ஆசிரியர் குறிப்பு:

'மண் மொழி” என்னும் தன் இதழில் இராசேந்திர சோழன் அவர்கள் 'பகுத்தறிவின் மூட நம்பிக்கைகள்” என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதுகிறார். இன்னும்கூடத் தொடர்வார் என்று தோன்றுகிறது. அந்தக் கட்டுரைகளின் தொனியும் பொருளும் ஒன்றுதான். 'இந்து மதத்தின் சில குறைகளுக்காக நாம் அதை இழிவு செய்துவிட முடியாது. விமர்சித்துக் கொண்டே இருக்கக் கூடாது. ஒரு ஜனநாயக இந்துவாக அதை அனுசரித்தே போகவேண்டும். பிற மதங்களை - குறிப்பாக இஸ்லாத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியாது” என்பதே அக்கட்டுரைகளின் பேச்சு. அவருக்கு முட்டுகொடுப்பதற்காக 'பிரவாஹன்” என்னும் ஒரு பார்ப்பனர், பொது நியாயம் பேசுபவரைப் போன்றதொரு பாவனையில் பெரியார், மார்க்ஸ் போன்றவர்களை நக்கலாகக் கேள்விக்குட்படுத்துவதும் இந்து வாழ்வியல் அவர்களையெல்லாம் விட உயர்ந்தது என்றும் தீவிரப் பரப்புரை செய்கிறார். அவரையே விசாரித்ததில் தான் மட்டுமல்ல, தாங்கள் ஒரு குழுவாக இயங்குபவர்கள் என்கிறார். ஆக, அவர் ஒரு இயக்கவாதி. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் சலித்தெடுத்து பார்ப்பன தர்மங்களை அவற்றின் உள்ளுறை அர்த்தங்களாகத் தேடி எடுத்து, வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து நியாயப்படுத்தும் இயக்கவாதி. இது தெரிந்தோ, தெரியாமலோ, இராசேந்திர சோழன் இந்துமதச் சுரணையை வளர்த்தெடுப்பதில் அவரோடும், தனித்தும் ஒரு சாமியாடியைப்போல் மறித்துமறித்துப் பேசிக் கொண்டே போகிறார்.

காஞ்சிபுரம் 'இலக்கிய வட்டம்” ஏற்பாடு செய்திருந்த விமர்சன அரங்கில் இக்கட்டுரை வாசிக்கப்பட்டது. இலக்கிய வட்டம் நாராயணன் உடனடியாக அதை வாங்கி இராசேந்திர சோழனைத் தன் இதழில் வெளியிடக் கோரினார். வெளியிடப்படவில்லை. இங்கே வெளியிடப்படுகிறது.

எல்லாருக்கும் வணக்கம். வீண் முகமன்களில் நேரத்தை விரயம் செய்யாமல் நேரடியாக விஷயத்திற்கு வருவோம். இன்றைய விவாதப் பொருளை உருவாக்கியவர்களில் பிரவாகன் நம்மில் பலரை, குறிப்பாக என்னை ஏமாற்றிவிடவில்லை. அவரிடம் எதை எதிர்பார்க்கலாமோ, அதை மிகுந்த கெட்டிக்காரத்தனத்தோடும் புத்திசாலித் தனத்தோடும் தனக்கான தர்க்க சாத்தியங்களோடு வழங்கியிருக்கிறார். என்னை ஒரு அசப்பில் ஏமாற்றி விடுகிறவர்களை, "அவர்கள் சொல்வது உண்மை தானல்லவா?” என்று என்னைப் பொய் மயக்கில் தள்ளிவிடுகிறவர்களை நான் புத்திசாலிகளாகவே மதிப்பிடுகிறேன். அந்த வகையில் பிரவாகன் நல்ல புத்திசாலி. இந்த புத்திசாலித்தனம் ஒருவகை இரத்தப் புற்றுநோய் மாதிரி. சாதாரணமாக இரத்தப் புற்றுநோய் மனிதர்களைக் கொல்லும். ஆனால் இந்தப் புத்தி நோய் தன்னளவில் மார்க்கண்டேய பலம் பெற்றுப் பிறரைத் தின்று உமிழும். மண் புழு தின்றுமிழ்ந்த மண்ணைப் போலத் தான் உமிழ்ந்ததையே உரமாக்கிக் கொண்டு செழித்து வளரும்.

