“நான் பேனா பிடித்திருக்காவிட்டால் கத்தி பிடித்திருப்பேன்!”- என்று சொன்னவர், மகாகவியும், நாடக மேதையும், நாவலாசிரியருமான மனித நேயர் விக்டர் ஹியூகோ. (1802-1885).

“விக்டர் ஹியூகோ எழுத்துலகின் அற்புதம்... அவர் இலக்கியங்கள் எல்லாம் வாழ்வின் அனுபவ விளக்கமேயாகும். சென்ற நூற்றாண்டின் அதி மனிதர் (Superman) விக்டர் ஹியூகோ” என்று குறிப்பிடுகிறார், அவரது ‘ஏழைபடும்பாடு நாவலைத் தமிழுக்குத் தந்த யோகி சுத்தானந்த பாரதியார்.

எங்கும் குண்டுமாரி பொழிய, வெடி மருந்தின் நெடி காற்றிலே பரவ, பிணமலை குவிய, இரத்தம் பெருகி ஓட, வீரர்களின் போர் வெறிக் குரல்களும், காயம் பட்டவர்களின் ஓலமும் ஒலிக்க, களத்தின் நடுவே இவரது குழந்தைப் பருவம் கூடாரங்களில் கழிந்தது. நெப்போலியனின் தளபதியாக இவர் தந்தை பணியாற்றியதுதான் அச்சூழலுக்குக் காரணம்.

ஆனால், ஹியூகோவின் இளம்பருவ இதயத்தில் கவிதைக் கனலே பற்றி எரிந்துகொண்டிருந்தது;

ஓர் இலக்கிய இதழையும் நடத்தினார். இவரது தந்தையோ இவரை அரசுப் பணியில் சேர்க்கவே விரும்பினார். இளம் கவி அதற்கு ஒப்பவில்லை. “உனக்குக் கவிதையே சோறு போடட்டும் போ!” என்று விரட்டிவிட்டார் தந்தை. கவிதைத் தேவி, கவிஞரைத் தனது வறுமைக் கரங்களால் வரவேற்றாள். செல்வமும், செல்வாக்கும் படைத்த குடும்பத்துப் பிள்ளை, கந்தலுடையுடன், கிடைத்த இடத்தில் படுத்துறங்கி, கிடைத்ததை உண்டு. பிச்சைக்காரன் போல் அலைய நேர்ந்தபோதும், கவிதை அவரைக் கைவிட்டுவிடவில்லை. அவர் எழுதிய 335 வரிகள் கொண்ட ஒரு நெடுங்கவிதை பிரஞ்சுக் கழகத்தினரால் பாராட்டப்பட்டு, பரிசும் பெற்று, அவரது வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. பிறகு திருமணம், குழந்தைகள், அவர்களின் மரணங்கள் என, வாழ்க்கை கொந்தளிப்பாக இருந்தாலும், ஓயாத படைப்பாற்றலால் ஹியூகோ பெரும் புகழ் பெற்றார். ஒரு நாளைக்கு 100 வரிக் கவிதை அல்லது 20 பக்க உரைநடையென வெள்ளம் போல் பெருகியது படைப்பு.

இவரது ‘ஹெர்நானி’ என்ற நாடகம் உலகப் புகழ்பெற்றது. ஆரம்பத்தில் முடியரசுவாதியாக இருந்த ஹியூகோ, பின்பு குடியரசுவாதியாக மாறினார். மக்கள் படும் துயரங்கள் கண்டு அவரது மனிதநேயம் எழுத்தில் சுடர்விடத் துவங்கியது. அதன் காரணமாகவே அவர் நாடு கடத்தப்பட்டார்!

