படியெல்லாம் தமிழில் சாத்தியமா? என்ற பிரமிப்புதான் ஏற்படுகின்றது. உலக அளவிலான ஆளுமைகளின் தலைசிறந்த நேர்காணல்கள் வரிசையில் கருதத் தக்கவையாக இவை திகழ்கின்றன. நேர்காணல் கண்ட நண்பர்களையும், வெளியிட்ட இதழ்களையும் மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும்.

ஆ.சிவசுப்பிரமணியனின் வாழ்க்கை குறித்த பதிவுகள் இதில் மிகக் குறைவு. ஓர் ஆய்வாளராக, அறிஞராக அவர் உருவான விதத்தினை இந்த உரையாடல்கள் வெளிக்கொணர்கின்றன. வ.உ.சி.யின் மரபில், தேசியத்தில் ஊறித் திளைத்த குடும்பப் பின்புலத்திலிருந்து, பொதுவுடைமை சார்ந்த அவரின் பாய்ச்சல் அவரே கண்டடைந்தது. நூல்களைக் காட்டிலும், செயல்பாடும் தலைமைத் தோழர்களும் ஆ.சி. உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றனர். அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, நா.வானமாமலை, ப.மாணிக்கம் ஆகியோரை எல்லா இடங்களிலும் நினைவு கூர்கிறார். அது போலவே இவரின் கள ஆய்வுகள், மக்களுடனான தொடர்புறவுகள் ஆகியவைதாம் இவருக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சி இருக்கின்றன. விரிந்த ஆழமான வாசிப்புப் பழக்கம் இவரின் சுவாசம்போல ஆகி நிற்பதை இவரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மெய்ப்பிக்கின்றன.

நாட்டார் வழக்காற்றியல் தமிழ்ச் சூழலில் வளர்ந்த வரலாற்றோடு ஆ.சி.யும் சக பயணியாக வளர்கிறார். இப்புலத்தில் முன்னும், பின்னும், சம காலத்திலும் நிகழ்ந்தவற்றை நேர்மையோடு பதிவு செய்கிறார். இத்துறையின் நிறை குறைகளை மதிப்பிடுகிறார். பயன்பாட்டு நாட்டார் வழக்காற்றியலை எச்சரிக்கையோடு அணுகவேண்டும் என்கிறார். நாட்டார் பண்பாட்டு உருவாக்கம் இவரின் தனித்தன்மை வாய்ந்த ஆய்வுப்புலம். சடங்குகள், நம்பிக்கைகள், தெய்வங்கள், சாதிகள் தொடங்கி, இன்று பொருள்சார் பண்பாடு என்ற நிலை வரை ஆய்வுகளை முன் கொண்டு செல்கிறார். நாட்டார் வழக்காற்றியல் வரலாற்றோடு அவரும் வளர்கிறார்.

Holistic approach என்னும் முழுமை அணுகுமுறையைப் புழங்கு பொருள்கள் வழியாகக் கட்டமைக்கப்படும் பண்பாட்டை, இவரின் துண்டு, உப்பு, மரக்கால், தோணி குறித்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. நாட்டார் தெய்வங்கள் சாதி, சமய மீட்பில் முடிந்து விடாதா? நாட்டார் வழக்காற்றியல் சாதியைப் புதுப்பிக்கிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் நடைமுறை சார்ந்து தெளிவானப் பார்வைகளை முன்வைப்பது இவரின் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகிறது.

அடுத்து வரலாறு பற்றி நிறைய பேசுகிறார். நடப்பு வரலாறுகளின் போதாமை, வரலாற்றை இடைமறித்தல், கீழிருந்து வரலாற்றினை உருவாக்குதல், வாய்மொழி மற்றும் உள்ளூர் வரலாறுகளை எழுதுதல், சமூக வரலாற்றையும், பண்பாட்டு வரலாற்றையும், அரசியல் பார்வையுடன் உருவாக்க வேண்டியதன் அவசியம் ஆகியன பற்றி விரிவாகப் பேசுகிறார். இவற்றினூடாக வரலாற்று எழுதியல் பற்றிய அணுகுமுறைகளையும் மிக எளிமையாகச் சொல்லிவிடுகிறார்.

அடித்தள மக்கள் ஆய்வு என்பதை விளிம்பிலுள்ளவர்கள் மையத்துக்கு வருவதோடு பலர் நிறுத்திக்கொள்ள, வரலாறு என்பதே வர்க்கங்களின் வரலாறுதான் என்ற புரிதலோடு தீர்வுகளை நோக்கித் தான் பயணிப்பதாகச் சுட்டுகிறார். பின் நவீனத்துவம் போன்றவற்றை அணுகும் விதம் குறித்தும் பேசுகிறார்.

