handloonமானிடச் சமுதாயத்திற்கு வேளாண் தொழில் இன்றியமையாததாகும். அவற்றுடன் நெசவு, தச்சு உள்ளிட்ட ஏனைய தொழில்களும் இன்றியமையாத தேவையைக் கொண்டுள்ளன.

விலங்குகளைப் போலன்றி உடலை மறைத்தற்குரிய உடையினை அணிந்து, மானத்துடன் வாழும்முறை மக்கள் வாழ்க்கையின் சிறப்பியல்பாகும்.

இதனால் நெசவுத் தொழிலின் தேவையை உணரமுடியும். நாகரிகம் வளராத மிகப் பழங்காலத்தே மக்கள் தழை, இலை ஆடைகளையும், மரப்பட்டைகளையும், மான், புலி முதலியவற்றின் தோலினையும் உடுத்தியுள்ளனர். நாளடைவில் அந்நிலை மாறியதும் மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சினை நூலாக நூற்று, ஆடையாக நெய்து அணியத் தொடங்கினர்.

மனிதர்களின் உடை தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வேறுபட்டு அமைந்துள்ளது. குளிர் அதிகமாகவுள்ள மேல்நாட்டினரின் உடை உடம்பை இறுகத் தழுவிக் கொள்கின்ற வகையிலும், வெப்பம் அதிகமாகவுள்ள தமிழகப் பகுதிகளில் இறுக்கமில்லாத ஆடைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

உலகம் முழுவதும் காணப்படுகின்ற உடைகள் காலநிலைக்கும், நாகரிகப்பண்பாட்டுக்கும் ஏற்ப அமைந்துள்ளன. சங்க இலக்கியத்திற்கு முன்தோன்றிய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ஆடையைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. இதிலிருந்து நெசவுத்தொழிலின் தொன்மையை அறியமுடிகிறது.

“கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு
கெழீஇய நான்கே இரண்டென மொழிப” (தொல்.நூ.427)

நெசவுத்தொழிலின் உற்பத்திக்கு மூலப்பொருள் பருத்தியாகும். ஆடை உருவாக்கத்திற்குரிய மூலப்பொருட்கள் மூன்று நிலைகளில் அமைகின்றன. தாவர, விலங்குகளிடமிருந்து ஆடை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெறப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியால் செயற்கை இழைகளைக் கொண்டும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

நெசவுப் பெண்டிர்

சங்க இலக்கியத்தில் நெசவுத்தொழில் செய்பவராகப் பெண்கள் காணப்படுகின்றனர். கணவனை இழந்த கைம்பெண் தன் பிழைப்பிற்காக நூல் நூற்ற செய்தி குறிஞ்சித்திணைப் பாடலில் காணப்படுகின்றது. இதிலிருந்து கணவனை இழந்த பெண்கள் நூல் நூற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களில் நெசவுப் பெண்டிரைக் குறிக்க பருத்திப்பெண்டிர், ஆளிற்பெண்டிர் போன்ற சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.

“ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த
நுணங்கு நுண்பணுவல் போல” (நற். 353; 1 - 2)
“பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன”
(புறம். 125; 1)

சங்க கால மக்கள் பருத்திப் பஞ்சை அதனுடைய கொட்டையிலிருந்து பிரித்தெடுக்க வில்லினைப் பயன்படுத்தியுள்ளனர். பின்னர், பருத்திக் கொட்டையை நீக்கித் தூய்மை செய்யும்போது பஞ்சின் புறத்தோலினையும் எஞ்சிநிற்கும் கொட்டை­யினையும், தூசுகளையும் நீக்குவதற்காக நன்றாகப் புடைத்த செய்தியும் காணப்படுகின்றது.

“வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி
எஃகுறு பஞ்சிற் றாகி” (நற். 247; 3 - 4)
“சிறையும் செற்றையும் புடையுருள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து”
(புறம். 326; 4 - 5)

பருத்திப் பெண்டிர் இரவு நேரங்களிலும் நூல் நூற்றுள்ளனர். பருத்திப் பெண்டிரின் ஏழ்மை நிலை நூற்புத்தொழிலால் மாற்றம் பெறவில்லை என்பதைப் புறப்பாடல் கூறுகின்றது.

“தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல்
சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர்போல” (புறம். 280; 12 - 13)

ஆடைகள்

சங்க கால மக்கள் நாருடையையும், தழையுடையையும் அணிந்திருந்த செய்தி குறிஞ்சித்திணைப் பாடல்களில் காணப்படுகின்றது. மரல் என்னும் ஒருவகைக் கற்றாழையிலிருந்து நாருரித்துப் பின்னிய உடையினைக் குறவர்களும், அசோக மரத்தின் தளிர்களாலான தழையுடையைக் குறிஞ்சி நிலக் கொடிச்சியரும் அணிந்துள்ளனர்.

மரனா ருடுக்கை மலையுறை குறவர்”
(நற். 64; 4)
“திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயல”
(குறுந். 214; 4 - 5)

இரும்புத்தொழில்

நாடோடிகளாகக் காடுகளில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்குக் கற்களினால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். நாகரிகம் வளர வளர உழவுத்தொழில் செய்ய முற்பட்டனர்.

உழவுத்தொழில் செய்வதற்கு ஏதுவாக ஆற்றங்கரைப் பகுதிகளில் குடியேறிய மக்கள், கற்களினால் செய்யப்பட்ட கருவிகள் உழவுத்தொழிலுக்கு அதிகப் பயனைத் தராது என்பதை அறிந்தனர். அதன் விளைவாக இரும்பின் பயனைக் கண்டு அதிலிருந்து பல்வேறு இரும்புப் பொருள்களைச் செய்து வந்துள்ளனர்.

உலைக்களம்

இரும்புத்தொழிலுக்கு மிகவும் இன்றியமையாதது உலைக்களமாகும். இரும்பைக் காய்ச்சி, அடித்து பொருட்கள் செய்வதற்கு உலைக்களம் பயன்படுகிறது. உலைக்களம், துருத்தி, உலைமூக்கு, குறடு, கரி போன்றவை பற்றிய செய்திகள் குறிஞ்சித்திணைப் பாடல்களில் காணப்படுகின்றன.

அறிவியல் வளர்ச்சி பெறாத தொன்மையான காலத்தில் தமிழர்கள் இரும்புத் தாதுக்களைச் சேகரித்துச் சிறிய களிமண் உலையில் தோல் துருத்தியின் உதவியால் இரும்பை உருக்கி வந்திருப்பதை இலக்கியங்களின் வழியாக அறியமுடிகின்றது.

உலைக்களம் பொதுவாகப் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகின்றது. இரும்புத் தாதுக்களை உருக்கி எடுப்பதற்காகவும், பின் உருக்கி எடுத்த கட்டிகளை வேண்டிய கருவிகளாகவோ, பொருட்களாகவோ செய்யவும், அக்கட்டிகளை உலையில் சூடாக்கவும் கொல்லுலைகள் பயன்படுகின்றன.

கொல்லுலையில் உள்ள தீ அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. இரும்பு வேலை செய்யும் கொல்லனின் உலை வெம்மை மிக்கதாகக் காணப்படுகின்றதென நற்றிணைப் பாடல் கூறுகின்றது.

“இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த” (நற். 133; 9)
“................. ........... கொல்லன்
உலையூதுந் தீயேபோல் உள்கனலும் கொல்லோ” (நாலடி. 298; 2-3)

கொல்லன் உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினை அடிக்கும்பொழுது அதிலிருந்து தீப்பொறிகள் சிதறுகின்றன. இவ்வாறு தீப்பொறிகள் சிதறுவது அழகிய சிறிய காய்களை உடைய கொண்ட வேங்கை மரத்தின் மணம் நிறைந்த மலர்கள் உதிர்வதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

“நல்லிணர் வேங்கை நறுவீ கொல்லன்
குருகூது மிதியுலைப் பிதிர்விற் பொங்கிச்
சிறுபன் மின்மினி போலப் பலவுடன்”
(அகம். 202; 5 - 7)

மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக்
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்புசெய் கொல்லெனத் தோன்றும்”

(அகம். 72; 3 - 6)

“இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சின்னீர் போல
நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாஞ் சிறிதே”
(நற்.133; 9 - 11)

உலையானது இலக்கியங்களில் ‘உலைக்களம்’ என்றழைக்கப்படுகின்றது. உலைக்களத்தைக் குறிக்கக் ‘கொற்றுறை’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகின்றது. கொற்றுறை என்பது கொல்லனது பணிக்களரியாகிய இடம் என்று பொருள்படும். போர்க்கருவிகள் ஆக்கவும், முறிந்த முனை மழுங்கிய கருவிகளைச் சரி செய்யவும் ஏற்படுத்தப்பட்ட இடம் கொற்றுறை என்று புறப்பாடல் கூறுகின்றது.

