உலகில் தோன்றியுள்ள நூல்களுள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் நூல்கள் இவை இவை என வரையறுத்து விட முடியுமா என்பது ஐயமே. எனினும், சில நூல்கள் தத்தம் பெரும்பான்மையான / சிறுபான்மையான கருத்துக்களால் பெரும்பான்மை பொருத்தப்பாடு உடையனவாகத் திகழ்கின்றன. அந்த வகையில் மனித குல வாழ்வியலின் செம்மையாக்கத்திற்கான நூலாகக் காலங்காலமாக நிலைத்து நிற்கும் நூல் 'தம்ம பதம்' எனலாம். இந்நூல் பௌத்தப் பிக்குகளுக்கான அறநெறிகளை எடுத்துரைக்கும் நூலாக இருப்பினும், சில கருத்துக்களால் எல்லா மக்களுக்குமான அறநெறிகளையும் வலியுறுத்தி வழிகாட்டும் நூலாகவும் திகழ்கிறது. எனவே, காலம், நாடு, மொழி என எல்லா எல்லைகளையும் கடந்து என்றென்றும் வழிகாட்டும் நூலாகத் தம்மபதம் விளங்குகிறது என்பதை இந்த கட்டுரை ஆராய்கிறது.

தம்மபதம்

buddha 274புத்தரின் போதனைகள் சுத்தபிடகம், வினயப்பிடகம், அபிதம்ம பிடகம் என்ற திரிபிடகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள், சுத்த பிடகத்தில் உள்ள ஐந்து பகுதிகளில் குத்தகை நிதானம் என்ற பகுதியில் தம்மபதம் அமைந்துள்ளது. இந்நூல் 26 இயல்களையும் 423 பாடல்களையும் கொண்டுள்ளது இந்நூல், பௌத்த சமய புழக்கத்தில் பிற எல்லா நூல்களையும் விடவும் அதிகமான வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உரிய நூலாகத் திகழ்கிறது. பௌத்த சமய புழக்கத்தில் மட்டுமின்றி பௌத்த சமயத்தின் அறநெறிகளை அறிந்துகொள்ள விரும்பும் எவரும் தெரிவுசெய்து படிக்கும் முதன்மையான நூலாகவும் இந்நூல் விளங்குகிறது. இதிலிருந்து மனித குல வாழ்வியல் ஒழுகலாறுகளை என்றென்றும் செம்மைப்படுத்தும் நூலாகத் தம்மபதம் உள்ளது என்பதை அறிய முடிகிறது.

இன்றைய வாழ்வியல் போக்குகளும் அறநெறிகளின் தேவையும்

காலந்தோறும் மனித குல வரலாற்றின் நெடுகிலும் அறநெறிகளின் தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் அறநெறிகளின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும். மனிதன் உணர்வுகளால் ஆனவன். சில நேரங்களில் நல்லுணர்வுகளுக்கு உட்படும் மனிதன் பல நேரங்களில் தீய உணர்வுகளுக்கு ஆட்பட்டு விடுகிறான். உணர்வு வெள்ளம் அந்தவாறு அடித்துச் சென்று விடுகிறது. எனவே, உணர்வில் சமநிலை தேவையாய் இருக்கிறது. உணர்வின் ஓட்டத்தோடு ஓடி விடாமல் நின்று நிதானித்து நன்றின்பால் உய்க்கும் அறிவின்பால் உணர்வை நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது. இவ்வாறு, அறிவின்பால் உய்ப்பதற்குத்தான் அறநெறிகள் தேவையாய் இருக்கின்றன. இத்தகைய அறநெறிக் கோட்பாடுகளைக் காலந்தோறும் பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், துறவிகள் முன்வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்றைய வாழ்வியல், பொருளியல் வேட்கை மிகுந்ததாய் உள்ளது. பொருளியல் சேர்க்கையை அதிகப்படுத்திக் கொள்வதே வாழ்வின் முதன்மை நோக்கமாகக் கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவு, சுரண்டல், திருட்டு, கொலை எனச் சமூகக் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. சட்டங்களால் இவற்றைக் கட்டுப்படுத்தலாமே ஒழிய முற்றிலுமாக ஒழித்து விட முடியாது. இந்த இடத்தில்தான் அறநெறிகளின் தேவை வருகிறது. மன உணர்வுகளைப் பண்படுத்தாமல் இந்தச் சிக்கல்களைத் தீர்க்க முடியாது. எனவே, மனதைப் பண்படுத்தும் அறங்களைச் சொல்லிக் கொண்டே வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது.

