உலக மயமாக்கல், தாராளமயமாக்கல் எனும் ஏகாதிபத்தியத்தின் மாய்மால மோசடிகளுக்குப் பிறகு பெரும்பாலான அறிஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக மாறிவிட்டார்கள். இத்தகைய பின்புலத்தில் சமுதாய அக்கறை, மானுடநேயம், விளிம்புநிலை மக்கள் மீது கரிசனம், இயல் பண்பு கொண்ட ஓர் அறிஞரின் நூலை நான் பயிலும் வாய்ப்பை தோழர் ப.கு.ராஜன் அவர்கள் வழங்கினார்கள்.

புகழ் வாய்ந்த பேராசிரியர், ஜெ.ஜெயரஞ்சன் அவர்களின் A Dravidian Journey (ஒரு திராவிடப் பயணம்) எனும் நூல் ஒரு நூற்றாண்டு காலத்தின் இலக்கியமாகவும் சமுதாயப் பொருளியல், அரசியல் பொருளியல் பற்றிய ஆவணக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. 1916 முதல் 2014 வரையிலான தமிழ்நாட்டின் சமுதாயவியல் வரலாறும் வளர்ச்சியும் மாற்றமும் நம் கண்முன்னே தொடர் காட்சிகளாக நிகழ்கின்றன. பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் இன்றைய திமுகழக ஆட்சியின் திட்டக்குழுவின் தலைமைப் பொறுப்பிலிருப்பது நம்பிக்கையளிக்கிறது. எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

அய்ரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டிய பெருமுதலாளித்துவம் மதநிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி நவீன அறிவியலை வளர்த்து வந்த பெருமுதலாளித்துவம், சீரழிந்த நிலையில், தேங்கி நின்று அதே நிலப்பிரபுத்துவத்தின் கிழட்டுக் கணிகைகளான மத அடிப்படைவாதத்தை பல்வேறு நாடுகளில் வெறியாட்டம் ஆட வைத்திருக்கிறது.

a dravidian journeyதமிழ் நாட்டின் நிலப்பிரபுத்துவத்தின் தாதிகளான சைவத்தை வெள்ளாளர்களும் வைணவத்தை பிராமணர்களும் பக்தி இயக்கம் எனும் பெயரால் வளர்த்தார்கள். அதன் நோக்கம் நிலப்பிரபுத்துவ சமுதாய பொருளாதார அரசியலை நிரந்தரமாக நிலைக்க வைப்பது தான்.

அந்த நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதில் தமிழர் அரசியல் சமுதாய இயக்கங்களின் குறிப்பாக பெரியார் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகியவற்றின் பங்களிப்பு பற்றியும் கலைஞரின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டவடிவங்களும் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் பேராசிரியர் ஜெயரஞ்சன் விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். வடபாதிமங்கலம் வி.எஸ்.தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ அய்யர், வலிவலம் தேசிகர், உக்கடை தேவர் போன்ற நிலப்பிரபுக்களில் ஒவ்வொருவரும் சில கிராமங்களுக்கு உரிமையாளர்கள். பல ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு உடைமையாளர்கள். அவர்களது அதிகாரத்துக்கு எதிரான தொடர் போராட்டத்தில் வெற்றி பெற்றோர் காலம்காலமாய் ஒடுக்கப்பட்ட தலித்துகளும் இடைநிலை சாதி விவசாயிகளும் என்பது பெருமைக்குரிய வரலாறு அல்லவா?

காமராஜர் ஆட்சி நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் அமலுக்கு வரப்போவது மேல் ஜாதி அதிகாரிகளாலும் காங்கிரஸ் மந்திரிகளாலும் கசிய விடப்பட்டது. பதினாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பினாமி சொத்துக்களாக மாற்றப்பட்டு உச்சவரம்பு சட்டமல்ல, மிச்சம் வரம்புசட்டம் என்று கம்யூனிஸ்டுகளால் விமர்சிக்கப்பட்டது. மீண்டும் நிலச்சீர்திருத்தச் சட்டம் வாரக் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச்சட்டம் போன்றவை கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் சரியாக அமல்படுத்தப்பட்டு பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக விவசாயம் செய்யும் எளியோர் கைகளுக்கு மாறியதை பேரா.ஜெயரஞ்சன் பட்டியலிட்டிருக்கிறார்.

