சுமார்த்தப் பிராமணர் பஞ்சாங்கத்திற்குப் பதிலாகத் தயாரித்த சைவ பஞ்சாங்கத்தின் மூலமாகத் தமிழகம் முழுவதும் சைவ பெருங்குடி மக்களிடையே அறிமுகமாகிய பெரும் புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை சுயமரியாதை இயக்கத்தில் ஆரம்பகாலத் தூண்களில் ஒருவராகப் பணியாற்றி இருக்கின்றார் என்றால் பலர் இதனை நம்ப மறுக்கின்றனர். காதில் கடுக்கனுடன் அவரது தோற்றமும், சைவத் திருமேனியும் பகுத்தறிவு பாசறைக்குப் பெரிதும் முரண்பட்ட ஒன்றாகத் தென்படுகிறது.

சுமார்த்த பிராமணர்கள் சிவாகமங்களின் செல்வாக்கை ஒழித்து சைவ சமயத்தை அடிமைப்படுத்தி வருகிறார்கள் என்ற வெறுப்பு இவரிடம் வேரூன்றியிருந்தது. இதிலென்ன அதிசயமென்றால் சுயமரியாதை இயக்கத்தில் நுழைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை ‘ஆசாரிய அபிஷேகம்’ பெற்று சிவாச்சாரியாகச் சிவபூசை செய்தவர். 1924 கார்த்திகை மாதம் கடைசிச் சோம வாரத்தன்று எடுத்த சிவ பூசையை வாழ்நாள் இறுதிவரைக் கடைப்பிடித்தார்.

தந்தை பெரியார் சந்திப்பு

இராமாயண, பாரத ஆபாசங்களை உலகறிய எடுத்தியம்பி, பண்மையை நிலைநாட்டக் கங்கணங்கட்டி, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்றது என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கை இந்தியர் சங்கத்தாரால் நடத்தப் பெற்று வந்த ‘இந்தியன்’ என்ற மாத வெளியீட்டில் ‘இராமன் வரலாறு’ என்னும் கட்டுரை எழுதி, 1923 ஜூலை 10 ஆம் நாள் வெளியிட்டார். இக்கட்டுரையைப் படித்த தந்தை பெரியார் அக்கட்டுரை ஆசிரியரைச் சந்திக்க விரும்பினார்.periyar 4501921இல் கோவிற்பட்டி பத்திவிளை ஆண்டு விழாத் தலைவராக வந்த பெரியாருக்கு இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அறிமுகம் செய்து வைக்கப் பெற்றார். அப்போது பெரியார் தம் வார இதழில் ‘குடியரசில்’ இராமாயணத்தை ஆய்ந்து தொடர் கட்டுரை எழுதும்படி வேண்டுகோள் விடுத்தார்.

சந்திர சேகரப் பாவலர்

இது பற்றி பெரியார் அவர்கள் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை தம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் உண்டு. 25-12-1927 முதல் வாரந்தோறும் ‘இதிகாசங்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளிவரத் தொடங்கியது.

பாலகாண்டம் பதினைந்து கட்டுரைகளோடு 22-7-28இல் முற்றுப்பெற்றது. அயோத்தியா காண்டம் 26-8-28இல் தொடங்கி, பதினாறு கட்டுரைகளுடன் 21-4-29திலும், ஆரணிய காண்டம் 5-5-1929இல் தொடங்கி பத்துக் கட்டுரைகளுடன் 27-10-29லும், சுந்தர காண்டம் 3-11-59இல் தொடங்கிப் பதினைந்து கட்டுரைகளுடன் 2-3-1930லும், யுத்த காண்டம் 9-3-1930இல் தொடங்கிப் பத்தொன்பது கட்டுரைகளுடன் 20-7-1930லும், உத்தர காண்டம் 3-8-1930இல் தொடங்கிப் பன்னிரண்டுக் கட்டுரைகளுடன் 9-11-1930லும் முற்றுப்பெற்றன.

இக்கட்டுரைகள் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைக் காட்டுத் தீ போல நாடெங்கிலும் பரவச் செய்தன. இவையனைத்தையும் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை தன் தாய் வைத்த பெயரான சந்திரசேகரன் என்ற பெயரை ‘சந்திரசேகரப் பாவலர்’ என்ற புனைபெயராக மாற்றி எழுதி வெளியிட்டார்.

