பட்டிமண்டபம் பற்றிய குறிப்போ, அடையாளமோ தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்ககால இலக்கியங்கள் எதிலும் இல்லவே இல்லை.

சிலப்பதிகாரத்தில், ஐந்தாம் அதிகாரமான ‘இந்திர விழா ஊரெடுத்த காதை’யில்தான் முதன்முதலாக பட்டிமண்டபம் என்ற சொல் பளிச்சிடுகிறது.

சோழ வளநாட்டின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினம் என்ற பூம்புகாரில் அரசின் தொல்  பொருள்காட்சிசாலையான  சித்திரமண்டபத்திற்குள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த எழில்மிகு கலைப்பொருள்களில் ஒன்றாக பட்டி மண்டபமும் இடம்பெற்றிருந்தது.

அந்தப் பட்டிமண்டபம், அதற்கும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே, சோழவேந்தன் கரிகாலப் பெருவளத்தான் என்ற திருமாவளவனுக்கு மகதநாட்டு மன்னன் நட்பு நாடிக் கொடுத்தது.

தமிழ்நாட்டில் பகைவர் எவரும் இல்லை. பாண்டியனும் சேரனும் உடன் நிற்கும் உள்ளத்தவராகி விட்டனர். ஆயுதங்கள் துருவேறத் தொடங்கிவிட்டன. போர்த் திமிரெடுத்த கரிகாலனால் தலைக்கோலிகளின் நாட்டியத்தை நயந்தபடி அரியணையில் ஓய்ந்திருக்க முடியவில்லை.

வடக்குத் திசையில் எதிர்க்கத் துணிந்தவன் எவனும் இல்லாமலா போய்விடுவான்? நாளும் கோளும் சகுனமும் பார்த்து புலிக்கொடியடும் படையடும் புறப்பட்டான் சோழவேந்தன்.

தம்திசைக்கண்ணே வந்த தென்திசை வேந்தனை எதிர்க்க வடமன்னர் எவரும் தயாராக இல்லை.

ஆயினும் என்ன? வெற்றிமுரசொடும் கொற்றக் குடையடும் தகித்த வாளடும் சென்ற சோழனை, பிறவா யாக்கைப் பெரியோன் உறையும் இமயம் தடுத்தது.

இமயத்தில் ஏறி அதன் உச்சியில் செம்பொன் பட்டயத்தில் வடித்த புலிக்கொடியை அறைந்துவிட்டுத் திரும்பினான்.

திரும்பிய திருமாவளவனைத் தோழமையோடு வரவேற்று, ‘முத்துப்பந்தல்’ ஒன்றை நினைவுப் பரிசாகக் கொடுத்து வழியனுப்பினான் வச்சிரநாட்டு நல்லரசன்.

முன்னொரு பெரும்பொழுதில், காவிரி மைந்த னோடு போரிட்டுத் தோற்றுப் பணிந்தவன் மகதநாட்டு மன்னன். அவன் தன் நினைவாக, பட்டிமண்டபம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தான்.

அதற்கடுத்து வரவேற்றவன் அவந்தி நாட்டு அரசன். அவன் தன் நாட்டு மரபுநெறியோடு மகிழ்ந்து கொடுத்தான் ஒரு தோரணவாயிலை.

வச்சிரக்கோவும், மகத வேந்தனும் அவந்தி மாமன்னனும் கொடுத்த முத்துப்பந்தலும், பட்டிமண்டபமும், தோரணவாயிலும் பொன்னாலும் மணியாலும் புனையப்பட்டவை.

அவை மூன்றும் அந்த வேந்தர்களின் முன்னோர் களுக்கு, தேவப்பெருந்தச்சன் மயன் செய்துகொடுத்தவை. நுண்ணிய கலைப்பாட்டுத் திறனுடைய பொற் கொல்லர்களால் கூட செய்ய இயலாதவை.

அரியணையில் உள்ள வேந்தனுக்குக் கிடைக்கும் பரிசுப்பொருட்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களுக்கே உரியவை. இமைய முகடு வரை படையுடன் சென்று திரும்பிய சோழவேந்தன் தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்களான முத்துப்பந்தலையும், பட்டிமண்ட பத்தையும், தோரண வாயிலையும் தன் நாட்டு மக்கள் கண்டு இன்புற வேண்டி சித்திரமண்டபத்தில் காட்சிக்கு வைத்தான்.

இந்தச் செய்தியைத்தான் தனது காப்பியத்தில் ‘இந்திர விழா ஊரெடுத்த காதை’யில் பதிவு செய்திருக்கிறார் இளங்கோவடிகள்.

இளங்கோவடிகளால் காட்சிப்படுத்தப்பட்ட அந்த ஆசிரியப்பா அடிகள் இதோ...

