art godகேரள நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் தாருகன் கதையை கேரள மண்ணுக்கே உரிய தொன்மமாகக் கொள்ளுகின்றனர். மார்க்கண்டேய புராணத்தில் வரும் இந்தக் கதை கேரளக் கலைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் என எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

தாருகன் கதையின் பல்வேறு வடிவங்களும் கூறுகளும் கேரள வழிபாட்டு மரபில் தொன்மமாக உருப்பெற்று கலந்திருக்கிறது. இக்கதை தமிழ்ப்பரப்பிலும் மரபிலும் புகுந்த காலத்திலேயே கேரளத்திலும் பரவியிருக்க வேண்டும். கேரள வைதீகத்துடன் இக்கதை தீவிரமாய் இணைக்கப்பட்டது பிற்காலத்தில் என்ற ஒரு கருத்து உண்டு.

தாருகன் கதை எனப்படும் பொதுவான கதை பின்வருமாறு:

தாருமதியின் மகன் தாருகன். மனைவி மனோதரி. பிரம்மாவிடம் பெரும் வரம் பெற்றவன். தேவர்களைத் துன்புறுத்தினான். நாரதர் சிவனிடம் முறையிட்டார். சிவன் தாருகனைக் கொல்ல சப்த கன்னியரை அனுப்பினான். அவர்கள் தாருகனிடம் தோற்றனர். சிவன் கோபத்தால் கண்களைத் திறந்தான். அவனது கழுத்து விஷம், கண்கள் வழி வெளிப்பட்டது. அதிலிருந்து கரிய தேவி பிறந்தாள்.

பத்திரகாளி என்னும் அந்தப் பயங்கரிக்கு ஆயுதங்கள் கொடுத்தான் சிவன்; வேதாளை என்னும் வாகனத்தைக் கொடுத்தான். காளி தாருகனுடன் போரிட்டாள். அவளது ரத்தத்திலிருந்து புதிய தாருகன் முளைத்தான். காளி தன் உடலிலிருந்து கொடிய மிருகம் ஒன்றைப் பிறப்பித்தாள்.அது தாருகனின் ரத்தத்தை நக்கிக் குடித்துவிட்டது.

காளி தன் உருவத்தை கோரமாகக் காட்டினாள். அவனைப் பிடித்து மடியில் கிடத்தினாள். அவன் தலைகளைக் கிள்ளினாள், அவன் முக்தி அடைந்தான்.

கேரள வாய்மொழி மரபிலும் தோற்றப்பாட்டுகளிலும் கண்ணகி தொடர்பான வழக்காறுகள் உள்ளன. இவற்றில் தாருகன். பாண்டியன் ஒப்பீடு தொன்மமாக உள்ளன. ஒரு வகையில் இது திரிபுகளுடன் கூடிய சிலப்பதிகாரக் கதையின் பாதிப்புள்ள தாருகதை; பாண்டியன் பற்றிய செய்திகளும் அப்படியே. பாண்டியனிடம் உள்ள வெறுப்பு தாருகனுடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தாருகன் கதை நாட்டார் பெண் தெய்வங்களுடன் குறிப்பாகத் தென் தமிழகக் கோவில்களுடன் தொடர்புடையதாக உள்ளது. பெண் தெய்வங்களில் சில தாருகனை வதைத்தவளாகப் புனையப்பட்டுள்ளன.

முத்தாரம்மன், முத்தாலம்மன், சந்தனமாரி எனச் சில உதாரணங்கள். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் விழாவில் அம்மன் தாருகனை வதைத்த நிகழ்ச்சி நாடகத் தன்மையுடன் நிகழ்கிறது. கேரளத்தில் தாருகனுடன் கண்ணகி தொடர்புபடுத்துவது போல தமிழகத்தில் இல்லை.

