முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலப் புலவர்கள் தொட்டு இக்காலக் கவிஞர்கள் வரை வரிசைப்படுத்தினால் அந்த வரிசையில் ஒரு நிலையான நிரந்தரமான தனித்த இடத்தை நிலை நாட்டியவர் பன்முகத் திறமை வாய்ந்த கவிஞர் தங்கம் மூர்த்தி.

கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளில் கவிதைக்கான அனைத்து அம்சங்களையும் இவரது கவிதைத் தொகுப்பில் எளிதாகக் காண முடிகிறது. பல வகைப்பட்ட உணர்வுகளையும் தன் கவிதைகளில் இனிமையான தமிழ்ச் சொற்களால் அடுக்கி, படைப்புலகில் பட்டுக்கோட்டை காட்டிய பட்டுக்கோட்டையாரைப் போல் ஓர் எளிய, உறுதியான கவிதைக் கோட்டையை புதுக்கோட்டை மண்ணில் வாழ்ந்து கொண்டு அந்த மண்ணின் மனம் மாறாமல் கட்டமைத்து வருபவர் கவிஞர் தங்கம் மூர்த்தி. இவருடைய படைப்புகளில் தேவதைகளால் தேடப்படுபவன் மற்றும் முதலில் பூத்த ரோஜா என்னும் இரு கவிதைத் தொகுப்புகளின் நயங்களை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கவிஞரின் தோற்றமும் எழுச்சியும்

கவிஞர் தங்கம் மூர்த்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில் 19.8.1964 இல் பிறந்தார். இவரது பெற்றோர் டாக்டர் கே.கே.தங்கம் மற்றும் திருமதி ஜெயலட்சுமி ஆவார். இவர் ஆங்கில இலக்கியத்தில் ஓர் இளங்கலைப் பட்டமும் இரண்டு முதுகலைப் பட்டங்களும் பெற்றவர். அத்துடன் புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியை நிறுவி அப்பள்ளியின் சிறந்த முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் பெற்ற செல்வங்கள் நிவேதிதா மற்றும் திருமதி காவியா ஆகியோர் ஆவர்.

இவரது சிறப்பான ஆசிரியர் பணியைப் பாராட்டி தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, மத்திய அரசு தேசிய நல்லாசிரியர், கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ விருது, செல்வன் கார்க்கி விருது, சிறந்த சமூக சேவகர் விருது என பல விருதுகளும், பட்டங்களும் பெற்றுள்ளார். மதிப்புரு பணிகள் பல வகித்தும் சமூக நலப் பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.

முதலில் பூத்த ரோஜா 1994 என்னும் ஹைக்கூ நூல் தொடங்கி இதுவரை 12 நூல்கள் வெளியிட்டுள்ளார். இலக்கியத் துறையில் இன்று உலக அளவில் பேசப்படுகின்ற கவிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும் பவனி வருகிறார்.

தங்கம் மூர்த்தியின் பணிகளும் படைப்புகளும்

உன்னுடன் சேர்ந்து

நடக்க ஆரம்பித்த பிறகு தான்

சாலையோர மரங்களில் இருந்து

உதிரும் பூக்களின் மௌனத்திலும் நான்

இசை கேட்க ஆரம்பித்தேன்

என்று அறிவுமதி கூறியதைப் போல் கவிஞர் தங்கம் மூர்த்தியின் புதுக்கவிதைகளையும் துளிப் பாக்களையும் படிக்க ஆரம்பித்த பிறகு தான் நமக்கு நம்மைச் சுற்றிலும் மலர்ந்து இருக்கின்ற ஒரு புதிய உலகம் தெரியவரும். அது மட்டுமன்று,

சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் பார்க்கும் அரிது (குறள் - 647 )

என்னும் குறளுக்கு ஏற்ப சபையை கட்டிப்போட்டு தன் வார்த்தை வீச்சில் மயங்க வைக்கும் மாயக்கண்ணன் இவர். பார்வையாளர்களின் நோக்கும் போக்கும் இருப்பிட சூழலின் தன்மையை அறிந்து உரையாற்றக் கூடிய வெற்றிகரமான மேடைப் பேச்சாளர். இவர் தான் சொல்லப் போகும் கருத்துக்களை இடம், பொருள், காலம் அறிந்து தேர்ந்து பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். இவர் பின்பற்றும் மேடை நாகரிகம் அனைவரையும் கவரக்கூடியது. எந்த அரசியல் கலப்புமற்றது தனிமனித துதியோ வேஷமோ அற்றது. செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை நன்கு உணர்ந்தவர் என்பது அவரது நாவினிலும், நாபிக் கமலத்தினிலும் இருந்து பிறந்து வரும் அழுத்தம் திருத்தமான நுனி நாக்கு ஆங்கிலம்போல் அல்லாத தெளிவான உச்சரிப்புடன் கூடிய தமிழ்ச் சொற்களினால் அறியலாம். அழகுத் தமிழ் இவரிடம் பழகு தமிழ் ஆகி மிளிர்வதைக் கேட்டு ரசிக்கலாம்.

