தமிழ்மொழியில் பல்வேறு இலக்கிய வகைமைகள் உள்ளன. அவற்றுள் முதலில் தோன்றிய இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். இச்சங்க இலக்கியப் பாடல்களைத் திணைப் பாடல்கள் எனவும் கூறுவர். தமிழ் நிலம் சார்ந்த இத்திணைக் கோட்பாட்டை தமிழ் இலக்கியக் கோட்பாடாகவும் முதன்மைப்படுத்தலாம். திணை என்பது ஒழுக்கம் ஆகும். அந்தந்த திணைகளுக்கு உரிய ஒழுக்கம் முறையாக விளக்கப்பட்டுள்ளன. அவை அகத்திணை, புறத்திணை என இருவகையில் அமைகின்றன. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அகத்திணையில் முக்கியமானதாகும்.

தமிழ் மக்களுடைய திணை சார்ந்த இயற்கையான வாழ்க்கையினைக் கடினமான இலக்கண வரம்பிற்குள் ஏன் கொண்டு வந்தார்கள்? அதற்கான காரணம் என்ன? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. திணை என்பதைனைப் படித்த புலவரோ அல்லது அவருடன் இருக்கும் பாணரோ அல்லது அறிஞர் குழுவோ மன்றமாக (சங்கம்) உட்கார்ந்து பேசி பகுத்திருப்பார்களா? எங்கோ காட்டினுள் தேன் எடுத்து இயற்கையோடு இயைந்து வாழ்ந்த குடும்பத்திற்கு இரவென்றும் பகல் என்றும் தெரியாது. கடலில் மீன் பிடித்தவர்களுக்கு நாம் உரிப்பொருளில் தான் இருக்கிறோம் என்று பேசி இருப்பார்களா? என்கின்ற கேள்வியை முன் வைக்கலாம்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்கள் வாழ்க்கை நிலைகளைச் செழிப்பான இலக்கண நிலைக்குக் கொண்டு வந்த பிறகு அதற்குள் இருக்கிற ஒவ்வொரு பகுதிக்கும் ஆழ்ந்த பொருத்தமான கருத்துகளைச் சேர்க்க முடியும். அப்படியான ஆழ்ந்த கருத்துகளைப் புரிந்து கொள்ள அக்கால வாழ்க்கை நிலை அந்தச் சூழலில் இருந்த கொள்கைகள், கருத்து வேறுபாடுகளை அக்கால குழுக்களின் அறிவோடே புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் ஐந்து திணைகளையும் பல்வேறு துறைகளையும் சேர்த்துப் பார்க்கலாமா? அப்படிப் பார்க்க முடியுமா? அப்படித்தான் பார்க்க வேண்டுமா? என்கிற கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவையும் உள்ளது. இங்கு சங்க இலக்கியத்தில் உள்ள திணை மயக்கம், உள்ளுறை என்கின்ற இரண்டு கொள்கைகளை எப்படி பார்ப்பது? சமகாலத்தில் எப்படி புரிந்து கொள்வது? என்பதனை விளக்க முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.goats 450திணை மயக்கம் என்பது

“ஒரு நிலத்திற்கு உரிய காலம், உரிப்பொருள், கருப்பொருள், மற்ற நிலத்திற்குரிய அப்பொருளுடன் கலந்து வரப் பாடல் அமைக்க, அகம் புறம் என்ற திணைகள் ஒன்றோடு ஒன்று மயங்கி வருதல்” என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது அகப்புறப் பாடல் தன்மைக்கு அடிப்படையாக இருப்பதைக் காண முடிகிறது.

“திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே

நிலன் மயங்குதல் இல்லென மொழிப

புலனன் குணர்ந்த புலமையோரே” (தொல்.அகத்.நூ.958)

“எந்நிலம் மருங்கிற் பூவும் புள்ளும்

அந்நிலம் பொழுதொடு வாராயினும்

வந்த நிலத்தின் பயத்தவாகும்” (தொல்.அகத்.நூ.965)

“உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே” (தொல்.அகத்.நூ.959)

என்று தொல்காப்பிய நூற்பாக்களின் வழியாக திணை மயக்கம் குறித்த செய்திகளை அறியலாம்.

