(தொல்குடி வேளிர் வேந்தர் - ர.பூங்குன்றன் (2016) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,)

‘... அரசு என்பது வெளியேயிருந்து சமுதாயத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு சக்தியல்ல...

ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை எட்டிய சமுதாயத்தின் விளைபொருள் அது.’

- பி.எங்கெல்ஸ்

pookundran book 350பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்களாலும் பாரி, ஓரி, காரி போன்ற குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்தது என்பது நம் தொடக்கக்கல்வியில் இருந்தே நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட வரலாறாகும். இதே செய்தியை சற்று விரிவாக உயர்கல்வி வகுப்புகளில் கற்றுள்ளோம்.

ஆனால் அரசு என்ற அமைப்பு தமிழகத்தில் உருவான வரலாறு தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான பாடநூல்களிலும், வரலாற்று மாணவர்களுக்கான பாட நூல்களிலும் கூட இடம் பெறுவதில்லை. நம் பாட நூல்கள் அதிகம் கண்டு கொள்ளாத இச்செய்தியைக் கல்விப் புலம் சார்ந்த அறிஞர்கள் சிலரும், கல்விப்புலத்திற்கு வெளியில் செயல்படும் அறிஞர்கள் சிலரும் ஆராய்ந் துள்ளனர். இவர்களுள் ஒருவராக ர.பூங்குன்றன் இடம் பெறுகிறார்.

நூலாசிரியர்

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் இருபத்தொன்பது ஆண்டுகள் பணியாற்றி உதவி இயக்குநராகப் பணி நிறைவுபெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுப்பராயலுவின் வழிகாட்டலில் பண்டைத் தமிழகத்தில் அரசுருவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் இலக்கியம், தொல்லியல், தத்துவம் என்ற அறிவுத் துறைகளில் ஆழமான வாசிப்பும், பயிற்சியும் கொண்டவர்.

···

இங்கு அறிமுகம் செய்யப்படும் இருநூல்களுக்கும் இடையே ஓர் இயைபு உள்ளது. தமிழகத்தில் அரசு என்ற அமைப்பின் உருவாக்கத்தை இரண்டு நூல்களும் ஆராய்கின்றன.

தொல்குடி-வேளிர்-அரசியல் என்ற நூல், அவரது ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாகும். இது செங்கம், போரூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பாலக்கோடு ஆகிய ஊர்களில் கிடைத்த நடுகற்களை மையமாகக் கொண்ட ஆய்வாகும்.

தொல்குடி வேளிர் வேந்தர் என்ற நூல் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். தொகுப்பு நூல் என்றாலும் முறையாக வகைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும். தொல்குடிகள், வேளிர் வேந்தர், நாடும் அரசியலும், நகரம், எழுத்தறிவாக்கமும் சமூக உருவாக்கமும் என ஆறு தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளின் உள்ளடக்கம் பெரும்பாலும் அரசு உருவாக்கம் குறித்த புரிதலுக்குத் துணை நிற்பன.

இவ்விரு நூல்களின் துணையுடன், பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் குறித்த செய்திகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது. இவ் அறிமுகத்தை நடுகல் என்பதில் இருந்து தொடங்கலாம்.

நடுகல்

இனக்குழு வாழ்க்கையில் நிகழ்ந்த போர்களில் இறந்தோர் நினைவாக நடப்பட்ட கற்களே நடுகல் ஆகும். ஆநிரை என்ற செல்வத்தைக் கவர்ந்து செல்லுதல், அவ்வாறு கவர்ந்து செல்லுவதைத் தடுத்தல், அல்லது கவர்ந்து சென்றதை மீட்டுவரல் என்பன இப்போர்களின் நோக்கமாக இருந்துள்ளன. இப்போர்களில் இறந்தோர் நினைவைப் போற்றும் முகமாக நடுகற்கள் நடப்பட்டன. நடுகல் வழிபாடு செய்யும் பழக்கம், முல்லையும் குறிஞ்சியும் வளம் குன்றி உருவாகும் பாலை நிலத்தில் தோன்றியது.

