சென்ற இதழின் தொடர்ச்சி...

BHANGYA BHUKYA (2017) THE ROOTS OF THE PERIPHERY A HISTORY OF THE GONDS OF DECCAN INDIA OXFORD UNIVERSITY PRESS

சமவெளி மனிதர்களின் வருகையானது கோண்ட்டுகள், பிற ஆதிவாசிகளின் பொருளியல் வாழ்வை மட்டுமின்றி அவர்களின் சமய வாழ்வையும் சிதைத்தது. தொடக்கத்தில் காலனிய அரசு தனது மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும், மானிடவியல் திட்டப் பணிகளிலும் ஆதிவாசிகளைத் தனித்ததொரு சமயம் சார்ந்தவர்களாக, ஆவி வழிபாட்டாளர்களாக (Animists) குறிப்பிட்டது. இதுதான் உண்மையும் கூட. 1871 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து இவ்வாறே குறிப்பிடப்பட்டு வந்தது. 1891 மக்கள் தொகைக் கணக் கெடுப்பிலிருந்து, எந்தவொரு சமயத்தையும் சேர்ந்த வர்கள் என்று குறிப்பிடும் உரிமையை வழங்கியது.

the roots of the periphery1891 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 79 விழுக்காடு ஆதிவாசிகள் தம்மை ‘ஆவி வழிபாட்டாளர்கள்’ என்றே குறிப்பிட்டனர். 1901-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இது 77 விழுக்காடாகவும் 1931-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இது 70 விழுக்காடாகவும் குறைந்தது. இதன் பின்னர் இந்து அமைப்புகளின் அழுத்தம் காரணமாக அனைத்து ஆதிவாசி சமூகங்களும் இந்து என்ற வகைப்பாட்டிற்குள் அடக்கப்பட்டனர்.

1941 மக்கட்தொகைக் கணக் கெடுப்பில் இந்து சமயத்தைப் பின்பற்றுவோராகவே குறிப்பிடப்பட்டனர். இத்துடன் தனித்துவமான தம் சமய அடையாளத்தை இழந்தனர். காலனிய ஆட்சியின் போது இந்துமயமாதலும், ராஜபுத்திரமயமாதலும் மலைப்பகுதிகளில் நிகழத் தொடங்கிவிட்டது. ராஜ் கோண்ட் குடும்பங்கள் காலனிய ஆட்சிக்கு முன்பே ராஜபுத்திரர்களின் சமூக, சமய நடவடிக்கைகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன. கோண்ட்டுகளின் மன்னர்கள் பலர் தம் அரசியல் செயல்திட்டங்களில் ஒன்றாக ராஜபுத்திர மன்னர்களுடன் மணஉறவை ஏற்படுத்திக் கொண்டார்கள். 1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின், கடந்தகால ஆட்சிப் பரம்பரையில் வந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்குவதை அதிகாரப் பூர்வமற்ற முறையில் ஆங்கில அரசு பின்பற்றி வந்தது. சமிந்தார் கிராமத்தலைவர் பதவிகளைப் பெற விரும்பிய கோண்ட்டுகள் இராஜபுத்திரர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டனர்.

கோண்ட்டுகளின் அவலம்

வேளாண்மை, வேட்டையாடல், வனப்பொருள்கள் சேகரித்தல் எனத் தன்னிச்சையாக வாழ்ந்த கோண்ட்டுகள் தம் உரிமைகளை இழந்தனர். காலனிய அரசாலும், அதன் கீழ்நிலை அதிகாரிகள் பணியாளர்களாலும், சமிந்தார்களாலும் சுரண்டப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணத்தையும், உணவு தானியங்களையும் வட்டார அளவிலான, வருவாய்த்துறை அதிகாரிகள், எழுத்தர்கள், காவல் துறையினர், கடைநிலை ஊழியர்கள் என்போர் பண வடிவிலும், பொருள் வடிவிலும் கையூட்டுப்பெற்று அவர்களைச் சுரண்டினர். வட்டார அளவிலான அதிகாரிகளின் இச்சுரண்டலே அவர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. இதற்குச் சான்றாக ஒரு செய்தியைக் கூறலாம்:

