‘சிங்காரவேலரின் சிந்தனைகள்’ என்னும் நூலை வாசித்து மகிழ்ந்தேன்.  அம்மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.  நூலை வாசிப்பவர்களுக்கு மேலும் மகிழ்வைத் தரும் வகையில் இக்குறிப்புகளைப் பதிவு செய்கிறேன்.

-     பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகிய காலங்களில் மக்கள்தொகைப் பெருக்கம் குறித்த உரையாடல்கள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டன.  மால்தூஸியன் கோட்பாடு பல கூறுகளில் விவாதிக்கப் பட்டது.  இந்த விவாதத்தில் தோழர் சிங்கார வேலரின் நிலைப்பாட்டை நூலாசிரியர் பா.வீரமணி எவ்வகையில் நமக்குக் காட்டி யுள்ளார் என்ற புரிதல் முக்கியமாகும்.

-     சிங்காரவேலரின் வரலாற்றை எழுதிய இந்திய இடதுசாரிகளின் பார்வைகளை, வீரமணி எப்படி அம்பலப்படுத்தியுள்ளார் என்ற சுவையான விவாதம் குறித்த அறிதல் அவசிய மாகும்.

-     பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனிய ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த செய்திகளும் அதன் மூலம் ஏற்பட்ட விளைவுகளும் முக்கியமாகும்.  தோழர் சிங்காரவேலர் நவீன அறிவியல் மரபை எவ்வகையில் உள்வாங்கிச் செயல் பட்டார் என்ற வரலாற்றுப் புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது.

-     தோழர் சக்லத்வாலா போன்றவர்களைத் தோழர் சிங்காரவேலர் நமக்கு அறிமுகப் படுத்தினார்.  தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் நூறு ஆண்டுகள் வாழ்ந்து சிங்காரவேலரை நமக்குக் காட்டினார்.  இந்தப் பின்புலத்தில் தோழர்கள் சக்லத்வாலா மற்றும் சி.எஸ்.சுப்பிர மணியம் ஆகியோரை பா.வீரமணி நமக்கு எவ்வகையில் அறிமுகப்படுத்துகிறார் என்ற விவாதத்தை மேற்கொள்ளும் தேவையுண்டு.

-     தமிழாசிரியர்கள் மற்றும் இன்று தலித்துகள் என்று அழைக்கப்படுவோர் குறித்த சிங்கார வேலரின் மதிப்பீடுகளும் செயல்பாடுகளும் எவ்வகையில் அமைந்திருந்தன என்ற கண்ணோட்டம் அவசியமாகும்.

-singaravelu_250     தனக்கென வாழாது தான் வாழும் சமூகத்துக் கென வாழும் / வாழ்ந்த பெரியவர்களை நாம் எந்தெந்த வகையில் மதித்துப் போற்றுகிறோம் என்பது அவசியம்.  தோழர் சிங்காரவேலர் குறித்த பரப்புரைகளை எந்தெந்த வகையில் செய்யவேண்டும்; அதற்கான தேவை என்ன எனப் பல நிலைகளில் நாம் உரையாட முடியும்.  சிங்காரவேலர் சிந்தனைகளைப் பரப்புரை செய்வதைத் தமது வாழ்நாள் பணியாகக் கொண்டு செயல்படும் புலவர் பா.வீரமணி அவர்களின் செயல்பாட்டை எப்படிக் கொண்டாட வேண்டும்? எவ் வகையில் வீரமணி அவர்களைப் போற்றிப் பாராட்ட வேண்டும்? என்பது குறித்த உரை யாடல் அவசியமாகும்.

தோழர் சிங்காரவேலரின் ஆளுமைகளைப் புதிய பரிமாணத்தில் புரிந்துகொள்ள உதவும் மேல் குறித்த விவரணங்களை பா.வீரமணி அவர்கள் இந்த நூலில் மிக விரிவான தகவல்களுடன் பதிவு செய்துள்ளார்.  வாசிப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமையும் மொழியில் இந்நூல் அமைந்துள்ளது.  வீரமணி அவர்கள் தரும் செய்திகள், சிங்காரவேலரை எந்தெந்தக் கோணங்களில் புரிந்துகொள்ள உதவும் என்பதை நாம் உரையாடலுக்கு உட்படுத்தலாம்.