காவிரிச் சமவெளி விஷ்ணாம்பேட்டை கிராமத்திலும் தாமிரபரணிச் சமவெளி கங்கை கொண்டான் கிராமத்திலும் பிராமணர்கள் மற்றும் வெள்ளாளர்களின் பலநூறு ஏக்கர் நிலவுடமை இடைநிலைச் சாதி மற்றும் தலித் விவசாயிகளுக்கு கைமாறியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பிராமணர்களும் வெள்ளாளர்களும் அதிகாரம் செலுத்தி வந்த கிராமங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரியதாயிருப்பது சாதாரண விஷயமல்ல. 7 ஆம் நூற்றாண்டு முதல் உச்சகட்ட அதிகாரம் கொண்ட நிலப்பிரபுக்கள் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து பெருநகரங்களுக்கு, ஆங்கிலக் கல்வி வழியாக வந்தேறிகளின் ஆட்சியில் அதிகாரம் பெறுவதற்காக புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். அதே ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் நிலவுடைமைகளுக்கு குத்தகைதாரர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் எளிய விவசாயிகளுக்கு உள்குத்தகை விட்டு, நிலப்பிரபுத்துவ அதிகாரம் நீடித்து நிலைக்க சேவை செய்திருக்கிறார்கள்.

நிலப்பிரபுக்களுக்கு வாரதாரர்கள் விளைச்சலில் 80 சதவீதத்துக்கு மேல் செலுத்த வேண்டியிருந்தது. அதைவிட வெங்கொடுமை மேலும் 10 வகையில் விவசாயி தெண்டம் அழவேண்டியிருந்தது, அவை, கிடைக்கூலி, வண்டிச் சத்தம், நீராணிக்கம், கோயில்பத்து, வைக்கோலடை, விரைப்பத்து, கடச்சப்பத்து, மரக்கால் துண்டு, கூத்தாடிப்பத்து, தரிசுக்கூலி, அப்படிக் கசக்கிப் பிழியப் படும் விவசாயிக்கு என்னதான் மிஞ்சும். பட்டுக்கோட்டையாரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

காடு வௌஞ்சென்ன மச்சான் - நமக்கு

கையும் காலும் தானே மிச்சம்...

அதைவிட பரிதாபத்துக்குரியவர்கள் பண்ணையாள் என்போர். அவர்கள் கருவறையில் இருக்கும் போதே அடிமைகளாக்கப்படுகிறார்கள்.ஏனென்றால் பண்ணையாளுக்கு பெண் பார்ப்பது தாலிக்கு பொட்டுத்தங்கம் மற்றும் கல்யாணச் செலவு நிலப்பிரபுவுடையதே. ஆகவே பண்ணையாளின் உடம்புகூட அவனுக்குச் சொந்தமானதல்ல. பல நேரங்களில் பண்ணையாள் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவாள்.

பேரா.ஜெயரஞ்சன் சொல்லும் மேல்ஜாதி அநீதிகளுக்கு அடிப்படை என்ன? அவைகளை எதிர்த்துக் கேள்வி கேட்கவோ போராடவோ முடியாதா?!

“...ஒரு சூத்திரன் தன்னுடையதென்று சொத்து எதனையும் கொண்டிருக்கக் கூடாது...” (மனு, VIII -417) ”…ஒரு சூத்திரன் தன்னால் முடியுமென்றால் கூட சொத்து சேர்ப்பது கூடாது, சொத்து சேர்க்கும் சூத்திரன் பிராமனர்களுக்கு வலி ஏற்படுத்துகின்றான்...” (மனு X-129) “.. பிராமனர்கள் சூத்திரர்களுக்கு மீந்து போன உணவு, கிழிந்து போன ஆடைகள், உடைந்துபோன பாத்திரங்கள் ஆகியவற்றையேத் தர வேண்டும்...” (மனு, X- 125).. நிலப்பிரபுத்துவத்தின் அவக்கேடான தத்துவ அறிஞர் காலடி சங்கராச்சாரி எழுதுகிறார் (9 ஆம் நூற்றாண்டு), “...சூத்திரன் அறிவு பெற உரிமையற்றவன்; …சூத்திரன் எந்த உரிமையும் இல்லாதவன்…; “சூத்திரன் நடமாடும் சுடுகாட்டுக்கு சமமானவன்...” (ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யம், அத்தி.1, பகுதி III, சூத்திரம் 34, 37, 38.) அந்த சங்கராச்சாரியைத்தான் பகவத் பாதாள், ஷண்மதஸ்தாபகர் என்று பிராமணர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள்.

