‘மாயத் திரை’ என்னும் சிறுகதைத் தொகுப்பு மூலம் கதை உலகில் பிரவேசித்தவர் கா.சி.தமிழ்க் குமரன். தொடர்ந்து கதை உலகிலேயே இயங்கி வரும் அவரின் இரண்டாம் தொகுப்பு ‘ஊமைத் துயரம்’.

ka si tamilkumaranமுதல் கதை ‘பொலி’ விவசாயிகள் பற்றியது. விவசாயிகள் மழையை நம்பி வாழ்பவர்கள். மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாது. மழையை நம்பி விதைத்தவன் மழை வராததால் பாதிக்கப்படுகிறான். மழை கை விட்டாலும் அரசு காப்பாற்றும் என்று நம்புகிறான். அரசும் ஏமாற்றி விடுகிறது. அடுத்த வருடம் மழை வரும் என்று வாழ்வைக் கடத்துகிறான். இக் கதையில் ஆசிரியர் விவசாயிகளின் நிலையை எடுத்துக் காட்டியுள்ளார்.

ஒரு மனிதருக்கு நான்கு பிள்ளைகள். நான்கு பிள்ளைகளும் நல்ல பணியில் உள்ளனர். பெற்ற அப்பா மட்டும் தனியாக கிராமத்தில் வசிக்கிறார். அவர் இறப்பைப் பிள்ளைகள் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கிராமமே அதிசயிக்கிறது. பிள்ளைகளைக் கண்டு பெருமைப்படுகிறது. ஆனால் பிள்ளைகள் கண்டு கொள்ளாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கதை முடிகிறது. ‘செருக்கு’ என்னும் இச்சிறு கதை பிள்ளைகளுக்கு ‘சுருக்கு’ என்று தைக்கும் விதம் உள்ளது.

தானாகவே உயிர் பிரிந்தாலும் பிள்ளைகளைக் குற்றம் சொல்லும் கதை ‘நெஞ்சாங் கூடு’ மூன்று பிள்ளைகளை படிக்க வைத்தும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தும் பணம் தராததால் அவர் இறந்த போது அழாமல் இருக்கிறார்கள். பின்னர் அவர் பெட்டியைத் திறந்து வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பதை அறிந்து கதறி அழத் தொடங்கி விடுகின்றனர். பணம் இருந்தாலே பிள்ளைகள் பாசத்தை வெளிப்படுத்துகின்றன என்று உணர்த்தியுள்ளார். ‘பெத்த மனம்’ கதையும் இதே கருத்தை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளது.

சுருக்கு போலவே ‘கருணை’. சுருக்கில் பிள்ளைகள் புறக்கணித்ததால் அப்பன் தற்கொலை செய்து கொள்கிறான். மரணப் படுக்கையிலிருக்கும் அப்பனைக் ‘கருணை’க் கொலை செய்கிறாள் மகள். மரணப் படுக்கையில் இருப்பவரே கதையைக் கூறுவதாக எழுதி கனக்கச் செய்து விடுகிறார். அவரால் பேச முடியாவிடினும் ஒவ்வொருவர் குறித்தும் அவர்களுக்குச் செய்தது பற்றியும் நினைத்துப் பார்க்கிறார். மகளே கருணைக் கொலை செய்வாள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

அப்பாவைக் கருணைக் கொலை செய்வது போல உற்ற நண்பன் மனநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதைக் கண்ணுற்ற நண்பன் அவன் இறந்துவிடக் கூடாதா என்று எண்ணுகிறான். அவன் இறந்த செய்தி அறிந்த பின்பே அமைதி கொள்கிறான். ‘மீண்ட... அமைதி’யின் சாராம்சம் இதுவே.