பகைவிலக் கியதுஇப் பயங்கெழு மலையென

இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை

கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோர்க்கு

மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்

கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்

மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்

பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்

அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த

நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்

பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்

நுண்வினைக் கம்மியர் காணா மரபின்

துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோர் உதவிக்கு

மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம்

ஒருங்குடன் புணர்ந்தாங்கு உயர்ந்தோர் ஏத்தும்

அரும்பெரும் மரபின்...

- இப்படித்தான் பட்டிமண்டபத்தை முதன்முறையாக தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார் சகல மதங்களையும் சமமாகப் பாவித்த அந்த சமணத் துறவி.

இளங்கோவடிகள் மூலம், பட்டிமண்டபம் குறித்து நமக்குக் கிடைக்கும் குறிப்புகள்?

வேந்தர்கள், வேந்தர்களுக்குப் பரிசாகக் கொடுக்கக் கூடிய அளவுக்கு பெருமைக்குரியது, சிறப்பிற்குரியது, வணக்கத்திற்குரியது.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லக்கூடியது. காட்சிப்படுத்தக் கூடியது.

அதில் பொன்னையும் மணியையும் பதித்திருந் தார்கள். ஆகவே அது மரத்தாலானது. பொற்கொல்லர் களாலும் மரச்சிற்பிகளாலும் உருவாக்கப்பட்டது.

பகையைப் போக்கும் பொருட்டும் நட்பைப் பேணும் பொருட்டும் மகத மன்னனால் தமிழக மன்னனுக்குத் தரப்பட்டது. ஆகவே இது மகத நாட்டுக்குரியது. அந்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படுவது.

இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பரிசளிப்பு நடந்திருக்கிறது. ஆகவே அக்காலத்தில் பட்டிமண்டபத்தின் பயன்பாடு தமிழகத்தில் இல்லை.

அதற்கு முன்பு பட்டிமண்டபப் பயன்பாடு தமிழகத்தில் இருந்திருப்பின் தொகை நூல்களிலோ, திருக்குறளிலோ, தொல்காப்பியத்திலோ பட்டி மண்டபம் பதிவாகியிருக்கும்.

இளங்கோவடிகளின் குறிப்பின் மூலம் பட்டி மண்டபத்தின் பயன்பாடு என்னவென்பதைப் பெற இயலவில்லை.

மணிமேகலையும் சிலம்பைப் போலவே முப்பது காதைகளைக் கொண்டது. சோழ வளநாட்டின் அன்றைய தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தை காப்பியத்தின் தளமாய்க்கொண்டது.

சோழவேந்தன் ஒருவனால் உருவாக்கப்பட்டு, இந்நகரில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்திரவிழாவை தொடக்க மாகவும், முதல் அதிகாரமாகவும் கொண்டது மணி மேகலை காப்பியம்.

அரசுக்குரிய யானை மீது முரசையிருத்தி, அதை அறைந்து ‘இந்திரவிழா வருகிறது அதை வரவேற்று இருபத்தெட்டு நாட்களும் உற்சாகமாகக் கொண் டாடுங்கள்’ என்று அறிவிக்கிறான் முரசறைவோன்.

என்னவென்று அறைகினாம்?

‘பூம்புகார் வளநகர் மக்களே! பூரண கும்பங்களை, பொற்பாலிகைகளை, பாவை விளக்குகளை வீதிகள் தோறும் பரப்புங்கள்!

வாழைக்குலைகளை, கழுகுக் குலைகளை, தோகைக் கரும்புகளை, வஞ்சிக்கொடிகளை, மலர்ச்சரங்களை, மணம்கமழ் மாலைகளை வீட்டு முகப்புகளில் கட்டுங்கள். தூண்களில் முத்துமாலைகளைத் தொங்கவிடுங்கள்.

வீதிகளிலும் மன்றங்களிலும் பழம்மணலை அகற்றி விட்டுப் புதுமணல் பரப்புங்கள்.

மாடங்களிலே பல்வண்ணக் கொடிகளை ஏற்றுங்கள்.

அறநெறிகளைப் போதிக்கும் சொற்பொழிவாளர்

களே! வாருங்கள்! விதிமுறைகளை மீறாமல் பட்டிமண்ட பத்தில் ஏறி அமருங்கள்!’ இன்னும் பல கூறி முரசறைந்து செல்லுகிறான் யானைமேலோன் என்ற செய்தியை விரிவாகப் பதிவு செய்கிறார் தண்தமிழ்ச் சாத்தனார்.

தண்தமிழ்ச் சாத்தனாரால் காட்சிப்படுத்தப்படும் அந்த ஆசிரியப்பா அடிகள் இதோ...

