ear ayutha kadavulகருப்புசாமி கிருஷ்ணனையும் வெள்ளைச்சாமி பலராமனையும் குறிப்பன என்னும் செய்தியை முதலில் யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தத் தகவல் பேரா. தொ.பரமசிவம் அவர்களின் பேரில் பரவியுள்ளது. இந்தக் கருத்தைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். வெள்ளைச்சாமி என்ற பெயர் எல்லா சாதிக்காரர்களிடமும் குறிப்பாக உயர்சாதியினர் என்று கருதப்பட்டவர்களிடம் வழக்கில் இல்லை. கருப்புசாமியும் அப்படியே.

பலராமனின் வழிபாடு சங்க கால இறுதியிலேயே நின்றுவிட்டது. பின் எப்படி அது நாட்டார் தெய்வ வழிபாட்டில் வந்து வெள்ளைச்சாமியானது. பலராமன் தமிழகத்துக்கு வைதீகம் வழி வந்த தெய்வமல்ல. பூர்வீகமாய் வழிபாடு பெற்று இணைக்கப்பட்ட தெய்வமுமல்ல.

பின் எப்படி அந்தப் பெயர் சாதாரண மக்களிடம் வெள்ளைச்சாமியாகப் பரவலானது என்று தெரியவில்லை. வைதீக தெய்வமான கிருஷ்ணன் தமிழக மாயோனுடன் இணைக்கப்பட்டது சங்க காலத்துக்குப் பிற்பட்டுதான். அந்த இணைப்பு கருப்புசாமி என்னும் நாட்டார் தெய்வத்திற்கு வரும் சூழ்நிலை இருந்ததாகவும் தெரியவில்லை.

கருப்புசாமி, வெள்ளைச்சாமி பற்றிய செய்திகளோ வழிபாட்டு முறைகளோ பலராமனையும் கிருஷ்ணனையும் நினைவுபடுத்தவும் இல்லை. பண்டைக் காலத்தில் வழிபாடு பெற்றிருந்த தெய்வங்கள் சில முகவரி இழந்துள்ளன, (எ.கா. வருணன். இந்திரன்) இவர்கள் சாமி என்னும் பின் ஒட்டுடன் நாட்டார் வழிபாட்டில் இடம்பெறவில்லை. பலராமன் மட்டும் எப்படி வெள்ளைச்சாமியானான் என்பது புரியவில்லை.

பலராமன் என்ற பெயர் பாலபத்திர ராமன். பாலபத்திரா, சங்கர்ஷணா, வாலியோன், வாசிக நாயகன். காலாயுதன், ஏராயுதன், ஆதிசேஷன், சமகத்தினன் என்றெல்லாம் புராணங்களில் வழங்குகிறது.

பலராமனின் கதை கிருஷ்ணனி¤ன் கதையுடன் தொடர்புடையது. பலராமனின் கதைகள் பாகவதம் பத்தாம் சருக்கத்தில் வருகின்றன. மகாபாரதம், ராமாயணம் ஆகிய காவியங்களிலும் அக்கினி புராணம், ஹரிவம்ச விவரணம் போன்ற நூற்களிலும் வருகின்றன.

யயாதி மன்னரின் சாபத்தால் அவனது மக்கள் நாடின்றி அலைந்தபோது நிறுவப்பட்டதுதான் யதுகுல அரசு. இக்குலத்தில் புகழ்பெற்றவர்கள் கிருஷ்ணன், பலராமன், பிரத்யும்னன், அனுருத்தினன், வசுதேவன் என 13 பேர்கள் வருகின்றனர்.

சூரசேனன் யதுகுலத்தவன்; இவன் தம்பி வாசுதேவன். மகள் பிருதை (பரீதா). இவளைக் குந்திபோஜன் வளர்த்தான். அதனால் குந்தி ஆனாள். இவளது கணவன் திருதராஷ்டிரனின் சகோதரன் பாண்டு. குந்தியின் மக்கள் பாண்டவர்கள்.