பிராமணர்கள் உலகமெங்கும் அந்த பகவத் பாதாளின் புகழை இன்றும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். சைவ தத்துவ, வைணவ தத்துவ அறிஞர்கள் காலடி சங்கராச்சாரியின் பல கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களே. உலகம் மாயை என்ற சங்கராச்சாரியின் கொள்கை மட்டுமே இவர்கள் ஏற்றுக் கொள்ளாதது. இவற்றை ஜெயரஞ்சன் எழுதவில்லை; ஆனால் இது தானே பின்புலம்?

தமிழ் நாட்டில் பிராமண ஜாதியின் ஆதிக்கம் நிலவிய சதுர்வேதி மங்கலங்களில் அவை அமல்படுத்தப்பட்டன. சர்வ முட்டாள் மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கலாம்.பிராமணர்களும் வெள்ளாளர்களும் நில மான்யம் பெற்ற பகுதிகளில் குடிமக்கள் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தார்கள் என்ற துயரங்களின் வரலாற்றை பேரா.ஜெயரஞ்சன் விவரித்திருக்கிறார். 1940 லிருந்து கம்யூனிஸ்டு விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டம் பிராமண ஜாதி மேலாதிக்கத்தை கண்டித்து பெரியார் இயக்கம் நடத்திய போராட்டம், இறுதியாக கலைஞர் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் புதிது புதிதான உரிமை மீட்பு சட்டங்கள் நிலப்பிரபுத்துவத்தை தமிழக மண்ணிலிருந்து ஒழித்துக் கட்டியதை பேராசிரியர் மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

பேரா.ஜெயரஞ்சனின் ஆய்வுகள் சமூக அறிவியல் விதிகளின்படி மிகத் துல்லியமாக நடத்தப்பட்டவை. நூற்றுக்கணக்கான ஆய்வு நூல்கள், நூற்றுக்கணக்கான கள ஆய்வுகளின் சாரமாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. பல கள ஆய்வுகளில் பேரா.ஜெயரஞ்சன் நேரடியாக உழைத்திருக்கிறார். தமிழகத்தின் கிராமப்புற சமூக நிலை மற்றும் மாற்றங்கள் குறித்து தனக்கு முன் நடந்த ஆய்வுகள், ஆய்வு முறைபாடுகள், அவற்றின் நிறை, குறைகள் பற்றிய பேராசிரியரின் கருத்துகள் என்பதோடு நூல் தொடங்குகின்றது. ஃபிரான்சிஸ் புச்சானன் (1800), கில்பர்ட் ஸ்லேட்டர் (1916), கேத்லின் கோ (1950-1980), எஸ்.குகன் (1983), வெங்கடேஷ் ஆத்ரேயா (1984) போன்ற அவரது முன்னோடிகளின் ஆய்வுகள் குறித்த அறிமுகமும் நமக்குக் கிடைக்கின்றது.