எதிர்ப்பு மயம்

இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகள் வால்மீகியையும் கம்பனையும் ஒப்பிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு முரண்பாடானவற்றை என்று எடுத்துக் காட்டும் வகையில் அமைந்தன.

ஆனாலும் கடுமையாக இராமாயணத்தைத் தாக்கும் வகையில் இருந்தன. தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப கம்பன் செய்த மாற்றங்களைப் ‘புளுகு’ என்று கண்டித்தன. ‘வால்மீகி வாய்மையும் கம்பன் புளுகும்’என்ற வாதத்தின் அடிப்படையில் அமைந்தன. வால்மீகி கூற்று வாய்மையெனக் கொண்டு அது ஆபாசம் நிறைந்தது என்கின்றார் ஆசிரியர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை.

இக்கட்டுரைகளுக்கு எங்கும் எதிர்ப்பு வலுத்தது என்றாலும் இ.மு.சுப்பிரமணிய பிள்ளையின் பெயர் தமிழ்நாடு எங்கும் பரவியது.

குடியரசு வெளியீடுகள்

காகிதப் பஞ்சம் தலைவிரித்தாடிய அந்தக் காலகட்டத்தில், பெரியார் பெரும் இடையூறுகளுக்கிடையே இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, ‘சந்திரசேகரப் பாவலர்’ என்ற புனை பெயரில் எழுதிய தொடர் கட்டுரைகளை நூல் வடிவில் வெளியிட்டார். ‘இராமாயணத்தின் ஆபாசம்’ என்ற தலைப்பில் பாலகாண்டம் 12-12-29இல் புத்தக வடிவில் வெளிவந்தது. பின் ‘இராமாயண ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் பாலகாண்டம் 1930லும், அயோத்தியா காண்டம் 1931லும், ஆரணிய காண்டம் 1935லும், கிட்கிந்தா காண்டம் 1936லும் வெளிவந்தன. காகித விலை ஒன்றுக்குப் பத்தாக இருந்து காகிதமே கிடைப்பது அருமையாக இருந்த நிலையில் 1940இல் எஞ்சியுள்ள சுந்தரகாண்டம், யுத்த காண்டம், உத்தரகாண்டம் ஆகிய மூன்றும் வெளிவந்தன.

பெரியாரைப் பற்றி இ.மு.சுப்பிரமணிய பிள்ளை

1927இல் கோவிற்பட்டியில் உயர்நிலைப் பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராக வேலைபார்க்கும் பொழுது தந்தை பெரியாரைச் சந்தித்ததையும், அவர் தம் இல்லத்திற்கு வந்திருந்தமையையும் நினைவு கூர்ந்து, தம் குறிப்புகளில் இ.மு.சு பெரியாரின் குணநலன்களைச் சிறப்பித்து எழுதியுள்ள வெண்பா வருமாறு,

‘அஞ்சாத நெஞ்சுடையான் அன்புகனி சொல்லுடையான்

வஞ்சகனை யாவும் வகுத்தறிவான் - மிஞ்சிவிடா

வீரன் விளங்கும் இராமசா மிப் பெரியார்

தீரன் திகழ்வான் சிறந்து’

என்று பெரியாரின் அரும்பெரும் இயல்புகளை இவ்வெண்பா அருமையாகச் சுருங்கச் சொல்லுகிறது.

30-12-47இல் பெரியார் இ.மு.சுப்பிரமணிய பிள்ளைக்கு எழுதிய கடிதம் வருமாறு:

ஈ.வெ.ரா

சென்னை

நாள் 30.12.1947

அன்புள்ள தோழர் சுப்பிரமணியம் அவர்கட்கு, தங்கள் கடிதம் கிடைத்தது. ஈ.வெ.ரா வணக்கம்     ‘விடுதலை’ ஜனவரி 1 தேதியிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. விடுதலைக்குச் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை பிரசுரிக்கும்படியாக வாரந்தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தால் நன்றியறிதலோடு ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக விடுதலை ஆபிசிலிருந்து ஆண்டுக்கு 100 ரூ வீதம் அனுப்பி வருவார்கள். இராமாயண ஆராய்ச்சி திருந்திய பதிப்பு பிரசுரித்து வெளியிட நேர்ந்தால் அதற்காகவும் தங்கட்கு ஏதாவது மொத்தமாக அனுப்பச் செய்கிறேன். என்னுடைய பிரசுரம் எல்லாம் மிக மிகக் குறைந்த விலையாக இருக்கும். விற்பனையில் ஒழுங்கு இருக்காது. பெரும்பாலும் இலவசமாகவும் போய்விடும். ஆகையால் ஒரு வியாபார முறைக்குக் கட்டுப்பட்டு நடப்பது மிகவும் கஷ்டமான காரியம். ‘குடிஅரசு என் வசம் இல்லை’ அதை 3 வருட வாய்தா, ஒரு குத்தகத்துகையின் மீது கொடுத்து விட்டேன். ஆனாலும் அனுப்பலாம். புதுக்கட்டுரை இருந்தால் அருள்கூர்ந்து அனுப்புங்கள். வணக்கம். பதில் எதிர்பார்க்கிறேன்.

