மனிதர்கள் அனைவரும் அந்தக் காலங்களில் நாடோடிகளாய்த் திரிந்தவர்களே. ஓர் இடத்தில் வசிப்பு என்பது இரண்டாயிரம் வருடங்களாகத்தான். இன்று மனிதர்களின் அவசியத் தேவைகளில் ஒன்றாகிப் போனது வசிப்பிடம். இதனை இல்லம், வீடு, மனை, மாளிகை முதலிய பெயர்களில் அழைக்கிறோம். இவைகளின் அமைப்பை ஒட்டிக் குடிசைவீடு, கூரை வீடு, ஓட்டு வீடு, காரை வீடு, கல்லு வீடு, மாடி வீடு என்கிற வகையில் வீடுகள் குறிப்பிடப்படுகின்றன. ‘அடுக்ககம்’ என்பது மாநகரங்களில், நகரங்களில் சமீப வருடங்களில் அங்கிங்கெனாதபடி எங்கும் எழுப்பப்பட்டு வருகின்றன. 

“வீட்டுக்கு வீடு வாசற்படி”

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை நடத்திப் பார்”

“எலி வளையானாலும் தனி வளை வேணும்”

“கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியாதே”

“இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்குப் பல வீடு”

“காடு வா... வாங்கிறது... வீடு போ போங்கிறது” 

--இப்படியாக வீடு பற்றிய பழமொழிகள் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். 

“தங்க ரயிலேறி நான் தாய் வீடு போகையிலே எனக்கு

தங்க நிழலில்லை-தாய் வீடு சொந்தமில்லை” 

--என்றொரு நாட்டுப்புறப் பாட்டைக் கொல்லங்குடி கருப்பாயி கலை இலக்கிய மேடைகளில் பாடக் கேட்ட துண்டு.

“வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடேசிவரை யாரோ” உறவுகளின் உண்மைத் தன்மை குறித்துக் கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலைக் கேட்காதோர் இருக்க இயலாது.

“மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமோ...?” கவிஞர் வாலி, ‘படகோட்டி’ திரைப் படத்தில் எழுதிய இந்தத் தத்துவப் பாடல் அறியாத எம்.ஜி.ஆர் ரசிகர்களைப் பார்க்க முடியாது.

‘அவள் ஒரு தொடர்கதை’ எழுபதுகளில் வெளி யான கறுப்பு-வெள்ளைப் படம். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவானது. இதில் கதாநாயகி தனது சகோதரனை வீட்டை விட்டுப் போகச் சொல்லி விடுவாள். அப்போது வீட்டை விட்டு வெளியேறிய சகோதரன், “தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என்று தெருவில் பாடித் திரிவான். கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களின் விருப்பத்திற் குரிய பாடலாகத் திகழ்கிறது. 

பாலுமகேந்திரா ‘வீடு’ என்கிற பெயரில் திரைப் படம் எடுத்திருக்கிறார். வீடு சொந்தமாகக் கட்டுவதற்காக நடுத்தரக் குடும்பம் படும்பாட்டை தத்ரூபமாகக் காட்டி இருப்பார். இந்தப் படம் தேசிய விருதினைப் பெற்றது என்பது குறிக்கத் தகுந்த தகவலாகும். ஜெயபாரதியின் ‘குடிசை’ படமும் விருது வாங்கிய படமாகும். இவைகள் தவிர வீடு பெயரில் ‘எங்க வீட்டுப்பிள்ளை’, ‘வியட்நாம் வீடு’, ‘வசந்த மாளிகை’, ‘இல்லம்’, ‘சின்ன வீடு’, ‘பிறந்த வீடா புகுந்த வீடா’ போன்ற திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. 

“பாரதவிலாஸ்”, “பாமா விஜயம்”, “எதிர் நீச்சல்” முதலிய படங்கள் வீட்டைக் கதைக் களமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். வெண்மணியில் வெந்து மடிந்த தியாக தீபங்களைப் பற்றிப் பாரதி கிருஷ்ணகுமார் எடுத்த ஆவணப் படத்தின் பெயர் “ராமையாவின் குடிசை” என்பதாகும். 

“ஒவ்வொரு கல்லாய்” இது கவிஞர் கந்தர்வன் எழுதிய சிறுகதை. புதிதாக வீடு கட்டுகிற நடுத்தர வர்க்கத்தினரின் கஷ்ட நஷ்டங்களை கதையாக்கி இருக் கிறார். தொண்ணூறுகளின் முற்பகுதியில் இது எழுதப் பட்டு இருந்தாலும்... எப்போது படித்தாலும் புது வீடு கட்டுபவர்களின் சிரமங்களைச் சித்திரித்துக் காட்டும். ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்கிற அரசாங்கம் அறிவித்த வாசகத்தை “வீடு கொடு மரம் வளர்க்கிறோம்” ஹைக்கூ கவிஞன் ஒருவன் கிண்டலடித்திருக்கிறான்.