காலந்தோறும் அறநெறிகளைச் சொல்லிவந்த ஆட்கள் மாறி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லிவந்த அறநெறிகளின் அடிப்படைகள் மாறவில்லை. சான்றாக, 'திருடாமை' என்கிற அறநெறியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை வலியுறுத்தியதாக அறிஞர்களோ அறநூல்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். ஏனென்றால், மனித குலத்தின் வரலாற்று நெடுகிலும் நேர்முக, மறைமுகத் திருட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. எனவே, திருட்டு என்பது ஒழிகிறவரை திருடாமை என்கிற அறநெறி சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். அதேபோல், பாலியல்சார் ஒழுக்கக்கேடுகள் நடந்தவண்ணமே இருக்கின்றன. இவற்றை நெறிப்படுத்துவதற்கான அறநெறிகளும் காலங்காலமாகச் சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன.

எனவே, ஒழுக்கக் கேடுகள் இரண்டு வகைப்படுகின்றன: 1. பாலியல்சார் ஒழுக்கக் கேடுகள் 2. பொருளியல்சார் ஒழுக்கக் கேடுகள். இவை இரண்டையும் மையப்படுத்தியவையாகத்தான் அனைத்து அறநெறிக் கோட்பாடுகளும் விளங்குகின்றன. இன்றைய வாழ்வியல் போக்குகளும் இத்தகைய அறநெறிகளின் தேவையை எதிர்நோக்கி உள்ளனவாகவே இருக்கின்றன.

இன்றைய நல்வாழ்க்கைக்கு தம்ம பதம்

இன்றைய நல்வாழ்வுக்கும் வழிகாட்டும் அறநூலாக தம்மபதம் விளங்குகிறது என்பதைப் பல்வேறு அறிஞர்கள் தங்கள் நூல்களிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைத்துள்ளனர். சோனாலி சக்கரவர்த்தி என்ற ஆய்வாளர் "Understanding the rele­vance of dhammapada in modern mind : A conceptual study " என்ற தனது ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுவதாது: "இன்றைய நமது உலகம் முரண்பாடுகள், அமைதியின்மை, ஒருமைப்பாட்டின்மை ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் மனக்குழப்பத்துடன் வாழ்கிறார்கள். சகிப்புத்தன்மை­யின்மை தனி மனிதனையும் சமூகத்தையும் பேரழிவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. மன அழுத்தமும் தனிமையும் இன்றைய உலகின் பிரச்சனைகளில் முதன்மையிடம் வகிக்கின்றன. இன்றைய மத வெறுப்பும் பிரச்சனைகளுக்கான மூலமாய் விளங்குகிறது. நாம் நமது மதம், நமது கருத்துக்கள், நமது பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பிறர்மீது திணிக்கிறோம். நமது மனக்கட்டமைப்பு பன்மைத்துவத்தை (வேறுபாடுகளை) ஏற்பதில்லை. இதனாலேயே நாம் சரியான முடிவுகளை எடுப்பதில்லை. இதன் விளைவால் முரண்பாடுகளும் அமைதியின்மையும் எங்கும் நிலவ காண்கிறோம். ஆகையால், இன்றைய சூழலில் உள்ளத்தின் ஒழுக்கங்களான மனித நேயம், அன்பு, தொண்டு ஆகியவற்றை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உள்ளது. இவற்றைத் தம்மபதத்தின் பாடங்களின் வழியாக நாம் பெற முடியும்." (மொழிபெயர்ப்பு கட்டுரையாளருடையது) (ENSEMBLE - A bi-lingual peer reviewed academic journal, ISSN 2582 -0427 (online), Vol.2, No.2, Sep.2020, P. 311)

