“சமூகநிலை மாறாமல் பொருளாதார நிலையில் மாற்றம் குறித்து எனக்கு நம்பிக்கையில்லை”

- தந்தை பெரியார்.

பேராசிரியர்கள் கி.கலையரசன் மற்றும் வி.விஜயபாஸ்கர் இருவரும் எழுதி வெளியாகியுள்ள “திராவிட மாதிரி - தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரம் குறித்து விளக்கமளித்தல்” (The Dravidian Model - Interpreting the Political Economy of Tamil Nadu) நூல், திராவிட இயக்கத்தின் சமூக நோக்கு மற்றும் அரசியல் பொருளாதாரம் குறித்து ஒரு விரிவான விளக்கத்தை முன்வைத்துள்ளது. இது இதற்கு முன்பு இந்தியாவில் பொருளாதார நூல் எதுவும் பெறாத அளவிற்கு கவனத்தைப் பெற்றுள்ளது. இந்திய, வெளிநாட்டு அரசியல் பொருளாதார நிபுணர்களைத் தாண்டி அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஏன் தமிழக முதல்வர் அவர்களையும்கூட அது குறித்துப் பேச வைத்துள்ளது. ‘திராவிட மாடல்’ எனும் பதம் பரவலான பேசு பொருளாய் மாறியுள்ளது. பெரும்பாலும் விதந்தோதப்பட்டாலும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

திராவிட இயக்கத்தின் அரசியல் மற்றும் தத்துவம் குறித்து பல ஆய்வுகள் மற்றும் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ள போதிலும் பொருளாதார வளர்ச்சியிலும் அத்துடன் இணைந்த சமூக மேம்பாட்டிலும் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பொருட்படுத்தக் கூடிய நூல்கள், அனைவரும் வாசிக்கும் வண்ணம் எழுதப்படவில்லை. அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் விதமாக இந்நூல் வந்துள்ளது. திராவிட இயக்கம் எவ்வாறு அடித்தட்டு சாதிப் பிரிவினரை கல்வி மற்றும் வேலைவாய்ப்புடன் தொழில் முனைவோர் தளத்திற்கும் கொண்டு வந்துள்ளது; அதன் மூலம் எவ்வாறு தமிழ்நாட்டின் சமூகம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தியது என்பதை ஆதாரங்களுடன் இந்நூல் விளக்குகிறது. திராவிட இயக்கம், நீதிக்கட்சி தொடங்கி நூற்றாண்டு கால வரலாறு மற்றும் 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாக உள்ளது. சாதிய அடிப்படையிலான சமத்துவமற்ற நிலைமைகளில் மேலே சொன்ன வளர்ச்சியை சாத்தியமாக்கியுள்ளது. அதற்கான அரசியல் அணி திரட்டல் குறித்தான மிகவும் கட்டாயமாகத் தேவைப்படும் ஆய்வை நூல் நடத்தியுள்ளது. தமிழ் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு பங்களிப்பு செய்த அரசியல் மற்றும் சமூக-பொருளாதார நோக்குகள் பற்றிய கோட்பாட்டை வரையறை செய்துள்ளது. அதன் மூலம் உலகின் தெற்குபகுதிகளில் வளர்ந்து வரும் உபதேசியங்களின் இலக்கியங்களுக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.

the dravidian model“படிநிலை அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவும் நாடுகளில், உதாரணமாக சாதி-மாறாத நிலையாக இருப்பதுடன் அந்த நாடுகள் தங்களை நவீனப்படுத்தும் போது புதிய இன்னும் அதிகமாகும் ஏற்றத்தாழ்வுகளுக்கான முக்கிய ஆதாரமாகவும் விளங்குகின்றது. இந்தப் பிரதேசங்களில் மூலதன குவியல், அரசின் செயல்கள், அடையாளங்கள் அடிப்படையில் அரசியல் அணிதிரட்டல் மற்றும் வளர்ச்சிக்கான பாதை இவைகளுக்கிடையிலான தொடர்புகளை வரைவது மிகவும் முக்கியம்”. பிக்கட்டி (2020).

பிக்கட்டி கூறுவது போல பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வரும் இந்தியாவில் தேசிய இனங்களின் மத்தியில் பொருளாதாரத்திலும் மற்றும் சமூகநிலைகளிலும் உள்ள வேறுபாடுகள் பெரும் சவாலாக தொடர்கிறது. பொருளாதார வளர்ச்சி அதிகமுள்ள மாநிலங்கள் மனிதவள மேம்பாட்டில் பின்தங்கியுள்ளன. மனிதவள மேம்பாட்டில் முன்னேறிய சில மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. இந்த இரண்டு நிலைகளுக்கும் மாறாக தமிழ்நாடு உயர்ந்த அளவில் வளர்ச்சியையும் மற்றும் மனிதவள மேம்பாட்டினையும் சாத்தியமாக்கியுள்ளது. அத்தோடு இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில் இருப்பதிலேயே தமிழ்நாட்டில்தான் ஏற்றத்தாழ்வுகள் குறைவு. ஏற்றத்தாழ்வை அளவிடும் கிணிக் குணகம் (Gini Coefficient) தமிழ்நாட்டில்தான் குறைவு.