* * *

“மால்தஸ் கண்டுபிடித்த சித்தாந்தமாவது;
உணவைக் காட்டிலும் உண்போரும்
உடையைக் காட்டிலும் உடுப்போரும்
வாசஸ்தலத்தைக் காட்டிலும் வசிப்போரும்

 நாளுக்குநாள் அதிகரிக்கின்றார்களென்பது, இவர்கள் எத்துணை அதிகரிக்கின்றார் களெனின், இருபத்தைந்து வருடங்களில் தொகையில் இரட்டிப்பாகத் தக்கவர்களாய் அதிகரிக்கின்றார் களாம்.  இந்தக் கணக்கை நிர்விவாதமாய்ச் சகலமான விசாரிணிகளும் யோசனபுருஷர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.  இந்தப் பிரஜா நிரூபணத்தைப்பற்றிய பத்திரிகை வாயிலாகவும் நூன்முகத்தாலும் பிரசங்க வாயிலாகவும் பலர்க்கும் போதித்துப் பிரஜா ரோக்கியத்தை நிலை நாட்டி வறுமையை வேர் களைய (ஆங்கில நாட்டைப் போலவே) இந்நாட்டிலும் ஒரு சங்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது.  இச்சங்கம் சகல மதத்தவர்க்கும் பொதுவானது.  இதில் அனேக பிரபுக்களும் கனவான்களும் புத்திமான்களும் சேர்ந்திருக் கிறார்கள்.  இதில் சேர விருப்பமுள்ளவர்கள் ‘இந்து மால்தூஸியன் சங்க’ காரியதரிசி யாகிய பி.எல்.நரசு, பி.ஏ. அவர்களுக்கு எழுதிக் கொள்ளலாம்.  (தத்துவ விவேசினி - வாராந்தரப் பத்திரிகை, 11.3.1883)

1878 முதல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த ‘இந்து சுயாக்கியான சங்கம்’ அதன் துணை அமைப்புகளில் ஒன்றாக ‘இந்து மால்தூஸியன் சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கி நடத்தி வந்தது.  அதன் செயலாளராக, பிற்காலத்தில் சிங்காரவேலர், அயோத்திதாசர் ஆகியவர்களுடன் இணைந்து செயல்பட்டவர் பேராசிரியர் இலட்சுமி நரசு.  367, மின்ட் தெருவில் இவ்வலுவலகம் சென்னையில் செயல்பட்டது.  மேற்குறித்த செய்தி களின் அடிப்படையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்சியக் கருத்தாடல் விவாதிக்கப்பட்டபோது மால்தூஸியன் குறித்த கருத்தாடலும் நடைமுறையில் இருந்ததைக் காண்கிறோம். 

தமிழ்ச்சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் விவாதிக்கப் பட்ட இக்கருத்தாக்கம் பின்னர் சுயமரியாதை இயக்கத்தாலும் இடதுசாரி அமைப்புக்களாலும் விவாதிக்கப்பட்டது.  இதில் சிங்காரவேலர் மார்க்சிய கருத்துநிலை நின்று தமது விளக்கத்தை முன்வைத்துள்ளார்.  இந்து சுயாக்கியான சங்க மரபில் சுயமரியாதை இயக்கமும் மால்தூஸியன் கோட்பாட்டை ஆதரித்து வந்தது.  இக்கருத்தாக்கத்தை, தமது வலுவான தர்க்கபூர்வ ஆய்வுகள் மூலம் சிங்காரவேலர் மறுத்துள்ளார்.  இத்தன்மை, சிங்காரவேலரின் மார்க்சியத்தத்துவம் குறித்த புரிதலைக் காட்டுவதாக அமைகிறது.  அவர் கூறுகிறார்;