மன அடக்கம்

ஐம்புலன்களின் கொள்கலம் 'மனம்.' ஐம்புலன்களும் கட்டுப்படுத்தப்படாமல் போய்விட்டால் மனம் கட்டுப்பாடற்றுப் போய்விடுகிறது. மனம் கட்டுப்படாவிட்டால் செயல்கள் தீய செயல்களாக ஆகிவிடுகின்றன. செயல்கள், தீய செயல்கள் ஆகிவிட்டால் தனிமனிதச் சீரழிவில் தொடங்கிச் சமூக சீரழிவில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. இத்தகைய வாழ்வியல் தீமைகளுக்கெல்லாம் /ஒழுக்கக்கேடுகளுக்கெல்லாம் முதன்மையான காரணமாக இருப்பது மன அடக்கமின்மையே. எனவே மன அடக்கமே வாழ்வியல் நிறைவுகளுக்கெல்லாம் முதன்மையாக விளங்குகிறது. இதனால்தான், தம்மபதம் எடுத்த எடுப்பிலேயே மன அடக்கத்தைப் பற்றி பேசுகிறது:

" எண்ணங்கள் (தர்மங்கள் அல்லது சேதஸிகங்கள்) மனதில் இருந்தே உண்டாகின்றன. அவைகளுக்கு மனதே முதன்மையானது. எண்ணங்கள் மனதினாலே உண்டாக்கப்படுகின்றன. ஆகையால், ஒருவன் தீய எண்ணங்களோடு பேசினாலும் சரி, தீய செய்கைகளைச் செய்தாலும் சரி அவற்றினால் உண்டாகும் துக்கங்கள் இழுத்துச் செல்லப்படும் எருதுகளைப் பின்தொடர்ந்து போகும் வண்டிபோல அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி தொடர்கின்றன." ( த.ப.1 )

"எண்ணங்கள் மனத்திலிருந்தே தோன்றுகின்றன. எண்ணங்களே முக்கியமானவை. அவை மனத்தினாலே உண்டாக்கப்படுகின்றன. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும் சரி, செய்தாலும் சரி. அவற்றினால் உண்டாகும் நன்மைகள் எப்போதும் நீங்காத நிழல்போன்று அவனைப் பின்தொடர்கின்றன" (த.ப.2)

"அடக்கி ஆள்வதற்கு அருமையானதும் தன் போக்குப்படியே சஞ்சரிக்கிறதுமான மனத்தை அடக்குவது நல்லது. அடக்கி ஆளப்படுகிற மனமானது சந்தோஷத்தைத் தருகிறது."(த.ப.35)

"வைரம் கொண்டவன் தன்னால் வெறுக்கப்பட்டவனுக்குத் தீமை செய்வதைவிட அதிகமாக, அல்லது பகைவனுக்குப் பகைவன் தீமை செய்வதைவிட அதிகமாக அடக்கியாளப்படாத மனமானது பெருந்தீங்கைச் செய்கிறது."(த.ப.42)

இப்படி மனஅடக்கம் எவ்வளவு தேவையானது என்பதைத் தம்ம பதம் விரிவாக அழுத்தமாக எடுத்துரைக்கிறது. 'பகைவனுக்குப் பகைவன் செய்யும் தீங்கைவிட அதிகமான தீங்கை அடக்கப்படாத மனம் செய்கிறது' என்ற விளக்கம் ஆழ்ந்து நோக்கத்தக்கது. எனவே, ஒரு மனிதன் தனக்கான நன்மையைத் தானே அமைத்துக் கொள்வதற்கு முதலில் மனத்தை அடக்கி ஆளக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது. மன அடக்கம் வந்துவிட்டால் புத்தர் கூறியுள்ள நால்வகை வாய்மை அறிந்து பஞ்ச சீலங்களைக் கடைப்பிடித்து ஒழுகும் அட்டாங்க மார்க்க நல்வாழ்க்கையைப் பெற முடியும் என்பது திண்ணம்.