‘நடுகல் வீரர்கள் மாடுபிடிச் சண்டையில் இறந்தவர்கள்’ என்பதன் அடிப்படையில், நடுகல் வீரர்கள் முல்லை நிலத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறமுடியும். ஆவி வழிபாட்டின் எச்சமான இவ்வழிபாடு கால்நடை வளர்ப்பை மையமாகக் கொண்ட முல்லை நில வாழ்க்கையில் செல்வாக்குப் பெற்றிருந்தது.

நடுகல் வீரர்கள்

ஆநிரை கவர்தலை மையமாகக் கொண்டு நிகழ்ந்த போர்களில் ஈடுபட்டு மாண்டோரே நடுகல் வீரர்கள் என்பதைக் கண்டோம். இனி இந்நடுகல் வீரர்கள் யாவர் என்பதைக் கண்டறிதல் வேண்டும். பொதுவாகக் கூறினால் இவர்கள் முல்லை நிலம் சார்ந்தோர் எனலாம்.

புறநானூற்றில் மூதின் முல்லைத் துறையில் அமைந்த செய்யுளன்று (335:7-8)

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று

இந்நான் கல்லது குடியும் இல்லை.

என்று குறிப்பிடுகிறது. இச்செய்யுளில் சுட்டப்பெறும் பாணன், பறையன், துடியன், கடம்பன் என்ற நான்கு குடிகளில் ‘துடியன்’ தவிர்த்த ஏனைய மூன்று குடிகள் நடுகல்லில் சுட்டப்படுகின்றனர். நடுகல் வீரர்கள் முல்லை நிலம் சார்ந்தோர் என்று கருத இம்மூன்று குடிகளின் பெயர்கள் பதிவாகியுள்ள நடுகற்கள் இடம் தருகின்றன.

இவர்களைத் தவிர பள்ளிகள், வடுகர், கணியன், பூசல் மறவர் என்போரும் நடுகற்களில் சுட்டப்படுகின்றனர். வீரர்களின் பெயர்கள் அவர்தம் குலப்பெயருடன் இடம் பெற்றுள்ளன.

இதில் குறிப்பிடப் பெறும் குலங்கள், அப்பகுதி சிற்றரசர்களுடன் உறவு கொண்டிருந்தன. இச்சிற்றரசர்களே வேளிர் எனப்பட்டனர். அரைசர் என்றும் வேளிரைக் குறிப்பிடுவர். வேள் என்ற சொல்லின் பன்மையே வேளிர் ஆகும்.

வேளிர்

நன்னன், கங்கன், சுட்டி, அதியன், பாணன் என்போர், செங்கம் - தருமபுரிப் பகுதியில் நிலை பெற்றிருந்த வேளிர்களாகச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஊரும் வேள் ஒருவனது கட்டுப் பாட்டில் இருந்துள்ளது, அவ் ஊரில் வாழ்ந்த குடிகள் ஒரு குறிப்பிட்ட குலத்தைச் சேர்ந்தவர்களாகவும், இரத்த உறவுடையோராகவும் விளங்கினர்.

இவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது இராகவையங்கார் கருத்து. இதையட்டியே மு. ஆரோக்கியசாமியும், வெள்ளாளர் தோற்றம் குறித்து ஆய்வு செய்துள்ளார். துவாரகையில் இருந்து கடற்கரை வழியாகத் தமிழகம் வந்தடைந்ததாக ஆரோக்கியசாமி கருதுகிறார்.