“பகைவர்க் குத்திக் கோடுநுனி சிதைந்து
கொற்றுறைக் குற்றிய மாதோ வென்றும்”
(புறம். 95; 4 - 5)

துருத்தி

துருத்தி பொதுவாகக் கை அல்லது கால்களினால் இயங்கும் தன்மையுடையது. இக்கருவியை இயக்கும்பொழுது காற்று உலைக்குள் செல்கிறது. இவ்வாறு உலைக்குள் செல்லும் காற்று இரும்புத் தாதுக்களை உருக்குவதற்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

குறிஞ்சித்திணைப் பாடலில் காலால் இயக்கப்பட்ட துருத்தி பற்றிய செய்தி காணப்படுகின்றது. புலியுடன் போரிட்டு வெற்றி பெற்ற யானை பெருமூச்சு விடும்பொழுது, வேங்கை மலர்கள் காலால் இயக்கப்படும் துருத்தியால் ஊதப்பட்ட உலைத்தீயினின்று சிதறும் தீப்பொறி போலச் சிதறியதாகக் கூறப்படுகின்றது.

“புலிப்பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பிற் கையெடுத் துயிர்ப்பின்
நல்லிணர் வேங்கை நறுவீ கொல்லன்
குருகூது மிதியுலைப் பிதிர்விற் பொங்கி”
(அகம். 202; 3 - 6)
“ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும்” (நற். 125; 4 - 5)

உலைமூக்கு

கொல்லுலையில் பொருத்தப்பட்டிருக்கும் துருத்தியின் குழாய்ப் பகுதிக்கு உலைமூக்கு என்று பெயர். அதாவது துருத்தியும் உலையும் இணையும் இடமே உலைமூக்காகும். சங்க இலக்கியங்களில் உலைமூக்கு ‘குருகு’ என்று வழங்கப்படுகின்றது.

தலைவனின் காமப் பெருமூச்சு கொல்லனது சூடேறிய உலைமூக்கிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. உலைமூக்கு எவ்வாறு வெய்துயிர்த்துக் காணப்பட்டதோ, அதுபோன்றே தலைவனின் பெருமூச்சும் காணப்படுகின்றது.

“நறா அவிழ்ந் தன்னவென் மெல்விரற் போதுகொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப்
பறாஅக் குருகின் உயிர்த்தலு முயிர்த்தனன்”
(கலி. 54; 9 - 11)
“காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுலைக் குருகி னுயிர்த்தன ரொடுங்கி”
(சிலப். 4; 58 - 59)

குறடு

கொல்லர்கள் கரியை உலையில் எடுத்துப் போடுவதற்கும், உலையிலிருந்து சூடாக்கப்பட்ட இரும்பை வெளியில் எடுப்பதற்காகவும் பயன்படுத்தும் ஒருவகைக் கருவி ‘குறடு’ எனப்படும். தினைப் புனத்திலுள்ள தினைக்கதிர்கள் வளைந்து காணப்படுவது போல கொல்லர்கள் பயன்படுத்திய குறடும் வளைந்து காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதிலிருந்து குறடின் அமைப்பையும், சங்க காலத்திலேயே குறடு பயன்பாட்டிலிருந்ததையும் அறிய முடிகின்றது. நண்டின் காலுக்கும் குறடு உவமிக்கப்படுகின்றது. சங்க காலத்திலிருந்த குறட்டின் பயன்பாடு இன்றளவும் இருப்பதைக் காணமுடிகிறது.

“கரும்புமருண் முதலபைந்தாட் செந்தினை
மடப்பிடித் தடக்கை யன்னபால் வார்பு
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரல்” (குறுந். 198; 1-3)
“மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
சுவைத்தாளலவ னளற்றளை சிதைய”
(பெரும்பா. அடி. 207 - 208)

கரி

உலைக்களத்திலுள்ள இரும்புப் பொருட்களைச் சூடேற்றி வெப்பப்படுத்த கரி எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. மரங்களைச் சுட்டு கரி எடுத்ததற்கான சான்று சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.

“யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்”
(குறுந். 198; 1)
“கரிபுன மயக்கிய வகன்கட் கொல்லை”
(புறம். 95; 5)

இரும்புக் கருவிகளும் பயன்பாடும்

குறிஞ்சித்திணைப் பாடல்களில் வேல், அம்பு, அரிவாள் போன்ற கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி நில மக்கள் விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், வேட்டையாடுவதற்கும், தானிய அறுவடைக்கும் வேல், அம்பு, அரிவாள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தியுள்னர்.

அம்பு

குறிஞ்சி நில மக்கள் வில்லையும், அம்பையும் கொண்டு வேட்டையாடியுள்ளனர். வேட்டையாடுவதற்கு மட்டுமின்றி போர் செய்வதற்கும் அம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

“உருவ வல்வில் பற்றி அம்பு தெரிந்து
செருச்செய் யானை சென்னெறி வினாஅய்” (அகம். 82; 11-12)
“குன்றத் திறுத்த குரீஇயினம் போல
அம்புசென் றிறுத்த வரும்புண் யானை”
(புறம். 19; 8-9)

குறவர்கள் அம்பின் மூலம் யானை, மான், பன்றி போன்றவற்றை வேட்டையாடியுள்ளனர். சங்க இலக்கியங்களில் அம்பிற்கு ஏ, ஏஎ, அம்பு, கணை, கோல் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரிவாள்

பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்வதற்காக ‘அரிவாள்’ என்ற கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் அரிவாளைக் குறிக்க ‘இரும்பு’ என்ற சொல் வழங்கப்படுகின்றது.

“இரும்பீர் வடியன்ன உண்கட்கும் எல்லாம்”
(கலி. 64; 21)
“இரும்புகவர் கொண்ட ஏனற்
பெருங்குரல் கொள்ளாச் சிறுபசுங் கிளிக்கே”
(நற். 194; 9 - 10)

வேல்

வேல் என்ற கருவியின் ஒரு முனையில் பரந்த நாக்கு போன்ற நுனி கூர்மையுடன் காணப்படுகின்றது. வேல் நீண்ட காம்பைக் கொண்டுள்ளது.

“நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்”
(நற். 324; 5 - 6)

எஃகு என்பது வேல் என்னும் பொருளில் சங்க இலக்கியங்களில் வழங்கப்படுகின்றது. நெருப்பு போன்று விளங்கக்கூடிய முனையை உடைய வேல் கொண்டு போர் செய்ததாகப் புறப்பாடல் கூறுகின்றது.

“நிணம்தின்று செருக்கிய நெருப்புத்
தலைநெடுவேல்” (புறம். 200; 6)

அணிகலத்தொழில்

திணை அடிப்படையில் வாழ்ந்த சங்க கால மக்கள் தேவையான உணவுப் பொருட்களைப் பயிர்செய்து, உணவுண்டு வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இலை, தழை முதலியவற்றை ஆடையாகவும் அணிந்துள்ளனர். கடற்கரையில் கிடைத்த கிளிஞ்சல்கள், கடலில் கிடைத்த முத்து, பவளம், சங்கு முதலியவற்றை அணிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

அடுத்த நிலையாக வெள்ளி, பொன் போன்ற உலோகத்தாலான அணிகளைச் செய்து வந்துள்ளனர். கல் இழைத்த பொன் அணிகளைச் செய்யத் தொடங்கி, படிப்படியாக அணிகலத் தொழிலில் தமிழர்கள் சிறப்புற்று விளங்கத் தொடங்கினர். அணிகலன்கள் செய்தல், பல வகை அணிகள், அணிகலன்களின் தரமறிதல் போன்ற செய்திகள் குறிஞ்சித்திணைப் பாடல்களில் காணப்படுகின்றன.