வசுதேவருக்கு தேவகி, ரோகிணி என இரண்டு மனைவிகள் உண்டு. தேவகி கம்சனின் தங்கை. வசுதேவர் தேவகியை மணந்த அன்று கம்சன் மணமக்களைத் தேரில் அமரித்தி வலம் வந்தான். அப்போது அசரீரியின் குரல் கேட்டது; “கம்சா இந்தத் தேவகியின் வயிற்றில் பிறக்கப்போகும் மகன் உன்னைக் கொல்லுவான்.”

இதைக் கேட்ட கம்சன் தேரைவிட்டு இறங்கினான். தேவகியின் கூந்தலைப் பற்றிப் பிடித்து வாளை ஓங்கினான். வசுதேவர் தடுத்தார்; கம்சனிடம் கெஞ்சினார். “விட்டுவிடு; இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் தந்துவிடுகிறேன்” என்றார். கம்சன் தேவகியையும் வசுதேவரையும் சிறையில் அடைத்தான்.

வசுதேவருக்கும் தேவகிக்கும் சிறையில் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் எடுத்துக்கொண்டான். தேவகி வயிற்றில் வளர்ந்த கருவை விஷ்ணு - வசுதேவரின் மூத்த மனைவியான ரோகிணி வயிற்றில் சேர்ப்பித்தார்.

ரோகிணிக்குப் பலதேவன் பிறந்தான். தேவகி வயிற்றில் எட்டாவது மகனாகக் கிருஷ்ணன் பிறந்தான். யதுகுலத்து நந்தகோபரின் மனைவி யசோதை கிருஷ்ணனையும் பலதேவனையும் வளர்த்தாள். இதனால் பலராமன் அண்ணன், கிருஷ்ணன் தம்பி எனப்பட்டான்.

வர்ஷிணி வம்சத்து நாயகர்களான இருவரும் விஷ்ணுவின் அம்சமாகவே கொள்ளப்பட்டனர். என்றாலும் கிருஷ்ணனே பகவான் எனப்பட்டான். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராமன். பிற்கால நூற்கள் பலராமனைப் புத்தருடன் இணைக்கின்றன.

இராம அவதாரத்தில் பரசுராமனும் வருகிறான். இருவரும் விஷ்ணுவின் அம்சமாகவே கொள்ளப்படுகின்றனர். இராமன் பரசுராமனிடம் மாறுபடுகிறான்; இராமனுக்கு அடங்கியவனாக பரசுராமன் காட்டப்படுகிறான். கிருஷ்ண அவதாரத்தில், பலராமன் மாறுபடவில்லை.

பலராமன் ஆதிசேசனின் அம்சமாகக் கூறப்படும் கதைகளும் நிறைய வழங்குகின்றன. இது குறித்த சிற்பங்களும் கிடைக்கின்றன. 8ஆம் நூற்றாண்டு சிற்பம் ஒன்றில் பலராமனின் தலையில் ஆறு பாம்புகள் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது என்கிறார் கோபிநாத ராவ்.

பலராமனின் அவதாரம் முடியும்போது இவனது வாயிலிருந்து 1000 தலைகளை உடைய ஆதிசேசன் கிளம்பினான் என்ற தொன்மம் உண்டு. நந்தகோபன் பலராமனுக்கு ராமன் என்றுதான் பெயர் வைத்திருந்தான். ஆனால் அவனது அபரீதமான பலத்தின் சக்தியால் பலராமன் ஆனான். இவனும் கிருஷ்ணனைப்போல் பெருவீரனே.