எனக்கு இவரையொத்த நண்பர்கள் சிலரோடு உரசலுண்டு. தஞ்சாவூரிலிருந்து மணிவண்ணன் என்றொரு நண்பர். மற்றொருவர் இடதுசாரி இயக்கத்திலிருந்து களைப்புற்று பார்ப்பனியக் கருத்தியலில் இளைப்பாறி மகிழும் பிரபல எழுத்தாளர் ம.ந. ராமசாமி. தலித்தியத்தில் புரண்டெழுந்து பெரியாரியத்தைக் கீறிப் பார்க்கும் ஹவி என்னும் போதி பாலன், இடதுசாரித் தலித்தியவாதி பாக்கி உமாநாத் போன்ற இளைஞர்கள். இவர்களோடுகூட, கடந்த நான்கு நாட்களாக- அதாவது 26-8-2008இலிருந்து எனக்கு இன்னொரு நண்பரும் கிடைத்திருக்கிறார். இவர் பக்திமான். பெயர் எ.வெங்கட் ராமன். ஓய்வு பெற்ற ஆசிரியர். விருத்தாசலத்துக்காரர். 80 வயது முதியவர். சோற்றைப் பிசைந்து - மன்னிக்கவும், சாதத்தைப் பிசைந்து கஞ்சியாகத்தான் குடிக்க முடிகிறது. கீழ்த்தாடை நோகிறது. உள்ளங்கையால் ஏந்திப் பிடித்துக் கொண்டால் இதமாய் இருக்கிறது. மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகம் மட்டுமே என்று திடமாய் நம்புகிறவர். " A language is an instrument through which we are expressing our thoughts and
feelings. It is not god.

நாம் (தமிழர்கள்) மொழியைக் கடவுள் நிகர் கொண்டுபோய்விட்டோம்” என்பன அவர் வாக்கியங்கள். ஆதிசங்கரனின் 'இரண்டல்ல” என்னும் தத்துவத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல இவரது நம்பிக்கை. ஆறாம் வகுப்பிலிருந்து 11ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் படித்தவர். கழக ஆட்சி அடைப்புக் குறியில் (கலக ஆட்சி) வந்து சமஸ்கிருதமோ இந்தியோ படிக்க முடியாமல் செய்து, தமிழாசிரியரைவிட அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்த ஆசிரியர்களை தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாகக் கீழே தள்ளியதை இன்னும் மன்னிக்கத் தயாராயில்லாதவர். தகவலுக்கும் மேலாக சமஸ்கிருதத்தை நேசிப்பவர். 'இரண்டல்ல” என்று சொன்ன அந்த ஆதிசங்கரனே வேதத்தை பிராமணனே ஓத வேண்டும் என்று ரிவர்ஸ் கீரிலும் விதி வகுத்திருக்கிறானல்லவா. இந்த நண்பர் வள்ளலாரின் பக்தர். வள்ளலார் அவர் கனவில் வந்து 'பூணூலைக் கழற்றி எறி” என்று உபதேசித்ததில் கடந்த 30 ஆண்டுகளாகப் போடுவதில்லை. உறவுக்காரர்கள் வரும்போது மட்டும் போட்டுக் கொள்வதுண்டு. 'நீ ரோமில் இருக்கும்போது ரோமானியனைப் போல நட” என்பது வாசகமல்லவா? (அவர் நினைவுபடுத்திய வாசகம்தான்.) பின்னொருமுறை வள்ளலார் கனவில் வந்து 'புட்டபர்த்தி சாயிபாபாவைப் போய்ப் பார்” என்று கட்டளையிட்டிருக் கிறார். இவர் போய் தரிசித்தபோது இவரைப் பார்த்து ''நான் கிருஷ்ணராய் இருந்தபோது நீ என் விளையாட்டுத் தோழன் ததியாண்டனாய் இருந்தவனல்லவா?” என்று சொல்லி அருள் பாலித்திருக்கிறார். காலையில் தினமலர் படிக்கிறார். ''எனக்கு தங்களைப் போல் உள்ள good soulsஐப் பார்க்க, பேச ஆசை! இங்கு நல்ல பேச்சுப் பேச ஆளில்லை,” என்று முடித்திருக்கிறார்.

எனக்கும் அவரைப் பார்க்க ஆசைதான். ஒரு பகல் பொழுது முழுவதுமாயினும் அவருக்கு ஆறுதலாக அவரோடு இருந்துவர ஆசைப்படுகிறேன். பிரவாகனுடைய எதிர்வினையின் மூலப்படி எனக்குக் கிடைத்த அன்றே ராமானுஜம் என்னும் மொழி பெயர்ப்பாளர் - எழுத்தாளர் என்னைப் பார்க்க வந்து, தான் எழுதிய ''மனுதர்ம சாஸ்திரம் கட்டமைத்த பார்ப்பனிய உடல்கள்” என்னும் கட்டுரையைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிச் சென்றார். அக்கட்டுரையில் பேராசிரியர் உமா சக்கரவர்த்தியின் சில கருத்துகள் தொகுத்தளிக்கப் பட்டிருந்தன. அவை என் கருத்துகள் சிலவற்றைச் சரிபார்த்துக் கொள்ள உதவின.

