criminal tribes

ஆங்கிலக் காலனிய ஆட்சி இந்தியாவில் நடைமுறைப்படுத்திய மோசமான சட்டங்களில் ஒன்று குற்றப் பரம்பரைச் சட்டம். எல்லாச் சட்டங்களைப் போன்றும் இச்சட்டத்தின் அறிமுகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், ‘சதி’ (உடன்கட்டை), குழந்தை மணத்தடை குறித்த சட்டங்களைக் குறித்துக் கற்றுக் கொடுக்கும் நம் இந்திய நாட்டு வரலாற்றுப்பாட நூல்கள், இம் மோசமான சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது குறித்தும் ஏராளமான மக்களைக் கொண்ட சில குறிப்பிட்ட சமூகங்கள் அவமதிப்புக்கு ஆளாகி அல்லல் பட்டு நின்றமை குறித்தும் எதுவும் குறிப்பிடுவதில்லை.

ஆனால் இந்தியச் சமூகவியலாளர்களும், சமூக வரலாற்றியலாளர்களும் இச்சட்டம் குறித்தும், அது அறிமுகப்படுத்தப்பட்ட வரலாறு குறித்தும், அதன் கொடூர விளைவுகள் குறித்தும், விரிவாக ஆராய்ந்துள்ளனர். இவை நூல்வடிவிலும், ஆய்வுக்கட்டுரைகள் வடிவிலும் நமக்குக் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இடம்பெறும் ஆங்கில நூல் ஒன்றும், தமிழ் நூல்கள் மூன்றும் இங்கு அறிமுகமாகின்றன.

நம் சக தமிழர்களின் முன்னோர்களை ஆங்கிலக் காலனியம் எவ்வாறு இழிவுபடுத்திக் கொடுமைப் படுத்தியது என்ற வரலாற்றுண்மையை ஓரளவுக்காவது நாம் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன.

தன் பொருளாதாரச் சுரண்டலுக்காகக் காலனிய முறையை நடைமுறைப்படுத்தி வந்த ஆங்கில ஆட்சி, இந்திய மக்களின் ஒழுக்கத்தைப் பேணிக்காக்கும், பண்பாட்டுக் காவலனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. இது குறித்து அது பெருமிதப்பட்டுக் கொள்ளவும் செய்தது.

‘இந்தியாவில் இங்கிலாந்தின் பணிகள்’ என்ற தலைப்பில் இந்தியாவில் பணியாற்றிய ஹண்டர் என்ற ஆங்கில அதிகாரி 1881 இல் வெளியிட்ட தமது நூலில் ஒரு நூற்றாண்டுகால ஆங்கில ஆட்சியின் சாதனை களைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

‘பாதுகாப்பான அதிக வளமான இந்தியா உருவாகியது. சாலைகள், தொடர்வண்டி அமைப்புகள், பாலங்கள், கால்வாய்கள் பள்ளிக் கூடங்கள், மருத்துவனைகள் உருவாயின. பஞ்சங்கள் எதிர்கொள்ளப்பட்டு சமாளிக்கப் பட்டன. ரவுடிகளும், கொள்ளையரும் வன்முறைச் சாதியினரும் ஒடுக்கப்பட்டனர். வணிகம் வளர்ந்தது. உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் போன்ற சமூகக் கொடூரங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன’.

ஹண்டரின் இக்கூற்றில் இடம்பெறும் செய்தி களில் பெரும்பாலானவை நம் பாட நூல்களில் இன்றும் இடம்பெறுபவைதான்.