ஆனால், அவரது எழுதுகோல் என்றும் வற்றியதே இல்லை. நூறு நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்தார். எங்கும் மன்னராட்சி நிலவிய காலத்தில், புரட்சி முளைவிடத் தொடங்கியிருந்த அந்த நெருக்கடியான சூழலில், அவரது எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தைத் தோலுரித்துக் காட்டின. அதன் காரணமாக எவ்வகைத் துயர்வரினும் அதை ஏற்கத் துணிந்து நின்றார். ஹியூகோவின் ‘இளிச்ச வாயன்’ (லோம் கிரி) என்ற நாவலில், க்விப்ளேன் என்ற அநாதை, பாராளுமன்றத்திற்குப்போய் பேசும் எரிமலைப் பேச்சின் ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்.

“குழந்தை குட்டி இருப்பவர்களே கேளுங்கள்! இந்த நாட்டில் கோடி அநாதைக் குழந்தைகள் பசியாலும் பனியாலும் வாடுகின்றன. நானே அப்படிப்பட்ட குழந்தையாயிருந்தேன். பிரபுத் துவமே, உன் காலடியில் நசுங்கிக் கிடக்கும் ஏழைகளைக் கண்டு இரங்க மாட்டாயா? உன் நெஞ்சம் கல்லா? உன் தங்கக் கால் ஏழையின் தலைமேல் அகம்பாவத்துடன் அழுந்தி நிற்கிறது!... பிரபுத்துவமே, அகம்பாவமே, அதிகாரச் செருக்கே, உன் சட்டக் கொடுமையை சௌத்வார்க் பாதாளச் சிறையில் சென்று பார்! புழுவினும் கேடாக மனிதனை நடத்துகிறாய் நீ! இருட் சிறை; ஈரத் தரை; கைகால் விலங்கு; ஏழைக் கிழவனொருவன் வயிற்றில் கருங்கல்... ஆ! அக் காட்சியைக் கண்டு என் மனம் வெடித்தது! மூச்சுவிடக் கூட முடியாமல் ஏழைகளின் மார்பில் இரும்புக் காலை வைத்து நசுக்கும் பிரபுத்துவமே, கேள்! தங்க மாளிகை கட்டிப் பொங்கும் பிரபுக்களே. ஒருவாய்ச் சோற்றிற்கு ஏழைகள் படும்பாட்டை நீங்கள் அறிவீர்களா? வயிற்றுக் கொடுமையால் பெண்கள் விபச்சாரச் சாக்கடையில் விழுந்து, இருபது வயதிலேயே உடல்நலம் இழந்து கிழவிகள் ஆகின்றனர். ஏழைப் பெண்கள் வயிற்றுக் கொடு மையால் மானத்தை விற்கின்றனர். சீமாட்டி களின் நாகரிக விபச்சாரமோ, சதைக் கொழுப் பால் அட்டூழியம் செய்கிறது. அதையும் என் கண்ணாரப் பார்த்தேன். உங்கள் மாளிகையில் நடக்கும் கொலைகளையும், காமக் களியாட்டங் களையும், கற்பழிவுகளையும் கண்டேன், கண்டேன்! உங்கள் சிற்றறைகளின் பெரிய பயங்கர இரகசி யங்கள் கண்டு குடல் நடுங்கினேன். ஆயிரம் ஏழைகள் வாழக்கூடிய இடத்தை வளைத்து ஒரு செல்வன் மாளிகை எழுப்புகிறான். அந்த மாளிகை அலங்கார - நாகரிக- பணக்கார- பாப- நரகமா யிருக்கிறதே!...

