social contract 450ஒரு காலத்தில் ‘கல்வியா? செல்வமா?’ என்ற விவாதம் எங்கும் நடந்து கொண்டிருந்தது.  கல்வியும், செல்வமும் மனித வாழ்வின் இரண்டு கண்களாக மதிக்கப்பட்டன.  அந்த நிலை இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்றாலும், கல்வியே அறிவுக் கண்ணைத் திறந்து விடுகிறது; புதிய உலகத்துக்கும் வழி காட்டுகிறது.  அந்த அறிவின் வடிவம்தான் புத்தகங்கள்.

புத்தகங்கள் வீட்டை அலங்கரிப்பதற்கு மட்டுமல்ல, அறிவை வளர்ப்பதற்கும் பயன்படுகின்றன.  அதனால்தான் புத்தகங்களுக்குச் செலவழிப்பவை செலவினங்களே அல்ல, அவை மூலதனங்கள் என்று கூறப்படுகிறது.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோர்களுடன் உறவு கொள்ளுவதற்கும் நூல் உதவி செய்கிறது.  திருவள்ளுவர் காலம் வேறு;  ஆயினும், காலத்தின் இந்தத் தடையைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது.  அறிவியலால் முடியாத அரிய பெரிய பலனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம்...” என்று டாக்டர் மு.வ. கூறியதை எண்ணிப் பார்த்தால் அதன் உண்மை விளங்கும்.

ஆனால், மக்கள் அறிவை விட பொருளையே நாடுகின்றனர்.  பணம் சக்தி வாய்ந்ததுதான்.  அது பாதாளம் வரை பாயும்தான்.  பணம் இல்லாதவன் பிணம்தான். அதனால்தான் பணத்தை ஈட்டுவதற்காக உலகம் ஆலாய்ப் பறக்கிறது. இந்தப் பணம் அன்பான சமூக உறவுகளை வளர்ப்பதற்கு உதவுகிறதா?

இன்று உலகமே பயங்கரவாதத்தால் நடுங்கிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? பணம் பண்ணும் கல்வியை ஏற்று, கலைப் பாடங்களைப் புறக்கணித்ததன் விளைவு.  கலையும், இலக்கியமும் வளர்வதும், வளர்க்கப்படுவதுமே ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சியாகும்.

‘எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்’ என்றான் பாரதி.  எழுத்தும், அதனால் உருவாக்கப்படும் புத்தகங்களும் நமக்கானவை அல்ல, நமது தலைமுறைகளுக்கானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  காலங்களால் மனிதர்கள் மறையலாம்,  மாமேதைகள் புத்தகங் களால் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே அறிவின் வழியாகவும், வாயிலாகவும் இருப்பவை நூல்கள்.  அழகிய ஒரு நாகரிகச் சமுதாயத்தின் சின்னங்களாகத் திகழ்பவை சிறந்த இலக்கியங்களே!

18-ஆம் நூற்றாண்டை பழமைக்கும், புதுமைக்கும் நடந்த ‘புரட்சி நூற்றாண்டு’ என்று கூறலாம்.  அதற்கு மூல காரணம் வால்டேரும், ரூசோவும்.  ‘பழமையை அழிக்கப் பிறந்தான் வால்டேர்; புதுமையைப் படைக்கப் பிறந்தான் ரூசோ’ என்று வரலாறு கூறுகிறது.  அவர்கள் பாழடைந்த பழைய கட்டடத்தை அடியோடு இடித்துவிட்டு, புதிய மாளிகையை எழுப்பினர்.

“புரட்சிக்கு முன் பிரான்ஸ் தேசத்தின் நிலை என்ன? கண்ணிருந்தும் காணாக் குடிமக்கள்; மக்களை வதைத்து மன்னனுக்கு மண்டியிடும் நீதிபதிகள்; கொடுமையும் கபடமும் உருவெடுத்த மதகுருமார்கள்.  இவைகளுக்கு அடியில் உறங்கிக் கிடந்த சமுதாயத்திலே ஒருவன் தோன்றினான்.  அவன் கண்களுக்கு மட்டும் அநீதிகள் தென்பட்டன; எதிர்த்து நின்றான்.  உரிமைப் போர் முரசு கொட்டினான்.  காற்றைப் போல் இலேசான படைக்கலம் பூண்டான். அதுதான் பேனா!...”

வால்டேர் இறந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1878-இல் பாரிஸ் நகரத்தில் நிகழ்ந்த அவரது நினைவு நாளில் அறிஞர் விக்டர் ஹியூகோ இவ்வாறு கூறினார்.

‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற மகத்தான நூலை எழுதிய சிந்தனையாளன் ரூசோ நாடு கடத்தப் பட்டான்.  ‘சமுதாய ஒப்பந்தம்’ 1762-இல் வெளியா யிற்று:  அதே ஆண்டு ‘எமிலி’ (கல்வி) என்ற நூலும் வெளிவந்தது.

‘எமிலி’ - சமுதாயத்தின் பழைய மூடப் பழக்கங் களில் மூழ்கிக் கிடந்த கல்வி முறைக்குப் பெரும் சவுக்கடியாக இருந்தது.  மதகுருமார்களும், மதவாதி களும் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.  ‘எமிலி’ வெளிவந்த 21-ஆம் நாள் பாரிசில் உள்ள நீதி மன்றத்தின் முன் அப்புத்தகம் பகிரங்கமாகக் கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியரைக் கைது செய்யும்படி பிரெஞ்சு நாடாளுமன்றம் ஆணை யிட்டது. அவன் தலைமறைவாகி ஊர் ஊராக ஓடினான்.