நட்பு ஆராய்தல்

மனதை அடக்குதல் தனக்குத்தானே செய்துகொள்ளும் நன்மை. தனக்குள்ளேயே செய்துகொள்ளும் நன்மை. அதேபோல், புறத்திலிருந்து வரும் ஒன்றை ஆராய்ந்து தேர்ந்துகொள்ளுதல்தான் 'நட்பு ஆராய்தல்.' ஒருவன் தான் மட்டும் நல்லவனாய் இருந்துகொண்டு தன்னைச் சார்ந்து இருப்பவர்களைக் கெட்டவர்களாகக் கொண்டிருக்க முடியுமா...?! அவ்வாறு இருப்பின் அது மனமுரண் அல்லவா...?! நல்லவனாக இருக்கும் யாரும் நல்ல நண்பர்களை மட்டுமே கொண்டிருக்க முடியும். ஒரு வேளை, ஆராயாமல் தீய நண்பர்களோடு நட்பு கொண்டு விட்டால் அவனுடைய வாழ்க்கையின் அழிவை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது. எனவே, நட்பு ஆராய்தல் என்பது மன அடக்கத்திற்கு நிகரானது; தேவையானது. மனித நல்வாழ்வியலுக்கு என்றென்றும் தேவையான இந்த நட்பு ஆராய்தல் பற்றித் தம்மபதம் எடுத்துரைத்து உள்ளது:

"மூடர், அறிஞருடன் தம் வாழ்நாள் முழுவதும் பழகினாலும் அகப்பை குழம்பின் சுவையை அறியாததுபோல அவர் தம்மத்தை அறியாமல் இருக்கிறார்." (த.ப.64)

"அறிவுள்ளவர் ஞானிகளுடன் சிறிது நேரம் பழகினாலும் நாவானது குழம்பின் சுவையை அறிவதுபோல அவர்கள் உடனே தர்மபோதனையை அறிந்துகொள்கிறார்கள்." (த.ப.65)

"குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால் அவரைச் செல்வப் புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறவர் எனக் கருதி அவரோடு நட்பு கொண்டு பழக வேண்டும்."(த.ப.65)

"தன்னந்தனியே வாழ்வது நல்லது ; மூடர்களின் நட்பு கூடாது."(த.ப.330)

"துன்பம் அடைந்த காலத்தில் உதவி புரியும் நண்பர்களையும் பெறுவது மகிழ்ச்சிக்குரியது."(த.ப.331)

மூடர்களோடு ஒருநாளும் நட்பு கொள்ளக் கூடாது அறிவுள்ளவர்களோடு நட்பு கொள்ள வேண்டும் நம் குற்றங்களை சுட்டிக்காட்டி திருத்துபவர்களோடு நட்பு கொள்ள வேண்டும் உதவி புரியும் நண்பர்களை பெற வேண்டும் என்ற வழிகாட்டல்களைத் தம்ம பதம் தருகிறது. இத்தகைய வழிகாட்டலின்படி நட்பாராய்தல் மேற்கொண்டால் நல்வாழ்வியலை அமைத்து இன்பமான வாழ்க்கையைப் பெறலாம் என்பது தெளிவாகிறது.

ஒழுக்கத்தின் மேன்மை

ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்தி அதன்படி மனித சமூகத்தை வாழ வைப்பதையே நோக்கமாகக் கொண்டது தம்மபதம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம்; பணம், பொருள், சொத்து சேர்த்தால் போதும் என்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது இன்றைய சமூகம். இப்படித் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் ஒழுக்கத்தை நிலை நாட்டுவது என்பது பெரும் சவாலான ஒன்றாகும். ஆனாலும் காலங்காலமாக இத்தகைய சவாலான செயலை நல்லோர் சிலர்; அறிஞர் சிலர்; ஞானிகள் சிலர் செய்துகொண்டே இருப்பதால்தான் கொஞ்சமேனும் நல்லனவற்றை இன்றும் காணமுடிகிறது. இத்தகைய செயலைத் தம்பதமும் செய்கிறது:

