uvesi

உ.வே.சா. நினைவுகள் - 17

[கும்பகோணம் கல்லூரி, சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணியேற்றபோது முதல்வராக இருந்த ராவ்பகதூர் டி. கோபால்ராவ்; இப்படங்கள் இரண்டும் சாமிநாதையரின் என் சரித்திரம் முதல் (1950) பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டது]

உ.வே.சாமிநாதையரின் 87 ஆண்டுகால வாழ்க்கையில் கும்பகோண வாழ்க்கை காலம் 23 ஆண்டுகள். இந்தக் காலம் முழுவதும் கல்லூரிப் பணியின் பொருட்டு அமைந்ததாகும். கல்லூரிப் பணிக்கு முன்பாகச் சிலநேரம் தந்தையுடனும், சிலநேரம் தமது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடனும் கும்பகோணத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்; சிலகாலம் தங்கியுமிருந்திருக்கிறார்.

திருவாவடுதுறை மடத்திலிருந்த காலங்களில் ஆதீனகர்த்தர்களுடன் பலமுறை கும்பகோணத்திற்குச் சென்று வந்திருக்கிறார். சிலநேரம் சுவடி தேடவும், அறிஞர்களைக் கண்டுவரவும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். சாமிநாதையர் சென்னைக்கு வந்து குடியேறிய பின்பும், மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் பலமுறை கும்பகோணத்திற்குச் சென்று வந்திருக்கிறார்.

சாமிநாதையருக்கு அடையாளத்தைத் தந்த ஊர்களுள் மூன்று ஊர்கள் முக்கியமானவையாகும். ஒன்று பிறப்பைத் தந்த உத்தமதானபுரம்;இரண்டாவது வளத்தைத் தந்த கும்பகோணம்; மூன்றாவது புகழைத் தந்த சென்னை. பிறந்த ஊருக்கு அடுத்த நிலையில் கும்பகோணம் சாமிநாதையரின் மனதில் எப்போதும் தனித்து இடம் பெற்றிருந்திருக்கிறது.

தமது தமிழ்ப் பணியின் சிறந்த காலப்பகுதியாக இருந்த ஊர்களைப் பற்றி எழுதும்போது கும்பகோணத்தை முன்னே வைத்தும், சென்னையைப் பின்னே வைத்தும் எழுதும் வழக்கம் சாமிநாதையரிடம் எப்போதும் இருந்திருக்கிறது.

1936ஆம் ஆண்டு வெளிவந்த ‘மாணாக்கர் விளையாட்டுக்கள்’ (கலைமகள், தொகுதி 10, பகுதி 55 - 60) என்ற கட்டுரையில் கும்பகோணம் குறித்து எழுதிய குறிப்பொன்று இங்கு நோக்கத்தக்கதாகும்.

1880-ஆம் வருஷத்தில் கும்பகோணம் காலேஜில் வேலையில் நியமிக்கப்பெற்று அது முதல் 1903-ஆம் வருஷம் வரையில் அவ்விடத்திலும், அப்பால் 1919-ஆம் வருஷம் வரையில் சென்னை, பிரஸிடென்ஸி காலேஜிலும் வேலை பார்த்து வந்தேன். ஏறக்குறைய 40 வருஷகாலம் கலாசாலை உபாத்தியாயராக இருந்துவரும்நிலை இறைவனருளால் எனக்கு ஏற்பட்டது.

கும்பகோணம் வருவதற்கு முன்பு நான் திருவாவடுதுறை மடத்தில் படித்துக்கொண்டும் பாடஞ்சொல்லிக் கொண்டும் இருந்தேன்; பிரஸிடென்ஸிலிருந்து விலகியபின்பும் சிதம்பரம் ஸ்ரீமீனாட்சி தமிழ்க் காலேஜில் பாடஞ் சொல்லியதுண்டு.

ஆயினும் கும்பகோணத்திலும் சென்னையிலும் இருந்த காலமே என்னுடைய தமிழ்ப்பணியில் ஒரு சிறந்த பகுதியாக அமைந்தது (மாணாக்கர் விளையாட்டுக்கள், கலைமகள், தொகுதி 10, பகுதி 55 - 60, 1936, நல்லுரைக்கோவை, பாகம். 3, 1938).

சாமிநாதையரின் பெரும்புகழிற்குப் பின்னாலுள்ள பேருழைப்பிற்கெல்லாம் பெருந்துணையாக இருந்த ஊர் கும்பகோணமாகும். சாமிநாதையர் 1931ஆம் ஆண்டில் ஒருமுறை கும்பகோணம் கல்லூரிக்குச் சென்று ‘குடந்தையின் பெருமை’ என்ற தலைப்பில் சொற்பொழிவொன்றை ஆற்றியுள்ளார். இச்சொற்பொழிவு பின்னாளில் ‘கும்பகோணம்’ என்ற தலைப்பில் கட்டுரையாக வெளிவந்திருக்கிறது. அதில் கும்பகோணத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டு எழுதியிருப்பார் சாமிநாதையர்.