“அய்யோ! பசிக் கொடுமையால் அநாதைக் குழந்தைகள் மண்ணையும், கரியையும் உண்டு மாளுகின்றனர்... பிரபுக்களே உங்கள் சுகபோக லீலைகளுக்காக வரி கொடுப்பவர் யார் தெரியுமா? பரம ஏழைகள், பட்டினி கிடக்கும் ஏழைகள்! அவர்கள் சாவினால் நீங்கள் பிழைக்கிறீர்கள். கோடிப் பேரை வறியராக்கி நீங்கள் வளம் பெறுகிறீர்கள். கோடிப் பேரை அடிமைகளாக்கி நீங்கள் அதிகாரச் செருக்கின் மதங்கொண்டு திரிகிறீர்கள். என்ன? நாளெல்லாம் பாடுபடும் தொழிலாளியின் வேர்வைப் பணம், தொந்தி யாடாத சோம்பேறிச் செல்வனுக்கோ சேர்வது?... நீங்கள் சுத்தச் சுயநலச் செல்வச் சோம்பேறிகள்! நாட்டின் புல்லுருவிகள்! ஏழைகளின் சதையைப் பிழிந்து, கண்ணீரைக் குடிக்கும் அசுரப் பாம்புகள்!... செல்வர்களே இரங்குங்கள்! உங்களுக்கே நீங்கள் இரங்குங்கள்! பொது ஜனங்கள் விழித்துக் கொண்டு தமது உரிமையைப் பெறும் காலம் வருகிறது! அரியணைகள் ஆட்டம் கொடுக் கின்றன; முடிகள் சாய்கின்றன... சமுதாயக் கப்பல் உங்கள் அட்டூழியச் சுமையால் மூழ்கிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அதனோடு மூழ்க நேரிடும்; உஷார்!”

ஹியூகோவின் உள்ளத்தில் வெடித்துச் சீறிய எரிமலைக் குழம்பின் ஒரு சிறு பகுதிதான் இது! (இளிச்சவாயன் நாவலில்- தமிழாக்கம்- கவியோகி சுத்தானந்த பாரதியார்) இந்த அளவுக்கு வீரம் செறிந்தவராகத் திகழ்ந்தவர் ஹியூகோ. ஜனநாயகம் செழித்தோங்குவதாகவும், பேச்சுரிமை, எழுத்துரிமை கொடிகட்டிப் பறப்பதாகவும் சொல்லப்படுகிற இந்தப் புண்ணிய பாரதப் பாராளுமன்றத்தில் இப்படியொருவர் இன்று பேச முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்!

விக்டர் ஹியூகோவின் படைப்புகள் அமரத் துவம் வாய்ந்தவை. அனைத்து மொழிகளுக்கும் சென்று மக்கள் உள்ளங்களில் அழியா இடம் பெற்றவை. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையும் தமிழில் கிடைக்கக்கூடியவையும் மூன்று நாவல்கள் மட்டுமே. ஏழைபடும்பாடு (லா மிராப்லா –Les Miserable), இளிச்சவாயன் (லோம் கிரி). இவை இரண்டும் கவியோகி சுத்தானந்த பாரதியாரால் ஆவேச நடையில் மொழிபெயர்க்கப்பட்டு 1948இல் வெளிவந்தவை. இதே ஆண்டு ப.கோதண்டராமன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி வந்ததுதான் இந்த மரகதம், (நோத்ருதாம் தைபரி- The Hunch-back of Notre-dame). ஏழைபடும்பாடு- தனலெட்சுமி பதிப்பகத்தாலும் இளிச்சவாயன் வ.உ.சி. பதிப்பகத்தாலும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மரகதம் ஓர் அசாத்தியமான கதை. பிரமிக்க வைக்கும் கட்டமைப்பும், அற்புதமான பாத்திரப் படைப்புகளும் கொண்டு, நெஞ்சை நெகிழ வைக்கும் கதை. ஒரு முறை படித்தால் போதும், வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. உள்ளத்தை உலுக்கிவிடும். ஒரு மறு வாசிப்பிற் காகவும், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும் நான் 65 ஆண்டுகள் தவித்திருக்க வேண்டி நேர்ந்ததை நான் சொல்லியே ஆகவேண்டும். 56 ஆண்டு களுக்கு முன் என்னிடம் தமிழ் படித்த மாணவச் செல்வர்கள் சிலர் (குறிப்பாக- குன்னத்தூர் பாலு) இன்னும் என்னைச் சந்திக்கும்போது ‘நோத்ருதாம் தை பரி’ கிடைத்ததா என்று விசாரிக்கவே செய் கிறார்கள். அவர்களுக்கு ‘லோம் கிரி’யும் தெரியும், ‘கொம்ப்ராஷிகோ’வும் தெரியும். அப்படி நினைவில் அழுத்தமாய்ப் பதிந்த கதை மரகதம். ‘மரகதம்’ ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு என்பதை எந்தப் பதிப்பாளருக்கு எப்படிச் சொல்லி விளங்க வைப்பது? அவர்கள் அந்த மூலப் பிரதியைத் தேடிப் பிடிக்க சிரமம் எடுத்துக் கொள்வார்களா என்ற தயக்கத்திலிருந்தேன். “நீங்கள் அவ்வளவு முக்கியம் என்று கருதினால் அதைத் தேடிப் பிடித்து புத்தகம் போட்டுவிடுவோம்” என்று நம்பிக்கை அளித்தனர் விழிகள் பதிப்பகத்தார். அவர்களுக்கு வாழ்த்து கூறத்தான் வேண்டும்.

அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அமர இலக்கியம் புதுவெளிச்சம் காண் பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஓர் ஆவேசப் புயல் இந்த மரகதம். குவாசி மோடா, எஸ்மரால்டா இரண்டும் அற்புதமான பாத்திரப் படைப்புகள். எஸ்மரால்டா என்ற பெயர் எமரால்ட் என்ற சொல்லிலிருந்து உருவாகி யிருக்க வேண்டும். எமரால்ட் என்பது பச்சைக்கல்; மரகதமணி, இந்தப் பாத்திரத்தைச் சுற்றியே கதை நிகழ்வதால் மொழி பெயர்ப்பாசிரியர் ‘மரகதம்’ என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு வந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இதைத் திரைப் படமாக்கிய ஹாலிவுட்காரர்கள், அந்தக் காலத்தில் தலைசிறந்த நடிகரையும், நடிகையையும் இந்த இரு பாத்திரங்களை ஏற்று நடிக்க வைத்தனர்.

1905ஆம் ஆண்டு முதல் 1997 வரை 10 திரைப் படங்கள், 5 தொலைக்காட்சித் தொடர்கள், 5 மேடை நாடகங்கள், 3 இசைக் கோவைகள், 12 இசை- நாடகங்கள், 5 பாலே நாட்டிய நாடகங்கள், 2 பிபிசி நாடகங்கள், 10 மொழிபெயர்ப்பு நூல்கள் உருவாக்கப்பட்டிருப்பது இந்த நாவலின் சிறப்பு. இது ஆங்கில மொழிப்பட்டியல். மற்ற ஐரோப்பிய மொழிகளில் என்னென்ன ஆக்கங்கள் ஏற்பட்டிருக் கின்றன என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

1939ஆம் ஆண்டு, ‘ஆர்கேஓ ரேடியோ’ என்ற நிறுவனம் தயாரித்த The Hunch-back of Notre-dame - என்ற திரைப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல குணசித்ர நடிகர் சார்லஸ் லஃப்டன் குவாசி மோடோவாகவும், தலைசிறந்த நடிகை மரீன் ஒஹாரா எஸ்மரால்டாவாகவும் நடித்திருந்தனர்.

பாரிஸ் நகர மாதாகோயிலைப் பெயர்த்து வந்து வைத்ததுபோல, ஹாலிவுட்டில், 125 அடி உயரமும், 150 அகலமும் கொண்ட ஒரு கோயில், சிற்ப வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது! இது கருப்பு-வெள்ளைப் படம். இன்னொரு கருப்பு-வெள்ளைப் படம் 1969இல் தயாரிக்கப்பட்டது. டிராகுலா, ஃபிராங்கன் ஸ்டைன் முதலிய பயங்கர பாத்திரங் களில் நடித்து வந்த லான் சேனி குவாசிமோடோ வாகவும், ருத்மில்லர் எஸ்மரால்டாவாகவும் நடித்திருந்தனர். பிரபல நடிகர் ஆன்டனி குவின் குவாசிமோடோவாகவும், அழகிய இத்தாலிய நடிகை கினா லோலோ பிரிஜிடா எஸ்மரால்டா வாகவும் நடித்திருந்த வண்ணப் படம் 1997இல் வெளிவந்தது. விக்டர் ஹியூகோ முதலில் இந்தக் கதையை நாட்டிய நாடகமாகத்தான் உருவாக்கி யிருந்தார். இதை அடியொற்றி ஒரு கார்ட்டூன் படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் 1996இல் உருவாக்கியது. மற்ற படங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதன் பாதிப்பில், மாதவன் இயக்கிய ‘மணியோசை’ என்ற திரைப்படத்தில் கல்யாண் குமாருக்கு குவாசிமோடோ வேடம் தரப்பட்டது. ஆனால், கதை வேறு. அண்மையில் வந்த பேரழகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்த வேடம் தரப்பட்டிருந்தது. அவரது வேடமும், நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், கதை வேறு.

