பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி, புரட்டாசி சனிக்கிழமை நல்ல ஆகிருதியும், வாளிப்பும், வளர்ந்து செழித்த தோற்றமும் கொண்ட பின் இளமைக்காரர் ஒருவர் வழிநடைப்பயணமாக மதுரை-திருநெல்வேலி நெடு வழிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அந்நாளில் இன்றைய நாள் போல் வண்டி, வாகன விரைவுப் போக்குவரத்து வசதிகள் இல்லை. அத்துடன் இன்றைய நாள் போல் பசி போக்கும், உணவுப் பண்டங்கள் விற்கும் உணவகங்களும் இல்லாதிருந்த காலம். மேலும், பாதசாரிகளாக நெடுந் தொலைவு பயணிப்பவர்களுக்கு கால் நடைப்பயணம் முதன்மை யானதாகவும், குதிரை மற்றும் மாட்டு வண்டிப் பயணங்கள் அரிதாகவும் இருந்த காலம் அது.

அக்காலச் சூழலில், நாம் முன்னர் தெரிவித்த நபர் இன்றைய கோவில்பட்டி நகருக்கு அருகாமையில், ஒருகையில் துணி முடிச்சுடனும், மறுகையை வீசிய வாறும் ‘ஏதாவது உணவுச் சத்திரங்கள் தட்டுப்படுகிறதா அல்லது கோவில் உற்சவங்கள் எதிலும் உண்டக்கட்டி கிடைக்காதா’ என்ற ஏக்கத்துடன் நடந்து கொண் டிருந்தார்.

பகல் முழுவதும் சுட்டெரித்து, நமது நண்பரை வருத்திய கதிரவன், பின்மாலைப் பொழுது என்பதால் மேற்கு நோக்கி மறையப் பாய்ந்து கொண்டிருந்தான். மேய்ச்சல் நிலம் கண்ட கன்று காலிகள் பெருநடை போட்டு தனது கொட்டடி திருப்பிக் கொண்டிருந்தன. இரை தேடிப்போன புல்லினங்கள் புழுப் பூச்சிகள் கிடைத்த நிறைவில் கிரீச்! ...சிட்டவாறு களிக் கூச்சலுடன் கூடடையப் பறந்துகொண்டிருந்தன.

கோவில்பட்டியில் ஊரடங்கி விட்டதால் நமது நண்பருக்கு சத்திரங்கள் ஏதும் அடைக்கலம் தரவில்லை. அருகில் உள்ள கோவில்கள் ஏதும் உண்டக்கட்டிக்கு உரியதாக இருக்கவில்லை. இந்நிலையில் கோவில் பட்டிக்குத் தெற்கே ஐந்துகல் தொலைவில் கயத்தாறில், கயத்தாற்றுப் பெருமாள் கோவில் விசேடம் கருதி, புரட்டாசிப் பெருவிழா நடந்து கொண்டிருப்பதும், அங்கே சென்றால் உணவு கிடைக்கும் என்பதும் நமது வழி நடை நண்பருக்குத் தெரியவந்தது. நண்பரும் பெருமாள் கோவில் உண்டக்கட்டியை நினைத்து கயத்தாறு நோக்கி விரைந்து எட்டுவைக்கலானார்.

புரட்டாசி மூன்றாம் சனிக் கிழமை, கயத்தாறு ஊரே பெருமாள் கோவில் திருவிழாவில் கலகலப்பாகிக் கிடந்தது. ஊருக்குக் கிழக்கே நரசிங்கப் பெருமாள் கோவில், நகர்வலம் புறப்பாட்டுக்கு பெருமாள் அலங் கரிக்கப்பட்டு தயாராகிக் கொண்டிருந்தார். இன்று கருட வாகனத்தில் பெருமாள் அழகிய தோளுடைய நாச்சியாருடன் எழுந்தருளி சேவை சாதிக்கும் கண் கொள்ளாக் காட்சியைக் காண ஊரார் மகிழ்ச்சியுடன் தயாராகிக் கொண்டிருந்தனர்.