அடிலாபாத் வட்டத்தில் உள்ள தியோபுர் கிராமத்தில் உள்ள நிலங்கள் முழுமையும் அடிலாபாத்தில் வாழ்ந்து வந்த பிராமண வழக்கறிஞர் ஒருவருக்கு உரிமை யாக இருந்தன. தியோபுர் கிராமத்தில் 40 கோண்ட்டுகள் குடும்பங்களும், 10 கோலம் குடும்பங்களும் இருந்தன.

ஒருநாள் கோண்ட்டு பட்டேல் (கிராமத்தலைவர்) கோண்ட்டுகள் சிலருடன் சேர்ந்து தம் வயலை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக, காய்ந்து போன மூங்கில் மரங்கள் இருந்த சிறு துண்டு நிலத்தைப் பண்படுத்தினார். அந்நிலத்தின் பட்டா வழக்கறிஞரின் பெயரில் இருந்தது.

அப்போது அங்கு வந்த காவலாளி, வீழ்த்தப்பட்ட மூங்கில் மரங்களைக் கண்டவுடன் அவர்களுக்கு 2000 ரூபாயை தண்டம் விதித்தான். தண்டத் தொகை குறித்து இரு தரப்புக்கும் இடையே பேரம் நடந்தது. இறுதியாக 425 ரூபாய் என்று முடிவாகி உடனடியாக 200 ரூபாயை கோண்டுகள் வழங்கினர். ஒரு வாரத்திற்குள் எஞ்சிய தொகையைக் கொடுத்துவிடுவதாக முடிவானது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே காவலாளி எண்பது ரூபாயை கையூட்டாக வாங்கியுள்ளான். இதுதவிர இரண்டு கோணிகள் (சாக்குகள்) முப்பதுசேர் அளவு சோளம் (1 சேர் = ஏறத்தாழ 1 கிலோ கிராம்), பத்துமணங்கு பருத்தி, மூன்று மணங்கு மிளகாய்வற்றல், எட்டுசேர் பெர்ரிபழம், எட்டுசேர் எண்ணெய் வித்து, ஒரு மரக்கட்டில், 17 உடைகள், இருபது கோழிக்குஞ்சுகள் ஆகியனவும் கையூட்டாகக் கொடுக்கப்பட்டன. அத்துடன் அய்ந்து கோழிக்குஞ்சுகளை உண்டு தீர்த்துள்ளான்.

கோண்ட்டுகள் உயர் அதிகாரியைச் சந்தித்து முறையிட்டனர். அவர் வனத்துறையின் ‘ரேஞ்சர்’ பதவி வகிப்பவரைப் பார்க்கும்படி கூறினார். அவரை சந்திக்கும் முன்னர், கோண்ட்டுகளிடம் வந்த காவலர் அவர்கள் தம் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் அவர்கள் தரவேண்டிய எஞ்சிய தொகையான 225 ரூபாயைக் கேட்கமாட்டேன் என்று கூறினார். எதிர்காலத்தில் எதாவது பொய்க் குற்றச்சாட்டுக்களை வைத்து தொல்லைப்படுத்துவான் என்றஞ்சிய கோண்ட்டுகள் அதற்கு உடன்பட்டனர்.