தங்கள் அன்புள்ள

ஈ.வே.ரா

பாரதிதாசனின் பாராட்டுப் பா

இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, சைவ சித்தாந்தியாக இருந்து கொண்டு தன்மான இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதனைப் பாரதிதாசன் நன்கு புரிந்து கொண்டு,

‘நேர்மை நீதி அஞ்சாமை

நிறைந்த பன்னூல் தேர் புலமை

சீர்மை கணிய நூலறிவு

சித்தாந்தத்தில் பேரறிவுக்

கூர்மை, ஆர்யக் கூட்டத்தைக்

குப்பை கூளப் புராணத்தைத்

தீர்ப்புரைக்கும் திறனாய்வால்

தெளியச் செய்தான் இ.மு.சு

என்று படைத்துள்ளார்.

இராமாயணம் மகாபாரத எதிர்ப்பு

இராமாயணம், பாரதம் ஆகிய இதிகாசங்கள் பெரிய தத்துவப் புதையல்கள் அல்ல - தமிழர்களைத் தாழ்த்தும் முயற்சிகள் என்று உண்மை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் இ.மு.சு என்பதனை மேலும் இரு விருத்தப்பாக்களில் பாவேந்தர் சுட்டியுள்ளதை,

‘இராமாயணத்தின் இழிவெல்லாம்

எத்துப் புலவர் கூற்றெல்லாம்

பராவி வணங்கும் வால்மீகி

பல்லைப் பிடித்துக் காட்டியவன்

வராத தீமை வந்ததெலாம்

வழிபட் டேற்ற கம்பனவன்

திராவிடத்தில் செய்யும்தீமை

தெரியச் செய்தான் இ.மு.சு

பாரதத்தில் பார்ப்பனரின்

பழக்க வழக்க ஒழுக்கமின்றி

வீரம் நீதி ஒண்ணுமில்லை

வெட்கம் கெட்ட குடும்பத்தின்

சோரம் போன கதையென்று

தோலுரித்துக் காட்டியதார்?

சாரம் மிகுந்து எங்களுயர்

சந்திர சேகரப் பாவலனே’

என்று இ.மு.சுப்பிரமணிய பிள்ளையைச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