இராகவையங்காரின் கருத்துக்குத் தொல்லியல் சான்றுகளின் துணையுடன் வலுவூட்டுகிறார் பேராசிரியை செண்பகலட்சுமி. அத்துடன், ‘சங்க இலக்கியம் கூறும் செய்திகள் வேளிர்களுக்கும் வேளாண்மைக்குமிடையே உள்ள தொடர்பினை வலியுறுத்தும்’ என்கிறார். இக்கூற்றை பூங்குன்றன் மறுத்துரைக்கிறார். வேளிர்கள் வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமற்றது என்றும், கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந் துள்ளனர் என்பது பூங்குன்றனின் கருத்தாகும். இதன் தொடர்ச்சியாக ரொமிலா தாப்பர், துரை அரங்கசாமி, தி.ந.சுப்பிரமணியம் ஆகியோரின் கருத்துக்களை முன் வைத்து புராணங்கள், குலமரபு தோற்றக்கதைகள், வரலாறு என்பனவற்றுக்கிடையிலான உறவு குறித்து சிறப்பாக விவாதித்துள்ளார்.

வேள் - ஒளி

வேள்வி செய்ததால் ‘வேள்’ என்ற பெயர் வந்ததாகக் கருதுவோருண்டு. ஆனால் மூலத்திராவிட மொழியில் ‘வேள்’ என்ற சொல்லுக்கு விருப்பம், ஒளி, தலைமை என்ற பொருள்கள் உள்ளன. இப்பொருளே பொருத்தமானது என்பது பூங்குன்றனின் கருத்தாகும்.

சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய இரு உரையாசிரியர்களும் வேள் என்ற சொல்லை, ஒளி, அரசர் என்பவற்றுடன் இணைத்தே பொருள் கொள் கின்றனர். ‘வேள்’ என்பது ஒரு குறிப்பிட்ட குலத்தின் தனிப்பெருந்தலைவன் என்பது பூங்குன்றனின் கருத்தாகும். மேலும் வேள், அரசர் என்ற இரு சொற்களும் ஒரே பொருளைத் தருவதால்தான் நடுகற் கல்வெட்டுகளில் அரசர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட நடுகல் கல்வெட்டொன்று புலிமான் கோம்பை என்ற ஊரில் கிடைத்துள்ளது. இதில் இடம் பெறும் வேள் என்ற சொல் வைடூரியம் என்ற சொல்லுடன் தொடர் புடையதாய் இடம்பெற்றுள்ளது. கால்நடை வளர்ப் புடன் மட்டுமின்றி, கனிம வனங்களைக் கண்டறிந்து அவற்றை மணிகளாக்கி ஏற்றுமதி செய்வதில் வேளிர் ஈடுபட்டுள்ளனர். கொடுமணல் ஊரில் நிகழ்ந்த அகழாய்வுகளில் மணிகள் கிடைத்துள்ளன. ‘வேள்’ என்று பொறிக்கப்பட்டுள்ள இரண்டு பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

ஈழத்தில் கிடைக்கின்ற தொல்தமிழ்க் கல்வெட்டு களில் ‘வேள்’ பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

இந்த இடத்தில் வேள் என்ற சொல்லின் உண்மைப் பொருளை வெளிப்படுத்த ஆசிரியர் முயன்றுள்ளார். இம்முயற்சியில், வேள், ஒளி ஆகிய இரு சொற்களும் ஒரு பொருள் தருபவை என்ற துரை.அரங்கசாமியின் கூற்றை ஏற்றுக் கொள்கிறார். துரை அரங்கனார் தம் கூற்றை நிறுவ,

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும்.

என்ற குறளுக்கு (698) உரை எழுதியுள்ள பரிமேலழகர் ‘ஒளியோடு ஒழுகப்படும்’ என்ற சொல்லுக்கு ‘அவர் மாட்டு நிறை ஒளியோடு பொருத்த ஒழுகுதல் செய்யப் படும்’ என்று பொருள் தருகிறார். அத்துடன், அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல், ஒளியானது அரசர் உறங்கா நிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள் தன்மை என்று விரித்துரைக்கிறார். பட்டினப் பாலையிலும் (274) பல் ஒளியர் என்று வேளிர் குறிப்பிடப்படுகின்றனர்.