நம்மைத் திகைக்க வைக்கும் குவாசிமோடோ என்னும் பாத்திரம் கற்பனை அன்று. ஹியூகோ படிக்கின்ற காலத்தில், அங்குப் பணியாற்றிய கோரமான உருவம் படைத்திருந்த அன்பு நெஞ்சம் கொண்ட ஒரு பணியாளின் உருவம் என்றும் அறிகிறோம். வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: ஆரம்ப அத்தியாயங்களில் வரும் பெயர்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பிரஞ்சு நாட்டின் பண் பாட்டுச் சூழலையும், இவர்களின் எளிமையையும், நகைச்சுவை உணர்வையும் சித்திரிக்க உருவாக்கப் பட்ட நிகழ்வுகள் அவை.

குவாசிமோடன், கவிஞர் கிரேங்குவார், ஜிப்சி எஸ்மரால்டா, அவளது அதிசய ஆடு திஜாலி, கேப்டர் பீபஸ், தேவாலயப் பாதிரியார் க்ளாத் பிரல்லோ, இவையே நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய பாத்திரங்கள்.

1831 ஜனவரி 14 அன்று. பாரிஸ் நகரில் இந்த நாவல் பிரசுரம் ஆயிற்று... 183 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் படைப்பு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது? இந்தக் கதையின் அடிப்படையில் ஏன் இத்தகைய கலைப் படைப்புகள் வந்தன; வந்து கொண்டிருக்கின்றன? நமது நிகழ்கால வாழ் வோடு எந்த வகையிலும் ஒரு படைப்பு தொடர் பற்றுப் போகுமென்றால், அது எவ்வளவு மகத்தான காவியம் என்றாலும், அதன் சாவு தவிர்க்க முடியாதது... காலவெள்ளத்தில் அது காணாமல் போய்விடும். மரகதம்- நமது மன ஆழங்களுக்குள் சென்று அதன் இருண்ட பக்கங் களுக்கு மேல் வெளிச்சம் வீசுகிறது. காதல்- காமம்- அன்பு-அருள் ஆகியவற்றின் அடக்கமும், ஆவேசமும் வெளிப்படும் படைப்பு இது.

“கோட்டான் வானம்பாடியின் கூட்டுக்குள் செல்வதில்லை” என்ற குவாசிமோடோவின் வார்த்தைகள் நமக்குத் திகைப்பைத் தருகின்றன. என்ன பயங்கரமான உருவத்திற்குள்ளிருந்து எவ்வளவு பக்குவமான வார்த்தைகள்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லை உண்டு. அது வாழ்நிலையால் உருவானது; அல்லது உரு வாக்கிக் கொண்டது. அந்தந்த எல்லைகளின் விளிம்பை நோக்கிப் போவது படி கடத்தலுக்கான முயற்சி. அது ஆபத்தானது. படி தாண்டினால் கிடைப்பது சொர்க்கமோ, நரகமோ, எதுவானாலும் எல்லையில், விளிம்பில் நிற்பது ஓர் அக்கினிப் பரிட்சை... எல்லை கடத்தல் அக்கினிப் பிரவேசம்! அதில், ஒருவர் எரிந்து சாகலாம், அல்லது தாவிக் குதித்துக் கடக்கலாம். அல்லது பீனிக்ஸ் பறவை யாய்ச் சாம்பலிலிருந்து புத்துயிர் பெற்று மீட்சி பெறலாம். அது அந்தந்த மனிதனின் ஆளுமையைப் பொறுத்தது. ஆனால், எல்லைகளுக்கு உள்ளே, தள்ளி இருப்பது எப்போதும் பாதுகாப்பானது; ஆபத்துகள் இல்லாதது. அவ்வாறாயின், அந்த இருப்பு உப்புச் சப்பற்றது. அது வாழ்தல் அன்று; உயிரோடிருப்பது மட்டுமே. இங்கே முக்கிய பாத்திரங்கள் எல்லை கடக்கிறார்கள். இதுதான் கதை.

