nallakannu thapandiyan1953இல் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவராக இருக்கும் போதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தா.பாண்டியன் சேர்ந்துவிட்டார். அறுபதாண்டுகளுக்கு மேலான அரசியல் பொது வாழ்வு அனுபவங்களைப் பெற்றவர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் மேடையில் நின்றார்; ராஜீவ் காந்தியோடு இவரும் இறந்துவிட்டாரென்று குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது; நல்ல வேளையாக, சென்னை மருத்துவமனையில் அபாய நிலையிலிருந்து மறுவாழ்வு பெற்றவர்.

தோழர் தா.பாண்டியன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள குக்கிராமத்தில் பிறந்தார்; தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரைக்கு தமிழகத்தில் தனிச் சிறப்பு உண்டு; விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்றது; பஞ்சாலைகளும், நெசவுத் தொழிலும் நிறைந்த நகரம்; மிகப்பெரிய ஹார்வி மில் வெள்ளைக்காரர்களுக்கு உரியது.

மதுரை, தூத்துக்குடி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய ஊர்களில் கிளைகள் பரப்பியிருந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். தொழிற்சங்க இயக்கம் ஊரெங்கும் பரவியது; தொழிலாளர்கள் போராட்டங்கள் நடந்தன; தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்டுகள் தீவிரப் பங்கு கொண்டார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியில் குற்றப்பரம்பரைச் சட்டம் போடப்பட்டது. மதுரை சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் தென்மாவட்டங்களில் பரவலாகவும் இச்சட்டம் அமலாக்கப்பட்டது; இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளும் சேர்ந்து போராடி வெற்றி பெற்றார்கள். இதன் தாக்கம் ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்திலும், இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களிலும் பரவலாக இருந்தது.

தோழர் தா.பாண்டியனின் தந்தை துவக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தார்; முற்போக்குச் சிந்தனையாளர்; மகன்கள் அனைவரையும் கட்டுப்பாடோடு நன்கு படிக்கவைத்தார்;

மூத்த மகன் திரு.செல்லப்பா, பொருளாதாரப் பேராசிரியர்; கம்யூனிஸ்ட் ஆதரவாளர்; இந்தியப் பொருளாதாரத் துறையில் அங்கீகாரம் பெற்றவர்; தம்பிகளின் பொதுவுடைமைக் கருத்துக்களுக்கு அவரும் மூலகாரணமாக விளங்கினார். தா.பாவின் தம்பி பொன்னிவளவன் வழக்கறிஞரானார்; ஆழ்ந்த அறிவும், சிறந்த சொல்லாற்றலும் உள்ளவர்; ஆற்றொழுக்கானப் பேச்சும் எழுத்தும் அமைந்திருக்கும். எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தவர்; மூளைக்கட்டி ஏற்பட்டு இளம்வயதிலேயே அகால மரணமடைந்தார்; மற்றொரு தம்பி நாகராஜனும் பேராசிரியராகப் பணியாற்றினார். இப்பின்னணியில் பிறந்து வளர்ந்த தோழர் பாண்டியன் 1950களில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் மாணவராக இருந்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி தீவிரமாகப் போராட்டத்தில் இறங்கியது. விடுதலை இந்தியாவில் முதலில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மத்திய ஆட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது: இந்திய அளவிலும், தமிழகத்திலும் மக்கள் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.

தோழர் பாண்டியனும் கம்யூனிஸ்ட் கட்சியில் நாட்டம் கொண்டவர். மாணவர்களிடையே துடிப்பு மிக்கவராக விளங்கினார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அறிவாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார்.

கல்லூரி மாணவர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் ஜீவாவையும் கல்லூரிக்கு வரவழைத்துப் பேசவைத்தார். தான் படித்த கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

தோழர் பாண்டியனின் திறமையைக் கண்ட தோழர் ஜீவா, எப்படியும் பாண்டியனை சென்னைக்கு அழைத்து கட்சிக்குப் பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தார்; இளைஞர்களின் தனித் திறமையைக் கண்டு மனம் நெகிழ்ந்து பாராட்டும் பண்பு ஜீவாவுக்கு உண்டு. இது அவரின் தனித்த ஆளுமைப் பண்பாகும்.

தோழர் பாண்டியன் சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஜனசக்தியில் தொடர்ந்து எழுதி வந்தார். ஆசிரியராகவும் தற்போதுவரை இருந்தார். அவருக்கு தொடர்ந்து படித்த நினைவாற்றலிருப்பதால் வேகமாக எழுதக் கூடியவர். ஜீவா தலைமையில் நிறுவப்பட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக தோழர் தா.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசி வரை அவருக்கு அப்பெருமன்றத்துடன் தொடர்பு இருந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தேசியக் கவுன்சில் பொதுக்குழுவிற்கு முதன் முதலாக தோழர் பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற செய்தியை பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் சி.ராஜேஸ்வரராவ் மகிழ்ச்சியோடு அப்போது அறிவித்தார்.

தேசியக்குழுவில் ஒரு கிறிஸ்துவரும் இருப்பதாக நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதற்காக பாண்டியனின் தந்தையின் பெயரையும் சேர்த்து தாவீது பாண்டியன் என்று அறிவித்தார். முதுபெரும் தலைவர் சி.ராஜேஸ்வரராவின் இந்திய சமுதாய உணர்வை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

இலங்கை அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்து எல்லா அரசியல் கட்சிகளையும் இணைத்து பேரியக்கமாகத் திரட்டுவதில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பங்காற்றியது; அதில் அப்போது செயலாளராக இருந்த தா.பாண்டியனின் தனி ஆளுமை வெளிப்பட்டது. அனைவராலும் பாராட்டப்பட்டது.

மத்திய அரசின் உலகமயமாக்கல் கொள்கையால் நிலம், நீர், மண், மலை, காடு அனைத்தும் சூறையாடப்பட்டு வருகின்றன. நிலக்கரி ஊழல், மணல் கொள்ளை, நீரையும், மலைகளும், பாறைகளும் தரைமட்டமாக்கப்படும் கிரானைட் கொள்ளை, தனியார் மயமாக்குவது, உணவு பொதுவினியோகத் திட்டமும் கைவிடப்படும் நிலை போன்ற அபாய அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.லஞ்சமும், ஊழலும் உலகமயமாக்கலோடு ஒட்டிப் பிறந்தவையாகும்.

நாட்டையே பெரு முதலாளிகளுக்கு அடமானமாக்கும் உலகமயமாக்கல் கொள்கையைத் தோலுரித்துக் காட்டுவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், இடது சாரி இயக்கங்களும் முன்னணிப் படையாக விளங்குகின்றன. இதில் தா.பாண்டியனின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

மக்களின் பேரியக்கத்தைக் கட்டுவதிலும், வெகுஜன அமைப்புகளையும் உருவாக்கும் பெரும் புரட்சிகரப் பணியில் தோழர் தா.பாண்டியன் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.அவரது மறைவுக்கு நெஞ்சம் பதறுகிறது.

(நன்றி: ஜனசக்தி)

- ஆர்.நல்லகண்ணு