captain swing 1

நெப்போலியனுடன் இங்கிலாந்து நடத்திய போரின் விளைவாக, இங்கிலாந்தில் பணவீக்கம் உருவானது. கிராமப்புறங்களில் வேலையின்மையும் வேலையற்ற உபரித் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் மிகுந்தன. வேலைச்சந்தையில் உபரியாகிப் போன இவர்கள் வேலையைத் தேடி இடப்பெயர்ச்சியை மேற்கொண்டார்கள் .

இடப்பெயர்ச்சியின் விளைவினால் வேளாண்மை விரிவடைந்து, அதனால் தானிய உற்பத்தி அதிகரித்தது. வேளாண்பண்ணைகளுடன் பிணைக்கப் பட்டிருந்த உழைப்பாளிகள் முன்போல் தானிய வடிவில் இன்றி பண வடிவில் ஊதியம் பெறுபவர்களாக மாற்றப்பட்டார்கள். இதற்கு முன்னால் ஆண்டுதோறும் வேலை என்றிருந்த நிலை, குறிப்பிட்ட வேளாண் பருவகால வேலையாக மாற்றமடைந்தது. இம் மாற்றமானது வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வுக்கும், வேலை இல்லாதாரின் எண்ணிக்கை மிகுவதற்கும் வழிவகுத்தது .

தானிய வடிவில் ஊதியம் பெறும் உரிமையை இழந்துபோன வேளாண்தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்துத் தம் உணவை வாங்கும் நிலைக்கும், பணவீக்கத்தின் விளைவுகளைச் சுமக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். அவர்களது அடிப்படைத் தேவையான உணவு, உடை என்பனவற்றைக் குறைந்த அளவிலான ஊதியத்தால் நிறைவு செய்யமுடியாது அல்லாடினார்கள்.

இது தொடர்பாக வில்லியம் கோபட் என்பவரின் கூற்றை ஹாப்ஸ்பாம் மேற்கோளாகக் காட்டுகிறார்: “முன்னர் செய்தது போல் தம் பண்ணையாட்களுக்கு உணவும் உறையுளும் நிலக்கிழார்கள் ஏன் வழங்கவில்லை என்ற வினாவை எழுப்பும் வில்லியம் கோபட், இம்முறையில் பணவடிவிலான கூலி என்ற பெயரில் குறைந்த செலவில் பண்ணையாட்களை வைத்துக்கொள்ள முடியும் என்பதால்தான்” என்று விடை பகர்ந்துள்ளார்.

பண வடிவில் ஊதியம் வழங்கும் இப் புதிய முறையானது நிலக்கிழார்களையும் பண்ணையாட்களையும் பிரித்தது. ஒரு பக்கம் உணவுப் பொருள்களின் விலை உயர்வு, மற்றொரு பக்கம் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு என்ற இரண்டிற்கும் இடையே அகப்பட்டு பண்ணையாட்கள் நைந்தார்கள். இதற்குமுன் அன்றாட உணவு குறித்துக் கவலையற்றிருந்த பண்ணையாட்கள், நிலக்கிழார்களின் சமையலறைக்குள் நுழையும் உரிமையை இழந்து நாள் அல்லது வார ஊதியக்காரர்களானார்கள். நில உரிமையாளர்கள் தமக்குரிமையான நிலங்களின் பரப்பளவை விரிவுபடுத்திக்கொண்டு, தம் பொருளியல் நிலையையும் உயர்த்திக்கொண்ட நிலையில், இருதரப்பினர்களுக்கும் இடையே சமூக நிலையிலும், பொருளாதார நிலையிலுமான இடைவெளி கூடியது. உழைப்பாளி, இரந்து வாழ்பவன் என்ற இருவருக்கும் இடையிலான வேறுபாடு மறைந்தது.