தமிழகத்தின் கிராமப்புற சமூக மாற்றங்கள் குறித்த ஆய்வில் ’ஸ்லேட்டர் கிராமங்கள்’ முக்கியமானவை. சென்னை (அப்போது மதராஸ்) பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறையின் முதல் பேராசிரியரும் துறைத் தலைவருமான கில்பர்ட் ஸ்லேட்டர் அவர்களும் அவரது மாணக்கர்களும் சமூகவியல் கணக்கெடுப்பும் ஆய்வும் நடத்திய அன்றைய மதராஸ் ராஜதானியின் 17 கிராமங்கள்தாம் ‘ஸ்லேட்டர் கிராமங்கள்’. அவர்கள் தம் கணக்கெடுப்பு, ஆய்வு முடிவுகளை 1918 ஆம் ஆண்டு பதிப்பித்தனர். அந்த 17 கிராமங்களில் 5 இன்றைய தமிழ் நாட்டில் உள்ளன. இவற்றில் ஸ்லேட்டர் காலத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் சமூகவியல் கணக்கெடுப்பும் ஆய்வுகளும் நடந்துள்ளன. நூலாசிரியரான பேராசிரியர் ஜெயரஞ்சனும் இருவேல்பட்டு, கங்கைகொண்டான், பாலக்குறிச்சி ஆகிய ஸ்லேட்டர் கிராமங்களில் தன் சகாக்களுடன் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த 90 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை வடித்தெடுத்துத் தந்துள்ளார். பலவேறு மாற்றங்கள், முன்னேற்றங்கள் நடைபெற்றிருந்தாலும் இன்னமும் மாற்றம் காணாத ஊரும் சேரியும் என்ற பிளவுகள், தலித் மக்களில் கணிசமானோர் நிலமற்ற விவசாயக் கூலிகளாகத் தொடரும் நிலை, இன்னமும் தொடரும் தீண்டாமை ஆகியவற்றை எடுத்துக்கூறி, நாட்டிலேயே நகர்மயம் அதிகம் ஆன மாநிலத்தில், மேம்பாடுகள் அதிகம் நடைபெற்றுள்ள மாநிலத்தில் தந்தைப் பெரியாரின் வழிவந்தோர் ஆட்சிகள் தொடர்ந்து நடக்கும்போது இப்படி இருப்பது வெட்கக்கேடானது என்பதை சுயவிமர்சனத்தோடு இடித்துரைக்க ஜெயரஞ்சன் தயங்கவில்லை. அவர் இதைச் செய்வதால்தான் அவரது பாராட்டுகளும் நமபகத்தன்மை பெறுகின்றன.

5 ஆம் நூற்றாண்டில் திருமூலர் வாழ்ந்த காலத்தில் தான் பெருவாரியான பிராமணர்கள் தமிழர் மண்ணில் கால் வைத்தார்கள். 14 ஆம் நூற்றாண்டு விஜயநகர ஆட்சிக்காலத்திலும் பெருவாரியான பிராமணர்கள் பதினாயிரக்கணக்கான ஏக்கர் நிலவுடமைகளை பெற்றார்கள். 7 ஆம் நூற்றாண்டில் சிவனின் பெயராலும் விஷ்ணுவின் பெயராலும் தமிழ்நாட்டில் பக்தி இயக்க வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

குதிரைப் பயிற்சியாளர்கள், பஜனை பாடிகள் சோதிடர்கள், ஒற்றர்கள் போன்ற பணிகளில் வேந்தர்களால் நியமிக்கப்பட்ட பிராமணர்கள் 26 நூற்றாண்டுகளாக ஆட்சியாளர் எவரென்றாலும் பஜனைபாடி ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து வந்தவர்கள், அவர்கள் குடிமக்களின் வாழ்வியல் உரிமைகளில் அழிமானம் செய்வதற்கு நேர்விகிதத்தில் வெகுமானம் தரப்பப்பட்டது. வீணாதிவீனர்களான ஆட்சியாளன் ஒவ்வொருவனும் பிராமணர்களுக்கு அதீதமான நிலமான்யம் வழங்கினான். 18 ஆம் நூற்றாண்டின் 2 ஆவது பாதியில் மநுதர்மத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலேய அரசிக்கு பரவசத்துடன் கடிதம் எழுதினான். மநுதர்மத்தை இந்தியாவில் அமல்படுத்திவிட்டால் ஆண்டு முழுவதும் இங்கிலாந்தில் பொன்னாக பொழிந்து கொண்டேயிருக்கும் என்று எழுதினான். அவனுக்கு கல்கத்தாவில் 30 அடி உயரத்தில் பிராமணர்கள் நினைவுச் சின்னம் எழுப்பினார்கள். அவனைப் பின்பற்றி ஜெர்மானிய மாக்ஸ் முல்லர், சமஸ்கிருதம் இந்தோ-அய்ரோப்பிய மொழி என்றும் ஒரு நாய்த்தோலில் வடிகட்டிய பொய்யைச் சொன்னார். பிரிட்டிஷ் ஆங்கிலேயரும் பிராமணர்களும் கல்கத்தாவில் ஏசியாடிக் சொஸைடி என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டார்கள்.