தாய்ப்பாலோடு தமிழுணர்வையும், மாந்திய மறத்தமிழனாய்க் கவியரங்க மேடையில் ஒலிவாங்கியை கைபிடித்துக் கவிஞர் கவி பாடுவதைக் கேட்கும் பொழுது அவரது குரல் பெரும் உவகை கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

தேவதைகளால் தேடப்படுபவன்

கவிதைக்கான கருப்பொருள் தெரிவுகள் தெளிவாக மொழிதல், தகுந்த சொற்களைத் தேர்ந்தெடுத்தல் போன்ற கவிதை பண்புகள் வெகு சிறப்பாக நூல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. கவிதை நடை இந்த கவிஞரைப் போலவே எளிமை மிகுந்திருக்கிறது. எளிய சொற்களைக் கையாண்ட விதமும் வெகு சிறப்பு. குழந்தைகள் கூத்தாடி கும்மாளம் இட்டு குதூகலித்து மகிழும் தருணங்களை கூடையாய் அள்ளித் தருபவை திருவிழாக்கள்தான்.

இதை நயமாக கவிதையில் பதிவு செய்வது கவிஞர்களுக்கு இயல்பு. ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழிகளைத் தேடிக்கொள்கிறான் என்பார் எஸ். ராமகிருஷ்ணன். ஆனால் இங்கே திருவிழாக்களும் குழந்தைகளும், கவிதையில் குழந்தைகள் திருவிழாக்களை வரவேற்று அழைத்து வருவதும் திருவிழாவின் கரங்களை துலாவுவதும் அவற்றை முத்தமிடுவதும் அழகிய கற்பனை. இவை கூடப் பரவாயில்லை திருவிழாக்களிடம் கோரிக்கை வைப்பதும் பிரிவு உபச்சாரம் அளிப்பதும் பின் அவை உறையும் இடமும் நம் கற்பனைக்கு எட்டா சிகரங்கள். ஆனால் குழந்தைகள் உலகின் எதார்த்தங்களான அவற்றை கவிஞர் மிக அழகாகப் பதிவு செய்கிறார்.

நாய்களைப் பற்றிய கவிதை அல்ல என்று ஒரு கவிதையைத் தொடங்கி; நாய்களைப் பற்றியே பேசும்பொழுது அங்கே மறைமுகமாக பாரதியின் சாயல் இவர் எண்ணத்திலும் புலப்படுகின்றதோ என்று தோன்றுகிறது.

வாலைக் குழைத்து வரும் நாய் தான்.

அது மனிதருக்குத் தோழனடி பாப்பா

                                             (பாரதியும் பாப்பா பாட்டும்)

என்று ஆனந்தக் கூத்தாடியவனே பாரதி.

இங்கு தங்கம் மூர்த்தியும் இயல்பான மனதினை உடையவனாக வர்ணித்திருக்கிறார். கோபம் கொள்ளாமல் தொந்தரவு தரும் நாய்களின் சத்தத்தில் பிறந்த கவிதையையும் வாசகனை ரசிக்க வைத்திருப்பது பெரும் வியப்பு.

இந்தக் கவிதை என்னும் நதியில் காதல் என்னும் மீன்களின் வரத்து குறைவாய் இருப்பினும் ஆங்காங்கே சில காதல் கவிதைகள் தங்க மீன்களாய் நீந்தி வருகின்றன.

"நிலவுகள் பூக்கும் பூமி”, ‘திறப்பு விழா’,

"நமக்கருகே மிதக்கும் வானம்”, கானகமும்

நீரோட்டத்தில் கலந்து இறுதி வரிகளிலே ஒரு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன.

"காலை மாலை உலாவி நிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டு கும்பிட்டால்

காலன் ஓடிப் போவானே (சுகாதாரக் கும்மி 27)

என்ற கவிமணி தேசிக விநாயகத்தின் வரிகளை நன்கு உணர்ந்தவர்கள் நாம், ஆனால் கடைப்பிடிக்க மாட்டோம். நடைப் பயிற்சிக்கு செல்லும்போது, நடைப்பயிற்சி எப்படி எல்லாம் நடக்கிறது என்ற நிஜங்களை கவிஞர் "நடைப்பயிற்சியும் சில நண்பர்களும்" கவிதையில் மிக அழகாக கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.

