மலையாள இலக்கிய உலகில் திரு.கேசவதேவ், தகழி, வைக்கம் முகமது பஷீர் போன்றவர்களைப் போல் தரமான கலை - இலக்கியப் படைப்புகளைப் படைத்தளித்தவர் எழுத்தாளர் பொன்குன்னம் வர்க்கி அவர்கள். மனிதனின் பொதுவான விஷயங்களைக் கலை இலக்கியத்தின் கருப்பொருளாகக் கொண்டு பலரும் கதையும், நாவல்களும் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அன்றைய அரசியல், மதம், பண்பாடு போன்றவைகளையெல்லாம் துணிந்து விமர்சனம் செய்தவர், பொன்குன்னம் வர்க்கி.

ponkunnam varkiஅன்றைய காலகட்டத்தில் பல எழுத்தாளர்களும் தங்கள் எழுத்துகளுக்குக் கொண்டு வருவதற்குப் பயந்து கொண்டிருந்த மதத்தையும், அரசியலையும் அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதியதற்காக சிறைத்தண்டனை வரை அனுபவித்தவர், பொன்குன்னம் வர்க்கி. கேரளத்தில் பரந்து விரிந்து கிடக்கும் கிருத்தவ மதத்தையும், வெறும் சடங்காக மட்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதன் மதவழிபாடு, ஏழைகளிடம் ஒரு மாதிரியாகவும் பணக்காரர்களிடம் இன்னொரு மாதிரியாகவும் நடந்துகொண்டிருந்த அவற்றின் போக்கு, வெளியே தெரியாமல் உள்ளே ஆடம்பரமான முறையில் வாழ்ந்து கொண்டிருந்த பாதிரியார்களின் வாழ்க்கை, காலமெல்லாம் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த பிறகும்கூட வாழ்க்கையில் விடிவு காணமுடியாத, மலையோரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் சமய நம்பிக்கை, வறுமை - போன்றவைகளை கேரளத்தில் முதன்முதலில் இலக்கியப் படைப்புகளுக்குள் கொண்டு வந்தவர் திரு.பொன்குன்னம் வர்க்கி. இவரது சில கதைகளில் அக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கேரளத்தின் கிருத்தவ பாதிரியார்களின் இரட்டை வேடம் கூட தோலுரித்துக் காட்டப்பட்டது. (இவரது ‘கடைசி சித்திரம்’ கதை வாயிலாக). இதனால் கிருத்தவ பாதிரியார்களின் கோபத்திற்கும், கிருத்தவ சமய நிறுவனங்களின் தண்டனைக்கும் ஆளானவர். இன்றும்கூட நம் நாட்டு இலக்கியவாதிகள், துக்ளக் மாடல் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களைப் பற்றியும், ஜனநாயகத்திற்கு விரோதமான அவர்களுடைய சட்டதிட்டங்களைப் பற்றியும் இலக்கியரீதியாக விமர்சிக்கத் தயங்கிக் கொண்டிருப்பவர்கள். ஆனால், திரு.பொன்குன்னம் வர்க்கி மேற்கண்டவற்றை இலக்கியத்தின் வழியே துணிச்சலுடன் விமர்சித்தவர். இந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான் அவருடைய பிரசித்தமான ‘மாடல்’ சிறுகதை.

ஜனநாயகத்திற்குப் புறம்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் ‘அமெரிக்க மாடல்’ ஆட்சிமுறையைப் புகுத்த முயன்ற அன்றைய திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரை கேலி செய்யும் கதை அது.

கதையின் கரு கீழ்வருமாறு: ‘சி.பி.பிரான்சிஸ் ஒரு முதல்தரமான தையல்காரர். தன் தையல் கலைத்திறன் பற்றி மிகுந்த கர்வம் உள்ளவர். வெளிநாட்டில் தையல் கற்றுக்கொண்டதாகவும், யார் யாருக்கெல்லாமோ துணி தைத்துக் கொடுத்ததாகவும் வாய் வலிக்காமல் பெருமையடித்துக் கொள்பவர்.

கிராமத்து இளைஞன் ஒருவன் அவரிடம் சட்டை தைக்க வருகிறான். அளவுகளெல்லாம் முறைப்படி எடுத்து அவனுக்குச் சட்டை தைத்துக் கொடுக்கிறார் பிரான்சிஸ். சட்டையை அணிந்து பார்க்கிறான் இளைஞன். அவனுக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை. கழற்றி அவர் முன்னே எறிகிறான். தையல்காரருக்குக் கோபம் வருகிறது. “இது, அமெரிக்க மாடல். இந்த மாடல்தான் உன் மாதிரிப்பட்ட ஆள்களுக்குப் பொருத்தமாக இருக்கும்” என்று சொல்கிறார்.