தோரண வீதியும் தோமறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்

காய்க்குலை கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்குடி வல்லியும் கரும்பும் நடுமின்

பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து

முத்துத் தாம முறையடு நாற்றுமின்

விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்

பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்

கதலிகைக் கொடியும் காழூன்று விலோதமும்

மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்

...

தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதிலிலும்

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்

...

இப்படித்தான் பட்டிமண்டபத்தின் பயன்பாட்டைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார் புத்தமதப் பிரச்சாரகரான சாத்தனார்.

தண்தமிழ்ச் சாத்தனார் மூலம் பட்டிமண்டபப் பயன்பாடு குறித்து நமக்குக் கிடைக்கும் குறிப்புகள் யாவை?

ஏறிச் செல்வதற்கான படிக்கட்டுகளை உடையது பட்டிமண்டபம். சொற்போராளிகள் பலர் அமரக் கூடியது பட்டிமண்டபம். மதங்களின் மறை பொருட் களை ஆய்ந்தறிந்த ஞானியர் பங்கேற்கும் மண்டபம் பட்டிமண்டபம். பட்டிமண்டபத்திற்கும், பட்டி மண்டப சொற்போராளிகளுக்கும் (வாதிகள், பிரதி வாதிகள்) விதிமுறைகள் உள்ளன. பட்டிமண்டபப் பங்கேற்பாளர்கள் அந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவற்றை ஐயமின்றித் தெளிந் தோரே பட்டிமண்டபத்தில் ஏறவேண்டும் என்பவையே மணிமேகலை வாயிலாக நாமறியும் பட்டிமண்டபக் குறிப்புகள்.

பட்டிமண்டபம் எதற்குப் பயன்படுகிறது என்பதைச் சுட்டிய சாத்தனார், அதை எப்படிப் பயன்படுத்து கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தவில்லை. ஆனால் ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் தத்தம் சமயங் களின் கொள்கைப் பற்றி பேசுவதை பதிவு செய்திருக் கிறார்.

மணிபல்லவத்திலிருந்து ஆகாய மார்க்கமாக வஞ்சி மாநகருக்குப் புறப்பட்ட மணிமேகலை, புறநகரில் இறங்கி, கோயிலுக்குள் சென்று தாய் கண்ணகியையும் தந்தை கோவலனையும் தரிசிக்கிறாள்.

சீற்றத்திற்கான காரணங்களைக் கேட்ட மகள் மணிமேகலையிடம் மதுரையில் நடந்த நிகழ்வுகளையும் முற்பிறவிச் சம்பவங்களையும் கூறிய கண்ணகி, ‘புத்தமதம் உலகமெலாம் பரவிப் பிரகாசிக்கும் காலத்தில் நாங்கள் அதில் இணைந்து நிர்வாணம் பெறுவோம். அதுவரை நீ காத்திருக்க வேண்டியதில்லை. வஞ்சி நகருக்குள் செல்வாயாக. அங்கே பல்வேறு சமயக் குரவர்கள் உள்ளனர். அவர்களின் சமயக் கொள்கை களைக் கேள். அவைகள் உனக்கு ஏற்புடையவையாக அமையாது. இறுதியாக நீ புத்த சமயத்தைப் பின் பற்றுவாய்!’ என்று வாழ்த்துக் கூறி மணிமேகலையை அனுப்பி வைக்கிறாள் கண்ணகி.

உருவமாற்றம் பெறுகின்ற மறைமொழியைச் சொல்லி தன்னுரு மறைத்து, முனிவன் உருப்பெற்ற மணிமேகலை சேரநாட்டின் தலைநகரான வஞ்சிக்குள் செல்கிறாள்.

அங்கே வைதிகவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, சைசேடிகவாதி, பூதவாதி என பத்து வாதிகளை ஒருவர் பின் ஒருவராக தனித்தனியே சந்தித்து தத்துவங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறாள். அவர்களின் தத்துவங்களோடு மணிமேகலைக்கு உடன்பாடு ஏற்படவில்லை. அதன்பிறகே புத்தமத வாதியான அறவணவடிகளைச் சந்திக்கச் செல்கிறாள்.

பட்டிமண்டபச் செயல்பாடுகளைக் காட்சிப் படுத்தக்கூடிய நல்ல வாய்ப்பு இங்கே இருந்தும் ஏன் தடுத்தார் அல்லது விடுத்தார் சாத்தனார் என்பது கேள்வியாகவே நிற்கிறது.

தண்தமிழ்ச் சாத்தனாருக்குப் பிறகு பட்டி மண்டபம் பற்றிய பதிவை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணிவாசகப் பெருமானிடம் காண்கிறோம்.

சிவசமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருவாசகச் செம்மல் மணிவாசகப்பெருமான், தானொரு பட்டி மண்டபப் பங்கேற்பாளன் என்றும், சிவனடியார்களும் பொதுமக்களும் மாற்று மதத்தோறும் வியப்பெய்தும் வண்ணம் பட்டிமண்டபத்தில் வெற்றிகொள்ளும் தகுதியை அய்யன் சிவபெருமான் தனக்களித்தான் என்றும், தான் பெற்ற பேறுகளில் பட்டிமண்டபப் பங்கேற்பே தலையாயது என்றும் பெருமிதம் கொள்கிறார்.

“கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ(று)

இட்ட அன்பரொடு யாவரும் காணவே

பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை

எட்டி னோடு இரண்டுமறி யேனையே”

“இறைவா! கதிர், நிலவு, எமன், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற எட்டுப் பூதங்களோடும் உடன்நிற்பவன் நீ. இந்த எட்டுக் குணங்கள் பற்றியோ, சக்தியும் சிவமுமாகிய உயிர் உடம்பெனும் இருபெரும் குறியீட்டுத் தத்துவங்கள்  பற்றியோ ஏதும் அறியாதவன் நான். இத்தகைய அறியேனாகிய என்பினை இல்லற வாழ்வு எனும் கட்டுகளில் இருந்து விடுவித்து ஆண்டு கொண்டிருப்பவனே! நெற்றி நிறையத் திருநீறு அணிந்த அன்படியார்கள் மட்டுமின்றி, பிற மதத்தவர், பொது மக்கள் யாவரும் கண்ணாரக் கண்டு நிறைவு கொள்ளு மளவுக்கு என்னை மீண்டும் மீண்டும் பட்டிமண்டபத்தில் ஏற்றி வெற்றியாளன் ஆக்கினாயே” என்று உளம்பூரித்து நன்றி பாராட்டுகிறார் மணிவாசகப் பெருமானார்.

திருச்சதகத்தில் 49-ஆவதாக இடம் பெற்றுள்ளது இச் செய்யுள்.

பட்டிமண்டபத்தில் ஏறிப் பங்கேற்பது என்பது சாதாரண செயலல்ல. அறிவையும் ஆளுமையையும் தாண்டி இறையருளால் நடக்கும் செயலெனக் கருதுகிறார், அல்லது பட்டிமண்டபம் ஏறிப் பங்காற்றும் அளவுக்கு தனக்குப் பேரறிவையும் பேராளுமையையும் தந்தவன் நீயெனச் சிவபெருமானைப் போற்றி இவனருளா லேயே நீங்களும் இப்பேற்றை அடையலாம் என்று நம்மை ஆற்றுப்படுத்துகிறார்.

தனக்குச் சிவபெருமான் அளித்த வரங்களிலேயே பட்டிமண்டபத்தில் ஏறும் வரமே ஆகச் சிறந்ததென்னும் அளவுக்கு வார்த்தைப் பிரயோகம் செய்த மாணிக்க வாசகர், தான் பங்கேற்ற  பட்டிமண்டப நிகழ்வுகள் குறித்தோ, நடந்த சொற்போர் குறித்தோ வெளி யரங்கமாய் ஏதும் விவரித்தாரில்லை. ஆனால் தன்கால சமயவாதிகளின் பிரச்சாரத்தை போற்றித் திருஅகவலில் மேலோட்டமாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஆத்த மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்

விரத மேபர ணாக வேதியரும்

சரத மாகவே சாத்திரம் காட்டினர்

சமய வாதிகள் தத்தம் மதங்களே

அடைவ தாக அரற்றி மலைந்தனர்

மிண்டிய மாயா வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழித்தடி தாஅர்த்து

உலோகா யதனெனும் ஒண்திறல் பாம்பின்

கலா பேத்த கடுவிடம் எய்தி

அதில்பெரு மாயை எனப்பல சூழவும்

தப்பா மேதாம் பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழுகது போல

தொழுது உளமுறுகி அழுதுடல் கம்மித்து

...

எனத் தொடர்கிறார் வாதவூரர்.

இருண்ட வழியில் செல்லும் பகைவர்கள் ஒன்றாய் இணைந்து தங்கள் நாவில் தழும்பு உண்டாகும் அளவுக்கு நாத்திகம் பேசுகிறார்கள்.

வேள்விகளே சொர்க்கத்திற்கு கூட்டிச்செல்லும் என்கின்ற பிராமணர்கள் “இதுதான் உண்மையானது” என்று வேதங்களைச் சுட்டுகிறார்கள்.