கிராமப்புற வேலையின்மைக்கு அறுவடைக்காலம் மட்டுமே விதிவிலக்காக அமைந்திருந்தது. கதிரடிக்கும் எந்திரங்கள் அறிமுகமான பின்னர் இதுவும் மாற்றம் அடைந்தது.நவம்பர், திசம்பர், சனவரி ஆகிய மாதங்களில் நிகழும் அறுவடைப் பணிகளில் பண்ணையாட்களின் பங்களிப்பு தேவையான ஒன்றாக இருந்தது. போர் நடந்த காலத்தில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அறுவடை எந்திரத்தின் தேவை அவசியமானதாய் இருந்தது. போர் முடிந்த பின்னர் பணவீக்கம் உருவானதுடன் உபரித்தொழிலாளர் எண்ணிக்கையும் மிகுந்தது. இம் மோசமான நிலையிலும் கூட அறுவடை எந்திரங்களின் பயன்பாடு தொடர்ந்தது. பெரும்பாலான நில உடைமையாளர்கள் அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினர். பண்ணையாட்களுக்கோ இது அச்சமும் துயரமும் தருவதாக அமைந்தது.

எந்திரங்களின் பயன்பாடானது இவர்களின் பட்டினிநிலையை ஏளனம் செய்வதாக அமைந்தது. இந்நிலையானது எந்திரங்களைத் தம் எதிரியாகக் கருதி அவற்றை அழிக்கும் சிந்தனையை இவர்களிடையே உருவாக்கியது. அறுவடை எந்திரத்தைப் போல வேறு எந்த வேளாண் எந்திரமும் இவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகவில்லை.

வேலையின்மை, விலைவாசி உயர்வால் பண வடிவிலான ஊதியம் போதாமை என்பனவற்றால் உந்தப்பட்ட வேளாண்தொழிலாளர்கள், இவற்றால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வழிமுறையாக உருளைக் கிழங்கு, டர்னிப் கிழங்கு ஆகியவற்றைக் கவர்ந்து வரும் சிறு திருட்டுக்களில் ஈடுபடலாயினர். இச் செயலால் பிறர் நிலத்தில் அத்துமீறி நுழைந்தவர்களாகவும்,பிறர்பொருளைக் கவர்ந்து வருபவர்களாகவும் குற்றவியல் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டனர்.

இத்தகைய சூழலில் தம் கண்முன் நிற்கும் எதிரியாக அறுவடை எந்திரங்களைப் பார்த்தனர்.

எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு

எதிர்ப்புணர்வின் சிறு பொறி போன்று வைக்கோல், தானியத் தாள், தானியக் களஞ்சியம் என்பனவற்றை நெருப்பிட்டு எரிப்பதும் எந்திரங்களை உடைப்பதும் ஆங்காங்கே நிகழலாயின. இவற்றைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர், அல்லது ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் நிறுவிய தண்டனை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

என்றாலும், எதிர்ப்புணர்வு மட்டுப்படவில்லை. 1830 ஆகஸ்ட் இறுதியில், தீ வைப்பு, அச்சுறுத்தும் தன்மைகொண்ட கடிதங்களை எழுதி அனுப்புதல், கிளர்ச்சியைத் தூண்டும் தன்மைகொண்ட துண்டு வெளியீடுகளையும் சுவரொட்டிகளையும் வெளியிடுதல், கூலி உயர்வை வலியுறுத்தும் கூட்டங்களை நடத்துதல், பண்ணை உரிமையாளர்கள், பண்ணை மேற்பார்வையாளர்கள், நீதிபதிகள், மதக்குருக்கள் ஆகியோரைத் தாக்குதல், கலகம் செய்து பணம் அல்லது உணவுப் பொருள்களைப் பெறுதல், வரிக்குறைப்பு, குத்தகைக் குறைப்பு என்பனவற்றை வற்புறுத்திப் பெறுதல் என்பன பண்ணையாட்கள் தரப்பில் நிகழலாயின.இவற்றின் வளர்ச்சி நிலையாக அறுவடை எந்திர அழிப்பு நிகழத் தொடங்கியது.

இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் பரவலாக நிகழத் தொடங்கின. கோடைகாலம், குளிர்காலம், இரவு, பகல் என்ற வேறுபாடு இல்லாமல் வெளிப்படையாக இவை நிகழ்ந்தன. அடிப்படை ஊதியம் என்ன என்பதை வரையறுக்கும்படியும், கிராமப்புற வேலையின்மையைப் போக்கும்படியும் வற்புறுத்தினர். இச் செயல்கள் யாவும் ஓர் இயக்கமாக வளர்ச்சி பெற்றதால், சிறைச்சாலையை உடைத்து, சிறைப்பட்டிருந்தவர்களை விடுவித்து அழைத்துச்செல்லும் துணிச்சலை வழங்கியது. சிறையை உடைத்து அதில் அடைக்கப்பட்டிருந்த பண்ணையாள் ஒருவரை விடுவித்ததுடன் ஊர்வலமாக அவரை அழைத்துச்சென்றமையும் கூட நிகழ்ந்தது.

ஸ்விங் யார்?

இக் குடியானவர் எழுச்சியில் பரவலாக அறிமுகமான பெயர் காப்டன் ஸ்விங். இப் பெயரில்தான் எச்சரிக்கை செய்யும் கடிதங்களும் துண்டு வெளியீடுகளும் வெளிவந்தன. உண்மையில் இது ஒரு கற்பனைப் பெயர்தான் என்பதை முன்னர் கண்டோம். செயல்பாடுகளின் அடிப்படையில் நெருப்பு வைத்து எரிக்கும் ஸ்விங், எந்திரங்களை உடைத்து நொறுக்கும் ஸ்விங் என இருவேறு ஸ்விங்குகள் பண்ணையாட்கள் எழுச்சியில் காணப்படுகின்றனர்.

இக் கலகச் செயல்களில் ஈடுபட்டோர் பண்ணையாட்கள் என்றபோதும் அரசு ஆவணங்கள் வேறு வகையில் குறிப்பிடுகின்றன. பிறர் நிலத்தில் அத்துமீறி நுழைவோர், கள்ளக்கடத்தலில் ஈடுபடுவோர் , திருட்டுத்தனமாக மான்வேட்டை ஆடுவோர் ஆகியோரே இக் கலகங்களில் ஈடுபட்டதாக அரசு ஆவணங்கள் சில குறிப்பிடுகின்றன .

கிப்பன் வேக்ஃபீல்ட் என்பவர், போராட்டங்களில் ஈடுபட்ட பண்ணையாட்களை இரண்டு பிரிவினர்களாகப் பகுத்துள்ளார். அவரது பகுப்பின்படி ஒரு பிரிவினர் கூனிக் குறுகியவர்களாக, சதைப்பற்றில்லாத பின்னங்கால்களைக் கொண்டவர்களாக, உடலும் உள்ளமும் நைந்துபோன மந்த புத்தியுள்ளவர்களாக, மன உறுதியற்றவர்களாக விளங்கினர்.இவர்களைப் பார்க்கும்போதே அவர்களது அவலநிலை வெளிப்படும்.

மற்றொரு பிரிவினர் வலிமையானவர்களாக, அறிவுக்கூர்மை உடையவர்களாக, வளையாத தன்மைகொண்ட வலுவான தூண்போன்று விளங்கினர். உளுத்துப்போன சட்டங்களினால், அத்துமீறிப் பிறர்நிலங்களில் நுழைபவர்களாகவும், கடத்தல்காரர்களாகவும் ஆக்கப்பட்டவர்கள். இவ்விருவகையான பண்ணையாட்களின் சேர்க்கையால் உருவாக்கப் பட்டவர்தான் காப்டன் ஸ்விங்.

அடுத்த இதழில் காப்டன் ஸ்விங் பெயரால் செயல்பட்டோர் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்தும் காண்போம்.

(தொடரும்)

Captain Swing

Eric Hobsbawm & George Rude (2001)

Phoenix Press, London

- ஆ.சிவசுப்பிரமணியன்