மேலும் இளம்பூரணர், "முதற்பொருளில் காலமும் கருப்பொருள்களும் தம்முள் மயங்கி வரும். உரிப்பொருள் மயங்கி வராது" என்றும் நச்சினார்க்கினியர், "ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கி வரும்" என்றும் இருவேறு கருத்தினைக் கொண்டுள்ளனர். நம்பியகப் பொருள், "தன் நிலத்தில் திணையோடு கூடிய இலக்கண முறைப்படி வராமல் பிறத்திணை ஓடி மயங்கியும் வரும்" என்றும் குறிப்பிடுகின்றது. திணை மயக்கம் குறித்த மேற்காணும் கூற்றுக்களைப் போலவே சங்ககாலப் புலவர்களும் மேலோட்டமான கருத்துக்களைச் சொல்லி இருப்பார்கள் என்பது நோக்கமல்ல. அவர்கள் அப்படி சொல்லவும் இல்லை என்பதனை நோக்க வேண்டி உள்ளது. காரணம் "வைதீக தாக்கம்" அல்லது "இடைச்செருகல்கள்" என்கிற அரசியலுக்கு முன்பிருந்த பார்வையோடு அணுக வேண்டியுள்ளது.

திணை மயக்கத்தைப் போலவே உள்ளுறை குறித்து நோக்கும் போது

நிலத்திலும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர் அளவின்றே                (குறுந்-3)

என்னும் குறுந்தொகைப் பாடலடிகளின் வழி, தலைவன் மீது கொண்ட அன்பு, நிலத்தை விட, வானைவிட, கடலை விட ஆழமானது என்கிறாள் தலைவி. இதனை ஏ.கே. ராமானுஜம் அவர்கள் குறிஞ்சிப்பூ (பன்னிரண்டு வயது பெண்) போன்ற கால்களை உடைய பெண்ணைத் தலைவன் கூடினான் என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிடுகிறார். இப்படியும் பார்க்க வாய்ப்பிருப்பதனையே ஏ.கே.ராமானுஜத்தின் கூற்று தெரிவிக்கிறது. ஆக இப்படியான உள்ளுறை என்பது சங்க காலத்திலேயே இருக்கிறது. அப்படியானால் ஐந்து அல்லது ஏழு திணைகள் பெரிது கிடையாது. அல்லது கரு, உரிப் பொருளும் பெரிது கிடையாது. இவற்றையெல்லாம் கடந்து பாடல்கள் படைக்கப்படுகிறது. அப்பாடலில் உள்ளுக்குள்ளாக மற்றொரு ஆழமான பொருள் இருக்கிறது. இதுதான் சங்கப் புலவர்களின் அறிவு நுட்பமாகும். இதுதான் சங்கப் புலவர்கள் நமக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும்.

இப்படியாக திணை மயக்கம் என்றால் உள்ளுறையாக இருக்குமா? திணை மயக்கத்தில் உள்ளுறையே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனச் சொன்னப் பூங்குன்றனாரின் கூற்றேயாகும். இப்பாடல் எழுதப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு இனக் குழுக்களும் மதக் கருத்துகளும் தத்துவங்களும் வெளிநாட்டார் புழக்கங்களும் பெருகி இருக்கின்றது எனலாம். இச்சூழலில் தமிழகத்தில் (நிலம்/மக்கள்) பரவியிருந்த கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கு ஒரு வகுப்பு முறைத் தேவையாக இருந்தது. அப்படி வந்ததுதான் திணையும் அது சார்ந்த பிரிவுகளும். ஆனால் இன்றைய தமிழ்ப் பரப்பில் எல்லா மக்களையும் ஒன்றாகப் பார்ப்பது அல்லது சேர்ப்பது என்பது கேள்விக்குரியதாகிறது. இங்கு தொழில் சார்ந்த வாழ்வு என்பது ஜாதி (வர்ணம்) சார்ந்த வாழ்வாக மாறி ஏற்றத்தாழ்வுகள் தடுக்கிறது. இப்படி இருப்பதுதான் இன்றைய நிலையில் உள்ளுறையாக அதாவது உள்நோக்கமாக இருந்து வருகிறது. இதனைத் தான் இன்றைய நிலையில் திணை மயக்கம் என்பதாகப் புரிந்து கொள்ள முடியும்.

