காலம் வேகமாகத்தான் ஓடுகிறது. மீண்டும் தேர்தல் வந்துவிட்டது. நெருக்கமாக நான் கவனித்த முதல் தேர்தல் 1971. அப்போது எனக்கு வயது இருபது. இந்த நாற்பதாண்டு காலத்தில் பல தேர்தல்களைப் பார்த்தாயிற்று. இப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் ஆபத்து இடையில் ஒரேயொரு தேர்தலின் போதுதான் தட்டுப்பட்டது. அப்போது காங்கிரசுக்கு பாதிக்குப்பாதி இடங்களைக் கொடுத்திருந்தது கலைஞரின் திமுக நல்ல வேளையாக எம்.ஜி.ஆரின் அதிமுக அந்த ஆபத்தை முறியடித்தது. எந்தக் காங்கிரசை முறியடிக்க அண்ணா அவர்கள் திமுகவைத் துவக்கினாரோ, காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவது எனும் எந்த லட்சியத்தை அண்ணா கொண்டிருந்தாரோ அதற்காக துரோகம் செய்தார் கலைஞர்.

இப்போது மீண்டும் அந்தக் துரோகப் படலத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

கடந்த ஐந்தாண்டு காலமாகத் தமிழகத்தில் தனித்து ஆட்சி நடத்தியது திமுக. காங்கிரஸ் அரங்கத்திலேயே இல்லை. மத்தியில் தான் அதன் தலைமையிலான ஆட்சி. அதன் யோக்கியதை பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். விலைவாசி விண்ணை முட்டுகிறது. அதிலும் உணவுப் பொருட்களின் விலைவாசி மிக அதிகம் தான் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே தனது பட்ஜெட் உரையில் ஒப்புக்கொண்டிருக்கிறார். படித்தவர்கள் வேலை தேடிப் பஞ்சாய்ப் பறக்கிறார்கள். சில ஆயிரம் கிராம அதிகாரிகள் வேலைக்கு பல லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள் அண்மையில்!

கேட்டால் 8.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம் என்று ஜம்பம் பேசுகிறார்கள் காங்கிரசார். இது என்ன வளர்ச்சி? உற்பத்தி பெருகியது என்றால் உணவுப் பொருள் விலையாவது குறைந்திருக்க வேண்டுமல்லவா?

தொழில்துறை வளர்ந்திருக்கிறது என்றால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்திருக்க வேண்டுமல்லவா? விலைவாசியும் குறையாத, வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழியாத வளர்ச்சி எப்படி மெய்யான வளர்ச்சியாகும்?

காங்கிரஸ் ஆட்சி தந்திருக்கிற வளர்ச்சி மெய்யானத அல்ல, அது போலியானது, மாயமால வேலை. வேறு வகையில் சொன்னால் அது பெரு முதலாளிகளுக்கு ஆதாயம். தேடித் தந்திருக்கிறதே தவிர ஏழைகளுக்குச் சகாயம் செய்யவில்லை. வளர்ச்சி... வளர்ச்சி என்று ஏழையைப் பட்டு வேட்டிக்கு கனவு காண வைத்துவிட்டு இடுப்பிலிருந்த கோவணத்தையும் உருவி விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவில் 85 கோடிப் பேருக்கு இரண்டு வேளை உணவுக்குக்கூட வழியில்லை! ஆனால், டாட்டா-பிர்லா- அம்பானிகளின் லாபம் மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இந்தியாவின் பெரும் கம்பெனிகள் 2005-06 ல் ஈட்டிய வரிக்கு முந்திய லாபம் 4 லட்சம் கோடி ரூபாய். அதுவே 2009-10ல் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. இது "இண்டியன் எக்ஸ்பிரஸ்" ஏடு (2.3.11¬) தரும் தகவல். ஆக, இது சீரான வளர்ச்சி அல்ல, ஒரு பக்கத்து வீக்கம்! முன்பெல்லாம் கோடிக்கணக்கு, இப்போது லட்சம் கோடிக் கணக்கு! ஆனால், 2 ஜி அலைக்கற்றை ஊழல் புண்ணியத்தில் இந்தக் கணக்கெல்லாம் தமிழர்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது!