அந்தக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு ஒரு பகுதி: ''மனு கட்டமைத்த ஒரு பார்ப்பனிய உடலுக்கு வரலாறு முக்கியமில்லை, மொழி முக்கியமில்லை, மதம் முக்கியமில்லை, நிலப்பரப்போடுள்ள உணர்வுபூர்வமான தொடர்பு முக்கியமில்லை. கொள்கைகள், கோட்பாடுகள், நியாயங்கள், அதர்மங்கள், நல்லது, தீயது அனைத்துமே அந்த உடலாகச் சுருங்கிவிட்டது. இந்த உடலுக்கு வெளியே உள்ள அனைத்தும் இந்தப் பார்ப்பன உடலின் அதிகாரத்தையும் தனித் தன்மையையும் காப்பாற்றும் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகிறது, கையாளப்படுகிறது. இந்தப் பார்ப்பனிய உடலின் உச்சகட்ட வளர்ச்சியாக நாம் ஆதி சங்கரனின் மாயாவாதக் கோட்பாட்டை முன்வைக்கலாம். வரலாறு மாயை, சமூகம் மாயை, மனித உறவுகள் மாயை, கலாச்சார வெளிப்பாடுகள் மாயை என்று அனைத்தும் நிராகரிக்கப்பட்டு 'அகம் பிரம்மாஷ்மி” என்று தன் உடலையே இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மையமாக வைக்கிறது. இதைப் பார்ப்பன அகங்காரத்தின் உச்சகட்டமாகவே பார்க்கலாம்” என்று அந்தப் பகுதி முடிகிறது. 1997இல் நான் இதை என் மொழியில் எழுதியிருந்தேன்.

''பார்ப்பனர்கள் ஆகாசத் தாமரை மாதிரி. நீர் வேண்டாம், நிலம் வேண்டாம். காற்றைக் குடித்தே வளர்வார்கள்; ஒருமையுற்றிருப்பார்கள். நம்மூர்ப் பார்ப்பனர்களை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் அவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந் தாலும் கலிபோர்னியாவில் இருந்தாலும் ஒரே மொழியையே பேசுவார்கள் - பார்ப்பன மொழியை...” என்று வளர்கிறது அந்தக் கருத்து. அண்மையில் எழிலரசன்கூடத் தன் கட்டுரையில் தமிழ்நாட்டில் பார்ப்பனத் தமிழைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டி வரும் என்பதாக இதை வெளிப்படுத்தியிருந்தார். இதன் திரண்ட வடிவம்தான் பார்ப்பன உடல் என்னும் வார்ப்பு.

என்னுடைய விருத்தாசலம் நண்பர் உடலாக ஒன்றியிராமல் உயிர்த்துவம் மிக்கப் பன்முகப் பரிமாணமாய் விரவியிருப்பார் எனில், நானும் அவரும் நல்லுயிர்களாய் கைகோர்த்து ஆறுதல் பெறுவது சாத்தியமாகலாம். நான் ஒன்றும் தொடர்பில்லாமல் இவற்றையெல்லாம் சொல்லவில்லை. இவற்றினுடே செல்லும் இழையை நீங்கள் அடையாளப்படுத்த முடிந்தால் அதுவே விடையை வடிவமைத்துச் செல்வதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுதெல்லாம் நீங்கள் சௌம்ய நாராயண்களை, அதாவது பிரவாகன்களை எங்கும் காணலாம். இடதுசாரி அமைப்பிலோ, தீவிர மார்க்சிய - லெனினியக் குழுவிலோ தலித் இயக்கங்களிலோ, பெண்ணிய அமைப்புகளிலோ - எங்கு வேண்டு மானாலும் காணலாம். ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் அவர்களாகவே இருப் பார்கள் என்பதுதான் முக்கியம். எங்கேனும் புதிய தளிர்கள் பூத்தால் அவற்றைப் பொசுக்குகிறவர்களாக, புதிய கொம்புகள் முளைத்தால் அவற்றைத் தீய்க்கிறவர்களாக, புதிய கருத்துகள் எழுந்தால் அவற்றைப் பங்கப்படுத் துகிறவர்களாக, அல்லது பரிகசிப்பவர் களாக, அல்லது விமர்சிப்பவர்களாக, தாங்களே புதிதாகச் செய்வது என்னும் பெயரில் முன்பே வளர்த்தெடுத்த முட்செடிகளின்மேல் படிந்துள்ள புழுதியைப் புண்ணியா வாசன நீர் கொண்டு கழுவி வளர்த்து விடுகிறவர்களாக, அவர்கள் அவர்களாகவே தங்களைத் தக்கவைத்துக் கொள்வார்கள்.

சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் என்றொரு பாத்திரம் வரும். அவன் பார்ப்பனியப் பரப்புரையாளன், பார்ப்பனக் கலாச்சாரத் தூதுவன். அவன் எங்கேயும் இருப்பான். கணிகையர் வீதியிலும் சுற்றுவான். காடு மேடுகளிலும் அலைவான். அரசவையிலும் நுழைவான். ஆனால் அவன் தன் பணியில் மட்டும் குறியாயிருப்பான். கோவலனை நீர்ச் சுனையில் சந்தித்து மாதவியின் கடிதத்தைக் கொடுக்கும்போது அவனைக் 'கோபால” என்று அழைக்கிறான். கோபாலன் என்னும் பெயரின் தமிழ் வடிவம்தான் கோவலன். பின்னாளில் கம்பன் எல்லா சமஸ்கிருதப் பெயர்களையும் தமிழ் வடிவப்படுத்தினானே, அவனுக்கு முன்னோடிதான் இளங்கோ. கோவலன் படும் துன்பத்தைக் கண்டு மனம் வெதும்பி, ''இம்மைச் செய்தது யானறி நல்வினை, உம்மைப் பயன்கொல்!” என்று சொல்லி, கோவலன் பார்ப்பனர்களுக்குச் செய்த நற்செயல்களையே தொகுத்தளிக் கிறான் மாடலன். பார்ப்பனன் அல்லாத ஒருவனுக்குக் கோவலன் செய்த ஒரே ஒரு உதவியும் விரயமானதைப் பட்டியலிடுகிறான். சேரன் செங்குட்டுவன் அரசவையில் நுழைந்து, சோழனும் பாண்டியனும் செங்குட்டுவனைப் பகடி செய்ததைக் கேட்டு வெஞ்சினம் கொள்ளும் குட்டுவனைப் பார்த்து, "மன்னா, நீ இதுவரை மறக்கள வேள்விதான் செய்துள்ளாய். இது தருணம். அறக்கள வேள்வியில் உன் கவனத்தைத் திருப்பு” என்கிறான். அதாவது யாகம் செய்யச் சொல்கிறான். அந்த மடையனும் அப்படியே செய்கிறான். ஒருபுறம் கண்ணகி சிலைக்கு மங்கல நீராட்டு நடக்கிறது. மறுபுறம் வேத கோஷம் முழங்க வேதியர்கள் செய்யும் யாகத்துக்கான ஏற்பாடு நடக்கிறது. அதுதான் மாடலன் வெற்றி.

பேசாப் பொருளைப் பேசத் துணிந்ததாகப் பேர் பண்ணிக்கொண்டு மறித்துமறித்து, எதிர்த்துஎதிர்த்து, பின்னிப்பின்னி, பண்ணிப் பண்ணிக் கேள்விகளை அடுக்கித் தன்னைத் தானே காறித்துப்பிக்கொள்வதற்குச் சமமான ஒரு காரியத்தை வெகு விஸ்தாரமாகச் செய்து முடித்த சாங்கியனைக் கண்டதும் பிரவாகனையே திக்குமுக்காடச் செய்யும் ஆனந்தப் பிரவாகத்தை அவரது எதிர் வினையின் முதல் பத்தியிலேயே படித்துப் புல்லரித்துப் போகலாம்.

கட்டுரையில் பல இடங்களில் "பகுத்தறிவின் மூட நம்பிக்கை எதிர்ப்பு” என்று சரியாகச் சொல்லும் ஒன்றைத்தான் தனது சுயமரியாதை உணர்வு கொப்பளிக்க, 'பகுத்தறிவின் மூட நம்பிக்கைகள்” என்று சுருக்குப் போட்டுக் கட்டுரைத் தலைப்பாக்கிவிட்டார் சாங்கியன். இதற்காகவே பிரவாகன் துள்ளிக் குதிக்கலாம் அல்லவா? ''நீங்கள் இப்படிச் சொன்னதும் உங்களைத் தூற்றுமே ஒரு கூட்டம்? அதுதான் பகுத்தறிவு மூடநம்பிக்கையில் ஆழ்ந் திருக்கும்- ஆழ்த்தப் பட்டிருக்கும் கூட்டம்” என்கிறார் பிரவாகன். அதற்கு அடுத்து அவர் சொல்வதுதான் உச்சம். ''திராவிட இயக்கம் அவர்களின் கோயில். அதன் கருவறையில் இருக்கும் பெரியார் அவர்களின் கடவுள். இதே பாணியில் மார்க்ஸ் மூலவர். பெரியார் உற்சவ மூர்த்தி என்று சொல்கின்ற இன்னொரு பிரிவும் உண்டு. இவ்விரு சாராரையும் விட சமூகம் மிகப் பெரியது” என்கிறார். இதில் 'சமூகம் மிகப் பெரியது” என்னும் பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதியை இராஜேந்திர சோழன் தன் பத்திரிகையில் வெட்டிவிட்டு வெளியிட்டிருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை திடுதிப்பென்று தன்னைத் தோலுரித்துக் காட்டிக்கொள்ளக் கூச்சப்பட்டோ அல்லது தனது புதிய நண்பர் பிரவாகனைப் பொத்திக் காத்துக்கொள்வதற்காகவோ இருக்கலாம். எப்படி இருப்பினும் அவர்தான் பிரவாகன். நான் அவரால் இகழப்படும் கூட்டத்தில் ஒருவன். ஏதோ ஒரு புதிய தத்துவத்தைக் கண்டறிந்தவர் போல, “இவ்விரு சாராரையும் விட சமூகம் பெரியது. சமூக மாற்றம் அதைவிட முக்கியம்,” என்கிறார். அப்படியென்ன பெரிய சமூகத்தையும் சமூக மாற்றத்தையும் குறிப்பிடுகிறார்?