இவ்வுலகில் எல்லாமே மாயை என்று வம்பு செய்யும் பெரும்புயல் போன்ற மாயாவாதிகளோ, சூறைக்காற்றாய் சுழன்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது இவ்வுலகில் மட்டுமே. சொர்க்கம், மேலுலகம், மறுபிறவி என்றெல்லாம் ஏதுமில்லை எனக்கூறும் பொருள்முதல்வாதிகளோ,  கொடிய பாம்புக்கு நிகரானவர்கள். இவர்களின் உரை கடும் நஞ்சுக்கு நிகரானவை.

இப்படிச் சமயவாதிகள் ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் மதமே, வாழ்க்கைக்கு சரியாக அமைவதாகப் புலம்புகிறார்கள், மோதுகிறார்கள்.

இத்தனைவிதமான சொற்போர்களால் ஒருகணம் செயலற்றுப் போகின்ற பக்தனின் மனம் நெருப்பில் விழுந்த மெழுகென உருகிவிடுகிறது. தனது உள்ளம் உருகி, அழுது உடல் தளர்ந்து ஏற்றுக்கொள்கிறான் வணங்குகிறான்.

பட்டிமண்டப நுகர்வால்தான் பக்தன் இப்படி ஆகிறான் என்று மணிவாசகர் விவரிப்பதாக நாம் நம்ப வேண்டியுள்ளது. ஆனாலும் பட்டிமண்டபச் செயல் பாடுகள் பற்றி இந்த வர்ணனைகள் வாயிலாக  நமக்கு ஏதும் கிடைக்கவில்லை.

முத்தமிழ்க் கவிமாமழை இளங்கோவடிகளை, தகவல் களஞ்சியம் தண்தமிழ்ச் சாத்தனாரை, திருவாசகச் செம்மல் மணிவாசகப்பெருமானைப் போலவே பனிரெண்டாம் நூற்றாண்டில் அவதரித்த கவிச்சக்கர வர்த்தி கம்பரும் பட்டிமண்டபம் பற்றிப் பேசுகிறார்...

கோசல நாட்டின் தலைநகரான அயோத்தியின் வளம் குறித்து வர்ணிக்கத் தொடங்கிய கம்பர், அந் நகரில் உள்ள மண்டபங்களையும் பட்டியலிடுகிறார்.

Òமன்னவர் திருநிறை அளக்கும் மண்டபம்

அன்னமென் நடையவர் ஆடும் மண்டபம்

உன்னரும் அருமறை ஓதும் மண்டபம்

பன்னரும் கலைதெரி பட்டி மண்டபம்Ó

இதுதான் அந்தப் பட்டியல் பாடல். வேந்தன் தயரதனுக்கு கட்டுப்பட்ட குறுநில மன்னர்கள் வரியாகக் கொண்டுவரும் தானியங்களை அளந்துவாங்கும் திருநிறை மண்டபங்களும், அன்னத்தின் மெல்லிய பாதங்களைக் கொண்ட இளநங்கையர் ஆடும் நடன மண்டபங்களும், உன்னதமான வேதங்களை கற்றுக் கொடுக்கும் கல்வி மண்டபங்களும், பல அரிய கலை களை மக்களுக்கு வழங்கும் பட்டிமண்டபங்களும் அயோத்தி மாநகரில் உள்ளன.

இவற்றில், திருநிறை மண்டபம் அரசு அலுவலக மாகச் செயல்படுகிறது. அருமறை மண்டபம் கல்விச் சாலையாகச் செயல்படுகிறது. நடன மண்டபம் மக்களின் பொழுதுபோக்கிற்காக செயல்படுகிறது. பல அரிய கலைகளையும், மக்களின் சிந்தையில் ஏற்றுவதற்காக மக்களின் பட்டிமண்டபம் செயல்படுகிறது.

இளங்கோவடிகள், சாத்தனார், மணிவாசகர் காலங்களில் சமயத் தேர்வுக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்த பட்டிமண்டபம், கம்பர் காலத்தில்

பல அரிய கலைகளைப் பற்றிப் பேசுகின்ற, இலக்கிய மண்டபமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது இன்றைய நிலையை கம்பர் காலத்திலேயே அடைந்து விட்டிருக்கிறது பட்டிமண்டபம்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?

மகத வேந்தனிடம் சோழவேந்தன் பட்டி

மண்டபத்தைப் பெற்றுகொண்டு வந்த காலம்தான், பாரதத்திலும் பாரதம் தாண்டியும் புத்த மதமும், சமண மதமும் முழுவீச்சோடு பரவத் தொடங்கிய காலம்.

தமிழ் வேந்தர்களின் அரசியல் ஆதிக்கம் பாரதம் முழுக்க பட்டொளி வீசிய காலமும் அதுவே.

வாழ்வியல் பேரறிஞர் திருவள்ளுவர் சமணக் கொள்கைகளை உலகமயம் ஆக்கும் பொருட்டு, மனிதனின் நிலமிசை இன்ப வாழ்விற்கு வழிகாட்டும் இரண்டடி வெண்பாக்களை படைத்த காலமும் அதுவே.