‘விளைபொருளும் செய்பொருளும் பெற்ற கூட்டத்தவர்களால் துர்விநியோகிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் ஜனங்களுக்குப் போதுமான வரை உணவை உண்டாக்காமல் நிறுத்தி விடுவதாலும் பலருக்கு உபயோகமாகும்படி விடாமல் தடைசெய்து வருவதாலும் என்க’ (இந்நூல், ப.86, குடியரசு, 19.11.33)

இவ்வகையில், உலகில் பிறக்கும் மனித உயிர், இரண்டு கைகளோடும் பிறக்கின்றது.  அந்தக் கை களைப் பயன்படுத்தி உழைப்பதன் மூலம், அவ்வுயிர் தனக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற முடியும்.  எனவே உற்பத்தி, விநியோகம், நுகர்வு என்பதன் அடிப்படையான இயக்க விதிகளைப் புரியாமல் வெறுமனே பிறப்பை மட்டும் தடை செய்வதை சிங்காரவேலர் மறுக்கிறார்.

இந்நூலில் மேற்குறித்த விவாதம் தொடர்பான விரிவான தரவுகளை வீரமணி கொடுத்துள்ளார்.  இதன்மூலம் சிங்காரவேலர் சமகாலக் கருத்து நிலைகளில் எவ்விதம் அக்கறையுடன் செயல் பட்டிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.  ஒரு குறிப்பிட்ட சமூக நிகழ்வை மார்க்சியரும், மார்க்சியர் அல்லாதாரும் எப்படிப் புரிந்துகொள் கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள சிங்கார வேலர் எவ்வகையில் முன்மாதிரியாக அமைகிறார் என்பதை வீரமணி அவர்கள் மிகத் தெளிவாக நமக்குக் காட்டியுள்ளார்.  இதன்மூலம் சிங்கார வேலரின் ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவின் இடதுசாரி இயக்க வரலாற்றை எழுதுபவர்கள், வங்காளத்தை மையப்படுத்தி எழுதுவதைக் காண்கிறோம்.  வங்காளச் சீர்திருத்த இயக்கங்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்யும் இடதுசாரி அமைப்பைச் சார்ந்தவர்கள், பிற இடங்களில் செயல்பட்ட சீர்திருத்த இயக்கங்கள் குறித்த தகவல்களை அறிந்துள்ளார்களா என்பது அய்யம்.  இவ்வகையில், தமிழ்நாட்டில் செயல் பட்ட சுயமரியாதை இயக்கம் தொடர்பான தகவல் களையும் முறையாகப் பதிவு செய்வதில்லை.  தோழர் ப.ஜீவானந்தம் மற்றும் சாத்தன்குளம் அ.இராகவன் ஆகியோர் இணைந்து ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’ என்னும் அமைப்பை 1936 ஏப்ரல் மாதத்தில் உருவாக்கினார்.  இதற்கான அமைப்புக் கூட்டம் 13-4-1936இல் திருச்சி தென்னூரில் நடை பெற்றது.  சுயமரியாதை சமதர்மக் கட்சியின் நிலைப்பாடாகப் பின்கண்ட செய்தி பதிவாகி யுள்ளது.

“சுயமரியாதைக் கட்சிக்காரனுக்கு சுய அறிவு இல்லை.  நிரந்தரமான கொள்கை கிடையாது.  இராமசாமிப் “பெரியார் எது கூறினாலும் “ஆமாம் சாமி” என்று தலையை ஆட்டுவர்.  சர்க்காரைக் கண்டால் சரணம் சரணம் என்பர்.  போலீஸ்காரனைக் கண்டால் தொடை நடுங்குவர்.  தியாகம் அவனுக்கு வேப்பங்காய்.  அவன் சொல்லுக்கும் செயலுக்கும் வெகு தூரம்.  அதிகப் பிரசங்கித்தனத்தையன்றி ஆக்க வேலையை அறியான் என்றெல்லாம் பேசப்படுவதை அறிந்து தன்மீது அப்பழி சாற்ற இடங்கொடுக்கவிடாது மனித சமூகத் தொண்டு செய்ய சுயமரியாதை சமதர்மக் கட்சி முன்வந்துள்ளது. (மாலை : 1, மணி 7-8, அறிவு இதழ், 1936)

