நமது மக்கள் நன்றியுள்ளவர்கள் என்பதைக் காட்டு வதற்காகவே முன்னோரின் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்படுகின்றன.  மனிதர்கள் நெறிதவறி நடக்கும்போது இந்தச் சிலைகள் அவர்களை எச்சரிக்கை செய்கின்றன. அவை மொழி, இனம், கட்சி, இயக்கம் அனைத்திற்கும் அப்பாற் பட்டவை; பொதுவானவை.

அவற்றைச் சிதைப்பது என்பது காட்டுமிராண்டித் தனமாகும்.  இந்தச் சிலைகளைப் பாதுகாப்பதன் மூலமாகவே நாம் நாகரிக மனிதர்கள் என்பதை நிலைநாட்ட வேண்டும்.  மௌனமாக நிற்கும் இந்தச் சிலைகளின் மீது வன்முறையை வாரியிறைப்பது பகுத்தறிவுக்கே புறம்பானது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக அமைதியான முறையில் ஆட்சி செய்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.  பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

புதிய ஆட்சி பதவி ஏற்பதற்கு முன்பாகவே அந்த மாநிலத்தின் சில பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.  இதில் தெற்கு திரிபுரா மாவட்டம் பெலோனியா நகரில் இருந்த முன்னாள் சோவியத் யூனியனின் முதல் அதிபர் லெனின் சிலையை பாஜக வின் வன்முறைக் கும்பல் இடித்துத் தள்ளியது.

இந்த நிகழ்வை மையமாக வைத்து பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தமது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தினைப் பதிவு செய்தார்.  அவர் பதிவு செய்த கருத்து அரசியல் கட்சியினரையும், கட்சிக்கு அப்பாற்பட்ட அனைவரையும் திடுக்கிட வைத்தது.

‘திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப் பட்டது போல தமிழ்நாட்டில் பெரியார் சிலை களும் அகற்றப்படும்’ என்ற பதிவு அயர்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தட்டி எழுப்பியது.  நாடெங்கும் போராட்டம்: ஆர்ப்பாட்டம், எச்.ராஜாவின் உருவப்படங்கள் கொளுத்தப்பட்டன.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.  ‘மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.  எதிர்ப்புகள் வலுக்கவே பெரியார் பற்றித் தமது முகநூல் பக்கத்தில் வெளியான கருத்துக்கு பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார்.

தன்னுடைய அனுமதியில்லாமல் இக்கருத்து வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். “தமிழ கத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என எனது முகநூல் பக்கத்தில் என்னுடைய அனுமதி யில்லாமல் வெளியாகியுள்ளது.  அந்தப் பதிவை வெளியிட்ட முகநூல் அட்மினை பணியிலிருந்து நீக்கிவிட்டேன். என்னுடைய அட்மின் அதைப் பதிவு செய்திருந்தாலும் அதற்காக நான் இதய பூர்வமாக வருந்துகிறேன்” என்று அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வேலூர் மாவட்டத்தில் பெரி யாரின் சிலை சில குண்டர்களால் சிதைக்கப் பட்டது.  கோவை பாஜக அலுவலகம் மீது பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. திருவொற்றியூரில் அம்பேத்கர் சிலை மீது மை ஊற்றப்பட்டது.  புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது.

பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் அமைதி நிலவ தேவையான நடவடிக் கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலை தொடர்பாக பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் தமிழகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது.  இந்த விவகாரத்தால் ஏற்படும் பதற்ற நிலையைத் தணித்து அமைதியான சூழல் நிலவத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல் துறை கோரப்பட்டிருந்தது.

திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்ட நிகழ்வு நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.  மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் ஜனசங்கம் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.  இதே போல் உத்தரப் பிரதேசத்தில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை ஆளும் கட்சியின் குண்டர்கள் உடைத்து உள்ளனர்.

இவ்வளவும் நடைபெற்ற பிறகு, நாட்டில் சில பகுதிகளில் நடந்துவரும் சிலைகள் தகர்ப்பு சம்பவங் களுக்கு பிரதமர் மோடி தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்தச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டதாகத் தெரிந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும் சிலை தகர்ப்புச் சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப் பாளர்களின் கடமை என்று அனைத்து மாநில அரசுகளை அறிவுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பு ஒன்றையும் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையிலும் இது எதிரொலித்தது.  திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்ட விவகாரம், தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் விவகாரம் ஆகியவற்றை அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப் பினர்கள் எழுப்பினர்.

திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்கார் தலை மையில் இடதுசாரி முன்னணி 25 ஆண்டுகள் அமைதியாக ஆட்சி புரிந்தன.  நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் வன்முறை வீதிக்கு வந்து விட்டது.  பிரதமர் மோடி தெரிவித்த ‘சித்தாந்த வெற்றி’ இதுதானா?