ஆட்சியில் அமர்த்திய இந்திய மக்களுக்கு இப்படிக் கேடுகெட்ட நிர்வாகத்தைத் தந்துள்ள காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு என்று தனிப்பெரும் துன்பங்களையும் இந்தக் காலத்தில் தந்தது. இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவிக்க ராஜபக்சே அரசுக்கு சகல உதவிகளையும் செய்தது மன்மோகன் அரசு என்பதும், அப்படிச் செய்யத் தூண்டியது சோனியா காந்தி என்பதும் உலகறிந்த ரகசியம். விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகத்தின் ரகசியத் செய்தியில் கூட இந்த உண்மை உள்ளது. இது பற்றி கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள். ராமதாசும், திருமாவளவனும்! இதிலே ஐயா ராமதாசின் பாமக தனது தேர்தல் அறிக்கையில் "இலங்கையில் தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்" என்று கூறியிருப்பது மிக அருமையான நகைச்சுவை வசனம். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையும் இதே வார்த்தை உச்சரித்துள்ளது. அங்கே தமிழர்களுக்கு மாநில சுயாட்சிகூட வாங்கித்தர மறுக்கிறார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள், அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு தமிழீழம் பற்றிக் கூச்சமில்லாமலே பேசுகின்றன பாமகவும் வி.சி.கேயும்! தங்களையும் ஏமாற்றிக் கொண்டு உரையும் ஏமாற்றுகிற வேலை இது.

இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியத் தமிழர்களுக்கும் வஞ்சனை செய்கிறது காங்கிரஸ் ஆட்சி. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைப் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், அடித்து நொறுக்கப்பட்டார்கள். கடலில் அவர்கள் எல்லை தாண்டியிருக்கலாம். அதற்கா அவர்களைக் கொல்லலாம், உதைக்கலாம் என்று எந்த உலகச் சட்டம் சொல்லுகிறது, தனது சொந்தநாட்டு மக்களிடமே மனிதத்தன்மையற்று நடந்து கொள்கிற ராஜபக்சே அரசு இந்தியத் தமிழர்களிடமும் அதே காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகிறது. இந்தியாவின் காங்கிரஸ் அரசு அதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

இதுதான் கடந்த ஐந்தாண்டு காலக் காங்கிரஸ் கணக்கு. எதற்காக இந்தக் காங்கிரசுக்கு சென்ற தேர்தலில் கொடுத்த 48 இடங்களுக்கும் மேலாகப் 15 இடங்கள் கொடுத்தார் கலைஞர்? 63 இடங்கள் தர முடியாது,எமது அமைச்சர்கள் மத்திய அரசிலிருந்து ராஜினாமா செய்வார்கள், புறப்பட்டு விட்டார்கள் டில்லி நோக்கி என்று "மனோகரா" பாணி வசனம் பேசியவர் பிறகு அப்படியே மடங்கிப் போய்க் கேட்டதைக் கொடுத்தது ஏன்? இந்தியா முழுக்க ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறதே அதற்குப் பரிசா இது?  இந்திய-இலங்கைத் தமிழர்களை வாட்டி வதைக்கிறதே அதற்குப் பரிசா இது?

இங்குதான் இருக்கிறது உள்குட்டு. மத்திய அரசிடம் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறது கலைஞர் குடும்பம். 2 ஜி அலைக்கற்றை மெகா ஊழல் விவகாரத்தில் சிக்கினார் மந்திரி ஆ.ராசா. இந்திய வரலாற்றில் இது புதுமை. ஆட்சி மாறிய பிறகுதான் முந்திய ஆட்சியாளர்கள் மீது வழக்கு போடுவார்கள், கைது செய்வார்கள். மத்தியிலோ நடப்பது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி. அதுவே ஒரு திமுக மந்திரியை ஊழல் பேர்வழி என்று குற்றஞ்சாட்டி உள்ளே வைத்திருக்கிறது! இதை எப்படி அரசியல் பழிவாங்கல் என்று கூறமுடியும் கலைஞரால்?

"தினமணி" ஏட்டிலே ஒரு கருத்துப் படம். அதிலே திமுக அலுவலகத்திலே இருப்பவர்கள் நடுக்கத்துடன் பேசிக் கொள்வார்கள்- "அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஐவர் குழுவிற்குப் பதிலாக சிபிஐ வரப் போகிறதாமே?" உண்மையிலேயே நடந்து போனது. ஒரே நாளில் "அண்ணா அறிவாலயத்தில்" மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட ஐவர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, அதே கட்டடத்தின் இன்னொரு பகுதியில் சிபிஐ அதிகாரிகள் கலைஞரின் துணைவியாரிடமும், புதல்வியிடமும் விசாரணை நடத்தினார்கள்! அவர்கள் இருவரும் "கலைஞர் டி.வி".யின் பங்குதாரர்கள்! 2 ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தின் ஒரு பகுதி அந்த டி.வி.க்குப் பாயந்ததாகக் குற்றச்சாட்டு! சொல்வது யார்? ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ அமைப்பு! அவரது கட்சிக்கு 63 இடங்கள் தராமல் வேறு என்ன செய்வார் கலைஞர்?