தாருகன் கதை அல்லது பத்திரகாளி விஜயம் என்ற கதை கேரள நிகழ்த்துக் கலைகள் பலவற்றின் பாடுபொருளாகவும் தொன்மமாகவும் உள்ளது. நீண்டு கிடக்கும் கேரளத்தின் தாய்த் தெய்வ வழிபாட்டின் அம்சங்களில் தாருகன் கதை முக்கியமானது. கேரளக் காவுகளின் வரலாற்றிலிருந்து கூட தாருகன் கதையை அப்புறப்படுத்த முடியவில்லை. (G.Sankara Pillai 1986 P. 32)

வட கேரளத்தில் உள்ள தெய்யம், தோற்றப்பாட்டு முடியேற்று மத்திய கேரளத்தில் உள்ள பதாயினி, காளியூட்டு, தென்கேரளத்தில் உள்ள முடிப்புரை, களமெழுத்தும் பாட்டும் போன்ற கலை நிகழ்வுகளிலும் சடங்குகளிலும் தாருகன் கதையின் பாதிப்பு உண்டு. கேரள கிராமத்துக் கோவில்களின் வழிபாட்டுக் கூறுகளிலும் விழாச் சடங்குகளிலும் இந்தத் தொன்மம் ஏதோ ஒருவகையில் கலந்துள்ளது.

கேரளத்தாருகன் கதை வைதீகச் சார்புடையதாகவே அடையாளம் காணப்பட்டாலும் நாட்டார் தெய்வ விழாச் சடங்குகளிலும் நிகழ்த்துக் கலைகளிலும் நாடகப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் கேரளப் பழங்குடிகளுடனும் இத் தொன்மம் தொடர்புடையது.

கொடுங்கல்லூர் புலையர் சாதியினர் வாழும் இடங்களை அடுத்த வயல் வெளிகளில் தாருகனை வென்றபின் காளி குடியிருந்தாள் என்று ஒரு கதை இப்போதும் வழங்குகிறது.

கேரளக் காட்டுமன்னான் சாதியினரிடம் அவர்கள் தாருகனின் வம்சாவழியினர் என்ற கதையுண்டு. இந்தச் சாதியினரிடம் தாருகன் மரியாதையுடன் நினைக்கப்படுகிறான். இவன் இவர்களின் தலைவனாக இவர்களுக்காகப் போர் செய்தவனாகப் பேசப்படும் தொன்மக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பழம் தமிழ் அரசர்களுக்கும் பழங்குடி மக்களின் அரசனுக்கும் நிகழ்ந்த போரே தாருகன் கதையாகவும் இருக்கலாம். தோற்றப் பாட்டில் தாருகன் கேரள மன்னனின் மைந்தன் என்ற தொனி இழையோடுகிறது. (கி.ராஜசேகரன் நாயர், 1948 ப.12, 19)

திருவிதாங்கூரில் காளி அல்லது பத்திரகாளி கோவில் விழாக்களில் களம் எழுத்தும் பாட்டும் என்ற நாட்டார் கலை நடக்கிறது. ஒருவகையில் இது வழிபாட்டுச் சடங்கும் கூட. இந்த நிகழ்வில் தாருகன் கதை பாடப்படுகிறது. களமெழுத்தும் பாட்டும் என்னும் கலைக்குரிய ஓவியம் வரைந்து முடிந்ததும் தோடயம் (வாழ்த்து) பாடுவர். இதில் கணபதி முதலாக பலவகைத் தெய்வங்களும் வாழ்த்தப்படும். இந்த வாழ்த்தில் நாட்டார் தன்மை உண்டு.

தோடயம் பாடி முடிந்ததும் தாருகன் வதையைப் பாடுவர். இதற்குப் பின்னணியாக நந்துன்னி என்னும் கருவியை இசைப்பர். கூடவே திமிலை, வீக்கு செண்டை இலைத்தாளம், சேங்கிலை, சங்கு திமிலை, சேகண்டி, முழவு ஆகிய
பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்படும். தாருகனைப் பற்றிய பாடல் வரிகள் ஒரே ஓசையுடனே இருக்கும் இது தமிழும் மலையாளமும் கலந்து வருவது.

