மக்கள் தங்கள் சொந்த வரலாற்றை தாங்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள் - கார்ல் மார்க்ஸ்

மின்சாரத்தையும், மார்க்சையும் தவிர்த்து விட்டு உலகம் ஜீவித்திருக்க இயலாது என்ற வரிகளோடு கூடுதலாக ஒரு வார்த்தையும் சேர்ந்து புது மாற்றம் பெற்று வருகிறது உலகம்.

“தகவல் தொழிற்நுட்ப பயன்பாடுகளை தவிர்த்து விட்டு புதிய மாற்றங்கள் சாத்தியமில்லை’’ என எ-கிப்து மக்கள் போராட்டம் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கிவைத்திருக்கிறது. பிரெஞ்சு புரட்சியில் துவங்கி ரஷ்யப் புரட்சியில் நிருபிக்கப்பட்டு இந்திய சுதந்திரப்போரும் உணர்ந்த அனுபவம் ஒன்றாகவே உள்ளது. இளைஞர்களின் வீரமும், உழைப்பாளிகளின் கோபமும் இணைந்ததே கிளர்ச்சி எனும் வரலாற்று மாற்றமாகும். அதில் தகவல் தொழிற்நுட்பமும் தற்போது இணைந்திருக்கிறது.

துனுசியா சர்வாதிகார பென்அலி அரசின் காவல்துறையால் தன் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அழுகையையும் மீறி வெடித்த ஒரு தாயின் ரௌத்ரம் பல வருட கால சர்வாதிகார சாம்ராஜ்யத்தை சரணடையச் செய்த கிளர்ச்சியாய் மாறிய அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். இதில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் இருந்த மையமான பங்கு என்பது காலத்தின் இயற்கை மிகுந்த இயல்பான நியதிகளாகும்.

அரபு நாடுகளின் கலாச்சார மையமாக திகழும் எகிப்தின் மக்கள் தொகை 8 கோடியே 52 இலட்சமாகும். முபாராக்கின் 32 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்காவிற்கு ஆதரவான கொள்கைகளை அரபு நாடுகள் முழுமைக்கும் பரப்பியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.

பாலஸ்தீன சுதந்திர போராட்டத்திற்கு எதிராக இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதற்கும், அமெரிக்க இராணுவம் பிடித்து அனுப்பும் கைதிகளுக்கு சித்ரவதை முகாம்களை அமைத்து தருவதற்கும் எகிப்து அரசு பெற்ற கூலியின் தொகை 1.3 பில்லியன் டாலர் ஆகும். மன்னர் ஆட்சியின் கீழ் வேலையின்மை 10 சதத்திற்கும் அதிகமாகையில், மக்களில் 44 சதமானோர் நாளன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான சம்பளத்திற்குள் வாழவேண்டிய நிலையில் தள்ளப்படுகையில் விலைவாசியோ நாள்தோறும் உயர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஆட்சியாளர்களோ ஊழலில் லட்சம் கோடிகளையும் தாண்டி சாதனை படைப்பதில் வல்லுனர்களாக மாறிக்கொண்டிருந்தனர். இதையெதிர்த்து பல ஆண்டுகாலமாக மக்கள் நடத்தி வரும் சிறு சிறு போராட்டங்களுக்குகிடையே 2008இல் ‘ஏப்ரல் 6 குழு’ என இளைஞர்களும், இளம் பெண்களும் கொண்ட குழுவாக ஒரு போராட்டக்குழு உருவாவது எகிப்தின் போராட்டத்தில் முக்கிய திருப்பமாகும்.

நேற்றைய அழுகைகளும், பழைய துயரங்களும், காணமல் போய்விட்ட கவலைகளும் சமூகத்தின் அடியாழத்தில் நெருப்பாய் எரிந்துகொண்டே இருக்கிறது. அதனால் தான் ஒரு தாயின் கோபம் பல பெண்களின் ஆதரவினால் ஆக்ரோசமாக மாறி இணைய தளங்களில் பதிவுகளாக வெளிப்படுகையில் ஆதரவு மட்டும் பெருகவில்லை, ஆக்ரோசமும், போராட்டமும் பக்கத்து தேசம் எகிப்திலும் வெளிப்பட்டது.

அலக்ஸ்சான்ட்ரியா, சூயஸ் என ஆர்ப்பாட்டம் பெருகி கெய்ரோ தெருக்களில் பிரம்மாண்டமாய் திரண்டு நிற்கையில் அதிகாரம் அதிர்ச்சி அடைந்து நிற்கிறது. எப்படி குறுகிய காலத்திற்குள் மக்கள் திரண்டனர்? சொந்தமாக அலைவரிசையோ அல்லது தொலைக்காட்சியோ எதுவும் இல்லாமல் எப்படி செய்திகள் பரவுகின்றன? மின் அஞ்சல்களில் ஒரு சிலர் பதிந்து வைத்ததன் மூலம் மக்கள் பழகிய ரௌத்ரம் டிவிட்டரில் வளர்ந்து பேஸ் புக்கில் வெடிக்கையில் எகிப்தின் முகம் மட்டுமல்ல உலகத்தின் முகமே மாற்றம் அடைய துவங்கியிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் எண்ணங்களை பதிவு செய்கையில் போராட்டமும், மாற்றமும் எகிப்தின் தேவையென உணர்வேற்றப்படுகிறது இளைஞர் சமூகம் முழுமைக்கும். கணினிகளில் மூழ்கி காலத்தை கழித்துக்கொண்டிருப்பதற்கும், பொழுதை போதைப் பொருளாக்கி போக்கிக் கொண்டிருப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக வளைத் தளங்கள் இளைஞர்களின் அர்த்தமிக்க பயன்பாட்டால் சமூகத்தை மாற்றியமைக்கும் வளைத் தளங்களாக மாறத்துவங்கியிருக்கின்றன.