"மக்கள் நலம் மக்கள் நலம் என்று பேசுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" என்று எம்ஜிஆர் படப்பாட்டு ஒன்றில் கலைஞர் அன்றே விமர்சிக்கப்பட்டார். அது மீண்டும் மீண்டும் உண்மையாகி வருகிறது. இதிலே அண்ணா பெயருக்கு அவமானம், அவர் பெயரிலான அறிவாலயத்திற்கு அசிங்கம்! அனைத்திற்கும் மேலே அண்ணாவின் கொள்கையாகிய காங்கிரஸ் எதிர்ப்புக்குத் துரோகம்!

தமிழ்நாட்டின் மொத்த எம்எல்ஏ இடங்களை எப்படிப் பிரித்துக் தந்திருக்கிறார் கலைஞர் என்பதை எண்ணிப் பாருங்கள். திமுக 119 தொகுதிகளில் தான் போட்டி. தப்பித்தவறி இவரது அணி ஜெயித்தாலும் இவரால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது, காங்கிரசின் தயவில்லாமல் ஆட்சி நடத்த  முடியாது, அதுவா முன்பு போல வெயிலிருந்து ஆதரவு தரப் போவதில்லை, ஆட்சியில் பங்கு கேட்கப் போகிறது! அதாவது மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆடசி என்று நாவைத் தொங்கப் போட்டு அலைகிறது! அதற்கு ஏற்றாற்போல 63 இடங்களைத் தாரை வார்த்திருக்கிறார் கலைஞர்! 2ஜி அலைக்கற்றை இமாலய ஊழல் என்றால், இது இமாலய அரசியல் துரோகம்! அண்ணாவின் கோட்பாட்டுக்குச் செய்யப்பட்ட அநியாயத் துரோகம்!

அண்ணா மீதும், அவரது கொள்கைகள் மீதும் பிரியமுள்ள சகலரும் இப்போது செய்ய வேண்டியத திமுக காங்கிரஸ் அணியைப் படுதோல்வி அடைய வைப்பது மண்ணைக் கவ்வ வைப்பது, அதற்காக அண்ணா திமுக அணியைப் பெரு வெற்றி பெற வைப்பது, ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பது.

ஒரே வழி இதுதான், நடக்கப் போவதும் இதுதான் என்பதை உணர்ந்திருப்பதால் தான் கவர்ச்சியான சில அறிவிப்புகளைத் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தந்திருக்கிறார் கலைஞர். "முந்திய தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் இந்தத் தேர்தல் அறிக்கை கதாநாயகி" என்று சொல்லியிருக்கிறார். இன்னும் சினிமா ஞாபகத்தில் தான் இருக்கிறார்.

கடந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட நில மாற்றங்களுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்கிற உருப்படியான உறுதிமொழி எல்லாம் நிறைவேற்றப்படவில்லை என்பதைத் தமிழர்கள் அறிந்துதான் இருக்கிறார்கள்.

எனது பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் "அம்மா! உங்களுக்கு கிரைண்டர் வேண்டுமா, மிக்சி வேண்டுமா? " என்று கேட்டேன். அவரோ சட்டென்று "ஒழுங்கா கரண்ட கொடுக்கச் சொல்லு" என்றார். அதுதானே? தினசரி மின்வெட்டு! மூன்று மணி நேரம் மின்வெட்டு! அதில் மட்டும் தாமதமே இல்லை! டாண்ணென்று கட்பண்ணி விடுவார்கள்! அப்புறம் அவ்வப்போது "போனஸ்" வெட்டு வேறு! தர முடியாத, விசை வழங்க முடியாத ஆட்சி ஒரு ஆட்சியா?

ஆட்சிக்கு  வந்தவுடனேயே செய்திருக்க வேண்டிய வேலை மின்சக்தி உற்பத்தி  அதிகரிப்பு அல்லவா? ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்திவிட்டு கடைசியில் கணக்குப் பார்த்தால் வீட்டுக்கு, கடைக்கு கரண்ட் இல்லை என்றால் அந்த ஆட்சி நீடிக்கலாமா? கூடவே கூடாது. பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான மின் சக்தியை வழங்காதவர்கள் ஆட்சியில் நீடிக்க அருகதை இல்லாதவர்கள்.