கொடுந்தமிழ்நாடு குறித்த தொல்காப்பிய சொல்லதிகார நூற்பாவிற்கு (தொல். நூல். 400) கொடுந்தமிழ் நாடுகள் எவை என்பதைக் குறிக்கும் மேற்கோள் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு பாடலில் வேணாடு என்ற சொல்லும், மற்றொரு பாடலில் வேணாடு என்பதற்குப் பதிலாக ‘ஒளிநாடு’ என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளன.

இதன் அடிப்படையில் ‘ஒளிநாடு அழித்து’ என்று வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுவதை ‘ஒளிநகர் அழித்து’ என்று பொருள் கொள்ள இடமுள்ளது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்தமிழ்க் கல்வெட்டொன்று, தலைவனை ‘ஒளியன்’ என்று குறிப்பிடுகிறது.

ராஜா என்ற வடமொழிச் சொல் ரஜ் என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது என்றும், ரஜ் என்பதற்கு ஒளி என்ற பொருள் உண்டென்றும் ரொமிலா தாப்பர் குறிப்பிடுவார். இது போன்றே வேள் என்ற சொல்லும் தமிழில் உருவாகியிருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.

இச்செய்திகளின் பின்புலத்தில் தமிழகத்தில் அரசின் தோற்றம் குறித்துப் பின்வரும் கருத்துக்களை பூங்குன்றன் முன்வைக்கிறார்.

·சேர, சோழ, பாண்டியர் என்ற வேந்தர் ஆட்சி உருவாகும் முன்னரே வேள் ஆட்சி தோன்றி நிலை பெற்றுவிட்டது.

·தொல்குடிகளின் இரத்த உறவினால் உருவான தலைவனே வேள். இதனால் இருவருக்கும் இடையிலான உறவு உறுதியானதாய் இருந்தது.

·ஒவ்வொரு தொல்குடிக்கும் என்று ஒரு வேள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

·ஆநிரைகளைக் கவர்வதை மையமாகக் கொண்ட பூசலில்தான் முதலில் வேள் உருவானான்.

·இதன் தொடர்ச்சியாக பூசல் நிகழும் போது மட்டுமின்றி, பூசல் நிகழாத காலங்களிலும் வேள் என்ற குடித்தலைவன் தேவைப்பட்டான்.

இச்செய்திகளின் சாரத்தை ‘குடியில் ஒளிமிக்க ஒருவன் பிற மக்களால் தலைவனாக ஏற்றுக்கொள்ளப் பெற்றதையே வேள் என்ற சொல் கூறுகின்றது’ என்று பூங்குன்றன் குறிப்பிடுகிறார்.

காலப்போக்கில் வேள் என்ற சொல் பட்டமாக மாறிவிட்டது. குடித்தலைவரைக் குறிக்கும் சொல்லாக இருந்த வேள் பிற தலைவர்களையும் குறிக்கும் சொல்லா யிற்று. சங்க இலக்கியங்களால் சுட்டப்பெறும் வேளிர் களின் பெயர்களை நூலாசிரியர் தொகுத்துரைத்துள்ளார். அத்துடன், பாண்டிய நாட்டு வேளிர், கொங்கு நாட்டு வேளிர் என வகைப்படுத்தி விரிவான செய்திகளை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதன் அடுத்த கட்டமாக வேந்தர் குறித்த ஆய்வை முன்நடத்திச் செல்கிறார்.

வேந்தர்

சங்ககால அரசியல் படிநிலையில் உயர்ந்து நிற்போர் வேந்தர் என்போரே ஆவர் என்று குறிப்பிடும் பூங்குன்றன், சங்ககால அரசியல் தலைமை தொடர்பாக மிகுதியாகப் பயன்படுத்தப் பெறும் சொற்களாக, வேந்து, வேந்தன், வேந்தர் என்ற மூன்று சொற்களைக் குறிப்பிடு கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுவதாவது,

‘வேந்தன், வேந்தர் ஆகிய சொற்கள் வேந்து என்பதன் அடியாகப் பிறந்த சொற்கள் என்று கொள்வதே சிறப்புடையது. அரசு என்பதும் வேந்து என்பதும் ஒரு பொருள் நுதலிய சொற்கள். மன்னன், வேள், வேந்தன் ஆகிய சொற்கள் அரசியல் படிநிலையில் ஏறுமுகமான போக்கினைப் பெற்றுள்ளன.’