இவன் ரைவத மலையில் வாழ்ந்த த்விதா என்னும் ராட்சதக் குரங்கைக் கொன்றவன்; தேனுகா என்பவன் கழுதை உருவாக வந்து யாதவ மக்கள் வாழ்ந்த பனைமரக்காட்டில் அட்டகாசம் செய்தபோது அவனைக் கொன்றவன்; அஸ்தினாபுரம் நகரையே தன் ஏர் ஆயுதத்தால் குத்தித் தூக்கியவன்; துரியோதனன் பணிந்து வேண்டியதால் கோபம் தணிந்தவன்; யமுனையின் போக்கை மாற்றியவன்; பிரவம்மன் என்ற அரக்கனை அழித்தவன்.

குபேரின் சேவகன் சங்கசூடன் என்பவனுடன் கண்ணன் போரிட்டு அவனது மகுடத்திலிருந்த ரத்தினத்தை எடுத்து பலராமனுக்குக் கொடுத்தான். அதைச் சூடும் தகுதி பலராமனுக்கே உரியது என்றான். கக்குத்மி என்பவனின் மகள் ரேவதியைப் பலராமன் கண்டபோது மிக உயரமாக இருந்தாள். அவளது தலைமேல் தன் ஏரை வைத்து அழுத்தி உயரத்தைக் கட்டுப்படுத்தினான், பின் அவளையே மணந்துகொண்டான்.

அக்கினி புராணப்படி பலராமன் கிருஷ்ணனுக்கு உதவி செய்பவனாகவே காட்டப்படுகிறான். கம்சனைக் கொல்ல உதவியவன் பலராமன். கிருஷ்ணனுக்கு வழிகாட்டியாக ஆசிரியராக இருந்தவன். லட்சுமணன் இராமனிடம் இப்பிறவியில் நீ எனக்கு மூத்தவனாக இருந்ததால் அடங்கி நடந்தேன் சேவகனாக இருந்தேன்.

அடுத்த பிறவியில் நான் உன்னை ஆளவேண்டும் என வேண்டிக் கொண்டானாம். இது ராமாயணக் கதை. ஆதி கேசவனின் அம்சமான லட்சுமணனே பலராமனாகப் பிறந்தான் என்பது ஒரு கதை.

பலராமன், சூரியன், காமன், சாமன் போன்றோருக்குச் சமமானவனாகப் போற்றப்படுகிறான், நாராயணீயம் கிருஷ்ணனைப் பரமாத்மாவாகவும் பலராமனை ஜீவாத்மாவாகவும் கூறும். பலராமன் பவாஞ்ச ரத்தின சாஸ்திரம் அறிந்தவனாகவும் காட்டப்படுகிறான்.

மகாபாரதம் சபாபருவத்தில் பலராமனைப் பற்றி வரும் கதைகள் பிற்சேர்க்கை என்ற கருத்துண்டு. துரியோதனனின் மகன் லட்கணைக்கு பலராமனின் மகள் வத்சலையை மணமுடிக்க நடந்த முயற்சியை கிருஷ்ணன் முறியடித்து விட்டான்.

அர்ஜூனனுக்கும் பலராமனின் தங்கை சுபத்திரைக்கும் பிறந்த அபிமன்யுவை வத்சலைக்கு கிருஷ்ணன் மணமுடித்து வைக்கிறான். இப்படியான ஒரு கதை தமிழக நாட்டார் வழக்காற்றில் வேறு வேறு வடிவங்களில் அம்மானைப் பாடலாக மாறியிருக்கின்றன. (அபிமன்னன் சுந்தரிமாலை)

பாண்டவ யுத்தத்தின்போது பலராமன் இரண்டு பக்கத்தினரையும் சமாதானப்படுத்த முயன்று தோற்றான். அதனால் கிருஷ்ணரின் அறிவுரைப்படி தீர்த்த யாத்திரை சென்று விடுகிறான், போரின் இறுதியில் வருகின்றான். அப்போது பீமனும் துரியோதனனும் தொடையில் கதையால் அடிப்பதைப் பார்த்து “இது அதர்மமான காரியம், சரியல்ல” என்கிறான். கிருஷ்ணன் “அண்ணா - அதர்மத்துக்கு அதர்மம்; திரௌபதையின் வஸ்திரத்தை உரித்தபோது தர்மம் எங்கே போயிற்று” எனக் கேட்கிறான். பலராமன் பேசவில்லை. இதுபோன்ற கதைகள் பிற்காலத்தில் இணைக்கப்பட்டவை.