வரலாற்றிலிருந்துதான் எல்லாமும் என்பதைத் திரும்பத் திரும்பப் பதிவு செய்கிறார். திருமலை என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி கல்வெட்டு வாயிலாக “அரவத் தண்டம்” பற்றிக் குறிப்பிடுவதையும், அரசியலில் முற்போக்காகச் செயல்பட்ட வாஞ்சிநாதன் பண்பாட்டில் பிற்போக்காக “கேவலம் கோமாமிசம் உண்ணும் ஜார்ஜ் பஞ்சமன்” என எழுதி வைத்திருந்ததையும், ஒடுக்குமுறைகள் தாளாமல் மதம் மாறியவர்கள் “நாங்களெல்லாம் நம்பர் போட்ட மரம்” என்பதையும் பொருத்தமாக ஆ.சி. பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கிறித்தவம் குறித்து இவரைப்போல் விவரங்கள் உடையவரைக் காண்பது அரிது. கிறித்தவப் பாதிரியார்களே வியக்குமளவுக்கு கிறித்தவத்தை அறிந்தவர். கத்தோலிக்கம், சீர்திருத்தக் கிறித்தவம், இயேசு சபை ஆகிய எல்லா வகைமை பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

“நாம் தண்ணீரைப் போல அல்ல, உப்பைப்போல இருக்க வேண்டும்” என்ற நா.வா.வின் தலைமைச் சீடர் ஆ.சி. உப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருக்கின்றார் என்பதுதான் பிரமிப்பு. காலமும், அதிகாரமும், வாய்ப்புகளும் மனிதர்களை மனிதப் பண்புகளிலிருந்து நீக்கம் செய்துவிடுகின்றன. மக்களை உண்மையாக நேசிப்பவர்கள், மண்ணில் மாற்றம் மலர வேண்டும் என்று உண்மையாக உழைப்பவர்கள் தங்கள் நிலைகளிலிருந்து தடம் மாற மாட்டார்கள் என்பதற்கு இவரே சான்று என்பதை இவரின் கருத்துக்கள் உணர்த்துகின்றன.

இன்று படைப்பாளிகள், அறிஞர்கள் பலரும் தங்களைச் சுத்த சுயம்புக்களாக - நடுநிலையானவர்களாக - எந்தச் சார்பும் அற்றவர்களாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறார்கள். நாட்டில் நடக்கும் எது பற்றியும் கனத்த மௌனம் காக்கிறார்கள். இவர்களிலிருந்து ஆ.சி. மாறுபட்டவர். தன் சார்புத்தன்மையை மிடுக்கோடும் கம்பீரத்தோடும் வெளிப்படுத்துபவர். சமூக அநீதிகளுக்கெதிராக நீளும் குரலுக்கும், விரலுக்கும் சொந்தக்காரர். ஆய்வாளர்களுக்கு கட்சி அரசியல் அல்ல; கருத்து அரசியல் அவசியம் என்பதில் அக்கறை உள்ளவர்.

ஆராய்ச்சிக்குழு, தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம், இயக்கம் ஆகியவற்றில் செயல்பட்ட அனுபவமும் இதர இடதுசாரிகள், பெரியாரியர்கள், அம்பேத்கரியர்கள் ஆகியோருடனான கருத்துப் பரிமாற்றமுமே தன் கருத்துநிலைகளைச் சரியான வழியில் செலுத்துகின்றன என்கிறார்.

இந்த நேர்காணல்கள் தொகுப்பு இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு விதத்தில் நோயுற்றுக் கிடக்கும் தமிழ்க் கல்வி உலகுக்கு நோய் தீர்க்கும் மூலிகையாக இது பயன்படலாம். ஆய்வாளர்கள், பேராசிரியர்களுக்கு ஆய்வியல் மூலங்களை, முறைகளை, களங்களைச் சுட்டும் கைவிளக்காக அமையும் சிறப்புடையது. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றையும், சமூக வரலாற்றையும் உருவாக்குவதற்கான கையேடாகவும் அமையும் தகுதியுடையது. பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் களப்பணியாளர்களுக்கு வழிகாட்டிக் குறிப்புகளாகவும் இவை அமையும் என்பது மிகையல்ல. பல வரலாறுகளும், வழக்காறுகளும் இதற்குள்ளும் புதைந்து கிடக்கின்றன. அவரவர் தேவைக்கேற்ப தேடியடையலாம்.

இத்தொகுப்பினை நேர்த்தியாகச் செப்பம் செய்து தொகுத்துள்ள இளம் மார்க்சியர், நம்பிக்கையளிக்கும் ஆய்வாளர் தோழர் க.காமராசனுக்கு அன்பு.

(தனித்து ஒலிக்கும் குரல் நூலுக்கான அணிந்துரை)

தனித்து ஒலிக்கும் குரல்

ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல்கள்

தொகுப்பும் பதிப்பும்: க. காமராசன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை,

விலை: 200/-

- முனைவர் இரா.காமராசு