கார்ல் மார்க்ஸ் தன் எல்லாப் போதாமைகளோடும் நிறைவின்மைகளோடும் கூடவே இந்த அகிலம் முழுவதையும் பாதித்தவர். அதைப் போலவே சாதியத் தமிழ்ச் சமூகத்தில் பெரியாரின் பங்களிப்பும். இருவருமே இன்றைக்கும் என்றைக்கும் மாற்றீடு செய்ய முடியாத சமூக மாற்றங்களைத்தான் கோரினர்; போராடினர். அவர்களுக்கும் மேலான சமூக மாற்றம் என்ன? விழு முடியாதபடி பார்ப்பான் மேலானவன், எழமுடியாத படி பறையன் கீழானவன் என்னும் எல்லைக்குள் சாதியால் படிநிலைப்படுத்தப்பட்ட சமூகத்தை இல்லாத மதத்தின் பெயரால் மறு கட்டமைப்புச் செய்து ஜனநாயகப்படுத்திக் கொள்ளும் மாற்றமா?

பிரவாகன் பரவாயில்லை, நான் எதிர்பார்த்ததை வழங்கினார் என்று சொன்னேன். ஆனால் ராஜேந்திரசோழன் 'என்ன முட்டாள்தனத்தை எதிர்பார்த்தாய்?” என்று என்னைக் கடிந்து கொள்ளுமளவுக்கு நவீன இந்துவாக அல்லது ஜனநாயக இந்துவாக வேடமிட்டு ஆடிக் களைத்து விட்டார். எனக்கு அஸ்வகோஷைக் கொஞ்சம் தெரியும். நல்ல படைப்பாளிகயாக என்னை ஓரளவு வசீகரித்தவர். எல்லாரும் கனியக்கனிய இனிக்கத்தானே செய்வர்? ஆனால் இவர் ராஜராஜசோழனின் அருமை மைந்தனாகத் தனக்குப் பட்டம் சூட்டிக் கொண்ட பின் தன் உடம்பையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒரு வித சட்டாம் பிள்ளைத்தனத்துக்கு ஆட்பட்டுத் தன் அறிவையும் உணர்வையும் சிதறடித்துக் கொள்கிறாரோ என்று மயிரைப் பிய்த்துக்கொள்ளத் தோன்றுகிறது.

இவர் இந்து மதத்தின் தீராத பீழைகளையும் தீர்க்க முடியாத துயரங்களையும் கனகச்சிதமாகப் பட்டியலிடுகிறார். அடுத்த கணமே, ஆனாலும், என்றாலும், இருந்தாலும் என்று கொக்கி மாட்டிக்கொண்டு இந்துமதத்தை இடைவிடாமல் தாக்கிக் கொண்டிருப்பது என்ன நியாயம்? என்று சமாதானப்படுத்த முடியாத சண்டைக்காரராகத் தன் குரலை உயர்த்திக் கொள்கிறார். அடுத்து, சிறுபான்மை மதத்தினர் என்னும் பெயரில் கிறிஸ்தர்களும் முஸ்லீம்களும், அதிலும் குறிப்பாக முஸ்லீம்கள் பண்ணும் 'அட்டூழியத்தை” இவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்த வகையில் இவர் நரேந்திர மோடிக்கு இணையான ஜனநாயக இந்துவாக இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நரேந்திர மோடியை விட நல்ல ஜனநாயக இந்து வேறு யார் இருக்க முடியும் என்பதை இவர் விளக்கினால் நன்றாயிருக்கும்.