கோவில் கமிட்டியார் ஆலோசனை வழங்க, அர்ச்சகர்களும் பணியாளர்களும் சாமி ஊர்வலத்திற்கான பணிகளை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தனர். இருள் சூழ்ந்து ஒரு நாழிகையாகி விட்ட போதும் சாமியைத் தூக்கும் சப்பரம் தூக்கி நால்வருள் ஒருவர் மட்டும் பணிக்கு வரவில்லை. சாமி புறப்பாட்டிற்காகக் காத்துக் கொண்டிருந்த பக்தர்களும் கமிட்டியாரும் நான்காவது சப்பரம் தூக்கியின் வருகைக்காகக் காத்துக் கிடந்தனர்.

அனைவரின் பார்வையும் கோவில் வாசலையே பார்த்திருக்க, விழாக் கோலத்துடன் எழுச்சியுற்றிருக்க கோவிலைக் கண்ட, நமது வழி நடை நண்பர், ஆவலுடன் உற்சவ மூர்த்தியை பார்த்தவாறு பரக்கக் கோவிலுக்குள் நுழைந்த நண்பரைப் பார்த்து, “அட வாப்பா! உனக்காக ஊரே காத்துக்கிட்டிருக்கு பெருமாளும் காத்துகிட்டிருக்கிறார், உடனே சாமி புறப் பட்டாகணும், தோள் கொடு!Ó என்றார் கோவில் கமிட்டியார் ஒருவர். அவருக்கு நமது நண்பரின் தோற்றம், சப்பரம் தூக்குபவராகப் பட்டிருக்க வேண்டும்.

யார்? எவர்? என்று கூட விசாரிக்காமல், சாமி தூக்கும் ஆளாக நம்மை எடைபோட்டு விட்டானே இவன், என்றெண்ணியவாறு கமிட்டியாரை முறைத்தார் நண்பர், அப்போது பார்த்து மற்றொரு நபர் குரல் கொடுத்தார், “அட ஏம்ப்பா முறைக்கிற? நிறைய உண்டக்கட்டி கிடைக்கும் சாமியைத் தூக்கு”, என்றார்.

சாமி ஊர்வலம் முடிந்ததும் நிறைய உணவு கிடைக்கும் என்ற சேதி காதில் விழுந்ததும், நம் நண்பருக்குப் பசி, தாகம், களைப்பு மறந்து போனது. புதிய ஊர்தானே நம்மை யார் அறியப் போகிறார். இன்று இந்த உணவும், இரவுத் தங்கலும் கிடைத்தால் தான் நாளை மாலை திருநெல்வேலியில் காந்தியம்மை -நெல்லையப்பர் தரிசனம் கிடைக்கும் என்ற ஆவல் பொங்க நல்ல உணவை நினைத்துக் கொண்டு நரசிங்கப் பெருமானை வணங்கி கருட வாகனத்திற்குத் தோள் கொடுத்தார் நண்பர்.

பயணக் களைப்பு ஒருபுறம், பசியும், தாகமும் மறுபுறம் அத்தோடு வாகனத்தில் ஊர்வலமாக சாமியுடன் ஏறிக் கொண்ட நம்பியானையும் தூக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துடன், முன்னர் பின்னர் பழக்கமில்லாத தொழிலைச் செய்ததனால் தோள்கள் கனக்கமற்ற மூன்று நபர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சாமியைத் தூக்கியவாறு தவிப்புடன் ஊர்வலத்தில் நடந்தார் அவர்.

இதோ!, அதோவென ஊர்வலம் முடிந்து கோவில் திரும்பிக் கொண்டிருந்தது சாமி வாகனம்.

கோவிலுக்குள் நுழைந்து, இதோ நரசிங்கப் பெருமானையும், நம்பியானையும் இறக்கி வைத்தாயிற்று. அந்தோ பரிதாபம்! நமது நண்பருக்கு கோவிலில் உணவு வழங்கும் மடப்பள்ளி இருக்குமிடம் தெரியவில்லை. சாமியை இறக்கி வைத்ததுதான் தாமதம் இவரது, தேவையை யாரும் கண்டு கொள்ளவில்லை. மடப்பள்ளிக்கு அழைக்கவும் இல்லை, வழி காட்டவும் இல்லை.

ஏனைய சப்பரத் தூக்கிகள் பழக்கப்பட்டவர்கள் என்பதால் சாமி வாகனத்திலிருந்து விடுபட்டு, துரித மாகச் செயல்பட்டு, ஆளுக்கு இரண்டு உண்டக்கட்டி யுடன் வெவ்வேறு இடங்களில் அடைக்கலமாயினர்.