சமயங்கள் அனைத்திலும் சிறந்தது புத்தமதமே என்று புத்தமதப் பிரச்சார நூலான மணிமேகலை துறவு எனும் காப்பியத்தை சாத்தனார் படைத்த காலமும் அதுவே.

இலக்கிய இலக்கண நூல்களைத் தமிழில் படைத்த தோடு, ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகளை உருவாக்கி, சமய போதனை செய்தவர் புத்த சமண உறுபொருள் வாதிகள்

அதற்கு முந்தைய தமிழிலக்கியம் இயற்கையோடு இயைந்த இயற்கையோடு உடன் பயணித்த இலக்கியம். அந்த ஆக்கங்கள், புத்த சமண ஞானியரின் பரப்புரை வீச்சால் அழிந்துவிடுமோ என அஞ்சினார்கள் பாண்டிய மன்னர்கள்.

ஆகவே, பழைய தமிழ் இலக்கியப் பாக்களை தொகுப்பதற்கு, பழைய பாக்களின் வழியில் புதியவை யாக்கவும் தமிழ்ப் புலவர்களை தலைமைப் பொறுப்பில் அமர்த்தி தமிழ் அமைப்பை உருவாக்கினார்கள் பாண்டிய மன்னர்கள். திருவள்ளுவருக்கு முன்னால் இருநூற்றி ஐம்பது ஆண்டுகள், திருவள்ளுவருக்குப் பின்னால் இருநூற்று ஐம்பது ஆண்டுகள் என அந்த ஐநூறு ஆண்டுகளில் பாண்டிய வேந்தர்களின் வேண்டுதலின் படி, தமிழ்ச் சான்றோரால் ஆக்கப்பட்டவையே, தொகுக்கப்பட்டவையே பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தொகுக்கப் படாமல் இருந்திருந்தால் மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற புத்த சமய மதக்கோட்பாடுகளை வலியுறுத்தும் இலக்கியங்களே தமிழனின் மகத்தான பழமையான ஆக்கங்களாக அமைந்திருக்கும்.

திருவள்ளுவருக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு சமய சச்சரவுகளும் மோதல்களும் பிறப்பெடுத்திருக் கின்றன. சமண புத்த மதங்களை மீறி தங்களை ஆளுமைப் படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்டியிருக்கிறார்கள் சிவ, வைணவ சமயவாதிகள்.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் தங்கள் புலமையை, கவித்துவத்தை முன்னிறுத்தி பண்பாட்டு யுத்தம் நடத்தி யிருக்கிறார்கள். இவர்களின் யுத்தகளமாக பட்டிமண்ட பங்கள் திகழ்ந்திருக்கின்றன. பட்டிமண்டபம் ஏறி சமண புத்த சமய ஞானியரைத் தோற்கடித்து கழுவில் ஏற்றிய கொடூரங்களும் நடந்திருக்கின்றன. இதற்கான சான்றுகளை பக்தி இலக்கியங்களில் பரவலாகக் காண்கிறோம்.

சீத்தலைச்சாத்தனார் காலம் தொடங்கி கம்பருக்கு சற்றுமுன்னால் வரை மதச்சொற்போர்கள் நடந்திருக் கின்றன.

கவிச்சக்கரவர்த்தியின் காலத்தில் தமிழகம் சிவ, வைணவ மதங்களின் ஆளுமைக்கு வந்துவிட்டிருக்கிறது. அதனால்தான் பட்டிமண்டபத்தின் அடிப்படை நோக்கம் மாறி பல அரிய கலைகளைத் தெரிவிக்கும் கருவியாக மாற்றம் பெற்றிருக்கிறது.

பட்டிமண்டபமும் வழக்காடுமண்டபமும் ஒத்த தன்மைகொண்டவை அல்ல...

ஒரு மனிதனைக் கூண்டுக்குள் நிறுத்தி “இவன் நல்லவனே! தீயவனே!”, “இவன் நிரபராதியே! குற்றவாளியே!” என ஆய்வு செய்வதும், ஒரு பொருளை நிறுத்தி “இது பயனுள்ளதே! பயனற்றதே!” “இது கொள்ளத்தக்கதே! தள்ளத் தக்கதே!” என வாதப் பிரதிவாதம் செய்து தீர்ப்புப் பெறுவதும் வழக்காடு மண்டபத்தின் தன்மை.

“கோவலன் நல்லவனே தீயவனே!”, “சீதாப் பிராட்டியை தீக்குளிக்கச் செய்த இராமன் குற்றவாளியே! நிரபராதியே!”, “பிறமொழிகளைக் கற்றுக்கொள்வது பயன்தருவதே! பயனற்றதே!”, “சீமை விஷக்கருவை வளர்ப்பது தீமை பயப்பதே! நன்மை பயப்பதே!'” என்பன வழக்காடு மண்டபத்திற்கான தலைப்புகளே.