அவர்களது குடிசைகளை வனத்துறை ஊழியர்கள் எரிக்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. காலனிய அரசால் தம் வாழ்வாதாரமான நிலங்களையும், காடுகளையும் இழந்திருந்த கோண்ட்டுகளுக்கு அரசு ஊழியர்களின் இதுபோன்ற செயல்கள் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்ட உணர்வைத் தூண்டியதில் வியப்பில்லை.  இப்போராட்ட உணர்வின் தாக்கத்தால் கோண்ட்டு களிடம் இருந்து தலைவர்கள் உருப்பெற்றனர். ஹைதாராபாத் நிசாமின் ஆட்சிக்கு எதிராக இவர்கள் நின்றதை ஆதிவாசிகள் அல்லாத மக்கள் பிரிவினரும் ஆதரித்தனர். தன்னாட்சி உரிமை வேட்கை மட்டுமே கோண்ட்டுகளின் எழுச்சிக்குக் காரணம் என்று ஆங்கில அதிகாரிகள் கருதவில்லை. கோண்ட்டுகளின் கலகம் குறித்து ஆய்வு செய்த அவர்கள், பின்வரும் காரணங் களையும் முன்வைத்தனர்.

மானிடவியல் சார் அணுகுமுறை

1930-களில் இருந்து ஆதிவாசிகள் பிரச்சினையை வளர்ச்சியுடன் இணைத்தே காலனிய அரசு பார்த்தது. இப்பார்வைக்கு மானிடவியல் என்ற அறிவுத்துறையின் தாக்கமே காரணமாகும். மானிடவியல் துறை இக் காலத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் தனித் துறையாக வளர்ச்சி பெற்றிருந்தது. இத்துறையில் பயின்று வந்தவர்கள் பயன்பாட்டு மானிடவியலில் ஆய்வு செய்பவர்களாக மட்டுமின்றி ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் பணிபுரிவோராகவும் இருந்தனர். பிற இடங்களில் நிர்வாகியாக இருப்பதைவிட ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் நிர்வாகியாகப் பணிபுரிவது வேறு பாடானது என்பது குறிப்பிடத்தக்கது. அய்ரோப்பியர்கள் மட்டுமின்றி இந்தியர்களும் மானிடவியலாளர்களும் இணைந்து ‘அகில இந்திய ஆதிவாசிகள் நல அமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

காலனிய அரசானது பின்வரும் மூன்று சிக்கல் களைப் போக்கும் செயல்திட்டங்களை வகுக்க இம் மானிடவியலாளர்களைப் பயன்படுத்தியது.

கிறித்தவ மறைப்பணியாளர்களைப் போன்றே மானிடவியலாளர்களது ஆய்வுகளும் ஆதிவாசிகளை நாகரிகப்படுத்தும் காலனிய அமைப்பின் அங்கமாகவே இருந்தன. மலைப்பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் காலனிய அரசை உருவாக்குவதில் மானிடவியலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டனர். ஆய்வாளர்களாகவும், நிர்வாகிகளாகவும் பணியாற்றிய இவர்கள் ஆதிவாசிகளுக்கு சமஉரிமை அளிக்க வந்தவர்களாகத் தம்மைக் கருதினர். காலனிய வளர்ச்சியை மலைப்பகுதியிலும் காட்டுப்பகுதியிலும் காட்டும் முகமாக அவர்கள் முன்நிறுத்தப்பட்டார்கள்.

நாகரிக ஏணியின் கீழ்ப்படியாக இருப்பவர்களாகவும், முழுமையான வளர்ச்சி பெறாது பாதி வளர்ச்சி பெற்ற வர்கள் என்றும் ஆதிவாசிகளைக் கருதியே அவர் களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அத்துடன், அவர்களது நிலப்பகுதியில் நாகரிகமான சமவெளி மனிதர்கள்தான் அவர்களைவிட அதிக அளவில் உற்பத்தி செய்வர் என்ற கருத்தும் ஆதிவாசிகள் வளர்ச்சித் திட்டங்களில் வெளிப்பட்டது. சாதி இந்து சமூகமே இத்தகைய மதிப்பீடுகளுக்கு அளவுகோலாக அமைந்தது.