இவ்வகையில் சுயமரியாதைச் சமதர்மக் கட்சி ஒன்று தமிழ்ச் சூழலில் செயல்பட்டிருப்பதை அறிகிறோம்.  இதற்கு முன் 1933இல் ‘ஈரோட்டுத் திட்டம்’ என்று அழைக்கப்படும் கொள்கை அறிக்கை அடிப்படையில் சுயமரியாதை சமதர்மக் கட்சி வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.  (குடிஅரசு, 1.1.1933), 1929இல் முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தது.  1931-இல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் திறப்புரையை தோழர் சிங்காரவேலர் நிகழ்த்தி யுள்ளார்.  1933இல் சுயமரியாதை சமதர்மக் கட்சி ஈரோட்டில் உருவாக்கப்பட்டது.  1935இல் திருத்துறைப் பூண்டி சுயமரியாதை மாநாட்டில் பெரியார் - ஜீவா முரண்பாடு வெளிப்படையாக விவாதத்திற்கு வந்தது.  1936இல் ஜீவா தலைமையில் திருச்சியில் சுயமரியாதை சமதர்மக்கட்சி ஒன்று உருவாக்கப்பட்டது.

இவ்வகையில் 1925இல் பகுத்தறிவு இயக்கம் உருவான காலம் தொடங்கி 1936 வரை இடதுசாரி களுக்கும் பகுத்தறிவு இயக்கத்தினருக்குமான செயல் பாடுகள் என்பவை முரணும் சார்பும் கொண்டவை யாகவே அமைந்திருந்தன.  இக்காலங்களில் இடது சாரி இயக்கங்களில் தொடர்பு கொண்டிருந்த சிங்காரவேலர், அதே அளவிற்கு சுயமரியாதை இயக்கங்களோடும் தொடர்பு கொண்டு செயல் பட்டார்; சுயமரியாதை இயக்க இதழ்களில் எழுதினார்.  ஆனால், எந்தச் சூழலிலும் மேற் குறித்த சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து நேரடியாகச் செயல்பட்டதாகத் தகவல்கள் இல்லை.  மேலும், பெரியாரின் செயல்பாடுகளை விமரிசனம் செய்தும் இக்காலங்களில் எழுதியுள்ளார். 

சுய மரியாதை இயக்கத்தோடு பகை முரணாக அவர் செயல்படவில்லை.  இக்காரணத்தால் இடதுசாரி கட்சியினர், அவர் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிட்டார் என்ற தவறான தகவலை இடது சாரி கட்சி வெளியீட்டிலேயே பதிவு செய்யும் அளவிற்குச் சென்றுவிட்டனர்.  சிங்காரவேலர் குறித்து ஆங்கிலத்தில் சி.எஸ்.சுப்பிரமணியம் மற்றும் கே.முருகேசன் ஆகியோர் நூல் எழுதிய பின்பும் இவ்வகையில் பதிவு செய்திருப்பது இடதுசாரிகள் தமிழக வரலாற்றை எவ்வகையில் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத இத்தன்மை குறித்துப் புரிந்துகொள்வதற்கு அவர் களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.  இதனை வீரமணி, தர்க்கபூர்வ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.  இந்நூலில் இக்கட்டுரை மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக அமைகிறது.  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்டு) இத்தவறைத் திருத்திக் கொள்ளும் என்று நம்பலாம்.

‘தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் (1975)’ என்னும் தலைப்பில் தோழர் ம.சிங்காரவேலர் கட்டுரைகளைத் தொகுத்து கே.முருகேசன் அவர்களும் சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்களும் வெளியிட்டனர்.  அந்நூலில் (பக் - 6, 7) சிங்கார வேலர் எழுதிய குறிப்பு பின்வருமாறு அமைகிறது.