மூவர் என்றும் மூவேந்தர் என்றும் சங்க இலக்கியங் களிலும், தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்படுவோர் சேர, சோழ, பாண்டியர் ஆவர். இவர்களுள் பாண்டியர் மரபு காலத்தால் முற்பட்டதாகும். அசோகரது கல்வெட்டுகளில் இம்மூவேந்தர் குறித்த பதிவு உள்ளது. வேந்தர் உருவாக்கத்திற்கு முன், தொல்குடி தலைவர் களாக மன்னர்களும், வேளிரும் விளங்கியுள்ளனர். வேந்தர் தோற்றத்திற்குப்பின் இவ்விருவரும் வேந்தரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர்.

மன்னர், வேளிர், வேந்தர் என்ற மூவருமே அடிப் படையில் தொல்குடி சார்ந்தவர்கள் என்றாலும் வேந்தர்கள் தொல்குடியில் உயர்ந்தகுடியைச் சார்ந்த வர்கள் என்று கருதப்படலாயினர். இதனை வெளிப் படுத்தும் முகத்தான் ‘திணை’ சார்ந்தவர்கள் எனப் பட்டனர். ‘திணை’ என்பதற்கு உரையாசிரியர்கள் குடி, குலம், நிலம், ஒழுக்கம் என்று பொருள் எழுதியுள்ளனர். சங்கப் பாடல்களில் வேந்தர் குடியைக் குறிக்க திணை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பல குடிகள் இணைந்தே மூவேந்தர் குடி உருவாகியுள்ளது. பல குடிகளின் கூட்டமைப்பின் தலைவனே வேந்தன்.

வேந்தனின் குடி ஏனைய குடிகளை விட உயர்வானது என்பதை நிலைநாட்டும் முயற்சியாக, வேந்தர்களின், மரபுத் தோற்றத் தொன்மங்கள் உருவாக்கப்பட்டன. இதே சிந்தனைப் போக்கு வடபுலத்திலும் உருவானதாக ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். இத்தோற்றத் தொன்மங்கள்

“பண்டைய வேந்தர்கள் ஆளத் தகுதியானவர்கள் என்பதைக் காட்ட எழுந்தவை. அவர்கள் குடி ஆளும் தகுதியுடைய குடி என்பதை வலியுறுத்த எழுந்தவை”

என்று பூங்குன்றன் குறிப்பிடுகிறார். இது போன்ற நோக்கின் வெளிப்பாடாகவே, வேள்விகள் செய்யப் பட்டன என்பதும் வேள்விகள் நிகழ்ந்ததன் தொடர்ச்சி யாகப் பிராமணர் ஏற்றம் உருவானதென்பதும் அவரது கருத்தாகும்.

suburayalpookundran 600வேளிர் - வேந்தர் ஆட்சி

சிறுகுடி, சீறூர் ஆகிய குடியிருப்புக்களை உள்ளடக்கிய பகுதியே நாடு எனத் தொடக்கத்தில் அழைக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை நிலப் பகுதிகளில் அமைந்திருந்த நாட்டின் தலைவன் ‘Ôநாடன்’’ எனப்பட்டான். நெய்தல் நிலப்பகுதியின் தலைவன் ‘சேர்ப்பன்’ என்றும், மருத நிலப்பகுதி நாடு என்றழைக்கப் பட்டாலும் அதன் தலைவன் ஊரன் என்றும் அழைக்கப் பட்டான். இச்செய்திகளின் அடிப்படையில் குறிஞ்சி முல்லைத்திணைகளில்தான் நாடு என்ற அரசியல் புவியியல் பிரிவு தோன்றியது என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகிறார். இதன் அடிப்படையில், ‘நாடன்’ என்ற அரசியல் தலைவன் குறிஞ்சி, முல்லை நிலங்களுக் குரியவன். அவன் மன்னன் வேள் ஆகிய படிநிலைகளில் இருந்தவன். பல குடிகளின் நிலப்பரப்பிற்குத் தலைவன். குடிகள், ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்த கூறாக்கக் குடிகள். இவ்வியல்பு பற்றிச் சங்க இலக்கி யத்தில் இடைப்பிறவரலாகக் குறிக்கப் பெறுகின்றது. ஆனால், Òகூறாக்கக் குடிகள் வேளின் தலைமையை ஏற்றுக் கொண்டவை’’ என்ற முடிவுக்கு வந்துள்ளார். குறிஞ்சி, முல்லைப் பகுதியில் மட்டுமின்றி நெய்தல், பாலை நிலப்பரப்புகளிலும் நாடுகள் இருந்துள்ளன. குடிகளின் இணைப்பாக வேளிர் ஆட்சி திகழ்ந்தது.