சென்னை மாகாண தமிழ்ச் சங்க அமைச்சர் இ.மு.சுவும் தந்தை பெரியாரும்

1932இல் பாடநூல்களுக்கான அரசு கலைச்சொற்கள் சமஸ்கிருதமாக இருந்ததால் இதற்கு எதிர்ப்பு கூறி 1936இல் இ.மு.சுப்பிரமணியத்தின் தலைமையில் கூடி சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்த்து 10,000 தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கித் தந்தனர். இதன்பிறகு 1940இல் சீனிவாச சாஸ்திரி குழுவை அரசு நியமித்து, புதிய கலைச்சொற்களை உருவாக்க தென்னிந்திய மொழி இணைச் சொற்களின் உருவாக்கத்தின் போது திராவிட மொழிகளுக்குச் சமஸ்கிருத மொழியை அடிப்படையாகவும், உருது மொழிக்குப் பாரசீக, அராபிய மொழிகளை அடிப்படையாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்றது. இதன் காரணமாகச் சாஸ்திரி குழுவை இ.மு.சு எதிர்த்தார். இந்நிகழ்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் இராமாயண, மகாபாரதத் தொடர்களின் புனை பெயரில் எழுதியதற்கு ஆகும். பிறகு அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி என பல இடங்களில் சீனிவாச சாஸ்திரி குழுவின் கலைச்சொற்களுக்கு எதிராகக் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் இ.மு.சு தந்தை பெரியாரைச் சந்தித்து அரசின் நோக்கம் தமிழ்மொழியை உருக்குலையச் செய்வதே என்றார். இதனைத் தொடர்ந்து கோகலே மண்டபத்தில் தமிழ் அறிஞர் கழகத்தாரால் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் (31.8.1941) சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி, டி.எஸ் நடராச பிள்ளை, ரெவரண்ட் அருள் தங்கையா தெ.பொ. மீனாட்சி சுந்தரம், சி.என். அண்ணாதுரை, மு.இராசாகண்ணு, கே.எம்.பாலசுப்பிரமணியம், டி.சண்முகம் பிள்ளை ஆகியோர் பேசுவதாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலைச்சொல்லாக்கக் குழுவில் தமிழறிஞர் யாரும் இடம்பெறாதது கண்டிக்கத்தக்கது என்று எடுத்துக் காட்டப்பட்டது. இதன் விளைவாகச் சீனிவாச சாஸ்திரி குழுவில் இரா.சேதுப்பிள்ளை, இ.மு. சுப்பிரமணியம் அ.முத்தையா போன்ற தமிழன்பர்கள் பின்னர் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பொதுவாக மொழிப் பிரச்சனையில் தீவிர தூயவாதத்தை ஏற்றுக் கொள்ளாத பெரியாரே அரசாங்க முயற்சி ஆபத்தானது என உணர்ந்து விடுதலை ஏட்டில் “குதிரைக்கு முன் வண்டி” என்ற தலையங்கத்தையும் (6.7.1946) “கலைச்சொற்கள் பெயரால் தமிழ்க் கொலையா” என்ற தலையங்கத்தை (11.10.1946)யும் இவ்விதழில் எழுதினார்.

இ.மு.சு கலைச்சொற்களை உருவாக்கிய முறையும் ஈடுபாட்டையும்இ.மு.சு.வின் மகன் பேராசிரியர் இ.சு. முத்துசாமி பின்வருமாறு கூறுகிறார்.

தன்மான இயக்கத்தில் தொடர்ந்து சந்திரசேகரப் பாவலர் என்ற புனை பெயரில் எழுதி நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியபின் இ.மு.சு. அவர்கள் கலைச்சொல்லாக்கப் பணியில் தம் கவனத்தைச் செலுத்தினார். இப்பணி அவர் கடையநல்லூர் போர்டு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய பொழுது நடைபெற்றது.

அந்நாளில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது. தமிழ் வகுப்பு ஒன்றில்தான் தமிழ் பேசப்படும். ஏனைய வகுப்புகளிலெல்லாம் ஆங்கிலமே ஒலிக்கும். ஆங்கிலம் தெரிந்த தமிழாசிரியர் காண்பது அரிது. அத்தகையவர் (English knowing Tamil pandit) என்றுதான் இ.மு.சு அவர்களுக்கு அதிக மரியாதை காட்டப்பட்டது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமையுடையவர். பிழையற இருமொழிகளையும் எழுதுவதில் வல்லவர். இந்த இருமொழிப் புலமையைக் கலைச் சொல்லாக்கப்பணியில் ஈடுபடுத்தினார். உயர்நிலைப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக மாற்றுவதற்குக் கருவி நூலாகிய கலைச் சொல்லகராதியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

செய்முறை (Modus Operandi)

ஒரு மரப்பேழையில் ஆங்கில எழுத்துக்களைத் தட்டுக்களில் ஒட்டியிருப்பார். அவ்வப்போது தேர்ந்தெடுக்கும் சொற்களை அவ்விடங்களில் கோத்து வைப்பார். அநேகமாக ஆங்கில அகராதிகள் அனைத்தும் வாங்கி வைத்திருப்பார்கள். ஆங்கில நுட்பச் சொல்லகராதிகளை வாங்கிப் பக்கங்களை வெட்டி ஒட்டி விடுவார். பின்னர் ஆங்கிலத் தமிழகராதிகளையும் அருகில் வைத்து நேரான தமிழ்ச் சொற்களைக் காண்பதில் ஈடுபடுவார். வையாபுரிப் பிள்ளை தலைமையில் தொகுக்கப் பெற்ற பேரகராதியையும் (Tamil Lexicon) அடிக்கடி பார்ப்பார்.