அணிகலன்கள் செய்தல்

சங்க காலத்தில் பொன், இரும்பு முதலியவற்றால் பொருள் செய்வோர் கம்மியர் எனவும், கொல்லர் எனவும் அழைக்கப்பட்டனர். பொற்கொல்லர்கள் அணிகலன்கள் செய்வதற்கு ‘அரம்’ என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். ஒளியுடைய வளையலையும், அகன்ற தொடியினையும் கூர்மையான அரத்தால் அராவிச் செய்த குறிப்பு காணப்படுகின்றது.

முத்து, மாணிக்கம், பொன் போன்றவற்றால் செய்த அணிகலன்களில் குறை இருந்தால் அதைத்திருத்தியும் அமைத்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. இதிலிருந்து முத்து, மாணிக்கம், பொன் போன்றவற்றால் அணிசெய்யும் திறம் பெற்ற கொல்லர்கள் சங்க காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது.

“வாளரம் பொருத கோள்நேர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை” (நற். 77; 9-10)
“முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குறைய கலம்கெடின் புணரும்” (குறிஞ். 13 -14)
“இரும்செய் கொல்லெனத் தோன்றும்”
(அகம். 72; 6)

பொன்னுக்கு மெருகேற்றி மிக்க ஒளியூட்டி அணிகள் செய்யப்பட்டுள்ளன. வட்டம், பூத்தொழில், மகரமீன் போன்ற மிக நுண்ணிய வேலைப்பாடுடன் கூடிய அணிகலன்களைச் செய்துள்ளனர். பொன் மட்டுமின்றி வெள்ளியாலும் அணிகலன்கள் செய்யப்பட்டுள்ளன. தூய்மையான வெள்ளியைக் கொண்டு அழகிய வளைகள் செய்யப்பட்டுள்ளன.

“அழலவிர் மணிப்பூ ணனையப்” (ஐங். 232; 3)
“பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகிழிகை” (கலி. 54; 6)
“பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி”
(குறிஞ். 224)

மாற்றுக் குறையாத பொன் ‘நன்பொன்’ என்றழைக்கப்பட்டது. நன்பொன்னைக் கொண்டு அழகிய பொற்பாவைகள் செய்யப்பட்டுள்ளன.

“தாவில் நன்பொன் தைஇய பாவை”
(அகம். 212; 1)

“பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே”
(குறுந். 67; 4 - 5)

சங்க காலத்தில் பொன்னாலான காசுகள் செய்யப்பட்டுள்ள குறிப்புகளும் கிடைக்கப்பெறுகின்றன.

அணிகலன்கள்

அணிகலன்களை அணியுமிடங்களைக் கொண்டு தலையணிகள், காதணிகள், கையணிகள், இடையணிகள், விரலணிகள், காலணிகள் எனப் பலவகையாகப் பிரிக்கலாம். சங்க காலத்தில் ஆடவர், மகளிர், சிறுவர் என எல்லோரும் கைகளில் கடகம், தொடி ஆகிய அணிகளை அணிந்துள்ளனர்.

தொடி, கடகம் என்பன முன்கையில் அணியப்படும் அணிகலன்களாகும். நுட்பமான வேலைப்பாடுடன் கூடிய வெள்ளியால் செய்த வளையல்களையும், முத்தினை அழுத்திச் செய்த தொடியினையும் அணிந்திருந்ததைக் குறிஞ்சித்திணைப் பாடல்களில் காணமுடிகிறது.

“வாளரம் பொருத கோணேர் எல்வளை
அகன் தொடி செறித்த முன்கை” (நற். 77; 9-10)
“தளை நெகிழ் பிணிவந்த பாசடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக்கோல்
அவிர்தொடி” (கலி. 59; 1-2)

சங்க காலத்தில் கையணிகளில் பொன்வளை, மணிவளை, சங்குவளை, பவழவளை, சித்திரவளை போன்ற வளையல்கள் காணப்பட்டன. சங்ககாலச் சிறுவர்கள் புலிப்பல்லைக் கோர்த்துச் செய்யப்பட்ட ‘புலிப்பல் தாலியை’ அணிந்திருந்த செய்தி குறிஞ்சித்திணைப் பாடல்களில் காணப்படுகின்றது. ஆண்கள் கால்களில் பசிய நிறமுடைய ‘கழலை’ அணிந்துள்ளனர்.