வீடு கட்டும் முறைகளும் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டே வருகின்றன. அந்தக் காலங்களில் திண்ணை இல்லா வீடுகளைக் காண்பதரிது. இன்று திண்ணை இருக்கிற வீடுகளைப் பார்ப்பதரிது. அக்கிரகார வீடுகளில் துளசி மாடம் அவசியம் அமைக்கப்பட்டிருக்கும். இன்று துளசி மாடம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை. 

வீட்டின் உறுதிக்கு சுண்ணாம்பு அரைத்து அதில் கருப் பட்டி, முட்டை முதலியன கலந்து கட்டடப் பணியில் உபயோகிப்பர். இன்று நிலைமை தலை கீழ்.

பிறக்கும் பிள்ளைகளுக்குப் புண்ணியாசனம் அல்லது பெயர் சூட்டும் விழா, காதணி விழா விசேடங்கள் நடத்துவர். அது போன்றே புதிதாகக் கட்டிய வீடுகளுக்கு “கிரகப்பிரவேசம்” அல்லது புதுமனை புகுவிழா நடத்துவர். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது போல் வீடுகளுக்கும் பெயர் வைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கணவனை ‘வீட்டுக்காரர்’ மனைவியை ‘வீட்டுக் காரி’ என்று விளிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு கடைப் பிடிக்கப்படுகின்றன. பெண்களுக்கு மட்டும் பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இரு வீடுகள். வேலி தாண்டுகிற ஆண்கள் அடிக்கடி போகும் வீடு “சின்ன வீடு”. 

அரசு பணியில் இருந்தாலும் சரி, தனியார் நிறுவனப் பணியில் இருந்தாலும் சரி சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற எண்ணம் அனைவரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதனால் ஒவ்வொரு நகரிலும் புதுப் புது புறநகர் பகுதிகள் முளைத்த வண்ணம் உள்ளன. சிலர் ‘ரியல் எஸ்டேட்’ தொழிலில் கொடி கட்டிப் பறக்கின்றனர். ஆறுகளில் மணற்கொள்ளை அடிக்கப் பட்டு, பொட்டிழந்த பெண் போல் எல்லா ஆறுகளும் காட்சி தருகின்றன. ‘வாஸ்து’ என்கிற புதுவிதக் கலாச் சாரம் புதிதாக வீடு கட்டுபவர்களை, கட்டியவர்களைப் படாதபாடு படுத்துகிறது. வாஸ்து ஜோதிட மணிகளின் வங்கிக் கணக்குகளின் இருப்பை ஏற்றுகின்றன.

கழிப்பறை, வீட்டுக் கொல்லைப் பகுதியில் கட்டு வதே அசிங்கமெனக் கருதிய காலம் உண்டு. இன்று கழிப்பறை வசதியுடன் அமைந்த படுக்கை அறைகள் கட்டப்படுகின்றன. இதில் கழிப்பறை, இந்த மூலையில் இருக்க வேண்டும்... கழிப்பறைப் பாதை அந்தத் திசை பார்த்து அமைக்க வேண்டும் என்று வாஸ்து ஜோதிடர்கள் அளந்து விடுகிறார்கள். இன்றும் கூட கிராமங்களில் பெரும் பாலான வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. 

வீடுகளைப் பற்றி விவரிக்கும் போது செட்டிநாட்டு வீடுகளைப்பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா...? செட்டி நாட்டு வீடுகளை வீடுகள் என்கிற வடிவத் திற்குள் கொண்டுவரக் கூடாது. அவைகள் பங்களாக்கள். உயர்தரத் தேக்கு மரங்கள் உபயோகப்படுத்தப்பட்டு கட்டப்பட்ட பிரம்மாண்டமான பெரிய கட்டடங்கள். ஒவ்வொரு வீட்டிலும் எண்ணற்ற அறைகள். மையப் பகுதியில் வானம் தெரிகிற வெற்றிடம் அமைக்கப் பட்டிருக்கும். இதற்கு “முற்றம்” எனப்பெயர். பிரம்மாண்டமான இந்தப் பங்களாக்கள் பெரும்பாலும் அடைக்கப்பட்டே கிடக்கும். ஆம், வீட்டுச் சொந்தக் காரர் வெளியூரில் வெளிநாட்டில் வாழ்வர். விசேட தினங்களில் மட்டுமே அவர்களை இங்குக் காணமுடியும். 

பத்து ஏக்கர் நிலத்தில் 7000 கோடி ரூபாயில் 27 மாடிகளைக் கொண்ட வீடும் இந்த நாட்டில் முகேஷ் அம்பாணியால் கட்டப்பட்டு இருக்கிறது.

“அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி... அருகில் ஓலைக் குடிசை கட்டி” என்கிற வரி எம்.ஜி.ஆர் நடித்த ‘என் அண்ணன்’ படத்தில் பாடப்படும். இந்த வரிகள் நமது நாட்டின் நிலைமையை நூறு சதவிகிதம் பிரதி பலிக்கின்றன என்றால் மிகையன்று. ஆம் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பேசுகிற போது நமக்கு கூவம் நதிக்கரை வீட்டு வாழ்க்கையும் நினைவுக்கு வரத் தவறுவதில்லை. நாற்றம் மிகுந்த இந்த நதிக்கரையில்தான் எண்ணற்ற குடும்பங்கள் இருண்ட வாழ்வு வாழ்கிறார்கள். இருட்டே குளியலறை, இருட்டே கழிப்பறை, இருட்டே கணவன்--மனைவி இணையும் படுக்கை அறை... இப்படித்தான் இந்த ஜனங்களின் அன்றாடம் நகர்கிறது. 

எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய கதை ஒன்றில் பெண்ணொருத்தி தேவாலயத்தில் பிரார்த்தனை செய் வாள். அப்போது, “குளிப்பதற்கு மறைவான இடம் தாரும் கர்த்தரே” என்று வேண்டுவாள். இதனை வாசிக்கும் போது கூவம் நதிக்கரை குடும்பங்களின் அவலநிலைமை நமது மனக்கண்ணில் தோன்றாமல் இராது. 

இந்தியாவின் இதயங்கள் கிராமங்கள் என்பர். கிராமத்து ஜனங்களிடம் புதுப்புது வீடுகள் கட்ட வேண்டும் என்கிற மனப்போக்கு இருப்பதில்லை. பணம் இருந்தால் நிலத்தில் போட்டால்... விளையும் பொருட் களின் அளவு அதிகமாகும்... வீடு இருந்து என்ன பிர யோசனம்... இங்க வாடகைக்கா வரப்போறாங்க... போன்ற அபிப்ராயங்களே இன்றளவும் அவர்களிடம் மேலோங்கி இருக்கின்றன. 

உறவுகளில் சிக்கல் மிகுந்த உறவு மாமியார்--மருமகள் உறவு. இதுபோன்று பொருந்தா உறவு இன் னொன்றும் இருக்கிறது. அதுதான் வீட்டு உரிமையாளர்--வாடகைக்குக் குடியிருப்போர் உறவாகும். இறுக்கம் மிக்க மாமியார்--மருமகள் உறவுகளில் கூட இணக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இந்த வீட்டுக்காரர், குடித்தனக் காரர் உறவுகளில் ஒற்றுமை என்பதே உருவாகாது. நகர வாசிகளுக்குச் சொந்த வீடு கட்டியே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் பிறக்கக் காரணமே வீட்டு ஓனர்களிடம் பட்டபாடுதான்.

இன்றைய தினம், சாதாரண பேரூராட்சி மன்ற உறுப்பினராக உள்ளவர்கள் கூட பதவி முடியும் வேளையில் சொந்த வீடு, வணிக வளாகம் இத்தியாதி களுக்கு அதிபதி ஆகிவிடுகிறார்கள். அதே நேரத்தில் சட்ட மன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஏன்...? முதலமைச்சராக இருந்த கம்யூனிஸ்ட்டு தலை வர்கள் வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்திருக் கிறார்கள் என்றால் இந்தக் காலத் தலைமுறையினருக்கு இதனை நம்புவதே கஷ்டமாகத்தான் இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்... நாடறிந்த நல்ல தலைவர்... முதலமைச்சர் காமராஜரின் நண்பர் இலக்கியப் பேராசான் தோழர் ஜீவா இறக்கும் வரையில் தாம்பரத்தில் குடிசையில் வாழ்ந்தார் என்பது இந்தக் கால இளைஞர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? 

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால், இன்றைய நிலையில் வீட்டுக் குழந்தைகள் ஆங்கிலப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் விளையாட வெளியில் வருவதில்லை. குழந்தைகளின் ஆச்சி, தாத்தாக்கள் முதியோர் இல்லங்களில் வாழ்கிறார்கள்.

வீடுகளில் மரங்கள் இல்லை. அதனால் பறவைகள் இல்லை. பறவைகள் இல்லாத போது பறவைகளின் சத்தம் எப்படிக் கேட்கும்? சத்தமே இராது. அவற்றின் எச்சங்களும் விழாது. எஞ்சிய உணவை ஃபிரிட்ஜில் வைத்து விடுவதால் இராப்பிச்சைக்காரன் வருவதில்லை. அடுத்த வீட்டில் இருப்பவர் யாரெனத் தெரியாது.

அதனால் அவர்களுடன் பேசுவதில்லை. எங்கோ இருப்போரிடம் பேச கைபேசி கையில் இருக்கிறது. மின்சாரம் இருக்கும் போதெல்லாம் பேசவும் பாடவும் வீடுதோறும் தொலைக் காட்சிப் பெட்டி உண்டு. அதனால் கதவுகளைத் தாளிட்டு விட்டு அவரவர் அவரவர் வீடுகளில் தனித் தனித் தீவுகளாக வாழ்கிறார்கள்.