“மெய்ஞான அபிவிருத்தியால் உலக ஞானமும் தெளிவு அடைந்து வருகின்றது.  மக்கள் பகுத்தறிவும் விசாலப்பட்டு வருகிறது.  உள்ளது உள்ளபடி தெரிந்து நடக்கவும் மெய்ஞானத்தால் மிகவும் சாதகமாகும்.  நேர்மையான யோசனை புரிவதற்கும் ஸயன்ஸின் உதவி வேண்டியது மிக அவசியமாகும்” (புது உலகம் : மே, 1935)

பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் காலனி யத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன அறிவியல் தமிழ்ச் சமூகத்தின் பல தளங்களிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை உருவாக் கிற்று.  அறிவியல் நிகழ்வுகளை விநோதமாக இதழ்களில் எழுதினர்.  இந்து சுயாக்கியானிகள் என்னும் சுதந்திரச் சிந்தனையாளர்கள் நடத்திய ‘தத்துவ விவேசினி’ (1882-1888) இதழில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட தனிமங்கள் (Elements) குறித்து விரிவான கட்டுரைகளை வெளியிட்டனர்.  இக் காலங்களில் ‘ஜநவிநோதினி’ என்னும் இதழில் வெளிவந்த அறிவியல் தொடர்பான செய்திகள் பிற்காலத்தில் தொகுத்துப் பாடப் புத்தகமாக வெளியிட்டனர்.  இவ்வகையில் நவீன அறிவியல் செயல்பட்ட சூழலில் சிங்காரவேலர், நவீன அறிவியலை (Pure Science) சமூக அறிவியலில் (Social Science) எவ்வகையில் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு கட்டுரை களை எழுதினார். 

சிங்காரவேலரின் இத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.  டார்வின் கோட்பாடு போன்ற பலவற்றைச் சமூக அறிவியலில் எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்து சிங்காரவேலர் விரிவாக எழுதினார்.  சிங்காரவேலரின் இச்செயல்பாட்டை இந்நூலில் உள்ள ‘அறிவியல் தொண்டு’ என்னும் கட்டுரை விரிவாகப் பேசியிருப்பதைக் காண்கிறோம்.  சிங்காரவேலர் நவீன வளர்ச்சிகளை எவ்வகையில் உள்வாங்கினார் என்பதை வீரமணி சிறப்பாகவே பதிவு செய்துள்ளார்.  மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு சிங்காரவேலர் செயல்பாடு அடித்தளம் அமைத்த பாங்கை இதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்நூலில் தோழர் சக்லத்வாலா மற்றும் சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் தோழர் சிங்காரவேலரோடு ஒப்பிட்டு எழுதியுள்ள இரு கட்டுரைகளையும் குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகக் கருதலாம்.  இம்மூவருக்கும் இருந்த அடிப்படையான கோட்பாட்டுப் புரிதல், செயல்பாடுகளில் நேர்மை, உலக மற்றும் இந்திய அரசியலைப் புரிந்துகொண்ட முறைமைகள் ஆகிய பிற விவரணங்களை வீரமணி சிறப்பாகவே வெளிக்கொண்டு வந்துள்ளார்.  ‘தோழர் சக்லத் வாலா - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒரே இந்தியக் கம்யூனிஸ்டு’ (1975) என்னும் நூலைத் தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் உருவாக்கியுள்ளார். 

அந்நூலை வாசித்தவர்களுக்கு சக்லத் வாலாவை தோழர் சிங்காரவேலரோடு எப்படி இணைத்துப் பார்க்கலாம் என்ற புரிதல், வீரமணி அவர்களின் இந்நூலில் உள்ள ‘இருபெரும் நண்பர்கள்’ என்னும் கட்டுரையை வாசிக்கும்போது கிடைக்கிறது.  உலக கம்யூனிஸ்டு இயக்கத்தில் செயல்பட்ட ஒரு தலைவரைத் தமிழகத்தில் செயல்பட்ட ஒரு கம்யூனிஸ்டு தலைவர், இந்திய மக்களுக்கு எவ் வகையில் அறிமுகப்படுத்தினார் என்பதைப் புரிந்து கொள்ள வீரமணி அவர்களின் கட்டுரை உதவுகிறது.