அடிலாபாத் பகுதியில் நிகழ்ந்த கோண்ட்டு ஆதிவாசிகளின் எழுச்சியைக் கையாள்வதற்காக ஃபூரர் ஹைமண்டோர்ப் என்ற ஆங்கில அதிகாரி நிஜாம் மன்னரிடம் ஆங்கில அரசால் 1940-இல் அனுப்பி வைக்கப்பட்டார். ஆதிவாசிகள், பின் தங்கிய வகுப்பினர் தொடர்பான ஆலோசகராக நிஜாம் மன்னரிடம் பணியாற்ற அனுப்பப்பட்ட இவர் ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் மானிடவியல் துறையின் பேராசிரியராவார்.

இவரும் இவரது மனைவியும் அடிக்கடி ஆதிவாசிகள் வாழும் பகுதிகளுக்குச் சென்று நீண்ட காலம் தங்கி அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.

கிரிக்சன் என்ற ஆங்கிலேயர் 1920-இல் வந்தார். இவர் அரச உயர் அதிகாரியாக மட்டுமின்றி மானிட வியலாளராகவும் விளங்கினார். ஹைதராபாத் மாநிலத்திலும், மத்திய மாநிலத்திலும் பணியாற்றி யுள்ளார். தம் நிர்வாகப் பணியின்போது இப்பகுதிகளில் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதிவாசிகள் குறித்தும் அவர்களது வாழ்வியல் சிக்கல்கள் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார்.

இவ்விரு மானிடவியலாளர்களுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க ஒற்றுமை அவர்களது சூழலியல் கற்பனாவாதம் (எக்காலஜிகல் ரொமாண்டிசம்) ஆகும். இப்புராதன காட்டுவாசிகளை, வளர்ச்சியுற்ற மனிதக் குழுவுக்கு எதிராக நிறுத்தினார்கள். ஆதிவாசிகளை எளிமையும் அழகும் கொண்ட காட்டு உயிரினங் களாகவும் அவர்களைச் சிரத்தையோடு பாதுகாத்து அவர்களது வாழ்க்கை முறைகள் அழியாது பேண வேண்டும் என்றும் அவர்கள்  கருதினார்கள். நிசாமின் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமையால் அவர்களைக் குறித்து ஆராயும்படி ஃபூரர் ஹைமண்டோர்ப்பை பணித்தனர்.

ஆதிவாசிகள் குறித்த இவ்விருவரது ஆய்வுகளும் ஆதிவாசிகளின் வளர்ச்சித் திட்டங்களை வடிவமைக்க உதவின. ஆதிவாசிகளின் சமூக அமைப்பு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, சமூக அரசியல் நடவடிக்கைகள், எரியூட்டு வேளாண்மை குறித்த செய்திகளை இவை உள்ளடக்கி இருந்தமையே இதற்குக் காரணம். இச்செய்திகளை எளிமையானவை அல்லது பிற்போக்கானவை என்று குறிப்பிட்டதால் சாதி இந்துக் களுக்கு இணையாக இவர்களை ஆக்க, இவை அனைத்தும் மாற்றி அமைக்கப்பட வேண்டுமென்பது அவசியம் என்றாயிற்று.  ஆனால் அவர்கள் ஆய்வு செய்த நிலப்பகுதி, வளமான வேளாண் வரலாற்றைக் கொண்டது. அதே நேரத்தில் மலேரியா சிபிலிஸ் போன்ற நோய்கள் மிகுந்துள்ள குடியிருப்புகளும் உண்டு. அவர்களிடையே உருவாகும் சிக்கல்களுக்கும், வளர்ச்சியின்மைக்கும் காரணமான மதுப்பழக்கம் இவர்களிடையே மிகுந்திருந்தது.