அய்ரோப்பியரும் பிராமணரும் பிரிந்துபோன சகோதரர்கள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டனர். இந்தப் பின்புலத்தில் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வி பயின்று அரசு அதிகாரத்தில் பங்கு பெறுவதற்காக தங்களது நிலவுடமைகளை வாரம் குத்தகைக்கு முறையில் வயதான ஜாதிக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டு பெருநகரங்களில் குடியேறினார்கள். கிராமங்களில் அந்தப் பண்ணைகளில் உழைத்த ஒடுக்கப்பட்ட குடிமக்கள் படிப்படியாக அதிகாரம் பெறத் தொடங்கினார்கள். எந்த வீணாதிவீணன் ஆட்சியாளனாக இருந்தாலும் அவனுக்கு ஊழியம் செய்வதும் குடிமக்களுக்கு அட்டூழியம் செய்வதும் பிராமணஜாதித் தொழில் தர்மம். அதிகாரத்தை நோக்கி பஜனை பாடுவதும் உழைப்பாளிகளை வசைபாடுவதும் அவர்களது தொழில்தர்மம்.. வெள்ளாளர் ஜாதி நிலப்பிரபுக்கள் அடக்குமுறையிலோ உபரி விளைச்சலை அபகரிப்பதிலோ குறைந்தவர்களல்ல, ஆனால் அவர்களுக்கு தானமளிக்கப்பட்ட நிலம் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டதில் சுமார் 10 % தான். மேலும் மற்ற குடிகளை பிராமணர்கள் போல் இழிவு படுத்தும் தர்ம சாஸ்திரங்கள் ஏதும் புனையவில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.

க்ஷத்திரியன், வெள்ளாளன், ஆகிய இரண்டு பெயர்ச்சொற்களும் நிலவுடமையாளன் என்றே பொருள்படும். சோழப் பேரரசு காலத்தில் பல போர்க்கலை பயின்ற பல்வேறு இடைநிலைச் சாதிகளிலிருந்து போரில் சாதனை புரிந்ததற்காக நிலமான்யம் பெற்றவர்களே வெள்ளாளர். அவர்களுடைய ஆச்சாரங்களைப் பார்த்து பெரியார், அவர்களை ‘1.5 பார்ப்பான்' என்று கேலி செய்திருக்கிறார்.

சிறு விவசாயிகளாக இருக்கும் வெள்ளாளர் சில கிராமங்களில் ஆதிதிராவிட குடிகளுடன் 100 நாள் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டதை பேராசிரியர் விவரித்திருக்கிறார். அவர்களுடன் சேர்ந்து வேலை செய்தால் வேலைச்சுமை தங்கள் மீது விழும் என்று தலித்துகள் ஆட்சேபித்ததையும் அதனால் வெவ்வேறு நேரம் ஒதுக்கப்பட்டதும் நியாயமான பெரும்பாலான கிராமங்களில் இரண்டு மேல் ஜாதிகளின் நிலவுடமை தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல இடைநிலைச்சாதி விவசாயிகளிடம் கைமாறியிருப்பது சமுதாயப் புரட்சியே. கிருஸ்துவ மிஷனரிகளின் ஆங்கிலக் கல்வி தேவேந்திரகுல வேளாள குடியினரை பலமடங்கு முன்னேற்றியிருக்கிறது. தென் மாவட்டங்களில் இடைநிலைச் சாதிகளை விட வேவேந்திரகுல வேளாளர் உயர்ந்த பொருளாதார நிலையில் இருப்பதை பேராசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

நிலப்பிரபுக்கள் எந்த வாரக் குத்தகை விவசாயியையும் சில குறிப்பிட்ட காரணங்களைத் தவிர வெளியேற்ற முடியாதபடி கலைஞரின் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால் இரண்டு மேல் ஜாதியினர் சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு, நிலத்தை விற்றிருப்பதையும் சில பகுதிகளில் நிலப்பரப்பில் 3 இல் ஒரு பகுதியை கிரயமில்லாமல் இழப்பீடாகத் தந்து நிலத்தை வேற்று நபருக்கு விற்றுச் சென்றதையும் ஆய்வு நூல் விவரிக்கிறது. மேல் ஜாதியினர் தங்கள் நிலவுடமை கிராமங்களுக்கு வந்து போவது சொற்ப விலைக்கு விற்பதற்காக மட்டுமே.