‘இருத்தல் இருத்தல் நிமித்தமும்’ என்னும் தலைப்பு கவித்துவமாக இருந்தாலும் கதை கிராமத்தைச் சுற்றியே வருகிறது. செருக்கில் இருந்து மாறுபட்டுள்ளது. கிராமத்திலிருக்கும் அம்மாவை, பிள்ளைகள் அவரவர் ஊருக்கு அழைக்கின்றனர். ஆனால் அம்மா ஊரை விட்டு வர மறுக்கிறாள். காரணம் கணவன் வாழ்ந்த இடம், கணவன் நடந்த மண் என்று போக மறுக்கிறாள். ஆனாலும் பிள்ளைகள் அடுத்த வருட விடுமுறைக்கு வருவார்கள் என்று காத்திருப்பதாக ஆசிரியர் கூறி ஓர் அனுதாபத்தை ஏற்படுத்தி யுள்ளார்.

‘தரகு’ பெறுவதற்காக தரகர்கள் பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பெரும்பாலான தரகர்கள் பொய் பேசியே பிழைப்பு நடத்துவர். தரகில் வரும் நைனா நல்லவராக உள்ளார். தரகு தராதவர்களுக்கும் தேநீர் வாங்கித் தருகிறார். அவருக்கும் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. என்று கதை மூலம் தெரிவித்துள்ளார்.

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் இரண்டு வகை. சுயநலத்துடன் ஒரு வகை. பொதுநலத்துடன் மறு வகை. பொது நலத்துடன் பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் குடும்பத்தை இரண்டாம் பட்ச மாகவே கருதுவர். இதனால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு. அப்படிப் பட்ட ஒரு கதையே ‘உள்ளும் புறமும்’. மனைவியின் பிடிவாதத்தால் மக்கள் நன்மைக் கான போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத ஒரு தோழரின் பரிதாப நிலையைக் காட்டி யுள்ளார்.

காவல் துறை மக்களின் நண்பன் என்று கூறுகிறது. ஆனால் ஒரு தங்க சங்கிலி திருட்டுப் போனால் புகார் கொடுக்கச் செல்லும் மக்களை காவல் துறை காக்க வைப்பதும் அவமானப்படுத்துவதும் அலைக்கழிக்க வைப்பதும் கொடுமையான நிகழ்வுகள். புகார் கொடுக்கச் சென்றவனையே திருடனைப் போல் விசாரணை செய்வது அவமானப்படுத்தும் செயலாகும். காவல் துறை இதையே செய்து கொண்டிருக்கிறது என்கிறது. ‘ஊமைத்துயரம்’. தங்கச் சங்கிலியைப் பறி கொடுத்து புகார் கொடுக்கச் சென்று புகார் கொடுக்காமலேயே திரும்பும் ஒரு குடும்பத்தின் சோகக் கதையை விவரித்துள்ளார்.

தீபாவளி கொண்டாடுவதற்குக் காரணம் எது வாக இருந்தாலும் இதில் மக்களின் மகிழ்ச்சியே முக்கியம். பட்டாசு தொழிற்சாலையில் சிறுவர்கள் ஈடுபடுத்துவது, ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆயினும் சிறுவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்வதையும் தடுக்க முடியவில்லை. ஒரு சிறுவன் பட்டாசு ‘வெடி’த்துக் கொண்டாடுவது குறித்த ஒரு கதையாக உள்ளது. யானை வெடிக்கு போராடிப் பெற்று வெடிக்கும் போது அது ஏமாற்றி விடுகிறது. ஏமாற்றத்தை வெளிப்படுத்தாமல் வெடித்ததாக சந்தோசிக்கிறான். யானை வெடியாக இல்லையா யினும் பூனை வெடியாகி உள்ளது கதை.

மனதை நெகிழ வெத்த ஒரு கதையாக உள்ளது. ‘அன்பிற்கும் உண்டோ...’. மனைவியை இழந்த சுப்பையா பேத்தியின் உறவில் மகிழ்கிறார். அதுவே அவருக்கு ஆறுதலாக உள்ளது. பேத்தியைப் படிக்க வைக்க பட்டணம் அனுப்புவதாக மகன் கூறியதும் சுப்பையாவின் மனம் வாடி விடுகிறது. இதை அறிந்த மருமகள் சுப்பையாவையும் உடன் அழைத்துச் செல்வதாகக் கூற அவரிடம் மாற்றம் தெரிகிறது. முகம் மலர்கிறது. மூத்தவர்களின் மனம் படி நடக்க வேண்டும் என்கிறது.