சோழ நாட்டில் ஒரு பெரிய நகரமாக விளங்கும் கும்பகோணம் பல ஆலயங்களைத் தன்னிடத்தே கொண்டு அதனாற் சிறப்புப் பெற்ற சிறந்த ஸ்தலமாகும். கும்பகோணம் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் ‘குடமூக்கு’ என்று கூறப்படும். அது குடந்தை எனவும் திருக்குடந்தை எனவும் மருவி வழங்குகின்றது...

சிறந்த ஸ்தலம், நதிதீரம், கலைக்கு இருப்பிடம், பெரியவர்கள் வாழ்ந்த இடம், நாகரிகத்திற் சிறந்த ஊர் என்று பலபடியாகப் பாராட்டுதற்குரிய பெருமைகள் கும்பகோணத்திற்கு இருக்கின்றன... கும்பகோணம் காலேஜ் கல்வித் திறத்தில் தென்னிந்தியக் கேம்பிரிட்ஜ் என்ற புகழ்பெற்றது. இங்கிருந்த பேராசிரியர்கள் யாவரும் சிறந்த அறிவாளிகளாகவும் மாணாக்கர்களுக்குக் கல்வி புகட்டும் ஆற்றல் மிக்கவர்களாகவும் விளங்கினார்கள் (கும்பகோணம், நினைவு மஞ்சரி, 2, 1942).

சாமிநாதையர் இவ்வாறு பல சொற்பொழிவுகளைக் கும்பகோணத்தில் ஆற்றியிருக்கிறார். அவற்றுள் 1929ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைபெற்ற திருப்பனந்தாள் ஆயிரரூபாய்ப் பரிசளிப்பு விழாக் கூட்டத்தில் தலைமை வகித்து ஆற்றிய ‘சில ஊர்களைப் பற்றிய குறிப்புகள்’ (திருப்பனந்தாள், திருவேட்டீசுவரன் பேட்டை, வேலூர், திருச்சிராப்பள்ளி) என்ற சொற்பொழிவும், அதே ஆண்டில், அதே போர்ட்டர் டவுன் ஹாலில் ‘குமரகுருபரர்’என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவும் முக்கியமான சொற்பொழிவுகளாகும்.

1925, ஜூன், 8ஆம் நாளன்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 24ஆம் ஆண்டு ஆண்டுவிழா நடைபெற்றது. சர் சி. பி. இராமசாமி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் சாமிநாதையரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில்
ரூ. 5000/- பொற்கிழி அளித்துச் சிறப்பிக்கப்பட்டது.

இந்த விழாவில், சாமிநாதையருக்குக் கும்பகோணம் காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் ‘தாஷிணாத்ய கலாநிதி’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். பாராட்டுப் பட்டயத்துடன் இரட்டைச் சால்வையும், தோடாவும் அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் காஞ்சி மடத்தார் அளித்த ‘தாக்ஷிணாத்ய கலாநிதி’ என்னும் பட்டத்தை கல்லூரிப் பணி ஓய்வுக்குப் பின்னர் பதிப்பித்து, எழுதி வெளியிட்ட எல்லா நூல்களிலும் தம் பெயருக்கு முன்னர் சேர்த்துப் பதிப்பித்துப் பெருமைப்பட்டுள்ளார் சாமிநாதையர்.

உ.வே. சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கும்பகோணத்தின் புதிய முன்சீப்பாக வந்து பணியேற்றிருந்த சேலம் இராமசுவாமி முதலியாரைத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் சந்திக்கச் சொல்லியதன் காரணமாகச் சென்று சந்தித்திருக்கிறார்.

21.10.1880 இல் சாமிநாதையர் - சேலம் இராமசாமி முதலியார் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. கும்பகோணத்தில் நடைபெற்ற இருவரின் சந்திப்பும் சாமிநாதையருக்கும் தமிழுக்கும் அளப்பரிய நன்மைகளை அளித்தது என்பதை தமிழுலகம் நன்கறியும்.

கும்பகோணத்திலிருந்த காலத்தில் சங்க நூல்களுள் பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும் (1889), எட்டுத்தொகையுள் ஒன்றாகிய புறநானூறு மூலமும் உரையும் (1894), எட்டுத்தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறுநூறும் பழையவுரையும் (1903) ஆகிய மூன்று நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

காப்பிய நூல்களிலும் மூன்று நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். அவை, திருத்தக்க தேவரியற்றிய சீவகசிந்தாமணி மூலமும், மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும் (1887), இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும் (1892), கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் அருளிச்செய்த மணிமேகலை மூலமும் (1898) என்ற மூன்று நூல்களாகும். இவற்றுள் மணிமேகலை சாமிநாதையரே உரையெழுதிப் பதிப்பித்து வெளியிட்ட நூலாகும்.