மனித இனத்தில் புலம்பெயர் துயரம் என்றால் என்னவென்றே தெரியாத நாடோடி இனங்கள் யூதர்கள், பிராமணர்கள். அவர்களிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களில் அதுவும் ஒன்று. சடங்காச்சாரத்தையே நன்னடத்தை என்றும் மூட சாஸ்திரங்களையே தர்மம் என்றும் ஆபாசப் புராணங்களையே வரலாறென்றும் குடிமக்களை நம்ப வைத்துக் கொண்டிருந்த இரண்டு மேல் ஜாதியினர் கிராமங்களிலிருந்து நிரந்தரமாக வெளியேறிய பிறகு நாட்டுப் புறங்களில் அறிவு வெளிச்சம் புலரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தீவினையாளர்கள் புலம் பெயர்ந்த பின்னாலும் அவர்கள் விதைத்த நச்சு பரவிக் கொண்டுதானிருக்கும். தலித்துகளும் மற்ற பிற்பட்ட சாதிகளும் அரசியல் தளத்தில் போராடப் புறப்பட்டிருக்கிறார்கள். அரசியலில் அதிகாரப் பகிர்வு போதுமானதாக இல்லை என்ற போதும் சில படிகள் முன்னேறியிருப்பது உண்மை.

மடாதிபதிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் சொத்துக்களில் நில உச்சவரம்பு கொண்டு வருவது இயலாமல் மத்திய ஆட்சியதிகாரம் தடுத்து வந்திருக்கிறது. மடத்துச் சொத்துக்கள் நீடிக்கும் வரை மத அடிப்படைவாதத்தின் வெறியாட்டத்தை தடுக்க முடியாது. அதற்கு திராவிட இயக்கங்களும் கம்யூனிஸ்டு விவசாயிகள் சங்கங்களும் இணைந்து மக்கள் இயக்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் இன்று தமிழ்நாடு எய்தியிருக்கும் மாற்றம் ஒரு நூற்றாண்டு முந்திய நிலைக்குத் தாழ்ந்து விடும். பன்னாட்டு நிறுவனங்களும் புரோகித வர்க்கமும் எவ்வளவு ஆபத்தானவை என்பதை உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் மாய்மால மோசடிகள் நன்கு உணர்த்தியுள்ளன.

100 நாள் வேலைத்திட்டத்தைப் பற்றி சங்கிகளும் சீமானும் சங்கூதிக் கொண்டிருக்கும் நிலையில் ஆட்சியாளர்களே எதிர்பாராத விதத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதிய பேரம் செய்யும் ஆற்றலை வழங்கியிருப்பதை பேராசிரியர் விவரித்திருக்கிறார். குறிப்பாக குடும்பத்தில் பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கிறது.

மேல் ஜாதிகளின் சிவன் - விஷ்ணு கோயில்களைத் தவிர்த்துவிட்டு தலித்துகள் தங்கள் தாய்த் தெய்வங்களுக்கு விழாக் கொண்டாடும் சுயமரியாதை மீட்பு சாதாரணமானதல்ல. ஆனால் ஆதி திராவிட குடிகளின் நிலை இன்னமும் உயராமலிருப்பது கொடுமை அல்லவா. சங்க காலத்தில் தாய்த் தெய்வத்தின் பூசாரிகளாயிருந்தவர்கள். தொல்காப்பியரால் உயர்ந்த பழங்குடி மரபினராக மதிப்பீடு செய்யப்பட்ட இவர்கள் வள்ளுவச்சான்றோரையும் பேரறிஞர் அம்பேத்கரையும் இந்த நாட்டுக்கு வழங்கிய ஆதிக்குடிகள் இன்றும் நலிந்த நிலையில் கைவிடப்பட்ட விளிம்பு நிலையில் இருப்பது தமிழர்களுக்கு மிகப் பெரிய மானக்கேடு.