அன்று திணை மயக்கம் கூடாது. தனித்தனியாகத்தான் இருக்க வேண்டும் என்று யாராவது சொல்லி இருப்பார்களா? என்றால் நிச்சயமாக சொல்லிருக்கலாம். பிரிவினையை நிலைநாட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லியிருப்பார்கள். இன்றைக்கு வரைக்கும் அப்படித்தானே சொல்லியும் வருகிறார்கள். இங்கு அம்பேத்கரின் "இந்தியாவில் சாதி என்பது மக்களைச் செயற்கையாகக் கூறுபடுத்திப் பிரித்து அகமணம் புரியும் வழக்கத்தால் ஒன்று மற்றொன்றோடு இணைவ­திலிருந்து தடுத்து வரையறுக்கப்பட்ட பிரிவுகளாக ஆக்கியுள்ளது என்பதே இதன் பொருள்" என்கிற கூற்றினை இணைத்து எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ்ச் சொல்லில் இன்றைக்கும் மக்களது பண்பாட்டுக் கூறுகள், மரபுகள் என இவற்றையெல்லாம் பிரித்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்ளும் முற்போக்குவாதிகள் எல்லாம் திணை மயக்கும் கூடாது என்று சொல்லும் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தாம். ஆனால் செம்மொழித் தமிழின் பெருமையைப் பேசுபவர்கள் எல்லாம் திணை மயக்கத்தைத் தழுவாமல் இருந்தால் சங்க இலக்கியத்தின் உள்ளுறையைப் புரிந்தும் புரியாது இருப்பதைப் போல இருக்கின்றார்கள் என்றுதானே பொருள். அப்படிப்பட்டவர்கள் தமிழ் என்றும் தமிழ் உணர்வு என்றும் ஏன் தமிழ்த் தேசியம் என்றும் பேசி வீணடிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். இங்கு, பரவலாக எல்லோராலும் மேற்கோளாகக் காட்டப்படும்,

"யாயும் யாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிந்தும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" (- குறுந்-40)

என்னும் குறுந்தொகைப் பாடலில் வேறு வேறு குழுக்களைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இருவரும் உறவும் அல்ல. இவர்கள் சந்தித்துக் கொள்வதிலும் பழகிக் கொள்வதிலும் எந்தவிதத் தடையும் இருக்கவில்லை. இப்படியான ஜனநாயகப்பட்ட வாழ்வியல் முறையிலிருந்து சங்க காலச் சமூகம் எப்படிப் பின்னாளில் வைதீக தாக்கம் பெற்றது. சங்கப் பாடலுக்குப் பின் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் இந்த வருணத்தாருக்கு இந்தயிந்தத் தொழில் என்று பிரிக்கப்பட்ட செய்தியை ஏற்பாரும் மறுப்பாரும் உண்டு. அதாவது அகத்திணையியலில் ஓதல், தூது, பகை ஆகிய பிரிவும் மரபியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோரின் இயல்பும் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன.

சங்ககாலம் மிக இயல்பாகத் தன்னுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டது. அக்கால வாழ்க்கையின் ஆரம்பத்தில் மேலோர் கீழோர் என்கிற ஏற்றத்தாழ்வைத் தூண்டிய சக்திகள் இருந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் இயற்கையாக வாழ்ந்து வரும் உணவு சேகரித்தவர்கள் அதற்காக வேட்டைச் சமூகமாக மாறி பின் அந்த அமைப்பில் இருந்து ஆநிரை சமூகமாக ஆன பின்பு வேளாண் சமூகமாகப் பரிணமித்தனர். பின்னரே இப்படியான ஏற்றத் தாழ்வுகளுக்குள் தமிழ்ச் சமூகம் ஆளானது. தமிழ்ப் பரப்பில் எல்லா மக்களையும் ஒன்றாகப் பார்ப்பது அல்லது சேர்ப்பது என்பது கேள்விக்குறியதாகிறது. இங்கு தொழில் சார்ந்த வாழ்வு என்பது ஜாதி சார்ந்த வாழ்வாக மாறாமல் ஏற்றத்தாழ்வுகள் தடுக்கிறது. இப்படியிருப்பது தான் இன்றைய உள்நோக்கமாக இருந்து வருகிறது. இந்த உள்நோக்கத்தினைத் தான் திணைமயக்கம் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். அன்று திணைமயக்கம் கூடாது. தனித்தனியான நிலமாக குடி குலமாகத் தான் இருக்க வேண்டுமென்று யாராவது சொல்லி­யிருப்பார்களா? நிச்சயமாக சொல்லியிருக்கலாம். பிரிவினையை நிலை நாட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள். வைதீகப் புலவர்கள் இடைச்செருகல் வித்தகர்கள் அதனைச் செய்திருக்கலாம். இன்றைக்கும் இப்படித்தானே சொல்லியும் பிரிவினையை நிகழ்த்தியும் வருகிறார்கள். இத்தகையச் சூழலில் தமிழ் என்றும் தமிழ் உணர்வென்றும் தமிழ்த் தேசியம் என்றும் பேசுவது வீண் என்பதாகவேபடுகிறது. இப்படியாக இடைச்செருகல் அல்லாத வைதீகத் தாக்கம் அல்லாத சங்கத் திணைமயக்கம் சார்ந்த விவாதங்களைத் தொடர்ந்து முன்வைப்பதே சிறப்புடையதாகும்.