இளைஞனுக்குக் கோபம். கேட்கிறான். “எனக்கு விருப்பமான மாடலைத் தீர்மானிப்பது யார்? நீயா, நானா?”

‘இந்தக் கேள்வி பல தளங்களில் நமக்குள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் நிலையை நூறு விதமாகப் பேசும் நூறு குரல்கள் இதனுள்ளிருந்து வெளிப்படுகின்றன! - என்பார், தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்த இந்தக் கதையை வாசித்து முடித்த பிரபல நாவலாசிரியரான பொன்னீலன்.

அவர் பொன்குன்னம் வர்க்கியைப் பற்றி மேலும் சொல்லுகிறார்.

‘இந்திய மண்ணுக்கேற்ற விவசாய முறை எது? இந்திய முறையா, அமெரிக்க முறையா? தொழில்நுட்ப முறை எது? அரசியல் முறை எது? பொருளாதார முறை எது? கலாச்சார முறை எது? இப்படி அது எதிரொலிக்கும் அதிர்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி ஒரு கதை தமிழில் இருக்கிறதா; பதில் சொல்ல முடியவில்லை!’

இதே, மாதிரிப்பட்டதுதான் அவருடைய ‘சப்திக்குன்ன கலப்பை’ (பேசும் கலப்பை) சிறுகதையும்.

இன்றைய காலகட்டத்தில் நம்நாட்டு விவசாயிகளைப் பற்றியும், அவர்களுக்கும் இந்த மண்ணுக்கும் உள்ள உறவைப் பற்றி எழுதுவதையும், அப்படி எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் இலக்கிய வட்டாரத்தில் கேலி பண்ணும் காலம், இது. ஒரு காலத்தில் திரைப்படங்களில் இயக்குநர் விட்டலாச்சாரியார் செய்து காட்டியது போல் இலக்கியப் படைப்புகளில் நவீன இலக்கியம் என்ற பெயரில் மாயாஜாலங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை உள்ளடக்கி வெளிவரும் நாவல்களும், சிறுகதைகளும், பன்முகத்தன்மை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சிக்கும் இன்னொரு நிகழ்ச்சிக்கும் தொடர்பில்லாதபடி கோணல் மாணலாக எழுதும் கவிதைகளைப் பற்றியும் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஒரு ஏர் உழவனையும், அவனுக்குத் தன் காளையோடுள்ள அன்பையும், மண் வாசனை கலந்து, எழுதப்பட்ட கதை, இந்த ‘பேசும் கலப்பை’ கதை. நம் நாட்டு மொழிகளிலும், பல வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட கதை, இது. இதுவும், மலையாள இலக்கிய வட்டாரத்தில் மிகப் பெருமையாகப் பேசப்பட்டது.

இவருடைய ‘கருப்புத் தொப்பி’ என்றொரு கதை. இந்தக் கதையில் சட்டத்தை மீறி நடந்த மேடைப் பிரசங்கத்தைக் கேட்க வந்த ஜனக்கூட்டத்தை விலக்க வந்த போலீஸ்காரர்களில் ஒருவர், எசகுபிசகாக அடிபட்டு இறந்து போக, பிரசங்கத்தைக் கேட்க வந்த ஏழைமனிதன் ஒருவன், அம்மரணத்தை ஒட்டி கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகிறான். சிறைக்காவலர்கள் கொலைப் புள்ளிகளுக்கு அணிவிக்கும் ‘கருப்புத் தொப்பி’யை அணிய முயற்சிக்கிறார்கள். அவனோ, ‘நான் கொலையாளி இல்லை. எனவே எனக்கு சாதாரணக் கைதிகள் அணியும் சிவப்புத் தொப்பியைத் தான் அணிய வேண்டும் என, பிடிவாதம் பிடிப்பதை எள்ளல் நடையோடு விவரிக்கும் கதை, இது.

கதையை வாசிக்கும் போது ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் கூட, நம் நாட்டு சிறையதிகாரிகளும், சட்டதிட்டங்களும் ஏழை எளிய மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை இக்கதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

நம் நாட்டிலுள்ள முதலா ளித்துவ அமைப்பினையும், ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளுக்கும் எதிராக தன் பேனா முனையைத் திருப்பியதினால் நிரம்பத் தொல்லைகளுக்கு ஆளானவர், பொன்குன்னம் வர்க்கி. ஏழை எளிய மக்களும், உழைக்கும் தொழிலாளர்களும் எங்கெல்லாம் துன்பங்களுக்கு ஆளானார்களோ அங்கெல்லாம் பொன்குன்னம் வர்க்கியின் பேனா திரும்பியது. அதற்காக பல தண்டனைகளுக்கும் ஆளானவர்.