அண்மையில் மறைந்த தோழர் (18-9-2011) சி.எஸ்.சுப்பிரமணியம் தனது நண்பர் கே.முருகேசன் அவர்களோடு இணைந்து தோழர் சிங்கார வேலரை ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் மூலம் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினர்.  ‘Singaravelu First Communist in South India’ (பி.பி.எச்.1975), ‘சிங்காரவேலு - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ (என்.சி.பி.எச். 1991) ஆகியவை அந்நூல்கள்.  சிங்காரவேலரை அறிமுகப்படுத்திய தோழர் சி.எஸ்.எஸ். அவர்கள், எவ்வகையில் சிங்காரவேலரைப் போல் வாழ்ந்தார் என்ற ஒப்பீட்டை வீரமணி அவர்களின் கட்டுரை மூலம் நாம் அறியமுடிகிறது. 

இவ்வகையில், இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரை, இடதுசாரி இயக்கத்தில் நீண்ட நெடுங்காலம் செயல்பட்ட தோழர் எவ்விதம் அணுகியுள்ளார் என்ற வரலாறு இடதுசாரி இயக்க வரலாறாகவே அமைகிறது.  வீரமணி அவர்கள், இடதுசாரி இயக்க வரலாற்றில் இவ்விரு மனிதர்களின் பங்களிப்பு எவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கவனப் படுத்தியுள்ளார்.  தமிழக - இந்திய இடதுசாரி இயக்க வரலாற்றில் ஆர்வம் உடையவர்களுக்கு, சி.எஸ்.எஸ். பற்றிய வீரமணி அவர்களின் கட்டுரை சிறந்த ஆவணமாக அமைகிறது.  இவ்வகையில் இந்திய இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்ட ஆளுமைகள் குறித்த பதிவாகவும் இந்நூல் உள்ளது.

“நமது நாட்டில் பாஷையைப் பற்றி ஒரு புராதன தப்பெண்ணம் இருந்து வருகிறது.  அதாவது பாஷையில் ஏதோ மகத்துவம் இருப்பதாகவும், பாஷை கடவுளால் ஏற்பட்ட தாகவும் சொற்களுக்கே ஒருவித நிவேதனம் (Sacredness) இருப்பதாகவும் இத்தியாதி மூட நம்பிக்கை நமது நாட்டிலுள்ள கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உண்டு.  தத்துவ ஞானத்திலும் இந்த மூடநம்பிக்கை உண்டு.  (இந்நூல்.ப.143)

மேற்குறித்தவை சிங்காரவேலரின் சொற்கள்.  மொழிஆசிரியர்கள் மேற்குறித்த மூடநம்பிக்கையில் ஆழ்ந்திருப்பதை சிங்காரவேலர் அம்பலப்படுத்தி யுள்ளார்.  ‘தமிழன்பர் மனத்தின் வறுமை’ என்று அவர் தமிழாசிரியர்களை அடையாளப்படுத்துவது மிகச் சரியே.  எவ்வித தர்க்கமும் இன்றி, மொழி மீது தமிழாசிரியர்கள் கொள்ளும் ஈடுபாடு குறித்த சிங்காரவேலரின் பதிவை, வீரமணி விரிவாகவே உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார்.  மொழி மீது உள்ள அபிமானம், சமூக இயங்கியலை எப்படிப் புரிந்துகொள்ள இயலாது தடுக்கிறது என்ற சிங்காரவேலரின் ஆதங்கம் நியாயமானது.  1933இல் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாடு குறித்து சிங்காரவேலர் மேல்குறித்த வகையில் செய்துள்ள விமர்சனம், இன்றும்கூட உயிர்ப்புடன் இருப்பதை வீரமணி அவர்களின் விளக்கம் உறுதிப் படுத்துகிறது.  இவ்வகையில், இத்தொகுப்பில் உள்ள ‘தமிழன்பர்களும் பிற்போக்கும்’ என்னும் கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

