கௌதம சித்தார்த்தனின் ‘சங்க கால சாதி அரசியலும்’, ‘முருகன் - விநாயகன் மூன்றாம் உலக அரசியலும்’ அடிப்படையில் அவர் கூறுகின்ற நுண்ணரசியல் கருத்தியலை வெளிப்படுத்தும் கட்டுரைகள். உண்மையில் சொல்லப் போனால் ‘சங்க கால சாதி அரசியல்’ நூலுக்கு அந்தத் தலைப்பைவிட ‘நுண்ணரசியல்’ என்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் தலைப்புக் கட்டுரைக்கும் மற்ற பன்னிரண்டு கட்டுரைகளுக்கும் தொடர்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, நுண்ணரசியல் கருத்தியலைத் தவிர.

gauthama sitharthan 1சொல்லாடலில் தனக்கெனத் தமிழுலகில் இடம் பிடித்த கௌதம சித்தார்த்தன் ‘நுண்ணரசியல்’ என்று எதைக் குறிப்பிடுகிறார்? subtle அல்லது ‘Micro’என்ற ஆங்கிலச் சொல் நுண்ணிய என்று பொருள் தரும். அவற்றோடு அரசியலைச் சேர்ப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. ஆனால் ஆசிரியர் தனது நூலில் இச்சொற்றொடரை மறைவான செயல் திட்டம் அல்லது நோக்கம் (hidden Agenta) என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறார் என்பது தெளிவாகும்.

பதின்மூன்று கட்டுரைகளில் ஆங்கிலத்தில் ஆசிரியர் எழுதிய கடிதத்தை விட்டுவிட்டுப் பார்த்தோமென்றால், மூன்று கட்டுரைகள் வடமொழிக் காப்பியங்கள் சார்ந்த பழங்கதைகளின் மறுவாசிப்பு எப்படி மறைவான ஒரு செயல் திட்டத்தின் வெளிப்பாடாக அமைகின்றது என்பதை விளக்குகின்றன. முதல் கட்டுரை முக நூல்கள் மகாபாரதத்தின் பாத்திரங்களில் நீங்கள் யார் என்று அடையாளப்படுத்திக்கொள்ளச் சொல்லும் ஒரு வேடிக்கை விளையாட்டின் நுண்ணரசியலை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப் படும் கதாபாத்திரங்கள் உயர் மட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தான் என்றும் கடைநிலை மக்கள் கண்டுகொள்ளப் படுவதில்லை என்றும் காட்டி, திராவிடக் கருத்தியலின் இடத்தை இது எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதை விளக்குகிறார். நாட்டார் கலைகளையும், பழங்கதை களையும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் இக்கட்டுரை, தொழில்நுட்பக்காரர்களிட மிருந்து அவற்றைக் காப்பது நமது கடமை என்பதை வலியுறுத்துகிறது. நாம் வெறும் விளையாட்டு என்று கருதுபவற்றிலும் நுட்பமான நோக்கம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார் கௌதம சித்தார்த்தன்.

அடுத்த கட்டுரை மகாபாரதத்தைத் திரும்ப எழுதும் முயற்சியும் ஒரு வகையில் வரலாற்றைத் திருப்பி எழுதும் இந்துத்துவ வழி என்பதை வெளிக்கொண்டு வருகிறது.

குறிப்பாக, சாகித்ய அகாடமி வெளியிட்ட யார்லகட்ட லட்சுமி பிரசாத் என்ற தெலுங்கு நாவலாசிரியர் எழுதிய நவீனத்தின் விமர்சனமாக இக்கட்டுரை அமைகிறது. சாகித்ய அகாடமி வெளியீடுகளும், விருதுகளும்கூட இந்த நுண்ணரசியலில் சிக்கிக் கொண்டிருக்கின்றனவோ?