ஒரு மாபெரும் காப்பியத்தில் சிலம்பின் பரல்கள் சிதறியதால் எரிந்தது ஒரு நகரம். "ஒரு மாறுவேட போட்டியின் மறுபக்கத்தில்” என்ற கவிதையில் குழந்தைகளின் மகிழ்ச்சிகளும், ஏமாற்றங்களும் சிதறியதால் உடைந்து போகிறது. ஒரு கவி உள்ளம் அவரது உற்றுநோக்கல் திறனும் குழந்தைகள் மீது அவர் கொண்ட பரிவும் தெளிவாகத் தெரிகின்றன இங்கே.

அடுத்ததாக "பற...பற..." கவிதையில் குழந்தைக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவது மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குழந்தைக்கு ‘நெல்’ அறிமுகம் இல்லை என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டி இருக்கிறார். அடுத்த தலைமுறையினருக்கும் விவசாயத்திற்கும் ஆன தொலைவை இது காட்டுகிறது.

இப்படி ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு தளங்களில் மிகச்சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நூலின் சிறப்பு அம்மாவுக்கு என தொடங்கி பாட்டியிடம் முடிவடைந்து இருப்பது நடைமுறை வாழ்க்கையில் சொந்த பந்தங்களின் தேவையைச் சொல்லுவது போல் தோன்றுகிறது.

முதலில் பூத்த ரோஜா

பூக்களே பூக்காமல் இருக்கும் தோட்டத்தில் முதன் முதலாக ஒரு ரோஜா பூத்ததால் ஏற்படும் மன மகிழ்ச்சிக்கு அளவில்லை என்பதனை உணர்த்தும் வகையில் இவரது கவிதைகளில் வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும். மனிதர்களின் பல முகங்களை எழுத்தோவியமாக கவி நடையில் அனுபவிக்கத் தரும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர் என்றால் அது மிகையாகாது.

இமைக்கா இரவுகளின் தூங்கா நினைவுகள் தரும் பாடங்களை கவிதைகளாய் வடித்து நூலாய் வெளியிட்டுள்ளார். தனது ஹைக்கூ கவிதைகளை "மழையின் கையெழுத்து” - சைன் ஆஃப் ரெயின் என்ற ஆங்கில மொழியாக்க நூலாகவும் வெளியிட்டு உள்ளார். இவ்வாறு பல்வேறு வகையான கவிதைகளில் முதலில் பூத்த ரோஜா மேலும் சிறப்புக்குரியது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்வுகளை உள்வாங்கி அதன் வெளிப்பாடாக அமைந்துள்ளதுதான் இப்படைப்பு. ஒன்றைப் பற்றிக் கூர்ந்து நோக்கி ஆராய்ந்து அதுபற்றி தீர்க்கமாய் உணர்ந்து வெளிப்படுத்துவது தான் கவிஞன் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இன்னவைகள் நடக்கும், நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வகையிலும் வழிகாட்டுபவனாக கவிஞன் திகழ்கிறான் என்பதனையும் இவரது கவிதைகள் வழி உணர முடிகிறது.

சமூகத்திற்காக:

"கறுப்பு ஆட்சிக்கு வரும்

இன்று அந்தியிலும்

நாளை ஆப்பிரிக்காவிலும்..."

                (முதலில் பூத்த ரோஜா - ப எண் - 4)

இந்தக் கவிதையில் கவிஞரின் ஞான வெளிப்பாட்டை பிரவேசிப்பவை எனலாம். அப்பிரவேசம் பலரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன. இக்கவிதையின் மூலம் காலத்தை வென்ற கவிஞன் எனவும் முன்கூட்டியே உணர்ந்து ஆற்றல் கொண்டு அமைந்த கவிதைகள் எனலாம்.

இவரது கவிதைகளில் இந்திய தேசம் இன்னும் மறுமலர்ச்சி பெறவில்லை என்பதனை உணர்த்தும் வகையிலும், இந்திய மக்கள் வளமான வாழ்வு பெற வேண்டும் என்று எதிர்பார்ப்புகளுடனே கவிதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சமுதாய அவலங்களையும், குடும்ப பாங்கினையும், காதலையும் மிக நளினத்தோடும், நயம்படவும் உரைக்கின்ற பாங்கு கவிஞருக்கு கைவந்த கலையாகக் காட்சியளிக்கின்றன.