1980களுக்குப் பின் தமிழ்ச் சூழலில் தலித் இயக்கங்கள் வீரியத்தோடு செயல்படத் தொடங்கின.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை, பல்வேறு கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றன.  கோயில்களுக்குள் தலித்துக்கள் அனுமதிக்கப்படாதநிலை, கோயில் நுழைவுப் போராட்டங்களில் முதன்மையாகக் கவனத்தில் கொள்ளப்பட்டது.  இச்செயலைச் சிங்காரவேலர், வேறு கோணத்தில் அணுகியிருப்பதைக் காண முடிகிறது.  “கோயிலில் நுழைந்துவிடுவதோடு அமைதி கொள்ளாமல், மேல் சாதியினருக்கு என்னென்ன உரிமைகளும் வாய்ப்புகளும் பெற்றுள்ளனரோ அவற்றிலும் ஒடுக்கப்பட்டவர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும்” (இந்நூல்.ப.158) என்று அறிவுறுத்துகிறார். 

கோயிலில் நுழையவிடாமல் தடுக்கும் பண்பாட்டுக் கொடுமையோடு, ஒடுக்கப்பட்டிருக்கும் அவர்களது பொருளியல் தேவைகளையும் கவனத்தில் கொள்வது அவசியம் என்ற அவரது பார்வை வேறுபட்டதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.  தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை ஒழிப்பைப் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் அவர் அணுகியுள்ளார்.  இத் தன்மையை வீரமணி அவர்கள், இந்நூற் கட்டுரை வழி சிறப்பாக விவாதித்துள்ளார்.  சிங்காரவேலரின் பெரிதும் அறியப்படாத இப்பரிமாணத்தையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த சிங்கார வேலரின் பார்வை, இடதுசாரிகள் சிங்கார வேலரின் வாழ்க்கை வரலாற்றில் செய்துள்ள திரிபு, நவீன அறிவியலை சிங்காரவேலர் எதிர் கொண்ட முறைமை, இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்ட தோழர்களோடு சிங்காரவேலர் கொண்டிருந்த உறவு, தமிழாசிரியர்கள் மற்றும் தலித்துக்கள் குறித்த அவரது பார்வை ஆகிய பல்வேறு பொருண்மைகள் குறித்துப் புலவர் பா.வீரமணி அவர்களின் இந்நூல் விவாதிக்கிறது.  இவ்வகையான விவாதத்தின் மூலம் சிங்காரவேலர் என்னும் ஆளுமையின் பல்வேறு கருத்துநிலைகள் குறித்த விரிவான பரப்புரையை வீரமணி செய்து உள்ளார்.  தாம் வாழும் சமூகத்துக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பெருமக்கள் குறித்து, இவ்வகையான விரிவான உரையாடலை நிகழ்த்துவது நமது கடமைகளில் முதன்மையான ஒன்றாகும். 

வீரமணி அவர்களின் சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியத் தொகுதிகள் உருவாக்கம், அவர் குறித்த பல்வேறு நூல்கள் உருவாக்கம், தொடர் சொற் பொழிவுகள், அவரது உருவச்சிலை உருவாக்கம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் சிங்காரவேலர் பெயரில் அறக்கட்டளை உருவாக்கம் எனப் பலப்பல பரிமாணங்களில் சிங்காரவேலரை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்.  சிங்காரவேலர் சிந்தனைகள் உயிர்ப்புடன் வெகுசனங்களிடம் பல கூறுகளில் சென்றடைய வேண்டும் என்று உழைத்து வருகிறார்.  சிங்காரவேலர் சிந்தனைகளைப் பரப்புரை செய் வோரில் வீரமணி அவர்களுக்கு முதன்மையான பங்கு இருப்பதாகக் கருதுகிறேன்.  இவருடைய இச்செயல்பாட்டின் சிறந்த அடையாளமாக இந்நூல் அமைகிறது.