ஆக, திணை மயக்கம் இயல்பானது. உலகம் முழுவதும் இஃது இயல்பாகவே இருக்கிறது. பேராசிரியர் பா.தயானந்தன் அவர்களின், அண்மையில் தமிழ்நாட்டில் இருக்கும் 12 ஆதிவாசி குழு மற்றும் 19 மற்ற குழுக்களின் சீ-குரோமோசோமை ஆராய்ந்தார்கள். என்னுடைய பி-வி52 அடையாள முத்திரை 30 குழு ஆண்களிடம் இருக்கிறது. எங்க எல்லாருக்கும் மூதாதையர் சுமார் 25000 வருடத்துக்கு முன்பு பிறந்த ஒருத்தர்தான். 30 குழுவப் பட்டியல் போட இடமில்லை, கொஞ்சம் மட்டும் பாருங்கோ: புலையர், குறும்பர், தோடர், கோட்டா, பறையர், வன்னியர், பள்ளர், யாதவர், பிறமலைக்கள்ளர், நாடார், சௌராஷ்டிரா பார்ப்பனர், ஈழவர், தமிழ் ஜைனர் போதுமா!.... சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு குழு ஆப்பிரிக்காவ விட்டு வெளியே வந்து உலகமெங்கும் குடியேறினார்கள். வந்தவர்களுடைய தோல் எல்லாம் அப்போ கருப்புதான். வெள்ளை, சிகப்பு, மஞ்சள், மாநிறம் இதெல்லாம் ஒரு 60,000 வருசத்து கதைதான். ஆப்பிரிக்காவை விட்டு வெளிவந்த மக்கள், இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு 50ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே போய்விட்டார்கள். இந்தியக் கண்டத்திற்குள் மக்கள் வருவதும் போவதும் திரும்ப வருவதும் கலப்புமணம் செய்வதும் மிக சாதாரணமாக நடந்த நல்ல கதை. இதில் விளைந்த 50,000 வர்ணங்கள்தான் இன்றைய இந்தியா. ஆப்பிரிக்கக் கண்டத்தையடுத்து உலகிலேயே அதிக மரபணு வேற்றுமை உள்ள நாடு இந்தியாதான். அண்மையில் வெளிவந்த ஒரு முக்கிய ஆய்வின் முடிவு: இன்றைக்கு முன் சுமார் 4200 ஆண்டு முதல் 1900 ஆண்டு வரை இந்தியா முழுவதும் கலப்பு மணங்கள் நடந்து கொண்டிருந்தன. கலப்பற்ற ஜாதியென்றோ, குலமென்றோ, கோத்திரமென்றோ, தமிழ்க்குடியென்றோ ஒன்றுமே­யில்லை (செந்தலைக்குருவி, அக்-2013).

என்னும் இக்கூற்றே சங்க இலக்கியத் திணை மயக்கத்தையும் சமகாலப் புரிதலையும் ஏற்படுத்தியிருக்கும். குறிப்பாக, எந்தத் திணையிலும் எந்த மனிதரல்லாத உயிரும் குடிநீரில் எதையும் கலக்காது. புரிதலற்ற மனிதக் கூட்டமே இந்த இழிவைக் கலக்கும். புரிதல் பெற்றால் மனிதக் கூட்டமே இந்த அவலத்தையும் போக்கும்.

துணை நின்ற நூல்கள்

1. அம்மன்கிளி முருகதாஸ், சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், குமரன் புத்தக இல்லம், சென்னை 2006.

2.            கோபாலையர், தி.வே., தமிழ் இலக்கணப் பேரகராதி, பொருள், அகம் - 3, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2013 (மு.ப.)

3.            நாராயணன்.இரா, சங்க இலக்கிய அரசியல்,காவ்யா பதிப்பகம், 2007.

4.            பழனிவேலு.கே, தொல்காப்பியத் திணைக் கோட்பாடு: திறனாய்வியல் நோக்கு, மாற்று வெளியீட்டகம், 2018.

5.            மாதையன், பெ., அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பாவை பப்ளிகேசன்ஸ், சென்னை.

6.            ராஜ் கௌதமன், தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, என்.சி.பி.எச். 2019.

7.            ராஜ் கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழினி, சென்னை, 2006.

8.            ராஜம்.வீ.எஸ், சங்க பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிறஞ் மணற்கேணி, சென்னை, 2015

9.            மாணிக்கம்.வ.சுப, தமிழ்க் காதல், மெய்யப்பன் தமிழாய்வகம், 2002.

10.         ஷாஜகான்.வெ.மு, திணை வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,2012

11.         செந்தலைக்குருவி, தலையங்கம் - பா. தயானந்தன். அக்-2013

- முனைவர் சி. முத்துகந்தன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சென்னைக் கிறித்தவக் கல்லூரி