முதிய ஆதி திராவிடகுடி மக்களுக்கு உரிய நிலவுடமைகளும் அதிகாரப் பகிர்வும் தருவதற்கு திராவிட ஆட்சி முன்வர வேண்டும்.இடை நிலைச்சாதிகளைச் சேர்ந்த அதிகார வர்க்கம் பிராமணியத்தால் கொம்பு சீவி விடப்படுவது தடுக்கப்பட வேண்டும். சங்கிகள் வருஷம் தவறாமல் இடைநிலைச் சாதிகளைத் தனித்தனியாக மாநாடு கூட்டி வெறியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும்.அப்படி இல்லையென்றால் அது திராவிடப் பெரியார் ஈவெராவுக்கு செய்யும் துரோகம்.

நான்கு மாவட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கு தொகை விவசாயக் குடிகள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறிச் சென்று உழைப்பதை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவிலேயே 52 சதவீத மக்கள் நகரமயமாகி வெவ்வேறு தொழில்களில் முனைந்திருப்பது சமுதாய முன்னேற்றங்களின் பரிமாணங்களில் ஒன்று. கங்கைகொண்டான் போன்ற பல கிராமங்கள் தொழில் பேட்டைகளாகி பல்வேறு நவீன தொழில்களுக்கு மாறியிருப்பது வளர்ச்சியின் மற்றொரு பரிமாணம். தமிழகத்தின் நகர்மயம் பற்றிய நீண்ட கட்டுரை தமிழகம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை காட்டக் கூடியதாகவும் தமிழக அரசு எந்தவிதமான வளங்களின் வளர்ச்சிகளுக்கு முயல வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. சமூகவியலை மறக்காத பொருளாதாரப் பேராசியரின் இருப்பு மாநில திட்டக் கமிஷனின் தகுதியை உயர்த்துகிறது. இதனை மாநில நிதியமைச்சரும் உணர்ந்திருப்பதும் அதனை வெளிப்படையாக அங்கீகரிக்கும் சொற்களை முன்னுரையில் எழுதியிருப்பதும் நம்பிக்கையளிப்பதாகும்.

உயர்கல்வியில் தலித்துகள் இடம் பெற்றிருப்பதும் நாட்டில் அதிகபட்ச உயர்கல்வி பெற்றவர்களின் மாநிலங்களின் ஒன்றாக இருப்பதையும் பேராசிரியர் சொல்கிறார். எளிய மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காக மேல்ஜாதி ஆண்டைகளைக் கெஞ்ச வேண்டியதில்லை. இன்று அவர்கள் நேரடியாகவே ஆட்சியாளரை நோக்கி கேட்கத் தொடங்கி விட்டார்கள். அதிகாரத்தின் வடிவமைப்பு மாற்றமடைந்திருக்கிறது.

ஒரு திராவிடப் பயணம் எனும் பேராசிரியரின் நூல் திராவிட இயக்கத்தின் பங்களிப்பையும் கம்யூனிஸ்டு விவசாயிகளின் போராட்டங்களையும் சரிசமமாகவே மதிப்பீடு செய்திருக்கிறது. எந்த அரசும் கொண்டு வரும் சட்டங்களும் திட்டங்களும் வெகுமக்களின் நேரடிப் பங்களிப்புடன் மட்டுமே நிறைவேற்றப்பட்ட முடியும் என்பதை தனது ஆய்வில் பேராசிரியர் ஜெயரஞ்சன் நிறுவியிருக்கிறார். அவர் மிகச் சிறந்த சமுதாய அறிவியல் அறிஞர் என்பதை தமிழகம் விரைவில் உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.

பொதுவாக ஆய்வு நூல்கள் பயில்வதற்கு சிரமமானவையாக இருக்கும், பேராசிரியரின் பல்துறை அறிவு (Inter - disciplinary Knowledge) இந்த நூலை மிகவும் சுவாரசியமாகப் படிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆங்கில அறிவுடையவர்கள் புரிந்து கொள்ளும் எளிய நடையில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதை, விளிம்புநிலையில் வாழ்வோரையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான வளர்ச்சியை (Inclusive growth) இலக்காகக் கொண்டு செயல்படக்கூடிய ஒரு தமிழர் பயன் மிகுந்த திட்டங்களை வரைந்தளித்து அவற்றின் நிறைவேற்றத்தில் பங்கேற்பார் என்று நம்பலாம்.

- ஏ.தெ.சுப்பய்யா, கவிஞர், தமிழ் இலக்கிய, சமூக வரலாற்று ஆய்வாளர்.