1895இல் இலக்கண நூல்களுள் சேரர் பரம்பரையினராகிய ஐயனாரிதனார் அருளிச்செய்த புறப்பொருள் வெண்பாமாலை நூலை அதன் பழைய உரையுடன் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

கும்பகோணத்திலிருந்த காலங்களில் தமது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் திருக்குடந்தைப் புராணம் (1883), திருப்பெருந்துறைப்புராணம் (1892), வீரவனப்புராணம் (1903), சீகாழிக் கோவை (1903) ஆகிய மூன்று பிரபந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

தியாகராச செட்டியார் இயற்றிய திருச்சிற்றம்பல வெண்பாவந்தாதி திருவாரூர் பாதி திருவொற்றியூர் பாதி, வெண்பாவந்தாதி திருவாரூர் மருந்து வெண்பாமாலை (1888), திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீகச்சியப்ப சுவாமிகள் அருளிச்செய்த கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது (1888), கௌரிமாயூரம் இராமையர் அருளிச்செய்த கௌரி மாயூரமென்று வழங்கும் திருமயிலைத் திரிபந்தாதி (1888), திருவாவடுதுறையா தீனத்துத் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருவாவடுதுறைக்கோவை (1903) ஆகிய பிரபந்த நூல்களும் சாமிநாதையர் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பதிப்பித்து வெளியிட்ட நூல்களாகும்.

இணைப்பு - 1

உ.வே.சாமிநாதையரின் கும்பகோண வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

1880, பிப்ரவரி, 13, வெள்ளிக்கிழமை, தியாகராச செட்டியார் திருவாவடுதுறை மடத்திற்கு வந்து தங்கி உ.வே. சாமிநாதையரைக் கும்பகோணம் கல்லூரி ஆசிரியர் பணியை ஏற்கவேண்டி திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பம் செய்தார்; தேசிகர் நெடிய ஆலோசனைக்குப் பின்னர் தேசிகர் சம்மதித்தார்; அன்று மாலையிலேயே மடத்திலிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் தகவலைச் சொல்லிவிட்டு இரவே கும்பகோணம் சென்று தியாகராச செட்டியார் வீட்டில் தங்கினார் சாமிநாதையர்.

1880, பிப்ரவரி, 14, சனிக்கிழமை, தியாகராசசெட்டியார், கும்பகோணம் கல்லூரியின் துணை முதல்வர் ஸாது சேஷையரின் வீட்டிற்குச் சாமிநாதையரை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார்; மாலை ஐந்து மணிக்குக் கல்லூரி முதல்வர் கோபால்ராவ் வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்துப் பணி ஏற்பு உத்தரவைப் பெற்றுத்தந்தார் தியாகராச செட்டியார்.

1880, பிப்ரவரி, 15, ஞாயிற்றுக்கிழமை, தியாகராச செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார்; பணி வாய்ப்பு கிடைத்தமை பற்றி இருவரும் உரையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

1880, பிப்ரவரி, 16, திங்கட்கிழமை, பிற்பகல் கல்லூரிக்குச் சென்று ஆசிரியர் பணி ஏற்றுக்கொண்டார் சாமிநாதையர்; நாலடியார் ‘இரவச்சம்’ எனும் அதிகாரத்தை முதன் முதலாகப் பாடம் எடுத்தல் (அப்போது அவருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 50/-) கும்பகோணம் கல்லூரியில் 1880 முதல் 1903ஆம் ஆண்டுவரையில் 23 ஆண்டுகள் அங்குப் பணியாற்றியுள்ளார் சாமிநாதையர்.

1880, பிப்ரவரி, 17, தியாகராச செட்டியார், கும்பகோணம் கல்லூரிக்கு வந்து சாமிநாதையர் பாடம் சொல்லுவதைக் கவனித்துவிட்டுச் சென்றார்.

1880, செப்டம்பர், 28, தியாகராச செட்டியார், காலேஜ் பாடங்களை நன்முறையில் நடத்தி நல்லபெயர் வாங்க வேண்டுமென்று இவருக்குக் கடிதம் எழுதி வாழ்த்தினார்.

1880, அக்டோபர், 21, வியாழக்கிழமை, கும்பகோணத்தில் ஜில்லா முன்சீப் சேலம் இராமசுவாமி முதலியாரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார் சாமிநாதையர், சீவகசிந்தாமணிப் பிரதியை இராமசுவாமி முதலியார் இவரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லினார்.