இந்தப் பாடலில் தாருகன் பூர்வீகக் குடிகளுக்குரிய கடவுள் என்னும் தொனி இழையோடுகிறது. நான் தாருகன் வதை முழுப்பாடலையும் இடக்கோடு மாதவன் பிள்ளையிடமிருந்து பதிவு செய்தேன்.

வடமலபாரில் சில இடங்களில் பகவதி அல்லது துர்க்கைக் கோவிலில் நாககாளி, கண்டகர்ணன், மாரியம்மன் என சில துணைத் தெய்வங்கள் உள்ளன. இங்கும் தோற்றப்பாட்டு பாடப்படுகிறது. இது தென் கேரளத் தோற்றப்பாட்டிலிருந்து வேறுபட்டது.

காளியின் கோபத்தைத் தீர்க்கவே தாருகன் வதை செய்யப்படுகிறான் என்ற செய்தி வடகேரளத் தோற்றப் பாட்டில் வருகிறது. அதோடு சிலப்பதிகாரக் கதையின் ஒரு பகுதியும் தோற்றப்பாட்டில் வருகிறது. (இராமச்சந்திரன் 2012, ப. 35) 

தாருகன் சிவனிடம் தவமிருந்து வரங்கள் பெறுகிறான். பின்னர் சிவனின் மேல் முத்தை எறிந்தான். அதனால் கண்டகர்ணன் பிறக்கிறான். சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்கிறான். அதில் பத்திரகாளி பிறக்கிறாள். இவள் தாருகனை அழிக்கிறாள். இந்தப் பொதுவான கதையில் வட்டார ரீதியான மாறுபாடு உண்டு. இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது என்று தெரியவில்லை.

தாருகன் கதையுடன் தொடர்புடைய வட்டார ரீதியான தொன்மத்துடன் சிலப்பதிகாரக் கதையை இணைக்கும் முயற்சி - இயல்பாக நடந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது என்று தெரியவில்லை. மொத்தத்தில் பார்த்தால் தாருகன் கதையில் மூன்று கூறுகள் உள்ளன.

1. ஏற்கெனவே இருந்த பழங்குடியினருக்குரிய வடிவம்
2. வைதீகத் தொடர்பால் ஏற்பட்ட மாற்று வடிவம்
3. சிலப்பதிகாரக் கதை இணைக்கப்பட்ட வடிவம்.

ஆகியன.

இளங்கோவடிகள் காலத்தில் தாருகன் கதை வழக்கில் இருந்தது. கண்ணகி நீதி கேட்க பாண்டியனைச் சந்திக்கப் போகிறாள். காவலன் கண்ணகியின் வரவைப் பாண்டியனிடம் அறிவிக்கும்போது,

அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலை பீடம் ஏறிய மடக் கொடி
வெற்றிவேல் தடக்கை கொற்றவை அல்லள்
அறுவர்க்கு இளைய நங்கை சூர்உடைக்
காளகம் உகந்த காளி, தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தானே
என்கிறான் (வழக்குரை காதை - 33-34)

இங்குக் கண்ணகி அடர்த்து எழும் குருதிக் கறை நீங்காத பசுமையான முண்டமான பிடர்த்தலை ஏறியிருந்த இளங்கொடியாகிய வெற்றிவேலைக் கொண்டிருக்கும் கொற்றவை சப்தகன்னியர் ஏழு பேரில் இளையவனான பிடாரி இறைவனை நடனமாடக் கண்டு அருளிய பத்ரகாளி, காண்பவர் அஞ்சும்படி இருக்கும் காளி தாருகனின் அகன்ற மார்பைப் பிளந்த பெண் ஆகியோரைப் போல் இல்லை.