இந்தியஅரசு அரை கூட்டாட்சி முறையிலானது. விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வியை உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு ஆகிய முக்கிய துறைகள் உபதேசிய மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ளன. மாநில அரசுகளின் பொறுப்பின் ஊடாகவே வளர்ச்சியில் பிரதேச ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கல்வி மற்றும் சுகாதாரத் தளங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டது. தமிழ் நாட்டின் சிறப்புத்தன்மைக்கான காரணம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய மூன்று வளர்ச்சிப் போக்குகள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஒன்று பொருளாதர வளர்ச்சிப் போக்கு மற்றும் துரிதமான மூலதனக் குவியல். இரண்டாவது வளர்ச்சியை நிர்வகிக்க வேண்டிய அரசியல் கட்டாயம். மூன்றாவது மாநில அளவிலான அரசியல் அணி திரட்டல். இவை எப்படி நடந்தன என்பதை நூல் விளக்குகின்றது.

வறுமை ஒழிப்பு

1960களில் மிகவும் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது. குறிப்பாக கிராமப்புறத்தில் வறுமை நிலை இந்திய சராசரி 38.2% என்ற நிலையில் மாநிலத்தின் வறுமை நிலை 51.7% ஆக இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் வறுமைநிலையில் பெரும் மாற்றம் அடைந்துள்ளது.தமிழ்நாட்டில் 2011-12ல் கிராமப்புற வறுமை நிலை 15.8% ஆகவும், தலித் மக்கள் மத்தியில் வறுமை நிலை 23.3% ஆகவும் குறைந்துள்ளது. நகர்ப்புற வறுமைநிலை 6.5% ஆகவும், தலித் மக்கள் மத்தியில் 9.3% ஆகவும் குறைந்துள்ளது. ஆனால் ஒப்பீட்டளவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைவிட குறைவாக உள்ளது. கூலி உயர்வுமற்றும் வாழ்வாதார வகையினங்களின் வருமான உயர்வும் கிராமப்புறங்களில் வறுமைக் குறைப்புக்கு காரணம். நகர் புறத்தில் வேலைவாய்ப்புகள், வருமான உயர்வு வறுமை குறைப்புக்கு காரணமானது.

கல்வியை ஜனநாயகப்படுத்துதல்

சாதிய அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீடை பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டம் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது தமிழ்நாட்டின் சமூக நீதிக்கான வரலாற்றின் அடையாளம். அடித்தட்டு சாதி இளைஞர்கள் மத்தியில் உயர்கல்வி பெற விருப்பங்கள் ஒரு நடைமுறையாக எழுவதன் காரணம் என்ன? மற்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் எழாத நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் மிகப்பெரிய அளவில் வெடிக்கின்றது? சமூக நீதிக்கும் மற்றும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கும் கல்வி கற்பதுதான் சிறந்தவழி என்ற எண்ணம் திராவிட தமிழர் பொது உணர்வில் வேர் கொண்டிருப்பது தான் பிரதான காரணம்.

அனைவருக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பது என்ற கொள்கை பூர்வமான தமிழ்நாடு அரசின் செயல் நடவடிக்கைகள் பலனை அளித்துள்ளது. வரலாற்று ரீதியாக கல்வி மறுக்கப்பட்ட அல்லது தடுக்கப்பட்ட சமூக குழுக்கள் இந்த காலகட்டத்தில் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. நவீன பள்ளிக் கல்வி தனது சமூக நிலை குறித்தும் மற்றும் பரந்த உலகைப் பற்றியும் புரிதலுக்கான விழிப்புணர்வை அடித்தள மக்களுக்கு வழங்கியது என்றால் உயர்கல்வி நவீன பொருளாதாரத்தில் பங்கு பெறுவதற்கான அதிகாரமாக பார்க்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் உயர் கல்வி பெறுவதற்கு ஒரு முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழ்நாடு, பல்கலைக்கழக எண்ணிக்கையில் மற்றும் தொழில் நுட்பக் கல்வியில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் உள்ளது உயர்கல்வி குறித்த 2017-18 ஆண்டின் அகில இந்திய அறிக்கை தமிழ் நாட்டில் 18-23 வயதினர் மத்தியில் 48.6% பேரும், 23 வயது தலித் இளைஞர்கள் மத்தியில் 42.1% பேர் உயர்கல்வி பெறுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் உயர்கல்வி பெறுபவர்களின் இந்திய சராசரி 21.8% மட்டுமே உள்ளது.

பயனடையாத விளிம்பு நிலை சமூகக்குழுக்கள் உயர் கல்வியில் பிரதிநிதித்துவம் பெற இடஒதுக்கீடுகள் மாற்றி அமைக்கப்பட்டன.மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20% ஒதுக்கியதன் பயனாக பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் 5 முதல் 6 மடங்கு முன்னேற்றம் பெற்றனர். மிகவும் பின்தங்கிய அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதம் காரணமாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருந்த சமூக நிலையில் பின் தங்கிய முஸ்லீம்களுக்கு 3.5% உள்ஒதுக்கீடு செய்தது. இதன் பலனாக தமிழகத்தில் முஸ்லீம் பட்டதாரிகள் 36% ஆக உயர்ந்தனர். ஆனால் குஜராத்தில் 13% மகராஷ்டிராவில் 16% இந்திய சராசரி 14% மட்டுமே முஸ்லீம் பட்டதாரிகள் உள்ளனர்.

இதன் ஒட்டுமொத்த விளைவாக 2013-14ல் மொத்தமுள்ள பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப உயர்கல்வி மாணவர்கள் 182255 பேரில் பிற்படுத்தப்பட்டோர் 45%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 22%, பட்டியலினத்தோர் 22%, முஸ்லீம் 4% ,அருந்ததியர் 2%. கல்வியில் தேர்ச்சி பெற்றதின் விளைவாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இடஒதுக்கீட்டிற்கும் மேலாக இடங்களைப் பெற்றனர். ஆக மொத்தம் 93% இடங்கள் மறுபகிர்வு செய்ததில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே தனித்துவமானது. தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கிடு அமல்படுத்தப்பட்டது.