1800, சாமிநாதையருக்கு மகன் பிறந்தார்; திருநல்லூர் கலியாண சுந்தரேசுவரருக்குச் செய்து கொண்ட வேண்டுதலின்படி மகனுக்குக் ‘கலியாண சுந்தரம்’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார் சாமிநாதையர்.

1882, செப்டம்பர், கும்பகோணம் கல்லூரி முதல்வர் ‘குடந்தை கோபால்ராவ்’ அவர்களின் பிரிவுபசார விழாவில் கோபாலராவைப் பாராட்டிச் செய்யுள் இயற்றி வாசித்தார் சாமிநாதையர்.

1883, (சுபானு - ஆனி) மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருக்குடந்தைப் புராணத்தைத் தியாகராச செட்டியாருடன் இணைந்து பதிப்பித்து வெளியிட்டார்; இது சாமிநாதையர் பதிப்பாசிரியராக இருந்து விளங்கிய இரண்டாவது நூலாகும்.

1884, ஒற்றியிலிருந்த (அடமானம்) பரம்பரை நிலத்தை கல்லூரிப் பணிவாய்ப்பால் கிடைக்கப்பெற்ற ஊதியத்தைக் கொண்டு சாமிநாதையரின் தந்தையார் மீட்டெடுத்தார்.

1885, (வைகாசி) ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியப் பதிப்புப் பணிக்காக மாணவர்கள் சிதம்பரம் சாமிநாதையர், சிதம்பரம் சோமசுந்தர முதலியார் ஆகியோருடன் முதல் முறையாகச் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டார்.சென்னை வந்து சேலம் இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கியிருந்தார்.

1885, (பார்த்திப - வைகாசி) ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம், முதல் பதிப்பு வெளிவந்தது

1886, சீவகசிந்தாமணிப் பதிப்புப் பணிக்காகச் சென்னைக்கு இரண்டாம்முறை பயணம் மேற்கொண்டார்.சென்னை வந்து சோடசாவதானம் சுப்பராய செட்டியார் வீட்டில் தங்கினார்.

1887, ஏப்ரல், சிந்தாமணிப் பதிப்புப் பணிக்காக மீண்டும் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டார்.

1887, சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், முதல் பதிப்பு வெளிவந்தது.

1887, டிசம்பர், 21, சாமிநாதையர் அனுப்பிவைத்த சீவகசிந்தாமணி அச்சுப் பதிப்பு கிடைக்கப்பெற்றது குறித்துக் கொழும்பிலிருந்து சர். பொன்னம்பலம் பிள்ளை சாமிநாதையருக்குக் கடிதம் எழுதினார்.

1888, ஜனவரி, 7, மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைவிற்குப் பின்னர் சாமிநாதையருக்குப் பெருந்துணையாக இருந்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் மறைவுற்றார்; இரங்கற்பா எழுதி தமது நன்றியறிவை வெளிப்படுத்தினார்.

1888, ஜனவரி, 19, சாமிநாதையரின் நலம் விரும்பியும் தாம் வகித்துவந்த ஆசிரியர் பணியை இவருக்கு அளித்து உதவியவருமாகிய தியாகராச செட்டியார் மறைவுற்றார்; இரங்கற்பா எழுதி வருந்தினார் சாமிநாதையர்.

1888, டிசம்பர், 11, குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனமடத்து காறுபாறு தாண்டவராயத் தம்பிரானும், அவ்வாதீன வித்துவான் தில்லைநாத பிள்ளையும் இவரைச் சந்தித்தனர்; பத்துப்பாட்டு அச்சுப் பணிக்காகக் கிருஷ்ணையருடன் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டார்; சென்னைக்கு வந்து சேலம் இராமசாமி முதலியார் பங்களாவில் தங்கினார்.

1888, தியாகராஜ செட்டியார் இயற்றிய, திருச்சிற்றம்பல வெண்பாவந்தாதி, திருவாரூர் பாதி - திருவொற்றியூர் பாதி வெண்பாவந்தாதி, திருவாரூர் மருந்து வெண்பாமாலை நூலைப் பதிப்பித்து வெளியிட்டார்.

1888, கௌரிமாயூரம் இராமையர் இயற்றிய கௌரிமாயூரமென்று வழங்கும் திருமயிலைத் திரிபந்தாதி நூலைப் பதிப்பித்து வெளியிட்டார்.

1888, திருவாவடுதுறையாதீனத்து மகாவித்வான் ஸ்ரீகச்சியப்ப முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது நூலின் முதல் பதிப்பை வெளியிட்டார்.

1889, மார்ச்சு, பூண்டி அரங்கநாத முதலியார் வழியாக வந்த சென்னை மாநிலக் கல்லூரித் தமிழாசிரியர் பணிவாய்ப்பைத் தந்தையாரின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு ஏற்க மறுத்தார்.