இவர் முன்வைக்கும் எல்லா தர்க்கங்களுக்கும் இவருக்கு விடை தெரியும் என்பதில் யாருக்கும் எந்த விதச் சந்தேகமும் தேவையில்லை. இவர் முன்வைக்கும் கேள்விகள் யாவும் ஒரு பி.ஜே.பி. கேட்கும் கேள்விகள்தாம் என்பதை ஒருமுறைக்கு இருமுறை தன் கட்டுரையில் ஒத்துக்கொள்கிறார். ஆனாலும் 'ஏன் அதை நான் கேட்கக் கூடாதா? கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமே தவிர இப்படிச் சொல்லித் தப்பிக்கக்கூடாது” என்றும் குறுக்குச் சட்டம் போடுகிறார்.

இவர் கட்டுரையின் சாரத்தை பெரும் பிரிவாய் இவ்வாறு பிரிக்கலாம்: 1. இவர் இந்து மதத்தை மட்டும் குறை சொல்லிக்கொண்டிருப்பதை - இந்து தெய்வங்களைப் பழிப்பதை அடியோடு வெறுக்கிறார். இதன் மறுதலை தேற்றம், இவர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறார். கோயில்களுக்குப் போய் இந்து மதத் தெய்வங்களை வணங்குவதில் குற்றவுணர்வு அற்றவராய் இருக்கிறார். 2. இவர் சிறுபான்மை மதத்தினருக்குத் தனிச் சலுகைகள் கொடுப்பதை, அம்மதங்களை விமர்சிக்க மறுப்பதை - குறிப்பாக முஸ்லீம் மதத்தை - கட்டோடு வெறுக்கிறார். இதன் மறுதலையாக எல்லாரும் பொதுச் சட்டத்துக்குள் அடக்கப்பட வேண்டும்; சமூகத்தின் பன்முகத்தன்மை ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் சில துணைத் தலைப்புகளில் தொகுப்பதெனில் 1. இவர் இந்து மதத்துக்கு ஒரு புதுப் பெயர் கொடுத்துப் புனிதப்படுத்த விரும்புகிறார். 2. தலித்துகள் இந்து மதத்தைவிட்டு வெளியேறுவதை வெறுக்கிறார். 3. 90 சதவீதம் மக்கள் தாமுண்டு தம் சாமியுண்டு என்று சாதி வித்தியாசம் பார்க்காத ஜனநாயக இந்துக்களாக இருக்கிறார்கள் என்று ஒரு அப்பழுக்கற்ற பொய்யை, ஒரு ஆர்.எஸ்.எஸ். காரன்கூட சொல்லக்கூசும் பொய்யைத் தன் தர்க்கங்கள் அனைத்துக்குமான அடிப்படை விஷயமாக வைக்கிறார்.

சாங்கியனின் கேள்விகளையும் நம்பிக்கைகளையும் ஒவ்வொன்றாய்ப் பரிசீலிக்கும்முன் மேலும் சில விவரங்களை உள்வாங்கிக்கொள்வது பொருத்தமாயிருக்கும்.

வரலாறு தொடங்கிய காலம் முதல் இந்திய வரலாறு பார்ப்பனக் கண்ணோட்டத்திலேயே விவரிக்கப்படுகிறது. இந்த வரலாறு பார்ப்பனரை மேல் எல்லையாய் வைப்பது என்னும் முன்நிபந்தனையைக் கொண்டது. இதை பௌத்தக் கண்ணோட்டத்தில் செப்பனிட்டால் அது இயல்பாகவும் நம்பகத் தன்மையோடும் இருக்கக்கூடும். பார்ப்பனியம் முன்வைக்கும் சமூகப் பிரிவுகள் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனில் பௌத்தப் பிரிவுகள் சத்திரியர், பார்ப்பனர், ககபதிகள் என்பதாகின்றன. பார்ப்பனப் பிரிவுகளில் வர்ணம், சாதி என்னும் பகுப்புகள் தென்படுகின்றன. பௌத்தத்தில் சாதி, குலம், கம்மா, சிப்பா, என்னும் பகுப்புகள் தென்படுகின்றன.