சுகாதாரத்தை ஜனநாயகமாக்கல்

இந்தியாவின் சுகாதார திட்டம் அடிப்படையில் மேட்டுக்குடி நலம் சார்ந்தது. நோய் விஷயத்திலும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் அரசு வேறுபாடு காட்டியது. இந்த வேறுபாடுகளுக்கு எதிராக ஒரு வலுவான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்கும் சுகாதாரம் எனபதை உறுதி செய்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

தமிழ்நாட்டில் முதன்முதலில் மால்கம் ஆதிசேஷைய்யா தலைமையில் குறிப்பாக சுகாதார சேவையின் பிரச்சினைகள், மருத்துவ கல்வி ,குடும்ப கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, பொது சுகாதாரம் மற்றும் ஹோமியோபதி குறித்து ஆழமாக ஆராய்ந்து அன்றைய முதல்வர் திரு.கருணாநிதியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் அனைவருக்கும் சுகாதாரம் என்பதை அரசு திட்டமிட்டு அணுகியது.

தமிழ் நாட்டில் 27215 மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற வரையறையில் அமைக்கப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் பிறப்பு விகிதம் 2013ல் 1.7 புள்ளியாகவும், குழந்தை இறப்பு விகிதம் (1000க்கு) 2015ல் 19 ஆகவும், தலித் குழந்தை இறப்பு 2015ல் 23.6 ஆகவும், பேறுகால தாய் இறப்பு 90 ஆகவும் குறைந்துள்ளது. ஒப்பிட்டளவில் இந்திய சராசரி மற்றும் குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களைவிட மிகவும் குறைவு. இதற்கு முக்கிய காரணம் 99% பிரசவங்கள் மருத்துமனைகளில் நடைபெறுவது. குழந்தைகளுக்கு மதியஉணவுத் திட்டம் மற்றும் தாய்சேய் நலம் சார்ந்த நடவடிக்கைகள் ஊட்டச்சத்து குறைபாட்டை வெகுவாக குறைத்துள்ளது.

வட மாநிலங்களில் உயர் சாதிகள் மத்தியில் காணப்படும் சுகாதார குறியீடுகளை காட்டிலும் தமிழ் நாட்டில் தலித் மக்களின் சுகாதாரம் உயரிய நிலையில் உள்ளது. பிறப்பு விகிதம் குறைவதற்கு பெண்களின் கல்வியறிவு மற்றும் திருமண வயதில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணம்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அடிப்படையில் சமூக குழுக்கள் மத்தியில் இருந்து தேவைப்படும் மருத்துவர்களை உருவாக்குதல் மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சமூக குழுக்களில் இருந்து மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்தது. உதாரணமாக தமிழ் நாட்டில் மருத்துவர் நோயாளி விகிதம் 1:9554 இந்திய சராசரி 11082 உபியில் 19962. வரும் காலங்களில் நீட் தேர்வு முறை மருத்துவ கட்டமைப்பிற்கு பெருத்த சேதாரத்தை விளைவிக்கும். தமிழ்நாடு வறுமைஒழிப்பு, கல்வி, சுகாதாரம் தளங்களில் சிறப்பாக செயல்பட்டதற்கான காரணம் கடந்த நூற்றாண்டு தமிழ்நாடு கண்ட சமூக இயக்கங்களில் உள்ளது.

வளர்ச்சியை பரவலாக்குவதும் மூலதனத்தை ஜனநாயகப்படுத்தலும்

1990கள் முதல் முதலீடுகளை திரட்டுவது மாநில அரசின் பொறுப்பிற்கு வந்தது. மாநில அரசுகள் அந்நிய முதலீடுகளை திரட்டுவதற்கும் மற்றும் வர்த்தகத்திற்கும் அயல்நாடுகளுடன் உறவுக்கான சுயேச்சையான முடிவுகள் எடுத்தன.

குஜராத், மகாராஷ்டிரா போல் தமிழ்நாடும் பெரிய அளவில் தொழில் அடித்தளத்தை கொண்ட மாநிலம். கல்வி மற்றும் சுகாதாரத்தின் முதலீடுகள் மூலம் அனைவருக்கும் வளர்ச்சி என்ற பாதையை கொண்டிருப்பதனால் இவ்விரு மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு தனித்துவமாக விளங்குகிறது.

இந்தியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 15.4% தமிழ்நாட்டில் உள்ளன. குஜாராத்தில் தொழில் வளர்ச்சி தமிழ்நாடு போல் பரந்துபட்டதல்ல. குஜராத் மூலதனத்தின் அடிப்படையில் விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்தது. ஆனால் போதுமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்குவதில்லை.

தமிழக தொழிற் வளர்ச்சி நான்கு கட்டங்களில் நடந்தது என நூல் விளக்குகின்றது. முதல் கட்டம் காலனிய ஆட்சிக் காலத்தில் வளர்ச்சியை பரவலாக்கவும் மற்றும் பிரதேசரீதியாக பொருளாதாரத்தை வளர்க்கவும் நவீன தொழிற்சாலைகள் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த கட்டம்.

