காற்றின் பெருவெளிகளில்

தென்னைகளை அழித்த

இறுமாப்பில் சுழலும்

அசுர காற்றாலைக் கரங்கள்

புல் தேடி அலையும்

கால்நடைகளின் வாய்களில்

படர்கின்றன பாலீதீன் அரக்கர்கள்

வீடுகளில் வலைகளுக்கு

பின்னாலிருக்க கற்றுக் கொண்டு

கொடுக்கப்படும் இரைகளை

உண்டு உறங்க பழகி

பல வருடங்களாகிவிட்டன

குருவிகளுக்கு

மரங்களை பார்க்கவென்று

சிறப்பு சுற்றுலா திட்டம்

செயல்படுத்தப்படுகிறது

ஒவ்வொரு பள்ளியிலும்

ஓசோனின் ஆயுளுக்காக

வருடத்தில் ஒருமுறை

ஒருமணி நேர மின்சார நிறுத்தமாம்

உலகெங்கும்

மரபணு விதைகளும், இறக்குமதி உரங்களும்

மண்ணின் உயிரை உறிஞ்சியபடி 

படிகளற்ற கிணறுகளில்

பாகம் பிரித்துக்கிடக்கின்றன

ஆழ்துளைக் கிணறுக் குழிகள்

வறண்டு கிடக்கும் வாய்க்கால்களில்

வலை பின்னி கிடக்கும் சிலந்திகள்

ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகின்றன

தள்ளுவண்டிகளில்

கேழ்வரகு, கம்பங்கூழ்கள்

தொலைக்காட்சி தொடர்களின்

நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன

விவசாயப் பணிகள்

மனைகள் பிரித்தது போக

மீதிக் கிடக்கும்

மேட்டுக்காட்டுக் குடிசையில்

பிளந்து கிடக்கும்

மாட்டுவண்டி சக்கர

கோணல் அச்சாணிக் கம்பிகளில்

கிழிந்து தொங்குகிறது

விவசாயிகளின் இற்றுப்போன கோவணத்துணிகள்

ஊடகங்களிலும் புத்தகங்களிலும்

அடிக்கடி தட்டுப்படும் வார்த்தை!

"இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு

விவசாயம்'

- ஜெ. பாலா