1889, அக்டோபர் (ஒருநாள்), நவம்பர் (ஒருநாள்) பூண்டி அரங்கநாத முதலியாரின் கச்சிக் கலம்பக அரங்கேற்று விழாவிற்குக் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்து சென்றார்.

1889, ஜூன், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், முதல் பதிப்பை வெளியிட்டார்; சிலப்பதிகாரப் பதிப்பு வேலையைத் தொடங்கினார்.

1890, கோடை விடுமுறையில் சிலப்பதிகாரச் சுவடிகளைத் தேடும்பொருட்டு, தென்பாண்டி நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.

1891, ஏப்ரல், 3, பாரிஸிலிருந்து ஜூலியன் வின்ஸோன், சீவகசிந்தாமணி முதல் பதிப்பைக் கண்டு பாராட்டிக் கடிதம் எழுதினார்.

1891, மே, 7, சிலப்பதிகாரச் சுவடிகளைக் கேட்டு சாமிநாதையர் எழுதிய கடிதத்திற்குப் பாரிஸிலிருந்து ஜூலியன் வின்ஸோன் பதில் கடிதம் எழுதினார்.

1891, மே, மகன் கல்யாணசுந்தர ஐயருக்கு உபநயனம் நடத்திவைக்கப்பெற்றது

1891, மே, 9, கல்யாணசுந்தர ஐயர் உபநயன நிகழ்வில் தாம் கலந்துகொள்ளமுடியாதுபோன சூழல் குறித்துச் சேலம் இராமசாமி முதலியார் எழுதிய கடிதம் சாமிநாதையருக்குக் கிடைக்கப்பெற்றது

1891, ஜூன், ஏட்டுச் சுவடிகளை வைப்பதற்கும், அன்பர்களுடன் இருந்து ஆராய்ச்சி செய்வதற்கும் ஏற்றவகையில் முன்பிருந்த வீட்டைக் காலிசெய்துவிட்டுப் பெரிய வீட்டொன்றில் வாடகைக்குக் குடியேறினார். மாதம் 6 ரூபாய் வாடகை.

1891, ஜூன், கோடை விடுமுறையில் சென்னைக்குச் சென்று சிலப்பதிகார அச்சு வேலையைச் செய்யத் தொடங்கினார்; திருமானூர்க் கிருஷ்ணையர் உடனிருந்து உதவி செய்தார்.

1892, மார்ச்சு, 2, சீவகசிந்தாமணி உள்ளிட்ட பழந்தமிழ் நூற்சுவடிகளைக் கொடுத்துப் படிக்கச்சொல்லிய சேலம் இராமசாமி முதலியார் மறைவுற்றார், இரங்கற்பா எழுதி நன்றி பாராட்டினார்.

1892, ஜூன், சிலப்பதிகாரம் மூலமும் அடியார்க்குநல்லார் உரையும், முதல் பதிப்பை வெளியிட்டார்.

1892, திருக்கைலாய பரம்பரைத் திருவாவடு துறையாதீனத்து மகாவித்துவானாகிய திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணப் பதிப்பை வெளியிட்டார். 1913இல் இதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது

1892, ஜூன், இவரது அன்பர், வக்கீல் தொழில் செய்துவந்த கே. கல்யாண சுந்தரையரின் புதுமனை புகுவிழாவிற்குத் தஞ்சாவூர் சென்று, அங்கிருந்து அருகிலுள்ள கம்பர் பிறந்த ‘தேரெழுந்தூர்’ ஊருக்குச் சென்றுவந்தார்.

1893, ஜனவரி, புறநானூறு மூலமும் உரையும் நூல் வெ நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் அச்சாகத் தொடங்கியது.

1893, ஜனவரி, 27, சாமிநாதையரிடம் நெருங்கிப் பழகிய மகா வைத்தியநாதையர் மறைவுற்றார்.

1893, அக்டோபர், 7, தந்தை வேங்கடசுப்பையர் மறைவுற்றார்.

1893, அக்டோபர், 18, தந்தையார் வேங்கடசுப்பையர் மறைவுக்கு ஆறுதல்கூறி பூண்டி அரங்கநாத முதலியார் எழுதிய கடிதம் சாமிநாதையருக்குக் கிடைக்கப்பெற்றது.

1893, டிசம்பர், 10, சாமிநாதையரின் மிகநெருங்கிய அன்பர் பூண்டி அரங்கநாத முதலியார் மறைவுற்றார்.