இரண்டாவது கட்டம் 1947 முதல் 1967 வரையிலான சுதந்திரத்திற்கு பிந்தைய காலக்கட்டம். அப்போது காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சி செய்தது. தொழில் வளர்ச்சியில் மாநில புறக்கணிப்புக்கு எதிராக வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற பிரச்சாரத்தின் மூலம் தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கையை திமுகவும் திராவிடர் கழகமும் தொடர்ந்து முன்னெடுத்தன. அரசியல் நிர்பந்தத்தின் விளைவாக ‘ஒன்றிய அரசு’ சில பொதுத்துறைகளை கொண்டு வந்ததுடன் மற்றும் சில தனியார் தொழிற்சாலைகளுக்கும் அனுமதி அளித்தது. இது பரந்த தொழிற்வளர்ச்சிக்கு அடிப்படையை அமைத்தது. பிற மாநிலங்களில் இந்த கோரிக்கைகள் பலவீனமாக இருந்தது பின்தங்கிய நிலைக்குக் காரணமானது.

மூன்றாவது கட்டத்தில் மாநில அளவிலான கொள்கைகள் தொழிற் வளர்ச்சிக்கு உத்வேகமளித்தன. திமுக பதவியில் இருந்த 1967-76 ஆண்டுகளில் TIDCO  மற்றும் SIDCO ஆகிய இரண்டு தொழில்வளர்ச்சி நிறுவனங்களை நிறுவியது. முதல் கட்டமாக தனியாருடன் இணைந்து 1971ல் SPIC உரத்தொழிற்சாலை தூத்துக்குடியில் நிறுவப்பட்டது. பல மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகளையும் அதனைச் சுற்றி சிறு தொழில்களையும் நிறுவியது. நலிவடைந்த நூற்பு தொழிற்சாலைகளை ஏற்று நடத்திட தமிழ்நாடு ஜவுளிக் கழகம் உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவிலும் மற்றும் சிறு அளவிலும் விசைத்தறி தொழில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. பால் உற்பத்தியாளர் நலனுக்காக தமிழ்நாடு பால் உற்பத்திக் கழகம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் 1981ல் அமைந்தது. விவசாயம் சாரா தொழிற்வளர்ச்சியில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வந்தது. 1960களில் 2.1% (ஜிடிபி) ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 1980களில் 4.9% ஆக உயர்ந்தது.

நான்காவது கட்டம் பொருளாதார சீர்திருத்த காலக்கட்டம். மாநில அரசுகள் நேரடியாக முதலீடுகளை திரட்டுவதற்கு வழி வகுத்ததினால் வளர்ச்சியில் வேகப்பாய்ச்சலை கண்டது. பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிறகு ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2000 - 2014 ல் 8.4% ஆக அதிகபட்ச உயர்வினை கண்டது. 1980களில் தமிழகத்தினுடைய வளர்ச்சி விகிதம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. ஆனால் 1990 களில் பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிறகு மகாராஷ்டிராவின் வளர்ச்சியோடு ஒப்பிடும் அளவிற்கு 8.4%ஆக ஜிடிபி வளர்ச்சி அடைந்தது. இந்த வளர்ச்சி பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் அத்துடன் பிரதேசங்களையும், வேலைவாய்ப்பையும், தனிநபர் வருமான உயர்வையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியாகும்.

கடந்த 15 ஆண்டுகளில் ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளனர். இந்தியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் சென்னையைச் சுற்றி அமைந்துள்ள மோட்டார் வாகனங்கள் தயாரிக்கும் உலகின் பெரும் நிறுவனங்களின் மொத்த பங்களிப்பு இந்தியளவில் 35%. பொதுவான வளர்ச்சியுடன் மென்பொருள், மருத்துவம் மற்றும் கல்வி சேவை நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தன. தமிழ்நாடு அரசினுடைய ஊக்கமான செயல்பாடுகளே இவர்களுடைய முதலீடுகளுக்கு காரணம்.

தமிழ்நாட்டில் மூலதனம் திரட்டலில் சமூக ரீதியாக அனைவரும் உள்ளடக்கிய ஜனநாயக போக்கு வெளிப்படுகிறது. மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 45,83,191 தனியார் நிறுவன உடமையாளர்கள் சாதிவாரியாக தலித் மற்றும் பழங்குடியினர் 14.1%, பிற்படுத்தப்பட்டோர் 68.2%, உயர்சாதி பிரிவினர் அல்லது மேட்டுக்குடியினர் 17.7%. தமிழ்நாட்டில் பெரிய நிறுவனங்களில் தலித் உடைமையாளர்கள் 5.8% பிற்படுத்தப்பட்டோர் 67.4%.பொதுவாக இந்தியாவில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உட்பட வர்த்தக நிறுவனங்கள் உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது தமிழ்நாட்டில் தலித் உடமையாளர் பங்கு சற்று குறைவாக இருந்தபோதிலும் அடித்தட்டு சாதிகள் வகிக்கும் பங்கு என்பது அதிகரித்துள்ளது என்பதை நூல் கோடிட்டுக் காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சியையும் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சியையும் ஒரு சேர இணைக்கும் சக்தி தமிழகத்தில் உள்ள மனிதவள முதலீட்டில் உள்ளது. வளர்ச்சி மேம்பாடு ஆகியவை அனைவருக்குமானதாக இருக்கும் தன்மை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகம் என்பதைக் கூறும் நூல் இதுதான் திராவிட மாடலின் இதயம் என்பதைச் சரியாகவே நிறுவுகின்றது.