பயங்கரத் தோற்றம் கொண்ட குவாசி மோடன், கண்டவரைக் கிறங்க வைக்கும் ஆடல் அழகி எஸ்மரால்டா, கனவுகளில் மிதக்கும் பஞ்சைப் பராரியான கவிஞன் கிரேங்குவார், புகழ்பெற்ற தேவாலயக் கார்டினல் பாதிரி க்ளோத் பிரல்லோ இவர்கள் நால்வரும், ஆசைக் காற்றால் உந்தப்பட்டு எல்லை கடக்கிறார்கள். ஆண்கள் மூவரின் குவி மைய ஒளிப் புள்ளி எஸ்மரால்டா, தொட்டால் சுடும் புள்ளிச் சுடர் அது. பாதிரியார் முன் மண்டியிட்டுப் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டிய ஒருவர். பாதிரி யாராகவே இருந்துவிட்டால், அவர் யாரிடம் போவது? இன்னொரு பெரிய பாதிரியாரிடம்தான் போக வேண்டியிருக்கும். ஆனால், அந்த பிரல்லோ, ஒரு ஜிப்சிப் பெண்ணின் காலடியில் விழுந்து, தன் இதயத்தின் இருட்டைத் திறந்து காட்டி, கடவுளையே காறி உமிழ முற்படும் காமக் கனல் நம்மைத் திகைக்க வைக்கிறது. எல்லை கடக்கும் வெறியில், தாவிக் குதித்துத் தீயில் காலிடறி விழுந்த கதை இது. கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் புத்த பிட்சு, நாகநந்தியடிகள், நடன நங்கை, சிவகாமியின் முன் நெஞ்சில் அறைந்துகொண்டு பேசும் காட்சி நினைவுக்கு வருகிறது.

பாவியாய்ப் போன பாதிரியாரின் நெஞ்சுக்குள் எஸ்மரால்டா, குரூரமான தோற்றம் கொண்ட குவாசிமோடனின் நெஞ்சுக் குள்ளும் அவளே, வறுமையில் வாடும் கவிஞனின் நெஞ்சுக்குள்ளும் அவளே. ஆனால், அவளுடைய நெஞ்சுக்குள்ளே மோசக்காரப் படைத் தலைவன் கப்பித்தான் பீபஸ். இவர்களிடையே நிகழும் மோதல், மோசடி, மோகத் தீ யாரை அழிக்கின்றன? எல்லாரையும்! அதுதான் சோகம்! உண்மையின் கசப்பு- இவர்கள் தாண்டிய எல்லைகள் தவிர்க்க வேண்டிய எல்லைகள்- மாய எல்லைகள். இதில் மோசடி காப்டன் பீபஸ் தவிர உணர்ச்சி மயமானவர்கள் தப்பவில்லை. எல்லை கடந்தவர்கள் எரிந்துபோன அக்கினிப் பிரவேச காவியம்தான் மரகதம்.

மரகதம் - விக்டர் ஹியூகோ

தமிழில்: ப. கோதண்டராமன்

வெளியீடு:

விழிகள் பதிப்பகம்,

8/எம். 139,7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41,

பேசி: 9444265152 / 9444244017

விலை: ` 250/-