‘ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் செயல்களை, அதே ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு அரசால் ரத்து செய்ய முடியும்’ என்று திரிபுரா ஆளுநர் ததாகத் ராய் கருத்து தெரிவித்துள்ளார்.  காட்டுமிராண்டித் தனமான வன்முறைக்கு ஆளுநரே வக்காலத்து வாங்குகிறார்.

இந்த வன்முறைகள் இன்று, நேற்று திடீரென்று ஏற்பட்டதல்ல.  தொடர்ந்துவரும் திட்டமிட்ட தாக்குதல்.  1992 திசம்பர் 6 அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு முதல் இது தொடங்குகிறது.

25 ஆண்டுகள் அடங்கிக் கிடந்த பாஜகவினர் வெற்றி பெற்ற ஒரே நாளில் இடதுசாரிகளை ஒழித்துவிட களத்தில் இறங்கியுள்ளனர்.  கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் தொடர்கிறது. லெனின் சிலை மட்டுமல்ல, அம்பேத்கர் சிலையையும் தகர்த்துள்ளனர்.

‘பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று மகாகவி பாரதி கூறியது இப்படிப்பட்டவர்களை எண்ணித்தானே? உலகம் எங்கும் பயங்கரவாதத்துக்கு எதிர்க்குரல் கொடுப் பவர்கள் உள்ளூரில் வன்முறையை ஊக்கப்படுத்து கிறார்கள்.

மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எத்தகைய வன்முறையையும் எதிர்கொள்வர்.  பந்து அடிக்க அடிக்க எழுவது போல அவர்களும் எழுவார்கள்; எதிர்த்து நிற்பார்கள்.

தமிழர் வரலாற்றில் சிலைகள் வைக்கும் வழக்கம் பிற்காலத்தது என்றாலும் கல்வெட்டுகள் வைப்பதும், நடுகல் நாட்டுவதும் தொன்று தொட்டு தொடர்ந்துவரும் வழக்கமாகும்.  வீரத்தை மதிக்கும் சின்னமாகவும், வெற்றியைக் குறிக்கும் அடையாள மாகவும் இது இருந்து வந்துள்ளது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் சிலைகள் நாடெங்கும் வைக்கப்பட்டன.  ‘விடுதலையடைந்த நாட்டில் அவற்றை அனுமதிப்பதா? வேண்டாமா?’ என்ற கேள்வி எழுந்தது.  கொடுங்கோலர்களின் சிலைகள் அகற்றப்பட்டன.  வரலாற்றின் அடை யாளமாக இருப்பவை விட்டு வைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் 1968இல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது சென்னைக் கடற்கரையில் 10 சிலைகள் வைக்கப்பட்டன.  திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், ஜி.யூ.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், கண்ணகி, பாரதி யார், பாரதிதாசன், வ.உ.சிதம்பரனார் ஆகிய வர்கள் தமிழ்நாட்டின் அடையாளமாக நிறுத்தி வைக்கப்பட்டனர்.

மாநாட்டை நடத்திய முதலமைச்சர் அண்ணாவுக்கு 11ஆவது சிலையாக அண்ணா சாலையில் அமைக்கப்பட்டது.  எம்.ஜி.ஆரால் அமைக்கப்பட்ட இந்தச் சிலை ஏ.இராமசாமி முதலியாரால் திறந்து வைக்கப்பட்டது.

1969இல் சென்னை தியாகராய நகரில் கலை வாணருக்கு சிலை திறந்து வைத்தார்.  அண்ணா அதுதான் அவர் பங்கேற்ற கடைசி பொது நிகழ்ச்சி யாகும். பெரியார் கடைசியாகப் பேசியது தியாக ராயநகர் அதனால் அங்கு அவருக்கு சிலை வைக்கப் பட்டது.

கிண்டி கத்திப்பாராவில் நேருவின் உருவச் சிலையை 1987 திசம்பர் 21 இல் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி திறந்து வைத்தார்.  இதுதான் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது.

இவ்வாறு ஆங்காங்கு சிலைகள் அமைக்கப் படுவது அவர்களுக்குச் செய்யப்படும் மரியாதை யாகும்.  வழிபாடு செய்யவில்லை என்றாலும் வணக்கத்துக்குரியவர்கள். அடுத்தத் தலைமுறைக்கு அடையாளம் காட்டும் வரலாற்றுச் சின்னங்கள்.

அவற்றைச் சிதைப்பது அநாகரிகம் மட்டு மல்ல அறியாமை.  இங்கே சிதைந்தவை சிலைகள் மட்டுமல்ல, மனிதநேயமும், நாகரிகமும், பண்பாடும்.