மின்சாரம் இல்லாததால் ஏற்கனவே கொடுத்த டி.வி.யில் படம் தெரியவில்லை. இதில் கிரைண்டரோ, மிக்சியோ கொடுத்து என்ன பயன்? மின்வெட்டால் சிறு தொழில் முனைவோர் படும் அவஸ்தி சொல்லி மாளாது. 10 மணியிலிருந்து 1 மணி வரையெல்லாம் கட்பண்ணுகிறார்கள். எப்படிக் கடையைத் திறப்பார்கள்? இந்த லட்சணத்தில் இவர்களின் புதிய இலவச அறிவிப்புகள் கண்டு மக்கள் ஏமாறப்போவதில்லை. திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கை கதாநாயகி அல்ல, சாகசக்காரி. "பராசக்தி" படத்திலே சிவாஜியின் பணப்பெட்டியைப் பறிக்க மயக்க மருந்து கொடுப்பானே, அப்படி சரசக்காரி. இதைத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். தேர்தல் காலத்தில் மட்டும மின்சாரம் தந்து அவர்களை ஏமாற்ற முடியாது. மீண்டும் திமுக ஆட்சி என்றால் தொடரும் மின்வெட்டு என்பதை அவர்கள் அறிவார்கள்.

காங்கிரசின் உலகமயப் பொருளாதாரத்தில் ஊழல் தேசியமயமானது, திமுக கட்சியிலோ அது உள்ளூர் மயமானது. பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து அதில் ஒரு சிறு பகுதியை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றி பெறுவது என்கிற தேர்தல் தொழில் நுட்பத்தை திருமங்கலம் இடைத்தேர்தல் தொடங்கி பிரமாதமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். வறுமையில் வாடும் பாமர மக்களில் ஒரு பகுதியினர் உண்மை நிலை தெரியாமல் அதில் பலியானார்கள். நம்மை அறியாமலே நாம் பாவத்தில் பங்கு பெற்றுவிட்டோம் என்று இப்போது அவர்களின் மனசாட்சி பேச ஆரம்பித்து விட்டது. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்பதைக் கேட்டு அவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள். முழுச் சமுதாயத்தையும் குற்றவாளியாக்கிவிட திமுக செய்யும் முயற்சிக்கு இனியும் அவர்கள் இணங்க மாட்டார்கள்.

இங்கே பொது வாழ்வில் நேர்மை விரும்பும் சகலருக்கும் ஒரு வேலை இருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் முயற்சியை முறியடிக்கிற வேலை அது. நிலத்தில் கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கும் போது திருடர்கள் புகுந்து கசக்கி எடுத்துப் போவத போல காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர். இதைக் கையுங்களவுமாகப் பிடித்து தேர்தல் கமிசனிடம் ஒப்படைக்கிற வேலையை தொண்டுள்ளம் கொண்ட சகலரும் செய்யவேண்டும்.

சொல்லப் போனால் இது பண்பாட்டுப் பிரச்சனையும் கூட. வயது வந்த அனைவருக்கும் வாக்கு என்பது பாட்டாளி மக்கள் போராடிப் பெற்ற ஓர் அடிப்படைஉரிமை. அதைக் காசு கொடுத்து வாங்கி விடலாம் எனும் நினைப்பு வளருமேயானால் பொது வாழ்வும், அதற்கான பொதுப் பண்பாடும் முற்றிலும் சீர்குலைந்து போகும். பண்பாட்டுப் போராளிகள் என்ற வகையில் இதைத் தடுத்து நிறுத்துவதும் கூட முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்களின் கடமைதான். "உங்கள் வாக்கு காசுக்கான டோக்கன் அல்ல, பாடம் புகட்டுவதற்கான துருப்புச் சீட்டு" என்கிற உண்மையைத் தமிழர்களுக்குச் சொல்லித் தருகிற வேலையை அவர்கள் அவசியம் செய்ய வேண்டும்.