இ.பி.கோ. என்னும் சிறு கதை இதயத்தில் அதிர்வை ஏற்படுத்துகிறது. குடிகார, கொடுமைக்கார கணவன் ஒருவனுக்கு மனைவியாகி சித்ரவதைக்குள்ளாகி அவளை இறுதியில் சந்தேகப்பட்டு கொல்ல முயலும்போது காப் பாற்ற சில இளைஞர்கள் முயலும் போது கீழே விழுந்து இறந்து விடுகிறான். இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட்ட போது கணவன் கொலைக்குக் காரணம் இவர்கள் அல்ல, தவறி விழுந்து விட்டான் என்று கூறி காப்பாற்றி விடுகிறாள். பெண்ணின் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

‘கித்தாப்பு’ கதையில் வரும் ராசா பாத்திரம் மனத்தை விட்டு அகல மறுக்கிறது. ஊருக்காக எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வெளியூரில் வேலை செய்து பிழைக்கிறார். வருடம் ஒருமுறை விழாவில் கொடுக்கப்படும் மரியாதைக்காக வந்து செல்கிறார்.

‘கொதக்கு’ என்னும் கதை ஒரு தனி மனிதரைப் பற்றியதானாலும் விளை நிலங்கள் வீட்டு மனைகள் ஆக்கப்படுவது குறித்து வருந்தியுள்ளது. காடே கதி என்று வாழ்ந்தவனுக்கு காடு வீடாவது கண்டு குமுறுகிறார். ஆசிரியரும் குமுறுவதை அறிய முடிகிறது. நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

மனிதர்கள் போல் மாட்டுக்கும் அன்பும் பாசமும் உள்ளது என்கிறது ‘மயிலை’. இளங்கெடாரியாய் வீட்டுக்கு வந்து முதுங் கெடாரியாகும் வரை வீட்டாருடன் வளர்ந்து விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணக்கமாக இருந்துள்ளது. கரக்கும் போதெல்லாம் கருணையுடன் பால் கொடுத்துள்ளது. வயதானதால் விற்கப்பட்டது. வியாபாரி ஓட்டிச் சென்ற பிறகும் வீட்டுக்குத் திரும்பி வந்து வீட்டாரின் பாசத்திற்கு இணை இல்லை என்று காட்டி மனத்தில் உயர்ந்து நிற்கிறது. வாங்கியவன் விட மாட்டானே என்னும் போது வருத்தம் ஏற்படவே செய்கிறது.

ஊமைத் துயரம் என்னும் இத் தொகுப்பில் கிராமம் சார்ந்த கதைகளாகவே உள்ளன. கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும் விவரிக்கும் போது அதன் தன்மையை அப்படியே காட்டியுள்ளது தனிச் சிறப்பு. விவசாயம் அழிந்து போவதை முன் வைத்த போதிலும் மனிதர்களின் வாழ்வு குறித்தே அதிகம் பேசியுள்ளார். குறிப்பாக மரணத்தின் அருகிலிருக்கும் முதியோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளே முதன்மையாக்கப்பட்டுள்ளது. வெளியில் சொல்ல முடியாத ஊமைத் துயரங்களாகவே கதையின் கருத்துக்கள் உள்ளன. கதை சொல்லும் விதத்தில் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகவே அடையாளப்பட்டுள்ளார். கதைகளை வாசிக்கும் போது அவரே கூறுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கதை சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கதைக்கான வேறு உத்திகள் இல்லை. பாத்திரங்களின் மூலம் அவர்களின் பிரச்சினைகளை, உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். கரிசல் காட்டுக்கே உரிய பிரத்தியேகமான சொற்களை தமிழ்ச் சிறுகதை உலகிற்கு அறியத் தந்துள்ளார். மாயத் திரை என்னும் முதல் தொகுப்பிலிருந்து தன்னை அடுத்த கட்டத்திற்கு ‘ஊமைத் துயரம்’ மூலம் நகர்த்தியுள்ளார். மேலும் நகர்ந்து செல்ல வேண்டும்.

ஊமைத் துயரம்

கா.சி.தமிழ்க்குமரன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-க்ஷ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ. 110/-