1893, டிசம்பர், 18, பூண்டி அரங்கநாத முதலியார் மறைவையட்டி சென்னையில் நடைபெற்ற திருநாராயண பலிக்கும், சுபஸ்வீகரணத்திற்கும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு பூண்டி அரங்கநாத முதலியார் மகன் பூண்டி கல்யாணசுந்தர முதலியார் எழுதிய கடிதம் சாமிநாதையருக்குக் கிடைக்கப்பெற்றது.

1894, செப்டம்பர், புறநானூறு மூலமும் பழைய உரையும் நூலின் முதல் பதிப்பு வெளிவந்தது.

1894, கும்பகோணத்தில் ரூ. 3000/- க்குப் புது வீடு வாங்கினார்.

1894, நவம்பர், 14, பாண்டித்துரைத் தேவர், சாமிநாதையர் அனுப்பிய புறநானூறு மூலமும் உரையும் பதிப்புநூல் கிடைக்கப்பெற்றது குறித்துக் கடிதம் எழுதினார்.

1894, மாணவர்களுக்காகச் சிலப்பதிகாரம் - புகார்க்காண்டத்தின் நாடுகாண்காதையைப் பதிப்பித்து வெளியிட்டார்.

1895, புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நூலின் முதல் பதிப்பு வெளிவந்தது

1895, ஜனவரி, 31, திருவாவடுதுறை மடத்திற்கு வந்திருந்த பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தார்.

1895, ஏப்ரல், 17, ஜூலியன் வின்சோன், சாமிநாதையர் அனுப்பிய நூல் கிடைக்கப்பெற்றது குறித்துக் கடிதம் எழுதினார்.

1895, ஏப்ரல், 26, சீவகசிந்தாமணி குறித்தும், புறநானூற்றை இன்னும் தெளிவுபடுத்த வேண்டியும் ஜி. யு. போப் சாமிநாதையருக்குக் கடிதம் எழுதினார்.

1895, அக்டோபர், 21, ஜி. யு. போப், புறப்பொருள் வெண்பாமாலை பதிப்பு குறித்துக் கடிதம் எழுதினார்.

1896, ஜனவரி, 3, புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை பதிப்புகளைப் பாராட்டி ஜி. யு. போப் மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.

1897, ஜூன், மகன் கலியாணசுந்தர ஐயருக்கும் நாகப்பட்டின ஸ்ரீ சக்கரபாணி ஐயரின்மகள் கமலாம்பாளுக்கும் திருமணம் நடைபெற்றது

1897, தமிழ் மாணவர்களுக்காகச் சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டத்தில் புறஞ்சேரியிறுத்தகாதையை மட்டும் அச்சிட்டு வெளியிட்டார்.

1898, ஜூலை, மணிமேகலை மூலமும் உ.வே.சா. அரும்பதவுரையும், முதல் பதிப்பு வெளிவந்தது; இது, சாமிநாதையர் முதன் முதலாக இவர் உரை எழுதிப் பதிப்பித்த நூலாகும்.

1898, ஆகஸ்டு, 8, மணிமேகலை உரையின் அருமையைப் பாராட்டி வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் சாமிநாதையருக்குக் கடிதம் எழுதினார்.

1898, சிறிய தந்தையார் ஸ்ரீநிவாச ஐயருக்கு (சின்னசாமி ஐயர்)ச் சஷ்டியப்த பூர்த்தி விழாவைச் சாமிநாதையர் முன்னின்று நடத்தினார்.

1898, ஆகஸ்ட், 19, சென்னை மாநிலக் கவர்னர் ஹாவ்லக் பிரபு கும்பகோணம் கல்லூரிக்கு வருகைபுரிந்தார். அவருக்குச் சாமிநாதையர் வரவேற்புப் பத்திரம் எழுதி வாசித்தார்.

1898, மணிமேகலைப் பதிப்பைச் சார்ந்த புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் நூலின் முதல் பதிப்பை வெளியிட்டார்.

1898, மணிமேகலைப் பதிப்பைச் சார்ந்த மணிமேகலைக் கதைச்சுருக்கத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்.

1899, மார்ச்சு, புறநானூற்றுப் பதிப்பைப் பாராட்டி ஜி. யு. போப் கடிதம் எழுதினார்.

1899, ஜனவரி, இராமநாதபுரம் சென்று பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்தார்.

1900, ஜனவரி, 2, சி. வை. தாமோதரம் பிள்ளை மறைவுற்றார், தாமோதரம் பிள்ளைக்குச் சரமகவி எழுதி அனுப்பி அஞ்சலி செலுத்தினார்.

1900, பிப்ரவரி, பாச்சிலாச்சிராமப் புராணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்.

1900, ஏப்ரல், 17, பரிபாடலைப் பதிப்பித்து வெளியிடுவதற்குரிய செலவுகளைத் தாம் அளிப்பதாகக் கொழும்பிலிருந்து சர் பொன்னம்பலம் குமாரசாமி முதலியார் கடிதம் எழுதினார்.