ஏற்கனவே ஒவ்வொரு துறையாக ஒரு குடும்பத்தின் ஆளுகைக்குள் போய்க் கொண்டிருக்கிறது. ஊழல் பணத்தைச் சுற்றுக்கு விடவும், கருப்பை வெள்ளையாக்கவும் சினிமா தொழிலுக்குள் புகுந்தார்கள். இப்போது ஸ்டுடியோ முதல் தியேட்டர் வரை அவர்களது பிடிக்குள். சிறு பட்ஜெட் படங்களை பிறந்த உடனேயே பெட்டியை விட்டு வெளியே வரவிடாமல் கொல்லுகிறார்கள். தியேட்டர் தர மறுப்பதுதான் திரைப்படங்களுக்கான கள்ளிப்பால். மேலும் முன்னேறி, விஜய்யின் "காவலன்" படத்திற்கே கட்டையைக் கொடுத்தார்கள். இப்போது "சட்டப்பட குற்றம்" படத்திற்கும் இடைஞ்சல் செய்யப்படுகிறது. சினிமா உலகம் மிரண்டு போயும், வெறுத்துப் போயும் உள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் குடும்பம் இருக்கும், இப்போதோ, ஒரே குடும்பத்திற்குள் சினிமா இருக்கிறது!

தமிழகத்தில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் குடும்பங்களில் ஒன்று சன்டிவி குழுமம் என்கிறார்கள். சின்னத்திரை, பத்திரிகைத்துறை  என்று தென்னிந்தியா முழுக்க கருத்தியல் உற்பத்தி ஸ்தாபானங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். தென்னாட்டு மொழிகளில் எல்லாம் அவர்களது சிந்தனைகளே. அவற்றில் பெரியார்- அண்ணாவின் சீர்திருத்தக் கருத்துக்கள் இல்லை. ராசிபலன்களும், புராணத் தொடர்களும், பெண்களை பெரும் வில்லிகளாகக் காட்டும் மெகா தொடர்களும், ரிகார்டு டான்சுகளுமாய் போட்டு பண்பாட்டைச் சீர்குலைக்கிறார்கள். தமிழக அரசு அதிகாரம் தங்கள் குடும்பத்தவரின் கையில் என்பதால் தான் இவ்வளவும் நடக்கிறது.

மீண்டும் திமுக ஆட்சி என்றால் அந்தக் குடும்பம் எந்தத் துறையையும் விட்டு வைக்காது. எந்தத் துறையிலும் நல்ல சிந்தனைகளை விட்டு வைக்காது. லாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு பன்னாட்டு மூலதனத்திற்கும், அதன் கருத்தியலுக்கும், அசிங்கப் பண்பாட்டுக்கும் மேலும் சேவை  செய்வார்கள். ஏற்கனவே அமெரிக்க அரசியல் நோக்கிலான விஷயங்களையே இவர்களும் உலகச் செய்திகள் என்று சொல்லி வருவதைக் காணலாம். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை.

தமிழுணர்வுகூட இல்லை. வீடுகள் தோறும் கலப்படத் தமிழைப் பரப்பி வருகிறார்கள். "சூரியன் எஃப்.எம் ரேடியோ" வில் "கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க" என்கிறார்கள். வேறு வேலைவெட்டிக்குப் போக வேண்டாம் என்கிறார்கள். அப்படி என்ன பேசுகிறார்கள் கேட்பதற்கு என்றால் முக்காலே மூணுவீசும் ஆங்கிலச் சொற்கள் போட்டு தமிழை நாளும் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதைக் கேட்கும் தமிழர் வீட்டுப் பிள்ளைகளும் அதையே எதிரொலிக்கிறார்கள். தமிழின் எதிரியாகிப் போனது அந்தக் குடும்பக் கம்பெனி.

பொருளாதாரத் துறையிலே நல்ல மாற்றம் வரவேண்டும் என்றால், பொது வாழ்வில் நேர்மை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றால், பண்பாட்டுச் சீரழிவிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் தமிழ் மீண்டும் தலையெடுக்க வேண்டும் என்றால், அனைத்திற்கும் மேலே 1967ல் வீட்டுக்கு அனுப்பப்பட்ட காங்கிரஸ் மீண்டும் தமிழக ஆட்சிக்கு வரக்கூடாது என்றால் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியைக் கட்டாயம் தோற்கடித்தாக வேண்டும்.

தமிழன் வீரப்பரம்பரைக்குச் சொந்தக்காரன் தான். அந்த வீரத்தை அவன் இதிலே காட்டுவான். அவனுக்குத் தெரியும் இந்த வேலையிலதான் அவனது எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்பது. திமுக-காங்கிரஸ் அணியைத் தோற்கடிப்பான், தமிழகத்தைக் காப்பாற்றுவான்.

 

Pin It