ஒரு காரணியை முன்னிறுத்தி, அதன் இரு பக்கங்களையும் ஆய்வது வழக்காடு மண்டபம்!

ஏறத்தாழ சம அளவுள்ள இரண்டு மனிதர்களை முன்னிறுத்தி, “இருவரும் சிறந்தவர்களே! மிகச் சிறந்தவர் யார்?” என்றும், இரண்டு பொருட்களை அல்லது இரண்டு செயல்களை முன்னிறுத்தி “இரண்டும் சிறந்தவையே! மிகச்சிறந்தது எது?” என வாதிட்டு வென்று காட்டுவது பட்டிமண்டபத்தின் தன்மையாகும்.

“கற்பில் சிறந்தவர் கண்ணகியே! மாதவியே!”, “தம்பியரில் சிறந்தவர் பரதனே! கும்பகர்ணனே” என்ற தலைப்புகளிலான பட்டிமண்டபங்கள் ஏராளம் நடந்துள்ளன. இத்தகைய பட்டிமண்டபங்கள் கற்பை, சகோதர பாசத்தை, பரப்புரை செய்ததோடு இளங்கோ வடிகளை, சிலப்பதிகாரத்தை, கவிச்சக்கரவர்த்தியை, இராமாயணத்தை தமிழகம் முழுக்கத் கொண்டு சென்றன. நயப்படுத்திப் பெருமை கூட்டின.

சமூகத்தைச் சீரழிப்பதில் மதுவுக்கும் சூதுக்கும் சம பங்குண்டு. “உடனே விட்டொழிக்க வேண்டியது மதுவே! சூதே!” என்பன போன்ற பட்டிமண்டபங்களும் நிறைய நடப்பதுண்டு. திருக்குறள் போன்ற அறநூல் களை பரப்புரை செய்ததோடு ஒழுக்கம்மிகு சமூகத்தைப் பாதுகாப்பதற்கு இவைகள் துணை நிற்பன.

ஆக, ஒரு காரணியின் எதிரும் புதிருமான இரண்டு பக்கங்களை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவது வழக்காடு மண்டபத்தின் தன்மை. அதன் நன்மைகளை மட்டுமின்றி தீமைகளை இழிவுகளைச் சிறுமைகளையும் தேடித் தேடி அலையவைக்கும்.

ஆனால், பட்டிமண்டபமோ, சம அளவுள்ள இரண்டு நன்மைகளை சிறப்புகளை பின்பற்றுதலுக்கு உரியவைகளைப் போற்றி, அதற்கும் அதற்குக் காரணமானவர்களையும் போற்றும், பாதுகாக்கும்.

“வருங்காலத்தில் குடும்ப அமைப்பு வலுப் பெறுமா? வலு இழக்குமா?”

“சத்தியம் அஹிம்சை வழியில் வெற்றி பெறுவது இன்றைக்கும் சாத்தியமே! சிரமமே!”

இவைபோன்ற ஒரு காரணியின் நன்மை தீமைகளை ஆய்வு செய்யும் வழக்காடு மண்டபத் தலைப்புகளில் பட்டிமண்டபங்களை நடத்துவது முறையல்ல. இத்தகைய தலைப்புகள், ஒருவர் மீது மற்றொருவர் புழுதிவாரித் தூற்றிக்கொள்வதற்கே பயன்படுகின்றன. இவை பட்டிமண்டபத்திற்கு ஒவ்வாதவை.

“கண்ணகியே! மாதவியே!” என்ற தலைப்பில் பேசவருவோர், அவரவர் அணித் தலைப்பிற்குரியோரின் சிறப்பையே வலியுறுத்துவர். அதோடு அந்த இலக்கியத் திற்கும் படைப்பாளிக்கும் சிறப்பு சேர்ப்பர். சிலப்பதி காரத்தையும் இளங்கோவடிகளையும் உயர்த்திப் பிடித்து அதைப் படிக்கத் தூண்டுவர். அதற்கான ஆற்றுப் படுத்தலையே செய்வர்.

“ஓவியக் கலையே! சிற்பக் கலையே!” என்ற தலைப்பில் பங்கேற்கும் பொழிவாளர்கள், ஓவியத்தின், சிற்பத்தின், ஓவியர்களின், சிற்பிகளின் சிறப்பை, தேவையை அவற்றின் பங்களிப்பை வலியுறுத்துவார்கள்.

இதைத்தான் கவிச்சக்கரவர்த்தி பல அரிய கலைகளை தெரிவிப்பதே பட்டிமண்டபத்தின் பணி எனக் கூறினார்.