மொத்த உற்பத்தியில் விவசாயம் 8%க்கும் கீழாக பங்களிக்கிறது. தேசிய சராசரியில் பாதிக்கும் கீழாக உள்ளது.1960-2011வரையிலான 50 ஆண்டு காலங்களில் மக்கள் தொகை 7.2 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் விவசாய உற்பத்தியும் 2.21 மடங்கு அதிகரித்து உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்து உள்ளது. மொத்தத்தில் இந்த வளர்ச்சியும் அதன் தன்மையும் திராவிட மாடலின் சாதனை என நூல் கூறுவதை நாம் ஏற்காமல் இருக்க முடியவில்லை.

கிராமப்புற உறவுகளில் அடிப்படை மாற்றங்கள்

அனைத்து கிராமங்களின் ஆய்வுகள் பெரும் பரப்பளவிலான நிலங்களைக் கொண்ட நிலக்குவியல் தகர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. தலித் விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 93-94ம் ஆண்டில் 6.5% ஆக இருந்தது 2017-18ம் ஆண்டில் 13% ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை தலித் அல்லாதவர்கள் விவசாய குடும்பங்கள் 25% லிருந்து 17% ஆக குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விவசாய நில (குத்தகை பதிவேடு) சட்டம் 1969, பாரம்பரியமான கிராம கணக்குப்பிள்ளை முறையை ஒழித்தது ஆகியவையெல்லாம் கிராமப்புறங்களில் சமூக மாற்றத்திற்கான காரணமாக நூல் எடுத்துக்காட்டுகின்றது.

கிராமங்களில் வேலைவாய்ப்புகளில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராமங்களில்1993-94 - 2017-18 இடையிலான 25 ஆண்டுகளில் விவசாயத்தில் இருந்து 62 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். கிராமப்புறங்களில் மொத்த தொழிலாளர்களில் 1993-94ல் 70% மாக இருந்த விவசாய தொழிலாளர்கள் 2017-18ல் 42%மாக குறைந்துள்ளனர்.கிராமங்களில் விவசாய குடும்பங்கள் 13% மட்டுமே உள்ளனர் என நபார்டுவங்கி 2016-17 ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது. விவசாயம் சார்ந்த, கிராமப்புற வருமானத்தில் விவசாயம் 42.5%பங்களிக்கின்றது. விவசாய பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்த போதிலும் விவசாய கூலி உயர்ந்து உள்ளது. 2017ன் கூலிக்கான புள்ளிவிவரங்கள் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் இருப்பதைக் காட்டுகின்றது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கிராமப்புற உழைப்பு சந்தை நகர்ப்புற உழைப்பு சந்தையுடன் குறிப்பிடத்தக்க வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் சாதி ரீதியாகவும் அனைவரையும் உள்ளடக்கியது. இதன் பலனாகத் தமிழ்நாட்டில் விவசாயத்தில் ஈடுபடும் தலித் குடும்பங்கள் 37% மாக குறைந்தது. ஆனால் இன்றும் குஜராத்தில் 68% மற்றும் மகாராஷ்டிராவில் 57% தலித் பிரிவினர் விவசாயம் சார்ந்தே உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. 1993-94ல் 71% இருந்த தலித் விவசாய தொழிலாளர்கள் 2017-18ல் 24%மாக குறைந்துள்ளனர். தலித் அல்லாத விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் 32% சதவீதத்திலிருந்து 16%மாக குறைந்துள்ளது. தலித்துகள் விவசாயத்தை விட்டு வெளியேறி விவசாயம்சாரா வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர் என்பது வெளிப்படுகிறது.

பொது விநியோக முறையையும் கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தையும் செயல்படுத்துவதில் மாநிலம் திறன் வாய்ந்தது. தமிழகத்தில் அதிக அளவில் பெண்களுடைய பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதிய அடிப்படையில் வேலைகளில் கட்டப்பட்டிருந்த அடித்தள மக்களை விடுவிப்பது என்ற திராவிட இயக்கத்தின் நோக்கத்தை இந்த மாற்றங்கள் வெளிப்படுத்துகிறது.

50 ஆண்டு கால புள்ளி விவரங்களின் அடிப்படையில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் மாநிலத்தின் செயல்திறனை மற்ற பொருளாதார ரீதியில் துரித வளர்ச்சி அடையும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஒப்பிட்டு தமிழ் நாடு வளர்ச்சி, வருமானம், வறுமை ஒழிப்பு மற்றும் அடிப்படை மாற்றங்களில் சிறப்பான சாதனை செய்துள்ளது என்பது நிறுவப்படுகிறது.

அரசியல் அணி திரட்டல்

இந்த வளர்ச்சிக்கான காரணங்கள் மாநிலத்தில் கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்று கோருகிற கூட்டு நடவடிக்கைகளிலும் உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சாதி அடிப்படையிலான சமூகநீதியை இடஒதுக்கீடுக் கொள்கையாக மாற்றுகின்ற ஒரு வகையான வெகுஜனமக்கள் இயக்கத்திற்குள் உள்ளது.

திராவிட பொதுஉணர்வு என்பது சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, உற்பத்தி முறைகளில் கொண்ட நம்பிக்கை மற்றும் பெரிய அளவிற்கான மாநில சுயாட்சி மூலம் சமூகநீதியை பெறுவதும் மற்றும் அனைவருக்குமான நவீன வளர்ச்சியை உத்தரவாதப்படுத்துவதும் என்பதை உள்ளடக்கியது. இது எவ்வாறு நடந்தது என்பதை நூல் ஏராளமான தரவுகளோடு விவரிக்கின்றது. எதுவும் எளிதாக நடந்துவிடவில்லை; தானாகவும் நடந்துவிடவில்லை. ஒரு அரசியல் இயக்கம் தனது காத்திரமான கருத்தியல் மற்றும் செயல்பாட்டில் கொண்டு வந்தது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுகின்றது.