‘தீபாவளியின் அரசியல்’ என்ற கட்டுரை தீபாவளிக் கொண்டாட்டம் சார்ந்த பழங்கதைகளை ஆராய்கிறது; பல மாநிலங்களிலும் பலவகைக் கதைகள் கூறப்படு வதைக் குறிப்பிடும்போது கதைக்காகத் திருவிழாச் சடங்குகள் வந்தனவா, சடங்குகளுக்காகக் கதைகள் வந்தனவா என்று ஒரு ஐயத்தை நமக்குள் எழுப்புகின்றன. ஆனாலும் பயிர்களைக் காக்க வேட்டுப் போடுவதே உழவர்களின் பெருநாளாக மாறுவதாக ஆசிரியர் சொல்வது கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தாலும் வலிய எடுத்துச் சொல்வதாகத் தோன்றவில்லையா? ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் எல்லாம் அன்றைய மதுரை மாவட்டப் பகுதிகளில் தீபாவளிக் கொண்டாட்டம் அரிதாகவே இருந்தது. வேட்டுச் சத்தமெல்லாம் அதிகம் கேட்காது.

தீபாவளிக் கொண்டாட்டம் முப்பது நாற்பது ஆண்டுகளாகத் தான் பரவலாகி வருகிறது. இது எதனால் ஏற்பட்டிருக்கிறது என்று ஆராய்வது பயனளிக்கும். அதோடு ஆசிரியர் கூறுவது போல, நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள், கொண்டாட்டங்கள் ஆகிய வற்றை அறிவியல்பூர்வமாகச் சேகரித்து ஆய்வு செய்வது அவசியம். புராணக் கதையை வரலாறாக ஆக்கி நரகாசுரனை திராவிடனாகச் சித்திரித்தது. திராவிட அரசியல் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அப்பழங்கதையை திராவிட அரசியல் வரலாறாக ஏன் ஏற்றுக் கொண்டது?

தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு பற்றிய கட்டுரைகள் இரண்டு. தமிழ் மொழியின் வளர்ச்சியைக் கணினியுகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார் கௌதம சித்தார்த்தன். கூகுள் நிறுவனம் கையெழுத்தை அச்சாக மாற்றும் அதிசயச் செயலியை அறிமுகப்படுத்தியிருப்பதைப் பாராட்டு கிறார். பிறகு அதிலிருந்து தாவி, தமிழ் திரைப்படங் களையும், இலக்கியப் படைப்புகளையும் உலகத் தரத்திற்கு உயர்ந்த வழிகளைச் சொல்கிறார். முதலா வதாக தமிழ் மொழிப் “பயன்பாட்டை அனைத்து மொழிகளுக்குமான இணைவில் சாத்தியப்படுத்த வேண்டும். நமது மொழிக் கூறுகளை மற்ற மொழிகளின்; பிரக்ஞை சார்ந்த உறவோடு கலந்துறவாட வேண்டும்” என்று சொல்கிறார். நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு இது புரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் தந்திருக்கலாம்.

அடுத்து, ஆங்கிலத்திலிருந்து அல்லது பிற மொழிகளி லிருந்து, தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் செய்யப்படும் மொழியாக்கங்கள் இதற்கு உதவும் என்று சொல்கிறார். மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார். மும்மொழிக் கொள்கையையா? மொழியியல் அறிஞரும், கணினி வல்லுநரும் இணைந்து மொழியியல் வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது நல்ல யோசனை. மேலும் இன்றைக்குத் தமிழில் தட்டச்சு செய்வது பெரிய இக் கட்டில் கொண்டு போய்விடுகிறது. எத்தனை வகை எழுத்துருக்கள்! ஒன்றில் தட்டச்சு செய்தால் இன்னொன்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆங்கிலத்தில் போல ஒரு எழுத்துரு (font)-ஐ உருவாக்கினால் என்ன?