பார்ப்பனப் பிரிவுகளிலுள்ள வைசியர், சூத்திரர் என்பன பௌத்தத்தில் இல்லை. பார்ப்பன முதன்மையும் பௌத்தத்தில் இல்லை என்பது முக்கியம். சூத்திரர் என்பதற்கு பற்பல விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் யாரெல்லாம் பார்ப்பன மேலாண்மையை எதிர்த்தார்களோ, கலகம் செய்தார்களோ அவர்கள் சூத்திரர்களாக வைத்து எண்ணப்பட்டனர் என்பதே பெருவாரியான ஆய்வாளர்களின் முடிவாக இருக்கிறது. பௌத்த இலக்கியங்களில் தாசர்கள், கர்மகாரர் என்னும் பெயர்கள் பேசப்படுகின்றன. ஆனால் அவர்கள் மேல்குலத்தார்க்குச் சேவை செய்யக் கடமைப் பட்டவர்கள் என்னும் குறிப்பு எங்கும் காணக் கிடைக்கவில்லை. பௌத்த சாதியமைப்பில் படிநிலைத் தன்மையைக் காண முடியவில்லை. இந்தப் படிநிலையை மனுதர்மம்தான் சாஸ்திரமாக முன்வைக்கிறது. அது வர்ண சாதியமைப்பாக, மாற்றிக்கொள்ளமுடியாத படிநிலைப் பிரிவாக நிலைநிறுத்தப் படுகிறது.

"சாதிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இருந்துள்ளன. ஆனால் இந்தியாவில் போல சாதிகள் வேறெங்கும் படிநிலைப்படுத்தப்படவில்லை. கூடவே சாஸ்திரப்படுத்தப் படவும் இல்லை. ஆகவே, மற்ற நாடுகளில் தோன்றிய ஜனநாயக இயக்கங்கள் அங்கெல்லாம் சாதிகளை ஒழித்துக்கட்டிவிட்டன. ஆனால் இந்தியாவில் சாதிகள் இன்றுவரை செழிப்பாக வளர்ந்து இருக்கின்றன” என்று இராமானுஜம் தன் கட்டுரையில் தெரிவிக்கிறார். சாஸ்திரம் என்பது நடைமுறையில் உள்ளதைக் கட்டுப்படுத்தும் கலாச்சார வரைமுறையாகும். பார்ப்பனப் பகுப்பு முறையில் பார்ப்பன உடலை அங்கீகரிக்கும் பல்வேறு இனக் குழுக்களும் அதனதன் தளத்தில் சுதந்திரமாக இயங்குவதற்கான தன்மையைப் பார்ப்பனியம் இயல்பாக்கியது. ஆனால் இன்றைக்கு பார்ப்பனர்களும் ஒரு சாதிப் பிரிவாகச் சுருங்கிவிட்டதால் படிநிலைச் சாதி ஏற்பு பார்ப்பன மேலாண்மையை அரண் செய்யும் கோட்டையாக வலுப்பெற்றிருக்கிறது.

பார்ப்பனியம் தன் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்ள எதனோடும் உறவு கொள்ளும். எதற்கெதிராகவும் கிளர்ச்சி செய்யும். உதாரணத்திற்கு ஒரு கோயிலுக்குப் பறையர் அர்ச்சகரானால் பார்ப் பனர்கள் அந்தத் தெய்வத்தையே புறக்கணிக்கத் தயங்கமாட்டார்கள். இந்துக்கள் என்றால் சமூக சமத்துவக்காரர்கள் என்றொரு நடைமுறை சட்டம் வந்தால் பார்ப்பனர்கள் இந்து என்னும் பெயரையே புறக்கணிப்பார்கள். தெய்வமோ, மதமோ தங்கள் மேலாண்மையைப் பேணத்தானே தவிர, பிடுங்கி எறிய அல்ல என்பதுதான் அவர்களது மதம்.

இந்தியாவில் எத்தனை சட்டங்கள் வந்தாலும் அவற்றை நடைமுறைப் படுத்துகிறவன் உயர்சாதிக்காரனாகவும் பெரும்பான்மை மதத்தினனாகவும் இருக்கும் வரை அவனை வழி நடத்துவது மனுதர்மம்தான். ஈழப்புலி களுக்கு ஆதரவாகப் பேசினார் என்று வைகோ 517 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். அது இந்திய தண்டனைச் சட்டத்தைப் பின்பற்றி நடந்தது. ஆனால் ராமரை இழிவுபடுத்திப் பேசிவிட்டார் என்பதற்காகக் கருணாநிதியின் நாக்கை துண்டிக்கவும் தலையை வெட்டவும் வேதாந்தி பணயம் வைத்தார். 'நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. சாஸ்திரம் அனுமதிப்பதைத்தான் சொல்கிறேன். அதிலிருந்து நான் பின்வாங்க வில்லை” என்று மீண்டும் மீண்டும் சீண்டினார். கருணாநிதி தண்டிக்கப்படவில்லைதான். ஆனால் வேதாந்தி கைது செய்யப்பட வில்லையே. எது அவரைக் காப்பாற்றியது? அல்லது எந்தச் சட்டம் இந்தியாவில் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது?