வேளிரைப் போன்று ஒரு குடியை ஆளும் நிலையில் இருந்து மாறுபட்டு, பரந்துபட்ட நிலப் பரப்பை ஆளுவதாக, வேந்தர் ஆட்சி அமைந்தது. இதனால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நாநிலப்பகுதிகளை உள்ளடக்கியதாக வேந்தரின் ஆளுகைப் பகுதி அமைந்தது.

இப்பழங்குடி ஆட்சியின் அழிவின் மேல் வேந்தர் ஆட்சி என்ற பரந்துபட்ட ஆட்சி உருப்பெற்றது என்ற சிவராசப் பிள்ளையின் கருத்துடன் ஆசிரியர் உடன் படுகிறார்.

இவ்வாறு வேளிர் ஆட்சிமுறையில் இருந்து வேந்தர் ஆட்சி முறை தோன்றியதை தம் இருநூல்களின் வாயிலாக பூங்குன்றன் வெளிப்படுத்தியுள்ளார். இம்முயற்சியில் சங்க இலக்கியம், தொல்காப்பியம் கல்வெட்டுகள் என்பனவற்றைத் தம் ஆய்வுத் தரவுகளாகப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் வடஇந்தியா தொடர்பான வரலாற்றுச் சான்றுகளையும், ஆப்பிரிக்க மக்களின் மேய்ச்சல் நில வாழ்க்கை தொடர்பான மானிடவியல் சான்றுகளையும் ஓரளவுக்கு நாட்டார் வழக்காறுகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறு, ஆநிரைகள் என்ற சொத்தைப் பாது காப்பதில் முக்கிய பங்கு வகித்த வேளிரில் தொடங்கி வேந்தர் வரை வளர்ச்சியுற்ற, அரசு என்ற அமைப்பு குறித்த வரலாற்றைத் தக்க சான்றுகளுடன் எழுதி யுள்ளார். இருப்பினும் அவரது ஆய்வு முடிவுடன் ‘சங்க காலத்தில் முழுமை பெற்ற அரசு இருந்தது என்று கொள்வது கடினம், சிற்றரசு அல்லது சிற்றரசிலிருந்து அரசு என்ற அமைப்பிற்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்’ என்ற அவரது கூற்று, பர்ட்டன் ஸ்டீன் என்ற வரலாற்றாசிரியரின் கூறாக்கநிலை அரசு (Segmentary State) என்ற கருத்தின் தாக்கத்திற்கு ஆட்பட்டதன் வெளிப்பாடாகும். இது மேலும் ஆய்வுக்குரிய ஒன்று. இதற்கான தரவுகள் இந்நூலிலேயே இடம்பெற்றுள்ளன.

‘நடுகல் கல்வெட்டுகள்’ என்ற தலைப்பில் அவர் தொகுத்துப் பதிப்பித்த நூலும் இத்தலைப்புடன் இணைத்து நோக்க வேண்டிய நூலாகும். இந்நூலில் ‘நடுகல் செய்திகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிப்புரை ஓர் ஆய்வுக்கட்டுரையாக அமைந்துள்ளது.

நூல்கள்