"ஒழுக்கங்களுடன் தியானத்தைச் செய்கின்ற ஒருவருடைய ஒருநாள் வாழ்க்கையானது, ஒழுக்கங்கெட்ட, மானத்தை அடக்க மனத்தை அடக்காத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது." ( த.ப.110 )

 "மன அடக்கம் இல்லாத அஞ்ஞானமுடைய ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட ஞானமும் தியானமும் உள்ள ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மை உடையது." ( த.ப.111)

இவை துறவிகளை நோக்கிச் சொல்லப் பட்டிருந்தாலும் நல்ல மனிதர்களாக வாழத் தரப்படுகிற எல்லோருக்கும் பொருத்தமானவையே.

நீயே உனக்குத் தலைவன் / வழிகாட்டி

எந்த ஒரு தனி மனிதனும் தன்னைத் தானறிதல் மூலமாகத்தான் வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுபட முடியும். மற்றவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாமே ஒழிய தானாக உணராமல் எந்த மாற்றமும் வராது. எனவேதான், புத்தர், ‘நீயே உனக்குத் தலைவன்' என்கிறார்.

"நீயே உனக்குத் தலைவன். உன்னையன்றி வேறு யார்தான் உனக்கு தலைவராகக் கூடும்? ஒருவர் தம்மைத் தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொண்டால் அவர் பெறுவதற்குரிய தலைவரைப் பெற்றவராவார்".(த.ப.160)

இங்கும் மன அடக்கமே முதன்மையானதாக வலியுறுத்தப்படுகிறது. மனதை அடக்கி நல்லொழுக்க நெறி நின்றால்தான் துன்பங்களிலிருந்து விடுபட முடியும். இதை ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குத் தானாகவே செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார் புத்தர்.

"நீயே ஊக்கத்தோடு முயற்சி செய்ய வேண்டும் புத்தர்கள் வழியை மட்டும் காட்டுவார்கள்." (த.ப.276) ஏனெனில்,

"ஒருவர் இன்னொருவரை சுத்தம் செய்ய முடியாது " (த.ப.165 ) என்கிறார். எனவே,

"மனத்தை ஒருநிலைப்படுத்துவதாலே (யோகத்தினாலே) ஞானத்தைப் பெறலாம். மனத்தை ஒருநிலைப்படுத்தாவிட்டால் ஞானத்தைப் பெற முடியாது" (த.ப.282 ) என்றும் தம்மபதம் வலியுறுத்துகிறது.

மனதை அடக்கி நற்செயல்களைப் பெருக்கித் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு நட்பு ஆராய்தல்வழி நல்ல நட்புகளைப் பெற்றுவிட்டால் தானும் தான் சார்ந்த சமூகமும் மேம்பட்டதாக ஆகிவிடும். இவ்வாறான சமூகத்தில் ஒழுக்கத்தின் மேன்மை பின்பற்றிப் போற்றப்படும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.இத்தகைய நிலை உருவாகிவிட்டால் ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே வழிகாட்டியாய்....தலைவராய்த்...திகழ்வார்கள். இவைதாம், என்றென்றும் வழிகாட்டும் தம்மபதத்தின் அறநெறிகளாகத் திகழ்கின்றன. எனவே தனி மனிதர்களின் ஒழுக்க மேம்பாடுகளாலேயே ஒரு சமூகம் மேம்பட்ட சமூகமாக மாற முடியும் என்பது தம்ம பதத்தின் அறநெறி நோக்குநிலையாகும்.

பயன்பட்ட நூல்கள்

குறிப்பு : இந்தக் கட்டுரை சென்னை, பச்சையப்பன் கல்லூரியின் தத்துவத் துறையில் 2022 ஜூலை 27,28 இல் நடைபெற்ற பௌத்தப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் பிடிக்கப்பட்டது.

- முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர் - தலைவர், தமிழ்த்துறை இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி, செங்கல்பட்டு.