பட்டிமண்டபம் என்பதன் பொருள் என்ன?

ஆயிரம்கால் (தூண்) மண்டபம், நூறுகால் மண்டபம், பதினாறுகால் மண்டபம், நான்குகால் மண்டபங்களை நாம் அறிவோம்.

பெரிதோ சிறிதோ நான்கு சக்கரங்களும் அச்சுகளும் இல்லாத தேர் வடிவத்தை மண்டபம் எனப் புரிந்து கொள்கிறோம்.

ஒரு நடன மண்டபம் எத்தகைய விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டுமென மங்கை மாதவி அரங்கேற்றுக் காதையில் இளங்கோவடிகள் சுவையாக உருவாக்கியிருக்கிறார். அதையே ஆடும் மண்டபம் என்கிறார் கம்பர். நிறையக் கலைஞர்கள் பங்கேற்பதால் கூத்து மண்டபங்கள் சற்றே பெரிதாக இருந்திருக்கலாம்.

ஒரு வேந்தனுக்கு குறுநில மன்னர்கள் திறை அளக்கும், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை அரசனுக்கு உழவர்கள் கொடுக்கும் மண்டபங்களையே திருநிறை அளக்கும் மண்டபங்கள் என்கிறார் கம்பர்.

வேள்விக்கான வசதிகளோடு மறைகளைக் கற்றுக் கொடுப்பவையே வேதம் ஓதும் மண்டபங்கள்.

ஆக, கூத்தாட்டு மண்டபம், நடனம் ஆடும் மண்டபம், திருநிறை அளக்கும் மண்டபம், மறை யோதும் மண்டபம், வழக்குரை மண்டபம் என்பவை களில் அதனதன் பொருள் எளிதில் விளங்கும் அளவு தெளிவாக உள்ளன.

ஆனால் பட்டிமண்டபம் எனில் என்ன பொருள்? பட்டி என்பதற்கு பொருள் தெரியவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளாக பொருள் தெரியாமலே ஒரு கருவியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

அகராதிகளில் பட்டி என்ற சொல்லுக்கு குக்கிராமம், கடலோர நகரம், பரத்தை, சேலை, வெற்றிலைச் சுருள், திருடன், தெப்பம், நாய், ஆடு, மாடு அடைக்கும் சிறு வளாகம், சேட்டை செய்பவன், கால்நடை எனப் பொருள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இவைகளில் எதுவுமே பட்டிமண்டபப் பட்டியோடு ஒட்டிவரவில்லை.

என் தொடக்கப்பள்ளி காலத்திலிருந்தே பட்டி விக்கிரமாதித்தன் கதைகளைப் படித்திருக்கிறேன். அதில் மன்னன் விக்கிரமாதித்தனைக் காட்டிலும் அவன் தம்பி பட்டி, மேதையாகவும் சிறந்த தீர்ப்புகளை அளிப் போனாகவும் காட்டப்பட்டிருப்பான். இருவரின் தீர்ப்பு களிலும் துலாக்கோல் முள்ளென நடுநிலை அமைந் திருப்பதை, மண்ணுலகம் மட்டுமின்றி விண்ணுலகமும் போற்றியதாகப் படித்திருக்கிறேன்.

பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் பாரதம் முழுக்கப் பரவியவை.

சோழவேந்தன் திருமாவளவனுக்கு, இரண்டா யிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நட்பு நாடி, பட்டிமண்டபத்தைக் கொடுத்தனுப்பியவன் மகதநாட்டு மன்னன் ஒருவன்.

மகத நாட்டு மன்னர்கள், தங்கள் மூதாதையரின் நடுநிலைத் தீர்ப்புகளை பின்பற்றிப் போற்றும் வகையில் தான் பட்டியின் பெயரில் இதை மதித்திருக்கிறார்கள், பரப்பியிருக்கிறார்கள்.

பட்டி விக்கிரமாதித்தன் கதைகளில் ஒன்று.

ஊர்வசியும் ரம்பையும் சிறந்த நாட்டிய நங்கையர். இருவரில் மிகச்சிறந்தவர் யார் என்பதற்காக நாட்டியப் போட்டி நடக்கிறது. நடுவராக இருந்த இந்திரனால் தீர்ப்பைக் கணிக்க முடியவில்லை. பட்டியை தேவ லோகத்திற்கு அழைத்து வரச்செய்து நடுவராக்கி மீண்டும் போட்டியை நடத்தி, தீர்ப்பைப் பெறுகிறார்கள்.

பட்டிமண்டபம் என்பது பட்டி எனும் வடபுல மன்னனின் பெயரால் நடத்தப்படும் நிகழ்ச்சி என்று நாம் கொள்ளலாமா?