ஹண்டரின் மேற்கூறிய கூற்றில் இடம்பெறும் ‘வன்முறைச் சாதி’ என்ற சொல் மிகுந்த கவனத்திற்குரிய ஒன்று. குறிப்பிட்ட சாதிகள் சில வன்முறையை மேற்கொள்ளும் சாதிகளாக காலனியவாதிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ‘வன்முறைச் சாதி’ என்ற சொல்லாடலுக்கு அவர்கள் 1871இல் உருவாக்கிய குற்றப் பரம்பரைச் சட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஒரு வகையில் இச்சட்டம் சில குறிப்பிட்ட சாதியினரை மையமாகக் கொண்டே இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவம் 1911 இல் சென்னை மாநிலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபோது அதிகாரப் பூர்வமான புள்ளிவிவரப்படி பதினான்கு லட்சம் மக்கள் இச்சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

காலனிய இனவரைவியல்

இச்சட்டத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்தியமைக்கு அவர்களது பிற்போக்கான இனவரைவியல் சிந்தனை ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. குற்றம் என்பது பிறவி சார்ந்தது என்று இங்கிலாந்து நாட்டின் குற்றவியலாளர்களும் விஞ்ஞானி களும் தவறாகக் கருதி வந்தனர். தச்சர் ஒருவர் தச்சுத் தொழில் நுட்பத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுப்பது போன்று குற்றப்பரம்பரைச் சாதியினர் குற்றச்செயல்முறையை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் தொழில்சார் அறிவு இந்தியாவில் இருந்ததாக அவர்கள் கருதினார்கள்.

இவ்வகையில் குற்றச் செயல்பாடுகள், இந்தியாவில் பரம்பரைத் தொழிலாகவும், வேலையின்மையினால் உருவாவதாகவும் கருதப்பட்டது என்றாலும் பரம்பரைக் குற்றச் செயல் என்ற கருத்து நிலை தவறான ஓர் அணுகுமுறை என்பதில் அய்யமில்லை.

காலனியச்சட்டங்கள்

பரம்பரைக் குற்றச் செயல் என்று குறிப்பிட்ட ஆங்கிலக் காலனியம் இதை மேற்கொள்ளும் சாதிகள் என்று ஒரு பட்டியலை உருவாக்கியது. இப்பட்டியலில் ஆதிவாசிகளும் கிராமப்புற வேளாண் சாதிகளும் இடம்பெற்றிருந்தனர். 1911ஆம் ஆண்டில் இந்தியாவின் மாகாணங்கள் தம் மாகாண எல்லைக்குள் வாழ்ந்த சாதிகள் சிலவற்றை இப்பட்டியலில் இணைத்துக் கொண்டு இச்சட்டத்தை நடைமுறைப் படுத்தத் தொடங்கின. இதில் ஒரு குறிப்பிட்ட சாதி ஒரு மாவட்டத்தில் சுயேச்சையான குடிமக்களாக விளங்க அதே சாதிப் பிரிவு மற்றொரு மாவட்டத்தில் குற்றப் பரம்பரைச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டது. திருநங்கையரும் கூட இப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இப்பட்டியலில் இடம்பெற்ற சாதியினர் பிறப்பின் அடிப்படையிலேயே குற்றச் செயல்களில் ஈடுபடும் குணம் கொண்டவர்களாகக் குறிப்பிடப்பட்டனர். இதனால் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக அச்சமூகத்தின் ஆண்கள் குற்றச் செயல்களை மேற்கொள்வோராகக் கருதப்பட்டனர். இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறோம் என்ற பெயரில் இவர்களின் விரல் ரேகை, பதிவு செய்யப் பட்டது. இவர்களின் நடமாட்டம் கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் ஆட்படுத்தப்பட்டது. சில இடங்களில் இரவு நேரத்தில் காவல் நிலையத்தின் முன்பகுதியில் படுத்து உறங்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர். உறவினர்களைச் சந்திக்கவும் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ளவும் செல்ல விரும்பு வோர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பித்து ‘பாஸ் பெர்மிட்’ என்ற அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் அனுமதிச் சீட்டுக்குரியவரின் புகைப்படமும் போகும் ஊர், போவதற்கான காரணமும் இடம் பெற்றிருக்கும்.