இப்பகுதியில் தாருகனின் மார்பைப் பிளந்த கொற்றவை எனப் பெருமழைப் புலவர் பொருள் கொள்ளுகிறார். (வஞ்சிக்காண்டம் 1975, ப.264) வாயிற் காவலன் கண்ணகிக்கு உவமையாகக் கூறி அல்லள் எனக் குறிப்பிடும் பெயர்கள், கேரளக் கண்ணகி தொடர்பான வழக்காறுகளில் பல்வேறு வடிவங்களில் நுழைந்திருக்கின்றன.

தென் கேரள களமெழுத்தும் பாட்டும் கலை நிகழ்வில் பாடப்படும் தாருகன் வதைக் கதையில் தட்சனின் மகள் தாட்சாயணி விரிவாக வருணிக்கப்படுகிறாள். ஒரு இடத்தில் தாட்சாயணியைக் கண்ணகி என்னும் சூட்சகமாகக் குறிப்பதைக் கேட்கலாம்.

இந்த வர்ணனையைச் சற்று ஆழமாகப் பார்ப்போம். காளி பாண்டியனின் மகள். தாட்சாயணி தட்சனின் மகள். காளி (கண்ணகி) கோவலனை மணக்கிறாள். தாட்சாயணி சிவனை மணக்கிறாள். கண்ணகி தன் தந்தை பாண்டியனைக் கொல்லுகிறாள் அல்லது இறப்பிற்குக் காரணமாகிறாள். இப்படியாகக் கண்ணகி காளியின் நிலைக்கு உயர்த்தப்படுகிறாள்.

வடகேரளத் தோற்றப் பாட்டில் தாருகன் கதையும் கண்ணகி கதையும் ஒப்பிடப்படுகிறது. தாருகனைப் பாண்டியனாகவும் கண்ணகியைக் காளியாகவும் கூறும் மரபு உள்ளது. காளி தாருகனின் தலையைச் சிவனிடம் கொடுக்கிறாள். கண்ணகி பாண்டியன் தலை தரையில் விழக் காரணமாகிறாள்.

உடனேயே பாண்டியன் தலையுடன் கைலாயம் செல்லுகிறாள். அங்கே இருக்கும் தாருகனின் தலை அருகே பாண்டியன் தலையை வைக்கிறாள். இது இந்தக் கதைகளின் சாராம்சம். ஸ்ரீகுறும்பாப் பாடல் பாண்டியனைத் தாருகனின் உறவினன் எனக் கூறும்.

தமிழகத்தில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களின் தாக்கம் ஆரம்ப காலத்திலேயே இருந்தது. கலை, பண்பாட்டு ரீதியான இவற்றின் தாக்கம் இருப்பதை தமிழகத்தில் இன்றும் இருப்பதைக் காணலாம். கேரளத்தின் நிலை வேறு, பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது; மொழி பண்பாடு எனப் பிரிந்தாலும் கேரளத்தில் இன்றும் பழைய எச்சத்தைத் தேடமுடியும்.

மொத்தக் கேரள வழிபாட்டில் தாய்த் தெய்வ வழிபாடு முனைப்புடன் நிற்கிறது (Achutha menon 1943 P.26). ஒருமுறை காளி சிவனிடம் நான் பூத உலகில் குடியேற வேண்டிய இடம் எது என்று கேட்டபோது சிவன் மலைநாடு என்றானாம். இது ஒரு வழக்காறு. தென்கேரளத் தாருகன் கதையில் இச்செய்தி உள்ளது. இந்தப் பண்பாடு கண்ணகி வழிபாட்டை இங்கு இணைக்க ஏதுவாயிற்று.

கேரளத் தாய்த்தெய்வங்களின் மொத்தச் செய்திகளில் பழம் தமிழகத்தின் கொற்றவை வியர்த்து இருக்கின்றாள். சங்க காலக் கொற்றவை கேரளத்தில் பரவலாக வழிபாடு பெற்ற காலத்திலேயே கண்ணகி வழிபாடு அறிமுகமாகிவிட்டது.

கொற்றவையும் கண்ணகியும் இணைவதற்குரிய சூழ்நிலை இருந்தது. தொன்மங்களும் இருந்தன. வைதீகத்தின் ஊடுருவலுக்குப் பின் கண்ணகியின் வடிவம் மாற்றம் அடைந்தது.