இந்திய சுதந்திர போரில் கப்பற்படை வீரர்களின் எழுச்சிக்கு ஆதரவாக ஆக்ரோசத்துடன் மும்பையின் அனைத்து தெருக்களிலும் இருந்து மாணவர்களும், இளைஞர்களும் துறைமுகம் நோக்கி பிரிட்டிஷ் போலிசாரின் துப்பாக்கி தோட்டாக்களையும் தாண்டி சென்றதைப் போலத்தான் எகிப்திலும் அதைத்தொடர்ந்து பல நாடுகளிலும் இன்று தினசரி சம்பவமாக நடந்துகொண்டிருக்கிறது இளைஞர்களின் போராட்டம்.

2011 ஜனவரி 25 முதல் சுதந்திர சதுக்கத்தில் கூடிய மக்கள் முன்பு காவல்துறை மண்டியிட்டு நின்றதால் இராணுவம் பீரங்கி வண்டிகளுடன் தெருக்களில் இறங்குகிறது. ஓரடி கூட முன்னேற இடம் இல்லாமல் பீரங்கி வண்டிகள் பீதியடைந்து நிற்கையில், போராட்டக்காரர்கள் உத்தரவிடுகிறார்கள் “பீரங்கி வண்டிகளுக்கு வழி விடுங்கள் தெரு முனைகளுக்கு வண்டிகள் செல்லட்டும், குழந்தைகளும், முதியோர்களும் அதன் மீது அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளட்டும்’’

அதிகாரம் இன்னும் தன் கையில் இருப்பதாத காட்டிக்கொள்ள விரும்பும் அதிபர் முபாராக் ‘மக்களை இராணுவம் சுடக்கூடாது’ என பயத்துடன் பரபரப்பாய் உத்தரவிடுகிறார். தேர்தலில் நிற்க மாட்டேன் எனத் துவங்கி வாக்குறுதிகளை அரசின் அலைவரிசைகளில் அலையவிடுகிறார். கிளர்ச்சி ஆரவாரங்களுக்கிடையே யாரும் காதுகொடுத்து கேட்காமலேயே மதிப்பிழந்து போய்விடுகின்றன அதிபரின் உரைகள்.

சுதந்திர சதுக்கம் நிறைந்து அதிபர் மாளிகையை நோக்கி இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பீரங்கி, துப்பாக்கி, போலீஸ், இராணுவம், தொலைக்காட்சி, அலைவரிசை என அனைத்தும் அமைதியாக முடங்கிவிட்டன. உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் அஞ்சி ஓடிய பிரிட்டிஷ் ஓடுகாலிகள் சுதந்திரம் தருவதாய் சொல்லிவிட்டு ஓடியதைப் போல, எகிப்து அதிபரும் ஜனநாயகம் தருவதாக கதையளந்து விட்டு தற்காலிகமாக இராணுவத்தின் கைகளுக்கு அதிகாரத்தை கைமாறாய் கொடுத்திருக்கிறார்.

எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் நானும் ஒரு வீரனாக கிளர்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறேன் பராக்.. பராக்... என வெள்ளை மாளிகை அதிபரும் மக்களை திசை திருப்ப முயன்று தோற்றுப்போய் விட்டார். உலகெங்கும் உள்ள பல அமெரிக்க ஆதரவு நாடுகளில் மக்கள் வாழ்நிலை எப்படி உள்ளது என்பதற்கும், நாளை ஆட்சியாளர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கும் உதாரணமாய் எகிப்து மாறிவிடக்கூடாது என்பதில் ஒபாமாவுக்கு அதிக ஏக்கம். என்ன செய்ய, வரலாறை மறைத்திட இயலாததாக மாற்றிவிட்டனரே இளைஞர் சமூகத்தினரின் தகவல் பரிமாற்றங்கள்.

மத அடிப்படை வாதமும், ஏகாதிபத்திய ஆதரவும் ஊழலும் கூட்டணி அமைத்துக்கொண்டு நாட்டை ஆள்கையில் அது மன்னராட்சி நாடாக இருந்தாலும், ஜனநாயக நாடாக இருந்தாலும் மக்கள் எழுச்சி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. 2010 ஜனவரி 25 இல் துவங்கி பிப்ரவரி 9 என 18 நாட்களுக்குள் எகிப்தில் முடியும் முன்பாக அரபு நாடுகள் எங்கும் ஆக்ரோச அலைகள் எழும்புகின்றன. பக்ரைன், லிபியா, ஏமன், அல்ஜீரியா, ஈரான், ஈராக், ஜோர்டான் என தொடர்ந்து வரும் மக்கள் போராட்டங்களின் திசைவழியில் இறுதி இலட்சியம் சோசலிசமாக இருந்தால் அரபுநாடுகள் பூந்தோட்டமாக மாறும். இல்லையெனில் தினந்தோறும் நூறு போராட்டங்கள் வெடிக்கும் யுத்த பூமியாகவே தொடரும் அரபு நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும்.

மேலை நாடுகளிலிருந்து வீசும் போராட்ட காற்றின் திசைவழியில் தான் இந்தியாவும் காத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்பது அரபு மக்களின் போராட்டங்களுக்கு சரியான மாற்றமாக இருக்க முடியாதென இந்திய அனுபவத்திலிருந்து அவர்கள் கட்டாயமாக பாடம் கற்றுக்கொள்வார்கள். மக்கள் தங்களுக்குள் கற்றுக்கொண்டு தங்கள் சொந்த வரலாற்றை நிச்சயம் புதியதாய் படைப்பார்கள்.

Pin It