இவ்வாறு பிறந்த சாதியின் அடிப்படையில், குற்றச் செயல்புரிவோர் என்ற பிரிவை காலனிய அரசு உருவாக்கியது. ஆனால் இதற்கான சமூகக் காரணத்தைக் கண்டறிவதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

சமூகக் காரணங்கள்

இப்பட்டியலில் இடம்பெற்ற சாதியினர், காலனிய ஆட்சி அறிமுகம் ஆகும் முன்னர் பல்வேறு தொழில் களை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். காலனிய ஆட்சி நிலைபெற்ற பின் அவர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவர்களது வாழ்வாதாரத்தைக் குலைத்தன.

கிராமப்புறங்களில் காவல்தொழில் புரிந்து வாழ்ந்த சமூகம், ஆங்கில அரசு அறிமுகப்படுத்திய காவல் நிலையங்களால் தன் பாரம்பரியத் தொழிலை இழந்தது.

காட்டுக் கொடிகளாலும், காடுகளில் கிடைக்கும் பிரம்புகளினாலும் கூடை முடையும் தொழில்புரிந்து வாழ்ந்து வந்த சமூகம் ஆங்கில அரசு அறிமுகப்படுத்திய காடுகள் சட்டத்தினால் காடுகளில் சென்று, தம் தொழிலுக்கான மூலப்பொருட்களைச் சேகரிக்கும் உரிமையை இழந்தனர். இவ்வுரிமையை இழந்தமையால் தம் தொழிலையும் இழந்தனர்.

போக்குவரத்து முறையானது இன்றுபோல் எளிதாக இல்லாத காலத்தில், கழுதைகள், எருதுகள் மீது பொருட்களை ஏற்றிச்சென்று பண்டமாற்று செய்யும் வாணிபம் நடைமுறையில் இருந்தது. பொதிமாட்டு வாணிபம் என்று இதை அழைப்பர்.

பொதிமாட்டு வாணிபத்தில் தானியங்கள், பயறு வகைகள், கருப்புக்கட்டி, வெல்லம் என்பன இடம்பெற்றன என்றாலும் மிக முக்கியமான வாணிபப் பொருளாக உப்பு அமைந்திருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது எந்த உணவானாலும் உப்பின்றி அதைத் தயாரிக்க முடியாது. இரண்டாவது, கடற்கரைப் பகுதியில் மட்டுமே இது கிடைக்கும்.

எனவே உப்பு வணிகர்கள் தவிர்க்க இயலாதவர் களாக விளங்கினர். உப்பு உற்பத்தியாளர்களிடம் இருந்து உப்பைப் பெற்று அதை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் பணியினை சில சாதியினர் மேற்கொண் டிருந்தனர். கிராமப்புறங்களில் உப்பிற்கு மாற்றாகத் தானியங்களைப் பெற்றுவந்தனர்.

உப்பின் பயன்பாடு தவிர்க்க இயலாது என்பதால் அனைத்து மக்களின் அத்தியாவசியப் பொருளான உப்பைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் அதிக ஆதாயம் பெறலாம் என்று ஆங்கில அரசு கருதியது. இதன் அடிப்படையில் உப்பு வாணிபத்தில் சில கட்டுப்பாடுகளை ஆங்கில அரசு 1805இல் விதித்தது.

இதன்படி உப்பு உற்பத்தியாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் உப்பை ஆங்கில அரசு நிர்ணயிக்கும் விலையில், அரசுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆங்கில அரசு இதை அதிக விலைக்கு விற்றது.

ஏற்கனவே உப்பு வாணிபத்தில் ஈடுபட்டிருந்த சமூகங்கள் அதிகவிலை கொடுத்து, ஆங்கிலேயர்களிடம் வாங்கி, வழக்கமான பண்டமாற்று வாணிபம் வாயிலாக விற்பனை செய்தனர். இப்புதியமுறை அவர்களது பொருளாதாரத்தைப் பாதிக்கத் தொடங்கியது. உப்பிற்கு அதிகவிலை கொடுத்து வாங்கும் பொருளாதார ஆற்றல் குறைவாக இருந்தமையால் அதிக அளவு உப்பை வாங்கமுடியவில்லை அத்துடன் உப்பின் அதிக விலையால், நுகர்வோர் தாம் வழக்கமாக வாங்கும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளலாயினர்.

