teacher at govt schoolஉலகம் முழுவதும் பள்ளி கல்வியில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது மற்றும் முதன்மையானதாகும். உலகளவில் பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் தரும் நாடுகள் அனைத்து தளங்களில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அண்மையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியீடு செய்து புள்ளி விவரங்களினபடி உலக அளவில்; மக்கள் தொகையில் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு (Child population) ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது நாடுகளிடையே மிகப்பெரிய அளவிலான வேறுபாடுகளை காண முடிகிறது.

உலகின் பல வளர்ச்சிக் குறியீடுகளில் சிறந்து விளங்கும் டென்மார்க் நாட்டில் 1000 குழந்தைகளுக்கு 253 ஆசிரியர்கள் உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறம் மனித வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கிய டான்ஷானியா நாட்டில் 1000 குழந்தைகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என்று புள்ளி விபரங்கள் காட்டுகிறது. மேலும் உலகம் முழுவதும் அதிகம் மற்றும் மிகவும் குறைந்த ஆசிரியர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உலகில் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் குழந்தைகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது நமது பாரத நாடும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதைக் காண முடிகிறது. மேற்கண்ட நாடுகளின் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் எண்ணிக்கை புள்ளி விபரங்கள் நமக்கு பல உண்மைகளை வெளிக் காட்டுவதாக உள்ளது.

teacher student ratioதகவல்: சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளி விபரங்கள்

மேற்கண்ட புள்ளி விபரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது; நம்மை விட நிலப்பரப்பு, மக்கள் தொகை மற்றும் பொருளாதார அளவில் மிகச் சிறிய நாடுகள் கூட தங்களின் குழந்தைகளின் கல்வி நலன்களை, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிக அளவு ஆசிரியர்களை நியமித்து செயல்படுவதைக் காண முடியும். மறுபுறம் ஆசிரியர் எண்ணிக்கைப் பட்டியலில் பின் தங்கியுள்ள நாடுகள் பட்டியலை பார்க்கும் போது இதில் இடம் பெற்றுள்ள பல நாடுகள் மிகவும் பின்தங்கிய நாடுகள் (Least developed countries) பட்டியலில் உள்ளவை. இவற்றில் பல வெகு ஆண்டுகளாக பல உள்நாட்டுப் போர்கள், கலகங்கள் காரணமாக பொருளாதாரத்திலும், உணவு பாதுகாப்பிலும், உள்நாட்டு சட்ட ஒழுங்கிலும் மிகவும் பின்தங்கிக் காணப்படும் நாடுகள். இவற்றின் வரிசையில் நமது நாடு ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியா போன்ற வளர்ச்சி குறைந்த நாடுகளுடன் காணப்படுவது மிகவும் வேதனையான மற்றும் கவலை தரும் விஷயமாகும்.

உலகிலேயே கல்விக்கு என்று தனியாக ஒரு செயற்கைக்கோள் (EDUSAT) அனுப்பிய பெருமை பெற்ற நமது நாட்டில் ஆசிரியர் நியமனங்களில் கோட்டை விடப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய அளவிலான பாதிப்புகளை நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் மக்கள்தொகை புள்ளி விபரங்களைக் (census) கொண்டு பார்க்கும் போது வருகின்ற 2050 ஆண்டில் உலகில் சீனாவை மிஞ்சி அதிக அளவு மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்றும், இந்தியாவின் மக்கள்தொகை 1.65 பில்லியன் அளவிற்கு இருக்கும் என்று பல பொருளாதார மற்றும் சமூக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே உலகின் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாடுகள் (Malnourished Children) கொண்ட குழந்தைகள் உள்ள நமது நாட்டில் அவர்களின் நிகழ் மற்றும் எதிர்கால வளர்ச்சி மற்றும் நமது நாட்டின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிகப்படியான ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நியமனம் செய்து நமது நாட்டின் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையிலான கல்வி உரிமையை, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கு நிலைநாட்டச் செய்வது நமது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும்.

இதனைத் தவறும் பட்சத்தில் இந்தியாவின் வல்லரசு கனவு வெறும் கனவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் குழந்தைகளின் பள்ளி கல்வி கனவை பாதுகாக்கத் தவறும் அரசுகள் நல்லரசாகக் கூட இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்த இழிநிலை மேலும் தொடராமல் இருக்கவும் நமது பள்ளி கல்வியை பாதுகாக்கவும் அதிகளவு ஆசிரியர்களை நியமனம் செய்வோம், நமது குழந்தைகளின் கல்வி உரிமை மற்றும் நமது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.

பார்வைகள் (References):

1. Countries with more Teachers,The Economic Times dated 7th October, 2019.

2. Ashutosh Kumar Tripathi, 2019. Re-Emergence of the ghost of Malthus. The Hindu Business Line dated 7th October, 2019.

முனைவர் தி. ராஜ் பிரவின்