பலராமனின் அவதார முடிவை பாகவதமும் வேறு புராணங்களும் கூறுகின்றன. யதுவம்சம் தங்களுக்குள் போரிட்டபோது பலராமனின் இரண்டு மக்களும் (நிசாதன், உல்முகன்) இறந்துவிடுகின்றனர். பலராமன் கடலில் இறங்கி தியானம் செய்கிறான். அப்படியே மறைந்து போகிறான்.

யாதவ வம்சம் அழியும்போது வசுதேவரும் மறைந்து போகிறார். அப்போது தேவகியும் ரோகிணியும் உடன்கட்டை ஏறுகின்றனர். பலராமனின் மரணத்தின்போது அவனது மனைவி ரேவதியும் உடன் மடிந்து விடுகிறாள்.

பலராமனின் அவதார முடிவில் அவனது வாயிலிருந்து ஆதிசேசன் கிளம்பினான். குஜராத் சோமநாதபுரம் ஆலயம் அருகே ஒரு குகையினுள் பலராமனின் வாயிலிலிருந்து வெள்ளைநிறப் பாம்பு சென்றது என்ற கதை வழங்குகிறது.

இந்திய நாட்டார் மரபில் சில மாநிலங்களில் வேளாண் தொழில் வளர்ச்சிக்கு உதவுபவனாக பலராமன் காட்டப்படுகிறான். இது பற்றிய சில தொன்மங்களும் புராணங்களும் உள்ளன. இவனே வேளாண் தொழிலைக் கண்டுபிடித்தவன்; உதவுபவன் என்பர். நாகர் இனத்தில் விவசாயக் கடவுளாக இவன் வழிபாடு பெறுகிறான்.

இந்தச் சமூகத்தில் இவனை நீரின் பெருக்கத்துடனும் உணவு உற்பத்தியுடனும் தொடர்புபடுத்திப் பேசும் கதைகள் உள்ளன. விஷ்ணு தருமோத்திர புராணம் விவசாய உற்பத்தியில் இவனுக்கு இடம் அதிகம் எனக் கூறுகிறது.

இந்திய மரபில் ஆரம்ப காலத்திலேயே பலராமனுக்கு வழிபாடு இருந்தது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பலராமன் வைகாசி மாதம் சுக்கிலபட்ச திருதியையில் தோன்றினான் என்பது புராணக்கதை. இந்த நாளில் சில கோவில்களில் விழா நிகழ்ந்ததே இதற்குச் சான்று. பலராமனுக்கு உரியதான தசாவதார காயத்திரி மந்திரம்

ஓம் ஹலாயுதாய வித்மஹே
மஹா பலாய தீமஹி
தன்னோ பலராமப்ரசோத யாத்

என்பதாகும்.

அர்த்த சாஸ்திரத்தில் பலராமனுக்கு தனியாகக் கோவில் இருந்தது பற்றிய குறிப்பு வருகிறது; இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உண்டு என்கிறார் ஜே.என்.பானர்ஜி. வாசுதேவனுக்கும் பலராமனுக்கும் ஒரே காலத்தில் வழிபாடு வந்திருக்க வேண்டும் என்கிறார். பானர்ஜி.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வெள்ளைநாகர் கோட்டம் காவிரிப்பூம்பட்டினம் நகரத்தில் இருந்தது. நாகர் என்பது பலராமனின் நிறத்தையும் ஆதிசேஷனின் தொடர்பையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இதனால் வட இந்தியப் பகுதிகளில் பலராமன் வழிபாடு பெற்ற காலத்திலேயே தமிழ்நாட்டிலும் வழிபாடு பெற்றான் என்று ஊகிக்கலாம்.