அடுத்து ‘சங்க கால சாதி அரசியல்’ என்று மையக் கட்டுரைக்கு வருவோம். இதனை நுண்ணரசியல் அலசல் என்று சொல்வதை விட இலக்கியத் திறனாய்வு என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ‘சங்க காலத்தில் சாதி இருந்ததா?’ என்பது வினா. இருந்தது என்று சொல்பவர் புறநானூற்றுப் பாடலில் வரும் ‘இழிசினன்’ என்ற சொல்லைத் தங்களுக்குச் சாதமாக முன் வைக்கிறார்கள். இந்த வாதத்தை முறியடிப்பது தான் கட்டுரையாளர் நோக்கம். அந்த முயற்சியில் புறநானூற்றுப் பாடலை ஆக்கச் சிதைவு (deconstruction) செய்து இலக்கியத் திறனாய்வுக்கு புது வழிகாட்டியிருக்கிறார். கட்டில் பிணைதலுக்கு கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மன்னனை வெற்றி கொள்வதை உவமையாகப் பார்க்க முடியும்.

‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை’ என்ற குறளில் அகழ்வாரைத் தாங்கும் நிலத்தை முதன்மைப் படுத்தினால் எப்படி இருக்குமோ அப்படியே இதுவும் புது விளக்கம் பெறுகிறது. இலக்கியப் பார்வை இருக்கட்டும். சமுதாயப் பார்வையில் சங்க காலத்தில் சாதிப் பாகுபாடு இருந்திருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர். இன்றைக்கு திராவிடர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்றும், ஆரியர்கள் தான் இந்தியக் குடிமக்கள் என்றும் கூறும் கட்டுக் கதைகள் பல உலாவரத் தொடங்கியிருக்கின்றன. பிரித்விராஜ் என்பவர் ‘19000 ஆண்டு உலக வரலாறு’ என்ற நூலில் பொய்க் கதைகளை வரலாற்று உண்மை போலச் சொல்கிறார். அவற்றில் இதுவும் ஒன்று. மேலும் வைணவம் தான் தென்னிந்தியர் மதம் என்று சொல்லி சாதிப் பிரிவினைகள் இருந்தன என்று காட்ட முற்படுகிறார். இவரைப் போலப் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். வரலாற்று ஆய்வை கேலிக் கூத்தாக ஆக்க முயலும் இவர்களைப் போன்றவர்களுக்கு கௌதம சித்தார்த்தனின் கட்டுரை நல்ல பதிலடி.

சிறப்பாக ஆராயப்படவேண்டிய ஒரு கட்டுரை‘நோபெல் விருதின் யுத்த அரசியல்’. இது பரவலாக பேசப்பட்ட கட்டுரை. நோபெல் விருதுகள் பற்றிய சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. கொடுக்கப்பட வேண்டிய பலருக்கு பரிசு வழங்கப்பட வில்லை என்பது உண்மை. அரசியல் காரணங்களுக்காகச் சிலருக்குத் தரப்பட்டன என்பதும் உண்மை. பாரக் ஒபாமாவிற்கு அமைதிப் பரிசு தந்தபோது ‘இனி அவர் சாதிக்கப் போவதற்காகத் தரப்பட்ட பரிசு’ என்று நான் எழுதினேன். ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் என்ற பெண்ணுக்கு இலக்கியத்திற்கு நோபெல் வழங்கப் பட்டதையும், துனீசிய பேச்சு வார்த்தைக் குழுவிற்கு அளிக்கப்பட்ட அமைதிக்கான பரிசு தரப்பட்டதையும்; அரசியல் என்று குற்றம் சாட்டுகிறார் ஆசிரியர். அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் மறுக்க முடியாதவை. ஆனால் ஸ்வெட்லானாவின் புனைவு சாரா இலக்கியம் பரிசுக்குத் தகுதியானதாக உள்ளதா என்று ஆராய்ந் திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மலாலாவிற்கும், கைலாஷ் சத்யார்த்திக்கும் அமைதிப் பரிசு வழங்கப் பட்டதற்கு அரசியல் உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் தகுதியானவர்கள் இல்லையா?

gauthama sitharthan 2‘பண்பாட்டு அசைவுகளின் மீட்டுருவாக்கம்’ என்ற கட்டுரை நமது பண்பாட்டின் வேர்களை நாட்டுப்புறத்தில் தேட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழர் பண்பாட்டு அடையாளம் தாலி என்று கூறுகிறார் ஆசிரியர். ‘தமிழர் திருமணத்தில் தாலி’ என்ற ஆய்வு நூல் ஒன்றை இராசமாணிக்கனார் சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் எழுதினார். ஆனால் சித்தார்த்தன் குறிப்பிடுவது ஆண்களின் புலிப்பல் தாலி! ‘பெண் உடல் பெண்ணுக்கானதல்ல’ என்று அங்கலாய்க்கும் ஆசிரியர், பெண்ணின் உடலைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஆண் வர்க்கத்தின் ஊடகப் பிரதிநிதிகளைச் சாடும் ஆசிரியர் இதைப் பற்றியும் சிந்திப்பாரா?