1901, ஜூன், 20, திருச்சிராப்பள்ளி, எஸ்.பி.ஜி. ஹைஸ்கூல் உயர்நிலைப் பள்ளி செந்தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் பங்கேற்றார்.

1901, டிசம்பர், 20, சிறிய தந்தையார் சின்னசாமி ஐயர் மறைவுற்றார்; தாமே முன்னின்று இறுதிக் கடன்களை நிறைவேற்றி முடித்தார் சாமிநாதையர்.

1902, டிசம்பர் 21, பழந்தமிழ் நூல்களை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக வெளியிட வேண்டி பாண்டித்துரைத் தேவர் சாமிநாதையருக்குக் கடிதம் எழுதினார்.

1902, கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் வடமொழிப் புலவராக இருந்த சடகோபாசாரியார் நோய்வாய்ப்பட்டிருந்ததை அறிந்து அவரைச் சென்று சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தார்.

1903, ஜனவரி, 1, தஞ்சையில் நடைபெற்ற 7-ஆம் எட்வர்ட் மன்னர் முடிசூட்டுவிழாக் கொண்டாட்டத்தில், தஞ்சை துணை ஆட்சியரின் அழைப்பை ஏற்று தஞ்சை சென்று வந்தார். அந்த விழாவில் சாமிநாதையரின் தமிழ்ப் பணியைப் பெருமைப்படுத்தும் வகையில் பாராட்டுப் பத்திரம் அளித்து கௌரவிக்கப்பட்டது.

1903, ஜூன், ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும்,முதல் பதிப்பு வெளிவந்தது.

இணைப்பு - 2

உ.வே. சாமிநாதையர் கும்பகோண வாழ்க்கையில் பதிப்பித்து வெளியிட்ட நூல்களின் வெளியீட்டு விவரங்கள்

1883

1. திருக்குடந்தைப்புராணம், திருக்கைலாச பரம்பரை நிகமாகசித்தாந்த சைவசமயாசாரிய பீடமாய் திருவாவடுதுறை ஆதீனவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களாற் செய்யப்பட்டது, இஃது மேற்படி ஆதீனத்து சுப்பிரமணிய தேசிகசுவாமிகள் கட்டளையிட்டருளியபடி கும்பகோணம் பேட்டைத்தெருவிலும், மகாதளம் பேட்டைத் தெருவிலும் வசிக்கும் சைவர்கள் பொருளுதவியினால் மேற்படி கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சாமிநாத ஐயராலும், திரிசிரபுரம் சி.தியாகராஜ செட்டியாராலும் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: மிமோரியல் அச்சுக்கூடம், சுபாநு - ஆனி (மற்றொருவருடன் இணைந்து பதிப்பித்த நூல்)

1887

1. திருத்தக்க ததேவரியற்றிய சீவகசிந்தாமணி மூலமும் மதுரையாசிரியர் - பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், இவை சேலம் இராமசுவாமி முதலியாரவர்கள் விருப்பத்தின்படி திருக்கைலாயபரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகள் மேற்படி ஆதீனத்து மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் ஆகிய இவர்கள் மாணாக்கரும் கும்பகோணம் கவர்ன்மெண்டு காலேஜ் தமிழ்ப்பண்டிதருமாகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டன. சென்னை: த. கோவிந்த ஆசாரியாரது திராவிட ரத்நாகர அச்சுக்கூடம்

1888

1. கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது, திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீகச்சியப்பசுவாமிகள் அருளிச்செய்தது, இது யாழ்ப்பாணம் கொழும்புத்துறை குமாரசாமி செட்டியாரவர்கள் விருப்பத்தின்படி கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: திராவிட ரத்நாகர அச்சுக்கூடம்

2. கௌரிமாயூரமென்று வழங்கும் திருமயிலைத் திரிபந்தாதி, மேற்படி கௌரிமாயூரம் இராமையர் அருளிச்செய்தது; இஃது சோழமாளிகை இரத்தினம் பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே.சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டது, கும்பகோணம்: லார்ட் ரிப்பன் அச்சுக்கூடம்

3. திருச்சிற்றம்பல வெண்பாவந்தாதி திருவாரூர் பாதி திருவொற்றியூர் பாதி வெண்பாவந்தாதி திருவாரூர் மருந்து வெண்பாமாலை, இவை திரிசிரபுரம் வித்துவசிரோமணியாகிய சி.தியாகராச செட்டியாரவர்களால் இயற்றப்பட்டு கும்பகோணம் கவர்ன்மெண்டு காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்டன, சென்னை: தொண்டைமண்டல அச்சியந்திரசாலை