பலராமனின் சிற்பம் இந்தியாவில் பரவலாகக் கிடைத்திருக்கிறது. இவனது படிமம் இப்படி இருக்கவேண்டும் என்ற கோட்பாடும் ஆகம சிற்ப நூல்களில் உள்ளது. பலராமனின் சிற்பத்தை வைகாச முறைப்படி அமைக்க வேண்டியது பற்றி கோபிநாதராவ் கூறுகிறார்.

இதன்படி பலராமன் மத்யமதாசதரம்; அதாவது 100 அங்குல உயரம். இரண்டு கைகள்; ஒரு கையில் உலக்கை; இடது கையில் ஏர் ஆயுதம் என இருக்கவேண்டும். பலராமன் முல்லைமலர் போன்ற தூய வெண்ணிறமுடையவர். இவரது ஆடை சிவப்பு நிறமாய் இருக்கும். தலையில் நீண்ட முடிகள். பிருகத் சம்ஹிதா என்ற நூல் குண்டலம் அணிந்தவன் எனக் கூறும்.

வடஇந்திய மதுராவிலிருந்து எடுக்கப்பட்டு இப்போது லட்சுமணபுரி அருங்காட்சியகத்தில் இருக்கும் பலராமனின் சிற்பமே கிடைத்தவற்றில் பழமையானது என்கிறார் செண்பகலட்சுமி. இதற்கு இரண்டு கைகள்; ஒன்றில் உலக்கை; இன்னொன்றில் ஏர். இவன் அவதாரப் புருஷனாக உருப்பெற்ற காலத்திற்கு முன்பு செய்யப்பட்ட சிற்பங்களில் இரண்டு கைகள் இருந்திருக்கலாம்.

குவாலியூர் அருங்காட்சியகத்தில் உள்ள பலராமனின் சிற்பம் - கி.பி. 5ஆம் நூற்றாண்டினது. ராஜஸ்தானில் கிடைத்த ஒரு சிற்பம் மத்தியகாலத்தது. நாகர் இனத்தவருடன் தொடர்புடையது. வங்காளத்தில் கிடைத்த ஒரே ஒரு சிற்பத்தில் ஞான முத்திரை உண்டு. இச்சிற்பத்தின் ஒருகை பாஞ்சராத்ர அடையாளமுடையது. இவர் இங்கு சம்ரட்சண பலராமன் எனப்படுகிறார்.

விஷ்ணு தர்மோத்திராம் என்ற நூல் பலராமன் கையில் ஏர் ஏந்தியிருப்பார்; காதில் வளையம் உடையவர்; வெள்ளை நிறத்துடன் திரிபங்கமாய் சிவப்பு ஆடையுடன் கால் வளையத்துடன் இருப்பார் எனக் கூறும். திருமங்கையாழ்வார் பலராமன் ஏர் ஆயுதம் ஏந்தி காதில் குண்டலத்துடன் இருப்பார் என்கிறார்.

பலராமன் நான்கு கைகளுடன் இருப்பார் என விஷ்ணு தர்மோத்திரம் கூறும் என்கிறார் கோபிநாதராவ். பின்புறம் இடது கையில் ஏரும் வலது கையில் உலக்கையும் பின்புற இரண்டு கைகளில் சங்கு சக்கரங்களுடன் இருப்பார். பலராமனைப் போலவே கல்கி அவதாரப் புருஷனும் வெள்ளை நிறத்துடன் இருப்பார்.

கோபிநாதராவ் பலராமனின் இடது காலில் மதுக்குப்பியும் வலது கையில் ஓர் ஆயுதத்துடனும் கழுத்தில் வனமாலையுடன் இருப்பார். சில சிற்பங்களில் திரிசூலமும் உண்டு. பனைமர நிழலில் இவர் இருப்பது போலவும் காட்டப்பட்டதுண்டு என்கிறார்.