1850 இல் தொடர்வண்டி அறிமுகமானபின் 1859 இல் தொடர்வண்டி வாயிலாக உப்பு விநியோகம் நடை பெறத் தொடங்கியது. இதன் வளர்ச்சி நிலையாக, தொடர்வண்டி வாயிலாக மிகுதியான அளவு உப்பைப் பெற்று இருப்பு வைத்து விற்கும். மொத்த வணிகர்கள் உருவாயினர். இவர்களது வருகையால் பொதிமாட்டு உப்பு வாணிபம் சிதைந்தது. தொடர்வண்டிப் போக்கு வரத்து அறிமுகம் ஆகாத பகுதிகளில் மட்டுமே அவர் களால் இயங்க முடிந்தது.

இவ்வாறு காலனியம் புதிதாக அறிமுகம் செய்த காவல்துறை, காடுகள் சட்டம், உப்பு விற்பனை ஏகபோகம் என்பன இத்தொழில்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தன. வாழ்க்கை நெருக்கடியினால் இவர்களுள் ஒரு சிறு பகுதியினர் திருட்டை மேற்கொண்டனர். குற்றவாளிகள் பிறப்பதில்லை; அவர்கள் சமூகத்தால் உருவாக்கப் படுகிறார்கள் என்பதற்கேற்ப காலனிய ஆட்சியால் இவர்கள் உருவாக்கப்பட்டனர்.

ஆனால் காலனிய ஆட்சி சமூகக் காரணங்களை மறைத்துவிட்டு, இம்மக்கள் பிரிவை பிறவிக் குற்றவாளி களாக அடையாளப்படுத்தியது. அறிவியல் நோக்கில் பார்த்தாலும், சமூக நோக்கில் பார்த்தாலும் பிறவிக் குற்றவாளி என்று எவரும் இருக்க முடியாது. காலனிய அரசோ பிறவியிலேயே குற்றவாளிகள் என்று சில சமூகங்களைப் பட்டியலிட்டது. குற்றப்பரம்பரையினர் என்று பெயரிட்டது. இவர்களை மையப்படுத்தி குற்றப் பரம்பரைச் சட்டம் என்ற சட்டத்தையும் உருவாக்கியது. நிலமும், குடியிருக்க வீடும் இல்லாது இடம்பெயர்ந்து வாழும் நாடோடி மக்களை நிலைத்து வாழச் செய்யும் வழிமுறைகளை மேற்கொள்ளாது அவர்கள் நாடோடிகள் என்பதாலேயே குற்றவாளிகள் என்று முத்திரையிட்டது.

19 ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொடிய பஞ்சங்களினால், கிராமப்புறங்களில் வேளாண்மை சீர்குலைந்தது. தானிய ஏற்றுமதியை நிகழ்த்தி வந்தமையால் அடிப்படைத் தேவையான உணவு தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்கள் நிகழலாயின. இவற்றிற்கான அரசின் கொள்கைகளை மாற்றியமைக்காது எதிர்க்குரல் எழுப்பிய மக்களை குற்றப்பரம்பரைச் சட்டத்திற்குள் காலனிய அரசு கொண்டு வந்தது.

தச்சர் ஒருவர் தன் தொழில்நுட்ப அறிவை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுப்பது போல், சில சாதியினர் குற்றச் செயல்களை அடுத்த தலைமுறை யினருக்குக் கற்றுக்கொடுப்பதாக அது நம்பியது. இந்நம்பிக்கையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட சாதியினர் குற்றப்பரம்பரைச் சாதியினராக அடையாளப் படுத்தப்பட்டனர். மற்ற குற்றவாளிகளைப்போல் குற்றப்பரம்பரையினரைத் திருத்தமுடியாது என்று காலனிய அரசு நம்பியது. இவ்வாறு குற்றச் சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டோரின் பரம்பரை வாழ்க்கை முறையைத் தனது பொருளாதாரக் கொள்கைகள் அழித்தமையை உணர மறுத்தது.