துவரம் பருப்பு அரசியலின் அரசியல் புரிகிறதோ இல்லையோ துவரையை மண் கட்டும் மணம் மூக்கைத் துளைக்கிறது. ‘பேருந்துப் பயணங்களினூடே உயிர்பெற்றெழும் பிம்பங்கள்’ வித்தியாசமான கௌதம சித்தார்த்தனைக் காட்டுகிறது. ஆனால் இந்தத்தொகுப்பிற்கு அது பொருந்தவில்லை. ‘மதிப்பெண் அரசியலில்’ என்ன சொல்ல வருகிறார்? மதிப்பெண் வேண்டுமென்று சொல்கிறாரா வேண்டாம் என்று சொல்கிறாரா? ஆனால் மனத்தைத் தொடுகிற நிகழ்ச்சி.

‘முருகன்-விநாயகன்-மூன்றாம் உலக அரசியல்’முருக வழிபாட்டை கணபதி வழிபாடு எப்படி இடம் பெயர்க்க முயன்றது என்று விளக்குகிறார் கௌதம சித்தார்த்தன். ஞானப் பழத்தைத் தேடி உலகைச் சுற்றி வரப் புறப்படும் முருகனை ஞானப் பார்வை அற்ற வராகச் சித்திரிக்கும் முயற்சியை வெட்ட வெளிச்ச மாக்குகிறது கட்டுரை. முருகனுக்கு தமிழகத்தைத் தாண்டி இந்தியாவில் கோவில்கள் இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. முருகன் பழத்தைத் தேடிச் சென்றதற்கு அருமையான தத்து வார்த்த விளக்கம் தருகிறார் ஆசிரியர். விநாயகர் பழங் கதையை உருவாக்கியது வைதீக மரபின் நுண்ணரசியல் என்று சாடுகிறவர் இதனை ஒரு நகைமுரணாகவே காண்கிறார். ஏனென்றால் சிவன் “ஞானத்தில் சிறந்த முருகனுக்கு ஞானப்பழத்தைத் தருவதை விட மேலோட்டமான பார்வை கொண்ட ஞானப் பார்வையற்ற விநாயகனுக்குத் தருவதே தார்மீகமான அறம்” என்று முடிவு எடுக்கிறார். இங்ஙனம் இப்பழங்கதையையே ஒரு மறையியல் பார்வைக்கு உட்படுத்துகிறார் ஆசிரியர். அதோடு நிலையாமைக் கொள்கையை முன் வைக்கும் பார்வையாக ‘உலகைச் சுற்றி வருவதை’ப் பார்க்கிறார்.