கேரளத்தில் கண்ணகி கொற்றவையுடன் இணைந்த காலத்தில் சிலப்பதிகார மூலக்கதை பல்வேறு திரிபுகளுடன் வட்டார ரீதியாக மாற ஆரம்பித்தது. 15ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இது நடந்திருக்கலாம்.

கேரளத்தில் வைதீகம் ஆதிக்க தீவிரமான பின் சிலப்பதிகாரக் கதையின் பல பகுதிகள் வட்டார ரீதியான வடிவங்களுடன் மாற்றம் அடைந்தன. இக்காலத்தில் கண்ணகி வழிபாட்டுடன் மழை வேண்டுதல், பஞ்சம், வெப்புநோய் பரவுதலைத் தடுத்தல் போன்றவற்றுடன் இணைக்கப்பட்ட நம்பிக்கை ஆழமாக இருந்தன.

கேரளக் குறவர்களே கண்ணகியை முதலில் மலையில் கண்டனர். அவர்களே கண்ணகியை முதலில் வழிபட்டனர். ஆரம்பத்தில் கண்ணகிக்கு உயிர்ப்பலி கொடுத்தனர். தமிழகத்தில் கூட சென்னை திருவெற்றியூர் கோவிலில் (வட்டபுரியம்மன்) உயிர்ப்பலி நடந்திருக்கிறது.

கேரளத்தில் இப்போது வழிபாடு பெறும் பகவதி கோவில்களில் பல கண்ணகி கோவில்களாக இருந்தவை. கொடுங்கல்லூர் தோற்றப்பாட்டும் நல்லம்மை தோற்றப்பாட்டும் ஏறத்தாழ கண்ணகி கதையின் பின்னணியில் அமைந்தவை என்று கூறலாம்.

பாண்டியனிடம் நீதி கேட்கச் செல்லும் வெறிகொண்ட கண்ணகியின் வடிவத்தை, கேரளக் கண்ணகி கோவில்களின் ‘வெளிச்சப்பாடு’விடம் (சாமியாடி) காணமுடியும். ஒற்றைச் சிலம்பைக் கையிலேந்தி தலைமயிரை விரித்துப் போட்டுக் கொண்டு உடம்பில் ரத்தம் வழிய அருள்வாக்கு கூறுவது பழையதன் பிரதிபலிப்பே.

ஆரம்பகாலச் சேரர்கள் கண்ணகிக்காக நட்ட மாசதிக்கல் இன்றும் மறையவில்லை. கேரளத்து ஸ்ரீகுறும்பா, பத்திரகாளி, நல்லம்மா. மணிமங்கா, மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களைத் தொழுவதற்காகப் பாடப்பட்ட பாடல்களில் கண்ணகி புராணம் கலந்துள்ளது என்கிறார் கே.கே.என். குரூப். (ராமச்சந்திரன் ப.ஆ. 2011, ப.28).

மலபார் வரலாற்றை எழுதிய லோகனும், “பழம் கொற்றவையே காளி அல்லது துர்க்கை என்பதில் சந்தேகமில்லை; இவற்றில் கண்ணகி வழிபாட்டின் சாயல் உண்டு. வடகேரளத்துச் சீர்மக்காவு கோவில்கள் கண்ணகிக்கே உரியவை” என்கிறார். (Malabar Manual Vol. P. 162)

மேற்கோள் நூல்கள்

1) இராமச்சந்திரன் நா. (2011) பொத்தான் தெய்வம், என்.சி.பி.எச். சென்னை.
2) Achutha Menon 1943 kali worship in Kerala Vol. I - Madras.
3) Sankara Pillai G. (1986) The Theatre of the Earth in never dead Traditional and professional School of Drama University of Calicut, Calicut.
4) சோமசுந்தரனார் (1977) சிலப்பதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

- அ.கா.பெருமாள்