பிரஹத் சம்ஹிதை என்ற நூல் இவன் காதில் வளையத்துடன் அல்லி அல்லது சங்கு நிறத்துடன் இருப்பான் எனக் கூறும். இந்நூல் இவனை விவசாயக் கடவுளாக வருணிக்கும். ஹயஸ்ரக பாஞ்சரத்ரா என்ற நூல் இவன் நான்கு கைகள் உடையவன்; இவற்றில் வாள், ஏர், சங்கு, சக்கரம் இருக்கும் எனக் கூறும்.

பலராமனுக்குத் தனிக்கோவில் குறைவு. கிருஷ்ணன் கோவில்களில் துணைத் தெய்வமாக இவன் காட்டப்படுவதுண்டு. பலராமனின் வலப்புறம் இவனது மனைவி ரேவதியின் உருவம் இருக்கும். இவள் மஞ்சள் நிறம். பூ வேலைப்பாடுடைய ஆடை அணிந்திருப்பாள். இவளுக்கு இரண்டு கைகள் இடது லோலாஹஸ்தம் வலது கையில் தாமரை இருக்கும்.

தமிழகத்தில் ஆரம்பகாலத்தில் பலராமன் சிற்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. மாமல்லபுரம் கோவர்த்தன மண்டபம், திருவல்லிக்கேணி, திருநாரையூர் கோவில்களில் சில நல்ல சிற்பங்கள் உள்ளன.

பல்லவர் கால மாமல்லபுரம் கோவர்த்தனகிரி சிற்பம் ஒன்றில் பலராமன் சிற்பம் உள்ளது. கோவர்த்தனகிரியைக் கிருஷ்ணன் தூக்கி நிறுத்துகிறான். அருகே பலராமன் வலது கை இடுப்பில் இருக்க இடது கையை மேலே தூக்கியபடி நிற¢கிறான். இவனுக்கு மகுடமும் யக்ஞோபவிதமும் உண்டு.

பிற்காலச் சோழர், விஜயநகரக் கட்டுமானக் கோவிலான திருக்கண்ணமங்கை பக்தவத்சலம் பெருமாள் கோவிலில் பலராமன் சிற்பம் உள்ளது. இரண்டு கைகள், ஏர், உலக்கை கைகளில்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு கோவிலில் உள்ள பலராமன் வலது கையில் ஏரும், இடதுகையில் அம்பும் உடையவன். இது இடைக்காலச் சிற்பம். அரியலூரில் உள்ள கோவிலில் பலராமனுக்கு நான்கு கைகள். பின் கைகளில் சங்கு சக்கரம் முன் கைகளில் கதாயுதமும் ஏரும் உள்ளன. இந்தக் கதாயுதத்தின் பெயர் கவுமோதகி. ஏர் ஆயுதத்தை ஹாலாயுதம் என்பர்.

தமிழகத்தில் சங்க காலத்திலிருந்தே பலராமனைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. பொதுவாக, பாகவதக் கதைகள் தமிழகத்தில் பரவிய காலம் கி.பி.5 அல்லது 6ஆம் நூற்றாண்டு என்கிறார் செண்பக லட்சுமி. இது முற்பட்ட பல்லவர் காலம். ஆனால் இதற்கும் முந்திய சங்கப் பாடல்களில் பலராமனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

தொகை நூல்களில் மிகப் பழமையானவையதாகக் கருதப்படும் நற்றிணை, புறநானூறு ஆகியவற்றிலும் சங்க கால இறுதியில் தோன்றிய பரிபாடல், கலித்தொகை, சிலப்பதிகாரம் ஆகியவற்றிலும் பலராமனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. (பின் இணைப்பு காண்க)