1889

1. பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்; இவை கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பரிசோதித்து சிவகங்கை ஸப்டிவிஷன் சிறுவயல் ஜமீந்தாரவர்களாகிய முத்துராமலிங்கத் தேவரவர்களுடைய பேருதவியால் பதிப்பிக்கப்பட்டு நிறைவேறின, சென்னை: திராவிட ரத்நாகர அச்சுக்கூடம்

1892

1. இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், இவை கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டன, சென்னை: வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடம்

2. சிலப்பதிகார அரும்பதவுரை, இது கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடம்

3. திருப்பெருந்துறைப்புராணம், திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவானாகிய திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியது; இது மேற்படி ஆதீனத்து அம்பலவாண தேசிகரவர்கள் ஆக்ஞையின்படி திருவிடைமருதூர்க் கட்டளை காசிநாத தம்பிரானவர்கள் செய்த பொருளுதவியைக் கொண்டு இந்நூலாசிரியர் மாணாக்கரும் கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதருமாகிய உத்தமதானபுரம் வே.சாமிநாதையரால் பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடம்

1894

1. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய புறநானூறு மூலமும் உரையும், இவை கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம்
வே.சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டன, சென்னை: வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடம்

1895

1. சேரர் பரம்பரையினராகிய ஐயனாரிதனார் அருளிச்செய்த புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், இவை பாலவநத்தம் ஜமீந்தாரவர்களாகிய இராமநாதபுரம் பாண்டித்துரைத்தேவரவர்கள் விருப்பத்தின்படி கும்பகோணம் கவர்ன்மெண்ட் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரவர்கள் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டன, சென்னை: வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடம்

1898

1. கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராகிய மதுரைக் கூலவாணிகன்சாத்தனார் அருளிச்செய்த மணிமேகலை மூலமும் கும்பகோணம் கவர்ன்மெண்ட் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம்
வே. சாமிநாதையரெழுதிய அரும்பதவுரையும், இவை பாலவநத்தம் ஜமீந்தாரவர்களாகிய இராமநாதபுரம் பாண்டித்துரைத்தேவரவர்கள் உதவியைக்கொண்டு, மேற்படி சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்டன, சென்னை: வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடம்

1903

1. திருவாவடுதுறையாதீனத்துத் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருவாவடுதுறைக்கோவை, இது கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம்

2. வீரவனப்புராணம், திரிசிரபுரம் மஹாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வடமொழி முதல் நூலிலிருந்து மொழிபெயர்த்தியற்றியது, இஃது ஸ்ரீ உமாம்பிகாஸமேத ஸ்ரீவீரசேகரநாத பக்தஜன ஸபையாருடைய பொருளுதவியைக்கொண்டு இந்நூலாசிரியர் மாணாக்கரும் கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதருமாகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்டது, சென்னபட்டணம்: வைஜயந்தி அச்சுக்கூடம்

3. ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சீகாழிக் கோவையும் நூதனமாக எழுதிய அரும்பதவுரையும், இவை இடமணல் ஸ்ரீ. வி. கீ. விஜயராகவலுநாயுடு அவர்கள் உதவியைக்கொண்டு இந்நூலாசிரியர் மாணாக்கரும் கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமாகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றது, சென்னபட்டணம்: வைஜயந்தி அச்சுக்கூடம்

4. எட்டுத்தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறுநூறும் பழையவுரையும், இவை, கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பலபிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பிக்கப்பட்டன, சென்னபட்டணம்: வைஜயந்தி அக்கூடம்

எழுதிய நூல்

1. ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம், ஸ்ரீஏகநாயகரூசல், ஸ்ரீஏகநாயகர் தாலாட்டு, இவை திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் மேற்படியூர் ஆதீன வித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் மாணாக்கராகிய கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் வே. சாமிநாதையரால் மேற்படியூர் ஆதீனத்துக்காறுபாறு சுப்பிரமணிய சுவாமிகளுத்தரவின்படி செய்யப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டன, சென்னை: ஜீவரக்ஷ£மிர்த அச்சுக்கூடம், பார்த்திப - வைகாசி, 1885

துணைநூற் பட்டியல்

1. சாமிநாதையர், உ.வே. 2008 (ஏழாம் பதிப்பு). என் சரித்திரம். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.

2. நினைவு மஞ்சரி, பாகம் 2, 1942, உ.வே. சாமிநாதையர், எஸ். கலியாணசுந்தர ஐயரால் பதிப்பிக்கப்பெற்றது, சென்னை: கபீர் அச்சுக்கூடம்.

3. நல்லுரைக்கோவை, பாகம், 3, 1938. மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக்கூடம்.

4. வேங்கடாசலபதி, ஆ. இரா. 2018. உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், சென்னை: டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.

- முனைவர் இரா. வெங்கடேசன்