ஆதிவாசிகளின் வளர்ச்சிக்கு கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாக சீர்திருத்தம் என்பனவற்றை முன்மொழிந்தார் ஃபூரர். இவற்றின் மூலம் அவர்களை வளர்ச்சி பெறச் செய்யமுடியும் என்றும் நம்பினார். ஆதிவாசிகள் நிலையை மேம்படுத்தும் நோக்கிலான நான்கு அறிக்கைகளை நிஜாம் அரசிடம் அவர் வழங்கினார். அத்துடன் கோண்ட்டுகளுக்கும் நிஜாம் அரசுக்கும் இடையே சந்து செய்விப்பவராகவும் செயல்பட்டார். கோண்ட்டுகளின் விடுதலைக்கு, கல்வியை அவர் வலியுறுத்தினார். அவர்களது தொன்மையான வாழ்க்கை முறையில் இருந்து விடுபட மட்டுமின்றி, நிலத்தைக் கவரும் வேட்கை கொண்ட சாதி இந்துக்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் கல்வி அவசியம் என்பது அவரது கருத்தாகும். கல்வி இன்மையால் கோண்ட்டுகள் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தம் சுயசரிதையில் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.

கோண்ட்டுகளுக்கு கல்வி வழங்குவதன் முதல் படியாக 1943-இல் பயிற்சிப்பள்ளி ஒன்றைத் தொடங் கினார். கோண்ட்டுகளின் கோண்டி மொழியையும், மராத்தி மொழியையும் அறிந்திருந்தவர்களை அழைத்து ஆசிரியர்களாகப் பயிற்சியளித்தார். பின்னர் உருதுமொழி அறிந்தோரையும் சேர்த்துக் கொண்டார். கோண்ட்டி மொழியில் பாடநூல்களையும் உருவாக்கினார். கோண்ட்டு களின் வாழ்க்கைச் சூழலில் இருந்தும் பழமரபுக் கதைகளில் இருந்தும் பாடங்கள் உருவாக்கப்பட்டன.

எழுதவும் படிக்கவும் மட்டுமின்றி, வருவாய்த்துறை, வனத்துறை என்ற இரண்டு அரசுத்துறைகளின் செயல் பாடுகள் குறித்தும் அத்துறைகள் சார்ந்த விதிமுறைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன. இவ்விரு அரசுத் துறை களிலும் கீழ்நிலைப் பணியாளர் பதவிகளைப் பெறுவதும் மட்டுமின்றி இவ்விரு துறைகளின் சட்டவிதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்துவதும் இதன் நோக்கமாக இருந்தது, இவை தவிர கைத்தொழில் களும் நவீன வேளாண்மையும், அன்றாட வாழ்க்கைக்கு உதவும் செய்திகளும் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தன.

கோண்ட்டுகளுக்கு கல்வி வழங்கும் இத்திட்டத்திற்கு அரசு நிதி வழங்கியது. இதன் துணைகொண்டு பாட நூல்கள் அச்சிடப்பட்டதுடன், பயிற்சி பெறுவோர்க்கும் ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டது. 1965-இல் இப்பள்ளி மூடப்பட்டது. 1961-ஆம் ஆண்டு கணக்குப் படி கோண்ட்டுகளின் எழுத்தறிவு 2.65 விழுக்காடுதான்.

கோண்ட்டுகளுக்கு நிலம் வழங்குவதும் மேற் கொள்ளப்பட்டது. இதன் பொருட்டு ஆதிவாசிகள் அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டது. 1944-1948இல் கோண்ட்டுகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. கோண்ட்டு மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் நில உரிமையைப் பெற்றார்கள். உழவு மாடுகள் வாங்கு வதற்காகப் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டன. வட்டித் தொழில்புரிவோரிடம் இருந்து விடுவிக்க, கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் தொடங்கப்பட்டன. மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