இதற்கு ஆதாரமாக தொல்காப்பியத்திலிருந்து எடுத்துக்காட்டுத் தருகிறார். இந்தப் பழங்கதையினை முன் வைத்து முருகனை ஞானப் பார்வை அற்றவனாகக் காட்டுவது இறைவழிபாட்டையே அரசியலாக மாற்றிப் போடும் ஆதிக்க சக்தியின் சதி. அடுத்து தொல் காப்பியத்தில் காணப்படும் நிலமும் பொழுதும் முதற்பொருள் என்று சொற்றொடரை விளக்கி, பண்டை ஆதிஇனக் குழுவில் இடமும் காலமும் பெற்றிருந்த சிறப்பினைக் காட்டுகிறார் ஆசிரியர். வெறியாடலும், முருகக் கடவுளும் இணைந்த காட்சியைச் சுட்டிக் காட்டி முருக வழிபாட்டின் வரலாற்றைக் கோடிடு கிறார். இதில் வைதீக மரபு புகுந்து ஆதிக் குடிமக்களின் தெய்வங்களான பறவைகளும் விலங்குகளும் வைதீக தெய்வங்களுக்கு வாகனங்களாக மாறிய கொடுமையில் மனம் நொந்து போகிறார். மேலும் தமிழ் தேசியக் கடவுளின் வழிபாட்டு மரபு பெருந்தேசிய வழிபாட்டு மரபோடு இணைக்கப்பட்டதில் அடங்கியுள்ள அரசியலை விளக்கும் ஆசிரியர் முருக வழிபாடு சங்க காலத்து மக்களின் ரத்தமும் சதையுமாக விரவிக் கிடந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்து முருகக் கடவுள் ஆரியரின் போர்க் கடவுளான கார்த்திகேயனாக மாறுகின்ற கதை உருவாக்கலை விளக்குகிறார். வடமொழிப் பண் பாட்டுக்குள் நாட்டார் வழிபாட்டு முருகன் பல வடிவங்கள் எடுத்ததையும் காட்டி, முருகனுக்கு தாய் தந்தையர் உருவாக்கம் எப்படி ஏற்பட்டது என்று ஆசிரியர் கூறுவது கவனிக்கத் தக்கது. அதேபோல தமிழ்ச் சமூகத்தில் மனிதனுக்கும் யானைக்குமுள்ள ஆத்மார்த்த உறவைப் பயன்படுத்தி விநாயக வழிபாடு புகுத்தப்பட்டதை நுட்பமாக ஆராய்கிறார். அதனை வைதீக மரபை நிலைநிறுத்தும் முயற்சியாக இன்று நாம் காண வேண்டும். அப்போது அது மேலாதிக்க காலனிய வாதத்திற்கு ஒப்பாகிறது. இன்றையச் சூழலில் ஆதிக்க நாடுகள் தாங்கள் காலனிய ஆட்சியை பண்பாட்டு ஆதிக்கமாக மாற்றுவது போலவே அன்றும் பண்பாட்டு காலனிய ஆதிக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இங்ஙனம் கௌதம சித்தார்த்தன் விநாயக வழி பாட்டை கலாச்சார காலனியவாதத்தின் அரசியலாகக் காண்கிறார். மிகுந்த நுட்பமான ஆய்வுக் கட்டுரையாக இது அமைந்திருக்கிறது. இன்றும் கூட இந்தப் பண்பாட்டு ஆதிக்கம் தொலைக்காட்சித் தொடர்கள் மூலமும் இந்தித் திரைப்படங்கள் மூலமும் பரவுகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள இது ஒரு எச்சரிக்கை மணி.

கௌதம சித்தார்த்தன் இந்த இரண்டு நூல்கள் மூலமும் பல அரிய கருத்துக்களை முன் வைத்திருக் கிறார். அவருடைய மொழிநடை பெருமளவில் இந்தக் கருத்தியல்களை முன்வைக்க உதவுகிறது. தமிழ் இலக்கியம் முதல் உலக இலக்கியங்கள் வரையில் அவருடைய வாதத்திற்கு அரணாக அமைகின்றன. பல்வேறு கருத்தியல்களைத் தனது வாதத்திற்குப் பயன் படுத்துகிறார். இதில் பலநாட்டு இலக்கியங்கள், பண்பாட்டுக்கூறுகள் ஆகியவற்றில் அவருடைய ஆழ்ந்த புலமை புலப்படுகிறது, சில வேளைகளில் அதிகமாகவே!

இரண்டு நூல்களும் எதிர் வெளியீட்டால் வெளியிடப்பட்டவை.

முருகன் - விநாயகன் - மூன்றாம் உலக அரசியல்

ஆசிரியர்: கௌதம சித்தார்த்தன்

வெளியீடு: எதிர் வெளியீடு

96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி - 642 002

விலை: ரூ.40.00

சங்க கால சாதி அரசியல்

ஆசிரியர்: கௌதம சித்தார்த்தன்

வெளியீடு: எதிர் வெளியீடு விலை: ரூ.80.00