அவர் ஒரு இடத்தில் கூறுகிறார்: ‘கதை எழுத்து சம்பந்தமாக நான் உங்களுக்கு என்னுடைய ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன். அன்று நான் திவான் சர்.சி.பி. ராமசாமி அய்யரினால் சிறைக்குள் கைது செய்து வைக்கப்பட்டிருக்கிறேன். அப்போது எனக்கு ஜெயில் சூப்பிரண்டிடமிருந்து ஒரு தகவல் வந்தது. கதைகளையும், நாடகங்களையும் எழுதி, நான் மக்களை உசுப்பி விடுகிறேனாம். சட்ட அமைதியை சீர்குலைக்கிறேனாம். அதனால்தான் என்னைக் கைது பண்ணி சிறைக்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறார்களாம்! இதற்காக மன்னிப்புக் கேட்டால் என்னை விடுதலை செய்து விடுவார்களாம்.’ இதுதான் சூப்பிரண்டிடம் இருந்து வந்த தகவலின் உள்ளடக்கம்.

“அதுமட்டுமல்ல; அதற்கு முன்பு சீஃப் செகரெட்டரியாகப் பொறுப்பேற்றிருந்த திரு.நீலகண்ட அய்யரும் ஒரு முறை என்னிடம் வந்து சொன்னார். நான், அன்று ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த வேளை. நான், நாட்டிலுள்ள இளைஞர்களை எழுத்தின் மூலமாக சோசலிசப் பாதைக்குத் திருப்பிவிடுவதாகவும், அவர்களைக் கண்டு பேசி, அந்தப் பாதையிலிருந்து அவர்களைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றும் எச்சரிக்கை செய்தார்.”

“நான் அதற்கு இவ்வாறு மறுபடி சொன்னேன். சரி, கதை எழுதுவதனால்தானே எனக்கு இந்த துன்பங்களெல்லாம்; நான், அதை சகித்துக் கொள்கிறேன்.”

“இப்படி கதைகள் எழுதியதனால் நான் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்” என்கிறார், பொன்குன்னம் வர்க்கி.

பொன்குன்னம் வர்க்கி கதைகள், நாடகம், கட்டுரை என ஏராளமாக எழுதினார். கேரளத்தில் இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் மட்டுமல்ல; மக்களுக்கு இடையே முதலாளித்துவத்திற்கு எதிராக கம்யூனிசக் கருத்துக்களைப் பரப்பியதோடு இடதுசாரி இலக்கியவாதிகளை ஒன்று திரட்டி கேரளத்தில் கலை - இலக்கிய முற்போக்கு இயக்கத்தைக் கட்டியமைத்த பெருமையும் அவரையே சாரும். சமூகத்தை மார்க்சீயக் கண்கொண்டு அலசி, ஆராய்ந்து, அதனடிப்படையில் இலக்கியம் படைத்தவர். மார்க்சீய இலக்கியவாதிகளில் மிக உறுதியான கொள்கைப் பிடிப்பு உள்ளவர். அதனால்தானோ என்னவோ, இவரது எழுத்துகள் மலையாளத்தில் ஜனரஞ்சகமாக எழுதிய பிற இலக்கியவாதிகளின் படைப்புகளைப் போல் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை போலும்.

முதலாளித்துவ அமைப்பை, அதன் சீர்கேடுகளை, அழுகி நாற்றமடிக்கும் அதன் பண்பாட்டை, தூக்கி எறியப்பட வேண்டிய அதன் நிர்வாக எந்திரத்தை, அதன் ஏமாற்று வேலையை, மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் மதத்திற்கும் அதன் நிறுவனங்களுக்கும் துணை நின்று ஒத்தாசை செய்து கொடுப்பதை, பழைமையினை என, இவற்றையெல்லாம் இலக்கியத்தின் மூலம் கடுமையாக விமர்சித்தவர். முதலாளித்துவ அமைப்பை, நிலவுடைமைப் பண்பாட்டின் மிச்ச சொச்சங்களைத் தொட்டும், தொடாமலும் எழுதும் இலக்கியவாதிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராகவும், சோசலிஸத்திற்கு ஆதரவாகவும் தன் எழுதுகோலின் துணையோடு துணிந்து நின்று போராடிய ஒரு துணிச்சலான மார்க்சீய இலக்கியவாதி, பொன்குன்னம் வர்க்கி என்றால் அது மிகையானக் கூற்றல்ல! மத மேதாவிகளின் பயமுறுத்தலுக்கும், கம்யூனிச விரோதிகளின் கொலை மிரட்டலுக்கும், மிருகங்களை விட மனிதர்களை கேவலமாக நடத்தும் போலீஸ் அதிகாரிகளின் அடக்குமுறையைக் கண்டும் பயந்து நடுங்கி, எழுதுகோலை விட்டெறிந்துவிட்டு ஓடும் தொடைநடுங்கியல்ல. அவரிடமிருந்து மார்க்சியப் படைப்பாளிகளும், இளம் இலக்கியவாதிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்!