“புலிப்பல் தாலிப் புதல்வற் புல்லி” (குறுந். 161; 3)
“புலிப்பல் தாலிப் புன்றலைச் சிறாஅர்”
(புறம். 374; 9)
“மாரிக் குளத்துக் காப்பா ளன்னன்
காவலி னைந்த தொடலை யள்வாட்
பாசி சூழ்ந்த பெருங்கழல்” (ஐங். 206; 2-4)

முத்துக்கள் பெருமளவு கிடைக்கக்கூடிய இடமாகக் கொற்கை திகழ்ந்துள்ளதைச் சங்கள் இலக்கியங்களால் அறியமுடிகிறது. கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த பரதவர்கள் முத்துக்குளித்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததை இலக்கியங்களில் காணமுடிகிறது.

“முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறுபாசடைய செப்பு ஊர் நெய்தல்” (நற். 23; 6-7)
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” (பதிற். 67; 1-2)

கொடுமணம், பந்தர் ஆகிய ஊர்களில் முத்துக்களைக் கொண்டு அணிகலன்கள் செய்யப்பட்டுள்ளன.

அணிகலன்களின் தரமறிதல்

சங்க காலத் தமிழர்கள் பொன்னின் தரத்தை அறிவதற்குக் கட்டளைக்கல் எனப்படும் உரைகல்லைப் பயன்படுத்தியுள்ளர் என்பதைக் குறிஞ்சித்திணைப் பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது. பொன்னின் திறமறிவார் ‘பொலந்தெரி மாக்கள்’ என்றழைக்கப்பட்டனர்.

“நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன்னுரை கல்லின் நல்நிறம் பெறூஉம்”
(நற்.25; 3-4)

“பொன்னுரை மணி அன்ன” (கலி. 48; 17)

“பொலந்தெரி மாக்கள் கலங்கஞ தொழித்தாங்கு”
(சிலப். ஊர் காண் காதை; 2003)

ஓவியத்தொழில்

சங்க கால மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தமையால் விலங்குகள், பறவைகள், மரங்கள் மற்றும் ஏனைய உயிரினங்களின் உருவங்களை ஓவியங்களாக வரைந்துள்ளனர். ஓவியத்தின் தொடக்கமாகக் கோடுகளை வரைந்து, பின்னர் இக்கோடுகளை இணைத்து முழு ஓவியத்தையும் வரைந்துள்ளனர். அழகிய வீடுகளுக்கு ஓவியங்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் வீடுகளிலும், அரண்மனைச் சுவர்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

“ஓவத்தன்ன வினைபுனை நல்லில்” (அகம். 98; 11)

“நெடுமண் இஞ்சி நீள்நகர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல எழுதி”
(பதிற். 68; 16-17)

சங்க கால மக்கள் உடல்களில் ஓவியங்களை எழுதி மகிழ்ந்துள்ளனர். இவ்வாறு உடலில் ஓவியங்களை எழுதுதல் ‘தொய்யில் எழுதுதல்’ என்றழைக்கப்படுகின்றது.

மகளிர் மார்புகளிலும் தோள்களிலும் தொய்யில் எழுதியதைக் குறிஞ்சித்திணைப் பாடல்கள் கூறுகின்றன. கரும்பின் உருவத்தைத் தொய்யிலாக வரைந்த செய்தி காணப்படுகின்றது. குருவியின் ஓவியத்தை அரிப்பறையில் தீட்டியுள்ளனர்.

உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்”
(குறுந். 276; 3-4)

“கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே” (நற். 39; 11)
“சிறுதோட் கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல”
(நற். 58; 2-3)

மடலேறுகின்ற ஆடவன், துணியில் தாம் விரும்பிய பெண்ணின் ஓவியத்தை வரைந்துள்ளான். ஓவியம் வரைபவர்கள் ‘கண்ணுள் வினைஞர்’ என்றழைக்கப்பட்டனர்.

“நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி”
(மதுரை. அடி. 517-518)

“புனையா ஓவியம் கடுப்ப புனைவுஇல்
தளிர் ஏர்மேனி தாய சுணங்கின்”
(நெடு. அடி. 147-148)

புனையா ஓவியம், புனைந்த ஓவியம் என ஓவியம் இருவகையாகக் கொள்ளப்பட்டன.