மற்றொரு பக்கம் கிராம அதிகாரிகளும் நில உடைமையாளர்களும் இச்சட்டத்தைப் பயன்படுத்தி இம்மக்களின் உழைப்பைச் சுரண்டலாயினர். இவர்களது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டமையால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இவர்கள் இயங்க முடிந்தது. இதைப் பயன்படுத்தி பொது மராமத்துப் பணிகளை இவர்கள் வாயிலாகச் செய்து முடித்தனர். ஆட்களோ மிகுதி, ஊதியமோ குறைவு எனப் பெரு நிலவுடைமையாளர்களின் பண்ணைகளில் இவர்கள் வேலை செய்யும்படிச் செய்தனர்.

‘பாஸ் பெர்மிட்’ முறையின் மூலம் சில மணி நேரமே இவர்கள் தம் இருப்பிடத்தைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டமையால் தாம் வாழும் பகுதிக் குள்ளேயே குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் அவல நிலைக்கு ஆளானார்கள். உயர்சாதி நிலவுடைமை யாளர்களுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் மக்களை ஒடுக்கும் கருவியாகவும் குற்றப்பரம்பரைச் சட்டம் பயன்படுத்தப் பட்டது.

தம் எதிரிகளைக் கொலை செய்ய, பெருநிலக் கிழார்கள் இம்மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.

எதிர்க்குரல்

குற்றப் பரம்பரைச் சட்டத்தின்படி பத்து வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அரசின் பதிவேட்டில் தம் கை ரேகையைப் பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். இதை எதிர்த்து மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் கிராமத்தில் 03-04-1920 இல் ஆயுதப் போராட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இப் போராட்டத்தில் காவல் துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டோருக்குத் தண்ணீர் கொடுத்த மாயக்காள் என்ற பெண்ணும் இதில் அடக்கம்.

இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின்படி இக்கொடிய சட்டத்திற்கு எதிராக நிகழ்ந்த ஒரே போராட்டமாக இப்போராட்டம் விளங்குகிறது.

1937 இல் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. 1947 மே முப்பதாம் நாள் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.

தொடரும் கொடுமை

வெளிப்படையாக இச்சட்டம் நீக்கப்பட்டாலும் நடைமுறையில் இச்சட்டம் தொடரவே செய்கிறது. ரேகை பதிவு, இடப்பெயர்ச்சிக் கட்டுப்பாடு என்பன போல் வெளிப்படையாக இன்றி, சில குறிப்பிட்ட சமூகத்தினர் குற்றவாளிச் சமூகங்களாகக் காவல் துறையினரால் நடத்தப்படும் அவலத்தை ம.இராத கிருஷ்ணன், மணி.கோ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தம் நூல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

· · ·

வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவு குறித்த, புரிதலைப் பின்வரும் நூல்களைப் படிப்பதன் வாயிலாகப் புரிந்து கொள்ளலாம்.

1)முகில் நிலவன் (2010) குற்றப் பரம்பரை அரசியல் பாலை வெளியீடு, மதுரை

2) மணி.கோ.பன்னீர் செல்வம் (2006) தொடரும் காலனியக் குற்றம் அம்பேத்கர் ஆய்வு மையம், தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி பாளையங்கோட்டை

3) ம.இராதாகிருஷ்ணன் (2010) துரத்தப்படும் மனிதர்கள் மக்கள் கண்காணிப்பகம், மதுரை

4) Meena Radhakrishnan (2001) Dishonoured by History: Criminal Tribes and the British Colonial Policy.