பின் இணைப்பு

நற்றிணை

1. மாயோன் அன்ன மால்வரைக் கவா அன் வாலியோன் அள்ன வயங்குவெள் அருவி எண்- 32

புறநானூறு

2, கடல்வளர் புரிவளை புரையும் மேனி அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும் எண்-56
கடற்கண்ணே வளரும் புரிந்த சங்கை ஒக்கும் திருநிறத்தை உடைய கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக் கொடியையும் உடைய பலராமன் (புறம் பழைய உரை உ.வே.சா. பக்.138)

3. பால்நிற உருவில் பனைக்கொடியோனும் எண்-58 பால்போன்ற நிறத்தை உடைய பனைக்கொடியோன் (பலராமன்)

கலித்தொகை

4. ஒருகுழை அவள் மார்பில் ஒண்தார் போல ஒளிமிக (முல்லைக்கலி - எண்.5 வரி-11)
காதில் குழை மார்பில் சிவந்த மணலை உடைய நம்பி மூத்தபிரான் (பலராமன்)

5. பாலன்ன மேனியான் (நெய்தல் திணை 7, வரி-124)

6. வானுற ஓங்கிய வயங்கொளிர் பனைக்கொடி பால்நிற வண்ணன்போல் பழி தீர்த்த வெள்ளையும் (முல்லைத்திணை 4, வரி-104) ஆயரெல்லாம் சேரத்திரண்டு விளங்குகின்ற வானில் எறியும்படி ஓங்கிய ஒளிபெருகுகின்ற பாலின் நிறம் உடைய பனைக்கொடியோன்.

பரிபாடல்

7. விறல்மிகு வலியலி பொலிபகழ் புழுதியின் நிறனுழும் வளைவாய் நாஞ்சிலோனும் (எண்-13, வரி 33-34) விறல்மிகு வலியும் ஒலியும் பொலிந்து புழுதியை அகழுமாறு போல அவர் நிறத்தை உழும் நாஞ்சில் படையை உடைய (பரிமேலழகர் உரை உ.வே.சா., பக்.150)

8. வாய்விளங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை (எண்-1, வரி-20)

9. வளையடு புரையும் வாலியோன் (எண்-2, வரி-20)

10. பனைக் கொடியோன் (எண்-2, வரி-22)

11. கருங்கண் வெள்ளை (எண்-3, வரி-8)

திருமாலை பஞ்சமூர்த்தியாகக் கொண்டு அவர்களில் ஒருவனாகப் பலராமனைக் கொள்ளுகிறார் பரிபாடல் (உரைகாரர் பரிமேலழகர்)

12. செங்கண்காரி கருங்கண் வெள்ளை பொன்கண்பச்சை பைங்கண் மால்
செங்கட்காரி - வாசுதேவர்
கருங்கண்வெள்ளை - கங்கருடணன் (பலராமன்)
பொன்கண் பச்சை - பிரத்யும்னன்
இவர்களுடன் திருமால்
பரிபாடல் பரிமேலழகர் உரை, உ.வே.சா. பதிப்பு ப.26

13. உயர்கொடி நாஞ்சில் (எண்-4, வரி-39) ஏர் கொடியை உடைய பலராமன்

சிலப்பதிகாரம்

14. வால்வளை மேனி வாலியோன் கோவில் இந்திரவிழவூர் எடுத்த காதை, வரி-171.

15. புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் வெள்ளை நாகர் - பலதேவர் (அடியார்க்குநல்லார் உரை, ப.245)

16. மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும் மேழியாகிய படையை வலமாக ஏந்திய பலதேவர் கோவில்

சங்கப்பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் பலதேவனைப் பற்றி வரும் பெயர்கள்: வாலியோன், பனைக்கொடியோன், வெள்ளை நிறத்தவன். காதில் குழை உடையவன், மார்பில் சிவந்த மாலை உடையவன், ஏராயுதத்தான் பஞ்சமூர்த்தி ஆகியன. சிலப்பதிகாரக் காலத்தில் இவனுக்குக் கோவில் இருந்தது.

- அ.கா.பெருமாள்