மானிடவியலாளரின் துணையுடன் மேற்கூறிய வளர்ச்சிப் பணிகள் நிகழ்ந்திருந்தாலும் ஆதிவாசிகளின் எதிர்ப்பு, அரசியல் சார்ந்தது என்பது உணரப்பட வில்லை. காலனிய அரசு, நிஜாமின் அரசு, இந்திய அரசு என்ற மூன்று அரசுகளும் ஆதிவாசிகளின் அரசியல் உரிமை குறித்துக் கவலைப்படவில்லை. ஆதிவாசி களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் சாதி இந்து விவசாயிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படவில்லை. காலனியத்தின் மானிடவியல்சார் வளர்ச்சி என்ற தடத்திலேயே விடுதலை பெற்ற இந்தியாவும் பயணித்தது. மொத்தத்தில் அடிலாபாத் மாவட்டத்தில் முதலில் தொடங்கிய கோண்ட்டுகளின் எழுச்சியானது நிலவெளியேற்றத்துக்கு எதிராகவும், காடுகளின் மீதான உரிமைக்காகவும், சுரண்டல் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் உருவான இயக்கமாகும். ஆனால் படிப்படியாக ஓர் அரசியல் இயக்கமாகப் பரிணமித்தது. இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட நிஜாமின் அரசு மானிடவியல் சார்ந்த வளர்ச்சித்திட்டங்கள் வாயிலாக இதை நசுக்கியது.

விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் இதே பகுதியில் துப்பாக்கிச்சூட்டின் வாயிலாக 1981 ஏப்ரலில் கோண்ட்டுகளின் எழுச்சி ஒடுக்கப்பட்டது. சி.பி.ஐ. (எம்.எல்), கொண்டபள்ளி சீதாராமையாவின் மக்கள் யுத்தக்குழு என்ற இடதுசாரி அமைப்புகளின் துணை யுடன் ஆதிவாசிகள் விவசாயத் தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த அரசு அனுமதி மறுத்தது. தடையை மீறி 5000 கோண்ட்டுகள் ஊர்வலமாகச் சென்றபோது காவல் துறையினர் அதைத் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோண்ட்டு பெண்ணொருத்தி காவலர் ஒருவரின் பாய்னெட்டைப் பறித்து அவரைக் குத்திக் கொன்றுவிட்டாள்.

இதனால் கோண்ட்டுகளின் மீது சுட்டதில் 13 கோண்ட்டுகள் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. ஆனால் உண்மையில் 100 பேர் வரை கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டோரின் உடல்களை மீட்டு மொத்தமாக ஓரிடத்தில் வைத்து காவல் துறையினர் எரித்தனர். இறந்தோரைப் புதைக்கும் கோண்ட்டுகளின் மரபுக்கு இது மாறானது. கோண்ட்டு களைக் கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் பல மாதங்கள் வரை தொடர்ந்தது. ஆந்திர முதல்வராயிருந்த டி.அஞ்சாரெட்டியும், மாநிலத்தின் உள்துறை அமைச்சரும், இது ஆதிவாசிகளுக்கும் ஆதிவாசி அல்லாதாருக்கும் நடந்த மோதல் என்றார்கள்.

கோண்ட்டுகளும் பிற ஆதிவாசிகளும் சாதி அடையாளம் கொண்ட சமவெளிக் குடியானவர்களின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வாழவேண்டிய நிலை இருந்தது. இதனால் ஆதிவாசிகள் வாழும் பகுதியென வரையறுக்கப்பட்ட பகுதிகளில் ஆதிவாசிகளிடம் இருந்து ஆதிவாசி அல்லாதாருக்கு நில உரிமை மாற்றம் செய்வதைத் தடை செய்யும் சட்டத்தை ஆந்திர அரசு 1970-இல் இயற்றியது. ஆனால் இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. 1972-இல் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி, இப்பகுதியில் உள்ள ஆதிவாசி அல்லாதார், 1964-க்கு முன்புவரை வைத்திருந்த நில உரிமை பாதுகாக்கப்பட்டது.

சென்னாரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்த போது 1979-இல் சட்டமொன்று இயற்றினார். இச்சட்டத்தின்படி 5 ஏக்கர் நன்செய் அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலம் உள்ள ஆதிவாசியல்லாத பின்தங்கிய சாதியைச் சேர்ந்த நில உரிமையாளர்களுக்கு 1970-ஆவது ஆண்டுச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இது ஆதிவாசிகளுக்கு எதிரானதாக அமைந்தது. நிலப் பறிமாற்றம் குறித்த வழக்குகள் பல நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படாமலேயே உள்ளன.