அரசியல் அதிகாரம் பெறுவதற்கான அணிதிரட்டல் அடிப்படையில் ஆட்சியாளர்களை வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. அதன்படி தமிழ்நாடு, கேரளா மற்றும் மே.வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களும் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை அடித்தட்டுச்சாதிகள் மற்றும் வர்க்கங்களை அணிதிரட்டுவதின் மூலமாக பெற்றார்கள். அடித்தள மக்களின் ஆதரவைப் பெற்ற போதிலும் அது ஒன்று மட்டும் அடைந்த பலன்களை போதுமான வகையில் விளக்கவில்லை. உதாரணமாக மே.வங்காளம் அடித்தட்டு வர்க்கங்களை திரட்டி அதிகாரத்தை பெற்றிடினும் மனிதவள மேம்பாடு தாழ்ந்த நிலையில் உள்ளன. மேலும் ஒரு உதாரணம் பீகார்; ஆனால் அடித்தட்டு சாதிகளை திரட்டி அதிகாரத்தை பெற்றபோதிலும் மனிதவளம் பின்தங்கிய நிலையில் உள்ளது.கேரளாவின் உயர்ந்த மனிதவள குறியீடுகள் ஆனால் உற்பத்தி துறையின் வளர்ச்சியில் இல்லை. மறுபுறத்தில் சமூக ஜனநாயகமற்ற ஆட்சியாளர்கள் உள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வளர்ச்சியில் முன்னேறிய போதிலும் மனிதவள வளர்ச்சி குறியீடுகளில் பின்தங்கியே உள்ளன.

வெகுமக்களின் திராவிட அணிதிரட்டல் அரசியல் அதிகாரத்தையும் சமூக நீதியையும் ஒன்றிணைத்து உருவான கருத்தியல் தனித்துவமான மாநிலத்தின் வளர்ச்சி பாதையை விளக்குகிறது. வர்த்தக நலனுக்கு ஆதரவான மற்றும் சந்தை சார்ந்த பொருளாதார சீர்திருத்த காலத்தில் அடைந்த சாதனை என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

திராவிட மாடல் குறித்த ஆசிரியர்களின் விமர்சனங்கள்

"தமிழ்நாடு குறித்த எங்களது ஆய்வு நோக்கம் அடைந்த பலன்கள் மற்றும் வளர்ச்சிப் பாதை குறித்து விவரிப்பது மட்டுமல்ல .சாதிய படிநிலைக்கு எதிராக அரசியல் அணி திரட்டல் மற்றும் அனைவருக்கும் வளர்ச்சி என்ற வரையறைக்குள் நிறுவனம் ஆக்கப்பட்ட அதன் வரம்புகள் குறித்து ஒரு விவாதத்தை துவங்க வேண்டும் என்ற நோக்கமும் உள்ளடங்கியது” என்ற ஆசிரியர்களின் கூற்றை பாராட்டாது இருக்க முடியவில்லை. அப்படி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டும் சில அம்சங்களைப் பார்க்கலாம்.

வெடிப்புகள், சிதறல்கள் மற்றும் எதிர்காலம்

சில விளைவுகளின் தரம் குறித்து மட்டுமல்லாமல் கட்டமைப்பின் அடிப்படை மாற்றத்தின் பயனை உறுதி செய்வது அல்லது மேம்பட்ட அளவிலான அனைவரின் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றியும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கல்வி

இரண்டு கவலைக்குரிய அம்சங்கள் உள்ளன.ஒப்பிட்டளவில் அரசுப்பள்ளிகளில் சிறந்த முறையில் கல்வி கற்பித்தாலும் ஏழை எளிய மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் தனியார் பள்ளிகளை தேர்வு செய்யும் சூழல். இரண்டாவது உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகமானாலும் கல்வித்தரம் வேறுபடுகின்றது. கல்லூரிகளுக்கு இடையில் உள்ள தரவேறுபாடுகள் கூலியில் சமமற்ற நிலையையும் மற்றும் வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் விதைக்கிறது.

சுகாதாரம்

தமிழ்நாடு வலுவான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பினைக் கொண்டிருந்தபோதிலும் தனியார் மருத்துவச் சேவை வளர்ச்சியிலும், கார்ப்போரேட் மயமாக்கியதிலும் ஒரு முன்னோடியான மாநிலம்.சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளை சில பிரிவினர் சார்ந்துள்ளனர். இது பொதுசுகாதார சேவையின் தரத்தில் வித்தியாசத்தை உணர்த்துகின்றது. இனி அதிக செலவு செய்து நீட் தேர்வில் வெற்றி பெறும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கியே செல்வார்கள்.

தொழிலாளர் நிலைமை

விவசாயத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு வெளியில் வாழ்வாதாரம் கௌரவமிக்கதாக இல்லை. விவசாயத்திலிருந்து வெளியேறும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி வேலைதான் முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது. கூலியில் பாலின வித்தியாசமும் நீடிக்கின்றது. கிராமப்புறங்களில் சாதி அடிப்படையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நகர்புறத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. சாதிய வலைபின்னல் மூலம் உயர்சாதிகள் வேலைவாய்ப்புகளை மூடி மறைக்கின்றனர். கல்வி பெற்றவர்கள் வேலையின்மை அதிகமாக உள்ளது. துடிப்புடன் செயல்படும் உற்பத்தி மற்றும் சேவை துறைகள் உயர்கல்வித் தகுதியுடன் உழைப்புச் சந்தையில் நுழைந்தவர்களை உள்வாங்குவதில் தோல்வி அடைந்துள்ளது. கல்வி கற்றவர்கள் மத்தியில் நிலவும் இத்தகைய சமனற்ற போக்கு திராவிட சமூகக்குழுவில் ஒரு பிளவினை உண்டாக்கியுள்ளது.