பாசத்திற்காக:

"அப்பாவுக்கு பத்தாயிரம்

அம்மாவுக்கு பத்து பவுன்

எனக்குக் கல்யாணம்"

               (முதலில் பூத்த ரோஜா- ப.எண் 25)

என்ற கவிதையில் வரதட்சணை என்ற பெயரில் பெரியவர்கள் பேரம் பேசும் கொடுமைகளை தோலுரித்துக் காட்டுகின்றன.

"விளம்பரம் இல்லாமல்

விற்றுப் போயின

எல்லா வேலைகளும்"

(முதலில் பூத்த ரோஜா- ப.எண் 29)

என்ற கவிதையில் இன்றைய அரசியல் அதிகார வர்க்கத்தில் சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறைகளை வெளிப்படுத்துகிறார்.

"கொசுக்களின் தாலாட்டில்

குழந்தையின் உறக்கம்

பிளாட்பார்ம் “

(முதலில் பூத்த ரோஜா- ப.எண் 40)

என்ற கவிதையில் சமுதாயத்தில் ஏழைகள் எவ்வாறு துன்பப்படுகிறார்கள் என்பதைக் கூறியுள்ளார்.

இவ்வாறும்

"விழிகளில் ஊதி

தூசி எடுத்தாய்

தூசி வெளியேற உள்ளே நீ"

(முதலில் பூத்த ரோஜா- ப.எண் 20)

இக்கவிதையின் வாயிலாக காதல் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்.

”பட்டிமன்றம் முடிந்து

 தாமதமாய் வீடு வந்தேன்

வீட்டில் வழக்காடு மன்றம்”

               ( முதலில் பூத்த ரோஜா- ப.எண் 31)

இக்கவிதையில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மையமிட்டுக் காட்டப்படுகின்றன. இவ்வாறு இத்தலைப்பில் இடம்பெற்றுள்ள எல்லா கவிதைகளும் முதன்மை வாய்ந்தவை.

முடிவுரை

கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய ஓசை சந்தத்துடன் கூடிய ஒத்திசை பண்புச் சொற்களால் சேர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம். -  க.ப. அறவாணன்

புதுக்கவிதை என்று இன்று வழங்கப்படுவது தொடக்ககாலத்திலிருந்து பலராலும் பலபெயர்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. புதுக்கவிதைகளை உரைப்பா, உரைவிடுபா, உரைக்கவிதை, வசனக்கவிதை, அலகு செய்யுள், கட்டற்ற கவிதை, நவ கவிதை, யாப்பு மீறிய கவிதை என பல பெயர்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

முனைவர் மா.கோவிந்தராசு - புதுக்கவிதை கட்டமைப்பு - முதல் பதிப்பு - நவம்பர் 2011

கவிஞன் படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கு ஒப்பானவன். காலம் வலிமை மிக்கது. அந்தக் காலத்தை வென்றெடுக்கும் சக்தி மனிதனிடம் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தமிழகத்தில் கவிதையுலகில் பாரதி தொடங்கி வைத்த மறுமலர்ச்சிப் பாதையில் புதுக்கவிதை செல்கிறது. (கவிமழை - 2005)

மேற்காணும் கவியாளுமைகளின் நீட்சியாகவும், அவர்களின் கவிதை குறித்த மையப் பொருள் சார்ந்தும் கவிதை சிறகுகளைப் பரப்பும் கவிஞராக கவிஞர் தங்கம் மூர்த்தி விளங்குகிறார். மிகுந்த அறிவாற்றலும், செறிவார்ந்த தமிழுணர்வும் சமூக நலனில் அக்கறையும் கொண்ட கவிஞரைத் தென்னாடும், தென் மொழியும், தென்னர் பண்பும் அறிந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது மிக அவசியம்.

மேற்கோள் நூல்கள்

1. கவிதை பயிற்றுமுறை - டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் - செப்டம்பர் - 1983

2. கவிதை இயல் - க. பூரணச் சந்திரன் - 2008

3. இனிய நந்தவனம் மாத இதழ் மார்ச் 2017.

4. தேவதைகளால் தேடப்படுபவன் - கவிஞர் தங்கம் மூர்த்தி - டிசம்பர் 2017

5. முதலில் பூத்த ரோஜா - கவிஞர் தங்கம் மூர்த்தி.

6. சுகாதாரக் கும்மி - கவிமணி 7 - மலரும் மாலையும் - 1938

7. முனைவர் மா.கோவிந்தராசு - புதுக்கவிதை கட்டமைப்பு முதல் பதிப்பு, நவம்பர் - 2011

8. கவிதை கிழக்கும் மேற்கும் - க.ப. அறவாணன் (1975)

- க.உஷா நந்தினி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி (தன்னாட்சி) பூண்டி.