முகாமையான சாதி இந்துக்கள் இப்பகுதி முழுமையையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத் துள்ளனர். இவர்களின் நிலங்களைப் பறித்ததுடன் மட்டுமின்றி, ஒப்பந்தங்கள் எடுத்தும், சாராய விநியோகம் செய்தும், இலை பறித்தல் போன்ற காட்டுவளங்களைச் சேகரிக்கும் உரிமையை எடுத்தும் இவர்கள் ஆதிவாசி களை ஒடுக்குகிறார்கள். காட்டுப்பகுதியில் அரசியல் அடிப்படையில் வலிமையானவர்களையும் உருவாக்கி யுள்ளனர். சமவெளியில் இருந்து இவர்களிடம் பொருள் வாங்க வருவோரும் இவர்களைச் சுரண்டுகின்றனர். சான்றாக ஒரு கூடைப் புளியை ஒரு பாக்கெட் சிகரெட் கொடுத்து வாங்கிச் செல்வர்.

···

நாகரிகம் அற்ற தொன்மைச் சமூகங்கள் இயற்கை யாக வளர்ச்சியுற்று வந்தவையா அல்லது அரசுகளின் அதிகார மையத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள, தாமாகவே உளப்பூர்வமாகத் தேர்வு செய்து உருவான வையா? என்ற வினாவை எழுப்பி இந்நூல் விடை தேடுகிறது. கொடுமையான வரிவிதிப்பிற்கு எதிராகக் குடியானவர்களின் எதிர்ப்பானது ஒரு கலகமாக உருப்பெறாது இடப்பெயர்ச்சியாக வெளிப்படுகிறது என்கிறார் ரொமிலா தாப்பர்.

அவரது கருத்துப்படி தாம் வாழும் அரசின் கட்டுப் பாட்டிற்குள் வராத நிலப் பகுதிக்கு இடம் பெயர்வதன் வாயிலாகக் கொடிய வரிகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ரொமிலா தாப்பரின் இக்கருத்தை மேற்கோளாகக் காட்டும் இந்நூலாசிரியர் இடம் பெயர்வோர் செல்லும் இடத்தில் வலுவான பேரரசு இருப்பின் அவர்கள் அடிமைத்தனத்துக்கு ஆளாவர் என்றும், பலவீனமான அரசு இருப்பின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் அனுபவிப்பர் என்றும் கூறுகிறார்.

தொடக்கத்தில் இடப்பெயர்ச்சிகளின் மூலம் தன்னாட்சியை நிறுவிய கோண்ட்டுகள், காலனிய ஆட்சியில் அடிமைத்தனத்துக்கு ஆளாகியுள்ளார்கள். இறுதியாக, மைய இந்தியாவின் வரலாறும் ஆதிவாசி இந்தியாவின் வரலாறும் ஒன்றுடன் ஒன்று  இணைந்தவை. மைய இந்தியாவின் வரலாறை அறியாமல் விளிம்புநிலை  இந்தியாவின் வரலாறைப் புரிந்து கொள்ளமுடியாது. அது போன்றே விளிம்பு நிலை இந்தியாவின் வரலாறை அறியாமல் மைய இந்தியாவின் வரலாறைப் புரிந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டு மையப்பகுதியின் வரலாறையும் விளிம்புநிலையின் வரலாறையும் ஒன்றுடன் மற்றொன்றைப் பொருத்தி வாசிக்கும் போதுதான் இரண்டையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று சமூகவியலாளர் ஸ்காட் கூறிய கூற்றையும் மேற்கோளாகக் காட்டுகிறார். இவை உண்மைதான்.

இதைத் தான் வரலாறு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம் என்று கார்ல்மார்க்ஸ் 1848லேயே ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற தமது நூலில் கூறிச் சென்றுள்ளார்!