இசைக்கருவிகள் செய்தல்

தட்டை, தண்ணுமை, ஆம்பற்குழல் போன்ற இசைக்கருவிகளைக் குறிஞ்சி நில மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இக்கருவிகளனைத்தும் மூங்கிற்பட்டைகளைப் பிளந்து செய்யப்படும் கருவிகளாகும். தொல்காப்பியம் கருப்பொருளில் ஐந்திணைக்குமுரிய யாழ், பண், பறை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.

“தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீம்குழல் ஆம்பலின் இனிய இமிருரும்”
(ஐங். 215; 3-4)

இசைக்கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன. குறிஞ்சித்திணைப் பாடல்களில் துடி, முழவு, பறை, கொம்பு, குழல், வயிர் போன்ற இசைக்கருவிகள் காணப்படுகின்றன. துடியை இசைப்பவர்கள் ‘புலையன்’ என்றழைக்கப்பட்டனர்.

“மலையன் மாஊர்ந்து போகி புலையன்
பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கு” (நற். 77; 1-2)

“ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக”
(அகம். 82; 1-2)

குறிஞ்சி நில மக்கள் இசைக் கருவிகளைக் கொண்டு தினைப் புனத்திற்கு வரும் பறவைகளையும், விலங்குகளையும் விரட்டியுள்ளனர்.

தொகுப்புரை

சங்க காலத்தில் நெசவுத்தொழில் சிறப்புற்றிருந்த குறிப்பு நூல் நூற்ற பெண்டிர் ‘நெசவுப் பெண்டிர்’ என்றழைக்கப்பட்ட குறிப்பால் அறியலாம். இரும்பினை உருக்கிப் பல வகையான கருவிகளைச் செய்துள்ளதைச் சங்க இலக்கியச் சங்க இலக்கியக் குறிஞ்சித்திணைப் பாடல்களின் வாயிலாக அறியமுடிகிறது.

சங்க காலத்தில் முத்து, பொன், மாணிக்கம், வெள்ளி போன்றவற்றைக் கொண்டு அணிகலன்கள் செய்துள்ளனர். சங்ககாலச் சிறுவர்கள் ‘புலிப்பல் தாலி’ அணிந்திருந்தனர். குறிஞ்சி நில மக்கள் ‘தொய்யில் எழுதுதல்’ என்னும் ஓவியக்கலையை அறிந்திருந்தனர்.

பல்வேறு வகையான இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்ததோடு மட்டுமல்லாமல், பயிர்ப்பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். இவைகளால் தொழில்முறை சிறந்து விளங்கிய குறிப்பை அறியலாம்.

சங்க கால மக்கள் வேளாண்மைத்தொழில், நெசவுத்தொழில், இரும்புத்தொழில், அணிகலத்தொழில், ஓவியத்தொழில், இசைக்கருவிகள் செய்தல் போன்ற தொழில்களில் நுட்பமான அறிவு பெற்றவர்களாக விளங்கியுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியக் குறிஞ்சித்திணைப் பாடல்களின் மூலமாக நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது.

துணைநூற் பட்டியல்

1. பதிப்பாசிரியர் குழு, தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், 1982

2. பரமசிவானந்தம், அ.மு., சமுதாயமும் பண்பாடும், தமிழ்க் கலைப் பதிப்பகம், சென்னை, 1972, இரண்டாம் பதிப்பு.

3. பதிப்பாசிரியர் குழு, அறிவியல் களஞ்சியம், தொகுதி 5, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988

4. சாமிநாதையர் உ.வே. (ப.ஆ), சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் (நிழற்படப் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985

5. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், (ப.ஆ). நற்றிணை மூலமும் உரையும், சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1915.

6. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பிய மூலம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2015

7. பதிப்பாசிரியர் குழு, அறிவியல் களஞ்சியம், தொகுதி 10, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1996.

8. பதிப்பாசிரியர் குழு, கலைக்களஞ்சியம், தொகுதி 4, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1956.

9. சண்முகம்பிள்ளை, மு., 1985, குறுந்தொகை மூலமும் உரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

10. வேங்கடசாமி நாட்டார், ந. மு., & ரா. வேங்கடாசலம் பிள்ளை (உ. ஆ.), 1965, அகநானூறு, கழக வெளியீடு, சென்னை.

- முனைவர் ந. பெரியசாமி