சாதிக்குள்ளும் சாதிகளுக்கு இடையிலும் உருவாகும் ஏற்றத்தாழ்வுகள்

திராவிட இயக்கத்தின் முக்கியமான குணாம்சம் ஒரு குறிப்பிட்ட சாதியின் நலன்களைப் முன்னிலைப்படுத்துவதை மறுத்ததுதான். பொதுவான வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு அனைத்து சமூகக்குழுக்களுக்கும் ஏதேனும் அளித்திருந்தாலும் சமமான பலனைக் கொடுக்கவில்லை. அதேபோல பிரதேச ரீதியான வளர்ச்சியிலும், அந்த பிரதேசங்களில் உள்ள சமூகக்குழுக்கள் மத்தியிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. நில உடமையில் தலித் மக்கள் மத்தியில் மறுபகிர்வு இல்லாத நிலையில் நகர்ப்புற வளர்ச்சியில் நிலம் மூலம் கிடைக்கும் மூலதனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மூலதனத் திரட்டல் தலித் மக்கள் நுழைவுக்கு போதுமான வழி ஏற்படுத்தவில்லை.நூற்றாண்டு கால அணி திரட்டலும் மற்றும் 50 ஆண்டு கால ஆட்சி அதிகாரமும் இதர சமூகக் குழுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அளவிற்கு தலித் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்று கருதும் போக்கு திராவிட வெகுஜன செல்வாக்கில் உள்ள வெடிப்பினை வெளிப்படுத்துகிறது.

கல்வியில் அரசின் தொடர்ச்சியான தலையீடுகள் காரணமாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து உருவான செல்வந்தர்கள் திராவிட தமிழர் என்ற அடையாளத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதில்லை. மேலும் அவர்கள் தமிழ் அடையாளத்தை இந்து அடையாளத்துடன் இணைக்க முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள அடித்தட்டு மக்கள் தனிமைப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அரசியல் வளர்ச்சிப் போக்கு

ஒரு பொறுப்புள்ள அரசியல் வளர்ச்சிப் போக்குடன் பல்வேறு அடித்தட்டு சமூகக் குழுக்களில் இருந்து உருவான அதிகார வர்க்கம் திராவிட இயக்கத்தின் நோக்கங்களை செயல்படுத்துவதினை சாத்தியமாக்கியது. ஆனால் அரசு எந்திரம் ஊழலுக்கும் முறையற்ற வழியில் செல்வங்களை பெருக்குவதற்கும் பிரச்சித்தி பெற்றதாக உள்ளது. மணல் குவாரிகள் மற்றும் கனிம வளங்கள் இவைகளில் தங்களுக்கான செல்வங்களை பெறுவதில் ஒரு மையப்படுத்த அதிகாரத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கும் தேர்தல் செலவுகளுக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது வழக்கமாகிவிட்டது. அரசியலில் முதலீடுகள் செய்யும் அளவிற்கு அரசியல் தொழிலாக மாறி விட்டது. கார்ப்போரேட்கள் நிதி அளிப்பதுடன் ரியல் எஸ்டேட் அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் மணல் குவாரி மற்றும் கனிமச் சுரங்கத் தொழிலை சார்ந்திருப்பது விரைவில் மறையாது. சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.

வெகுஜன இயக்கம்: சமத்துவத்திலிருந்து சமனற்ற போக்கில்

2006க்கு பின்னர் நீதிமன்ற தலையீடுகள் மற்றும் வளர்ந்து வரும் தனியார்மய வேலை வாய்ப்புகள் அரசின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதை சாத்தியமற்றதாக்கியது. விவசாயத்திலிருந்து வெளியேறிய உபரி உழைப்பு மூலதனத் திரட்டலின் கூலி உழைப்பாக மாறியது என்றாலும் அனைவரும் பணிப்பாதுகாப்பு உள்ள கூலி உழைப்பாளிகளாக மாறவில்லை. உற்பத்தியில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ மற்றும் தரமான வேலை என்ற பிரச்சினையும் தீர்க்கவோ முடியவில்லை. ஆகவே அனைவருக்குமான நவீன வளர்ச்சி மூலம் சமூக உறவுகளிலும் மற்றும் சாதிய படிநிலையிலும் மாற்றங்கள் செய்வது என்பது பிரதானமாக நவீனத்தின் வரம்புகளில் மீது உள்ளது.

தேசிய அளவில் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றிய அரசு தீர்மானிக்கும் போது அதில் மாநில அரசுகளுக்கு எல்லைகளை மீறிச் செயல்படுவதற்கான வாய்ப்பில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பும் மாநிலங்களுடன் பகிராத செஸ் வரிகளும் மாநிலங்களின் வரி வருவாய் ஆதாரங்களைச் சுருக்கி விட்டது. மாநிலத்தில் பொறுப்பில் உள்ள திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நேரடியாகத் திட்டங்களை அறிவிப்பதும் அதற்கான செலவில் ஒரு பங்கினை மாநிலங்களில் சுமத்துவதும் நிதிநிர்வாகத்தில் ஒன்றிய அரசு மையப்படுத்திய அதிகாரத்தை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. உலகின் தெற்குப் பகுதியில் தேசியஅரசும் மற்றும் உபதேச அரசுகளும் முதலீட்டிற்கான ஆதாரங்களைப் பெறுவதில் அந்நிய முதலீடுகளைத்தான் சார்ந்துள்ளது. உலக மூலதனத்தை சார்ந்துள்ள நிலையில் பல கட்டுப்பாடுகளையும் கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டில் சாதித்தவைகளை மேலும் விரிவாக்கவும் மற்றும் நிரந்தரமாகச் செயல்படுவதற்கான சாத்தியத்தைப் பார்க்க வேண்டும்

நூலைத் தாண்டி...