ரூசோ இறந்த பிறகுதான் அவனுடைய தேவையையும், மதிப்பையும் நாடும், உலகமும் உணர்ந்தன.  16 ஆண்டுகள் கழித்து ‘பிரெஞ்சுப் புரட்சி’ வெடித்துக் கிளம்பியபோது அவனது சடலம் குக்கிராமப் புதை குழியிலிருந்து தோண்டியெடுக்கப் பட்டு, மாபெரும் மரியாதையுடன் பாரிஸ் நகரம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.  அவனுடைய எந்த நூல் பாவமாகக் கருதப்பட்டு எந்த பாரிஸ் நகரம் தீயிட்டுக் கொளுத்தியதோ, அதே பாரிஸ் மாநகரம் அதே நூலான ‘சமுதாய ஒப்பந்தத்’தை புனிமாகக் கருதி வழிபட்டது.

நூல்கள் வேதங்களாகவும் இருந்தன; வெடி குண்டுகளாகவும் வெடித்தன. பல்வேறு புரட்சிகளுக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன.  பழைமைக்கு இடியாகவும், புதுமைக்குப் படியாகவும் விளங்கின.

1867 ஆகஸ்ட் 16-உலகத்தில் மாபெரும் புரட்சி களை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ வெளிவந்தது. கிறித்துவ மறைநூலாகிய விவிலியத்துக்கு அடுத்து அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது.

இலண்டன் மாநகரில் வறுமையோடு போராடிக் கொண்டிருந்த கார்ல் மார்க்சின் 12 ஆண்டுகால உழைப்பு இது. இதற்காக இவர் படித்த நூல்கள் 1500க்கும் மேல். ‘இந்த நூலின் தாக்குதலால் உலகத்தில் பாதி சிவப்பாகியது’ என்று வரலாற்றாசிரி யர்கள் கூறினர்.

“ஒரு முட்டாள்கூட வரலாற்றை உருவாக்க முடியும்.  ஆனால் ஒரு மேதையால்தான் வரலாற்றை எழுத முடியும்” என்றார் ஆஸ்கார் வைல்ட்.

முடியரசு காலத்தில் வாளே வலிமையாக இருந்தது; குடியரசு காலத்தில் வாள் முனையைவிட பேனா முனையே வலிமை மிக்கதாயிற்று.  அதனால் தான் பல நாடுகளில் எழுத்துக்குத் தடை விதித்தனர்; எழுத்தாளர்களுக்கு மரணதண்டனையும் விதிக்கப் பட்டன.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் செய்த பல கொடுமைகளுள் புத்தகங்களை எரித்ததுவும் அடங்கும்.  தமக்குப் பிடிக்காத புத்தகங்களைப் பறி முதல் செய்து கொளுத்தி விடுமாறு கட்டளையிட்டார்.  இதையறிந்த இலண்டன் புத்தக விற்பனையாளர் ஆல்பிரட் பாயில் வேதனை கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பழிவாங்கவும், ஹிட்லருக்குப் பாடம் கற்பிக்கவும் எண்ணினார்.  இலண்டன் மாநகர் மீது ஜெர்மனி குண்டு வீசிக் கொண்டிருந்த போது, ஹிட்லர் எழுதிய ‘மெயின் காம்ப்’ என்ற புத்தகத்தின் படிகளைக் கட்டுக்கட்டாகக் கட்டி மணல் மூட்டைகளுக்குப் பதிலாக தன் கடைக் கூரைகளுக்கு மேலே பரப்பித் தன் புத்தகக் கடைக்குப் பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டாராம்.

“உலகத்திற்கு உபதேசிக்கப் புதிதாக என்னிடம் எதுவும் இல்லை. மலைகள் எவ்வளவு பழமை யானவையோ அவ்வளவு பழமையானவை சத்தியமும் அகிம்சையும்...” என்றார் மகாத்மா காந்தியடிகள். அவர் எழுதிய ‘சத்திய சோதனை’ கோடானுகோடி மக்களுக்கு வழிகாட்டியானது.

அடிமை இந்தியாவிலும், விடுதலையடைந்த இந்தியாவிலும் பல புத்தகங்களுக்குத் தடைவிதிக்கப் பட்டது.  காங்கிரஸ் பதவி ஏற்றதும் பொதுவுடைமை இயக்கத்துக்குத் தடைவிதிக்கப்பட்டபோது அவர்களது பத்திரிகைகளும், புத்தகங்களும் பறிமுதல் செய்யப் பட்டன.  திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அண்ணாவின் Ôஆரிய மாயைÕ, புலவர் குழந்தையின் 'இராவண காவியம்', ஜீவானந்தம் மொழிபெயர்த்த பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ இவைகளைக் கூறலாம்.

காலம் மாற மாற, கருத்துகள் மாறின;  அரசுகள் மாறின; ஆட்சிகளும், அடக்குமுறைகளும் மாறின.  ஆனால் காலத்தை வென்று நிற்கும் நூல்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  வெள்ளத்தையும், வெந்தணலையும் வென்று காற்றையும், கரையானையும் கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

“காலம் என்னும் ஆழ்கடலில் நீந்துகிறவனுக்கு அறிவு என்னும் துறைமுகத்தை அடையக் கலங்கரை விளக்காக அமைந்துள்ளவை சிறந்த அறிஞர்களின் உயர்ந்த நூல்களே!...” என்றார் கவி தாகூர்.

ஆனால், வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுதல் கூடாது.  அச்சில் வந்தவையெல்லாம் நூல் என்று போற்றுதலும் கூடாது.  புதிய உலகை உருவாக்கும் புரட்சி நூல்களையே வாசிக்க வேண்டும்; தினமும் சுவாசிக்க வேண்டும்.