சொற்களின் தன்மை

வடமொழிச் சொற்களை இயன்றவரை தவிர்ப்பதில் தீவிரமாக இருப்பார். இதில் தேவநேயப் பாவாணர் அவர்களைப் போன்ற நோக்கம் படைத்தவர். ஆனால், பாவாணரிடமிருந்து இவர் வேறுபடுவது எளிய தூய தமிழ்ச் சொற்களைப் படைப்பதில்தான். அருஞ்சொற்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார். பார்த்த மாத்திரத்தில் மக்களுக்குக் கூடியவரை புரியக்கூடிய சொற்களையே தேர்ந்தெடுப்பார்.

அடிப்படைப் பணி

சம்பந்தப்பட்ட கலைச்சொற்களைத் தேர்ந்தெடுப்பது (Compilation of tecnical terms) அவற்றிற்கு நேரான தமிழ்ச் சொற்களைக் காண்பது இத்தகைய அடிப்படை வேலை (Spade work) அவருக்கு மிகவும் பிடித்தமானது. காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை இடையீடின்றி உழைப்பார். வேதியியல்- இயற்பியல்-அந்நாளில் இராசாயனம், பௌதீகம் என்று சொல்லப்பட்ட போன்ற எல்லாத் துறை கலைச்சொல்லகராதிகளையும் அவர் முதலில் தயாரித்து வைத்துக்கொள்வார். அதன் பிறகு ஆராய்ந்து திருத்துவதற்கு நிபுணர் குழுக்களையும், அகராதியை ஒட்டுமொத்தமாக ஏற்பதற்கு ஒரு மாநாட்டையும் கூட்டுவார்.

கலைச்சொல்லாக்க மாநாடு

உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக ஆவதற்கு ஏதுவாக, உரிய கலைச் சொல்லகராதியைப் பல பாடங்களுக்குத் தனித் தனியாகத் தொகுத்த பின்னர், அவற்றை ஆராய்வதற்கு ஒரு மாநாட்டினைச் சென்னையில் 20-9-1936 இலிருந்து 1-10-1936 வரை நடத்தினார்.

உடல்நலக் கேடு

மாநாட்டுத் தேதி 20-9-1936 என்று குறித்து அழைப்பிதழ்கள் அனுப்பிய பிறகு, இ.மு.சு. அவர்களுக்குக் கொடிய காய்ச்சல் கண்டது. கடையநல்லூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட வேண்டிய நான்கு நாட்களுக்கு முன் படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு மருத்துவம் புரிந்து வந்த மருத்துவர் மூன்று நாட்களுக்கு மேல் தாங்காது என்று கெடு வைத்து விட்டார்.

இன்றியமையாத பணி தம்முன் நிற்கும்போது பயணத்தை திட்டமிட்ட வண்ணம் தொடங்க முடியாமல்போனதே என்று பெரிதும் மனம் வருந்தினார். எப்படியாவது கலந்து கொள்ள வேண்டுமென்று தீவிரமாக விரும்பினார். மனத் திட்பத்தின் ஆற்றலினால் (will power)குறித்த நாட்களுக்கு முன்பாக விரைவாகக் குறைந்து கொண்டே வந்தது சுரம். ஒரு நாளுக்கு முன் தன்னிலைக்குத் (Normal) திரும்பி விட்டார்.

மருத்துவர் தம் ஆலோசனையையும் மீறிச் சென்னைக்குப் பயணமானார். திட்டமிட்டபடி கலைச் சொல்லாக்க மாநாட்டை நடத்தினார்.

முன்னேற்பாடுகள்

மாநாட்டிற்கு வேண்டிய முன் ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் செயல்படுவார், சென்னையிலுள்ள அறிஞர்களுடன் தொடர்பு கொள்வதுடன், தமிழகத்தின் பல பாகங்களில் வாழும் கல்வியாளர்களுடன் தொடர்பு கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவார். இவ்வாறு பலதிறப்பட்ட அறிஞர்களுடன் எப்போதும் அஞ்சல் வழியும் நேரிலும் கருத்தைப் பரிமாற்றம் செய்துகொண்டே இருப்பார் என்று கூறுவது பெரும்புலவர் இ.மு.சு. தமிழ் மீது கொண்டிருந்த அளவற்ற பற்றைக் காட்டுகிறது.

கலைச்சொல்லாக்க மாநாடு

இ.மு.சு. கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபாடு கொண்டு 1932 லிருந்து 1947 வரை பாடுபட்ட பெரும் புலவர், இவரால் 10,000க்கும் மேற்பட்ட சொற்கள் பிற மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்டன என்பது இவருக்கான தனிச் சிறப்பு ஆகும்.

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It