சாதிய ஏற்றத்தாழ்வுகளை மாற்றுவதற்கு நவீன கல்வியும் தொழிற் வளர்ச்சியும் முக்கியமானது என்ற கருத்தியலில் நவீன வளர்ச்சிக்குத் தடையான நிலப்பிரபுத்துவ சமூகத்தின் சாதிய அடிப்படைகளையும் மற்றும் சாதிய நிறுவனங்களையும் திராவிட இயக்கம் எதிர்த்துப் போராடியது. சாஸ்திரம், மதம் மற்றும் கடவுளின் பெயரால் சாதிய முறையை நியாயப்படுத்தியதை திராவிட இயக்கம் கேள்விக்குள்ளாக்கியது.

திராவிட இயக்கம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உணர்ந்த போதிலும் சமூக நிலை மாற்றத்தை மட்டும்தான் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது. திராவிட இயக்கம் பொருளாதாரம் குறித்து மேம்போக்கானதும் உடனடி செயல்பாடுகள் குறித்ததுமான கருத்துகளையுமே கொண்டிருந்தது. எல்லாப் பிரச்சினைகளையும் மாநில அளவில் தீர்த்துவிட முடியாது என்ற உணர்வு தெளிவாக இருந்ததாகத் தெரியவில்லை. நூலாசிரியர்களும் அதனை குறிப்பிடவில்லை.

மாநில அரசியல் தேவைகளுக்காகத் திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமான சமூகப் பொருளாதார கொள்கைகள் கொண்ட கட்சிகளுடன் விமர்சனமின்றி சேர்வது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான சக்திகள் குறித்து மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பை மழுங்கடிக்கும் என்பதை திராவிட இயக்கக் கட்சிகள் உணரவில்லை; அதனை நூலாசிரியர்களும் உணர்த்தவில்லை.

பருவ கால மாற்றங்கள் ஏற்படுத்தும் சீரழிவுகள் மற்றும் அதிகரிக்கும் கடன் சுமை சூழலில் விவசாய விளை பொருளுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காதது விவசாய நெருக்கடியை ஆழமாக்கி வருகிறது. இது திராவிட இயக்கங்களின் ரேடாரில் இருப்பதாகத் தெரியவில்லை. நூலாசிரியர்களின் ரேடாரிலும் இல்லையோ எனச் சந்தேகம் வருகின்றது.

தாராளமய காலக் கட்டத்தில் பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்தாலும் அது பெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சியாகவே உள்ளது. மூலதனங்கள் வருவதும் போவதுமான நிலையில் தொழிற்சாலைகள் மூடப்படுவதும் புதிய முதலீடுகளைத் தேட வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படுவதும் நடக்கின்றது. சலுகைகள் முடிந்ததும் மூடப்பட்ட நோக்கியா நிறுவனமும் மற்றும் தற்போது மூடப்பட்ட ஃபோர்டு கார் நிறுவனமும் சிறந்த உதாரணங்கள். உலகச் சந்தையின் நிச்சயமற்ற தன்மையால் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக சரிவைச் சந்திக்கின்றன. சிறுதொழில் அரங்கம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உலகச் சந்தையில் ஏற்படும் அதிர்வுகள் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகள், புலிப் பொருளாதாரங்கள் அடைந்த பாதிப்புகளை திராவிட மாடல் அரசுகளும் சரி நூலும் சரி கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை

பொதுத் துறைகளை தனியாருக்கு விற்பதனால் இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை வாய்ப்புக்கள் இனி சாத்தியமற்றது. இந்த நிலைமைகள் மாற்று அரசியல் கோரிக்கைகளை முன் வைக்காமல் மாற்றம் பெற முடியாது. இந்திய அளவில் சமூக நீதிக்கான அரசியல் அணி திரட்டல் இல்லாமல் எதிர்வரும் சமூக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாது. இந்த நெருக்கடியின் பாரதூர விளைவுகள் அடித்தட்டு சாதி மக்கள் மற்றும் அடித்தட்டு வர்க்கங்கள் தோளில்தான் சுமத்தப்படும். இது போதுமான அழுத்தத்தில் கூறப்பட வேண்டும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு

இந்தியாவில் சாதியப் பாகுபாட்டிற்கு எதிரான அணி திரட்டலின் மூலம் அனைவருக்குமான வளர்ச்சியையும் மனிதவள மேம்பாட்டையும் ஒருங்கிணைத்த திராவிட இயக்கத்தின் சித்தாந்தம் மற்றும் அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்கினை ஆக்கப்பூர்வமான வகையில் விமர்சனபூர்வமாக ஆய்வு செய்து அதனை இந்தியா முழுமைக்கும் பொதுவானதாக மாற்றுவதிலும் அதனைத் தாண்டிச் செல்வதிலும் இந்திய இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய கடமை உள்ளது. அந்தக் கடமையில் பேராசிரியர்கள் கலையரசன், விஜயபாஸ்கர் போன்றோருக்கும் ஒரு பங்கிருக்கிறது.

- கே.பாலச்சந்திரன்