நிறைய உணவு கிடைக்கும் என்று ஆசை காட்டிய கோவில் கமிட்டியாரும் காரியம் முடிந்ததும் நமது நண்பரைக் கைவிட்டுவிட்டு, அவர்களும் உண்டக் கட்டிகளுடன் பதுங்கலாயினர்.

நமது நண்பர் தன்னை சுதாரித்துக் கொண்டு மடப்பள்ளிக்கு முன் நிற்கும் போது மடப்பள்ளி பொறுப்பாளன் காலியான ஈச்சங் கூடையை தரையில் தட்டி நண்பருக்கும் காட்டினான்.

நமது நண்பருக்கு கண்கள் கட்டியது, பசி வாட்டியது, ஏமாற்றம் துரத்தியது, நியாயமற்றவர்களின் மீதான அறக்கோபம் உச்சிக்கு ஏறியது. அப்படியே அந்தக் கோபம் முழுவதும் தன் தோளையும் முறித்து விட்டு, அழகே வடிவாக எகத்தாளமாகச் சிரித்துக் கொண்டிருந்த பெருமாளின் மீது திருப்பியது. தன்னை மறந்து கவிதை விஸ்வரூபம் எடுக்கலானார். தெள்ளு தமிழில் ஆண்டவனையே அறம் பாடியவாறு, அவர் வாயிலிருந்து தெறித்து விழுந்தன சொற்கள், தமிழ்க் கவிதையாக...

பாளை மணம் கமழுகின்ற கயிற்றாற்றுப்

பெருமாளனே பழிகாரா கேள்

வேளையென்றால் இவ்வேளை பதினாறு

நாழிகைக்கு மேல் ஆயிற்று என்

தோளை முறித்ததும் அன்றி நம்பியா

னையும் கூடச் சுமக்கச் செய்தாய்

நாளையினி யார் சுமப்பார்! எந்நாளும்

உன்கோயில் நாசம் தானே

தெறித்து விழுந்த வார்த்தைகளின் வெப்பத்தை எடுக்கவும், கோர்க்கவும் முடியாமல் ஸ்தம்பித்து நின்றது கூட்டம். நடந்து விட்ட தவறை அவர்கள் உணரும் முன்னரே தமிழ்க் கவிதையின் சுடும் வெப்பத்தை நரசிங்கப் பெருமாள் நன்கு உணர்ந்து விட்டார்.

சாபமிட்ட நபர் சாமான்ய நபரில்லை, இம்என்னும் முன்னே இருநூறும் நானூறும் பாட்டிசைக்கும் கவி காளமேகம் இவன். இவன் நாவசைய, தமிழ் மடந்தை தவங்கிடக்கும் போது, தெள்ளு தமிழுக்குக் கட்டுப்பட்ட நாமும் இவன் சாபத்திற்குக் கட்டுப்பட்டு விட வேண்டியது தான் என்று திருவுள்ளம் கொண்டார் இறைவன்.

பல்லாண்டு பாடி பொற்கிழி அறுக்கவும், தேவாரம் பாடி இறந்த பெண்ணை மீட்கவும், திருவாசகம் பாடி சிவனையே உருக்கவும், நந்திக் கலம்பகம் பாடி ஆளையே எரிக்கவும் இத்தமிழுக்குச் சக்தி உண்டென்றால், மாபெரும் கவிச் செல்வனுக்குச் செய்யாதன செய்த

இந்த ஊரார் மத்தியில் நம் கோவில் இருந்தென்ன போயென்ன என்றே சிந்தித்திருக்க வேண்டும் கயத்தாற்றுப் பெருமாள். பெரும் சாபத்தை ஏற்றுக் கொண்டார் அவர்.

நூற்றாண்டுகள் பல கடந்தன... அன்றொரு நாள், தொழில் முறையாக கயத்தாறு சென்றிருந்த அடியேனுக்கு காளமேகப் புலவனின் சாபம் நினைவில் வர, அவ்வூர் பெரியவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்தேன். “பெரியவரே! இவ்வூரில் சிதிலமான பெருமாள் கோவில் உண்டா?” என.

“ஆமாந் தம்பி ஊருக்குக் கிழக்காலே பெருமாள் கோவில் ஒண்ணு இடிஞ்சு கிடக்கு,ஏதோ புலவன் சாபம் கொடுத்துட்டானாம்!” என்றார்.

ஆம் தமிழ்ச் சாபம் பொல்லாதது தான்.