இந்தியாவில் படிநிலைச் சாதியமைப்புதான் இன்று பார்ப்பனியத்தைத் தூக்கி நிறுத்தும் பேரலகு. மதம் என்பது ஓர் ஒருங்கிணைவு. திரௌபதியின் ஐந்து குழந்தைகளும் கருகிக்கிடந்தபோது அவளது ஐந்து கணவர்களும் கல்லைப் போல் கலங்காமல் நின்றார்களே. எந்தக் குழந்தை எவனுக்குப் பிறந்தது என்னும் சந்தேகம் அங்கே கோலோச்சியது. ஆனால் அவர்கள்தான் - அவர்கள் மட்டும்தான் அந்தக் குழந்தைகளின் தந்தையர்கள். மதம் என்பது அப்படிப்பட்ட தந்தையர்களின் கூட்டம். ஆனால் அபிமன்யூ இறந்தபோது அர்ச்சுனன் அழுதானே அழுகை! சாதி அத்தனை நெருக்கமானது. இந்தியாவில் ஒருவன், அதிலும் ஓர் இந்து தன் மதம் என்ன என்று தெரியாமல் வாழ்ந்துவிடலாம். ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி பெறுமுன் குறிப்பாகத் தென்னாட்டில் அப்படித்தான் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் சாதி தெரியாமல் ஒருவன் வாழவே முடியாது என்பதுதான் இன்றுவரை முக்கால உண்மை.

இன்று சாதி அன்றாட வாழ்வைப் பாதிக்கும் காரணியாகவும், மதம் சமூக வாழ்வைப் பாதிக்கும் காரணியாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் இன்று மதம் ஒரு செலாவணிப் பண்டம் போலவும் அரசியல் களத்தில் செல்லுபடியாகிறது. கிழக்குப் பதிப்பகம், மருதன் எழுதிய 'விடுதலைப் புலிகள்” என்னும் புத்தகத்தை வெளியிட்டு விற்றுப் பணம் பண்ணுகிறது. கிழக்குப் பதிப்பகத்துக்கும், மருதனுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பந்தம், வெறும் லாப வணிகத்தைத் தவிர? அதே போலத்தான் மதமும் இன்று வணிகப் பண்டமாக விளையாட்டு காட்டிக் கொண்டிருக் கிறது. 'நாங்கள் பெரும்பான்மையானவர்கள்” என்னும் தெனாவட்டில் இந்து மதவாதிகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மதத்தின் ஆத்மார்த்த பாவம் இன்று பிய்த்தெடுக்கப்பட்டுவிட்டது. இதை முதன்முதலில் செய்தவர், அல்லது முதல் ஆர்.எஸ்.எஸ். சாட்சாத் மகாத்மா காந்திதான். இது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியதல்ல. அந்த ஆபத்தான விளையாட்டில்தான் அவர் உயிர் பறிக்கப்பட்டது.

1920-30களில் ஜார்ஜ் சோசப் என்றொரு காங்கிரஸ் செயல் வீரர் இருந்தார். கேரளத்துக்காரர். மதுரையில் வாழ்ந்தார். காந்திக்கு நெருங்கிய, நம்பகமான சீடர். காந்தி சிறையிலிருக்கும் காலத்தில் அவரது ‘ஹ்ர்ன்ய்ஞ் ஐய்க்ண்ஹ’ பத்திரிகையை அவர்தான் பார்த்துகொள்வார். அவர் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டபோது காந்தி அவரைக் குறைகூறி கடிதம் எழுதுகிறார்: 'நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இருந்துகொண்டு எப்படி இந்துக்கோயிலில் நுழையலாம்?” என்பது அவர் குற்றச்சாட்டு. முஸ்லீம்களோடு குல்லாபோட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பதையெல்லாம் கடும் வெறுப்போடு கண்டனம் செய்கிறாரே சாங்கியன், அவர்கள் அப்படியொரு சமத்துவத்தை, அதுவும் பிறமதத் தினருக்குத் தருகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் பிற மதத்தினருக்குத் தருவதிருக்கட்டும், தன் மதத்தினருக்கே அப்படியொரு சமத்துவம் அளிக் கப்படுவதில்லை.

காந்தி அந்த வேற்றுமையைக் கூர்மைப்படுத்தித்தான் கேள்வி கேட்டார். வைக்கம் போராட்டம் ஒன்றும் கோயில் நுழைவுப் போராட்டமல்ல. ஒரு குறிப்பிட்ட தெருவில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதற்கு விதித்திருந்த தடையை எதிர்த்து நடத்திய போராட்டம். இந்த உண்மைகூட காந்திக்கு உணர்த்தப்படாத நிலை. ஜோசப் பதில் எழுதுகிறார். அத்தோடு அவர்களது புரிந்துணர்வு தகர்ந்துவிடுகிறது. தகர்ந்துபோகக் காரணமாயிருந்தவர் காந்திதான். இந்து மதம் இப்படித்தான் சிலுப்பிக்கொண்டு வளர்ந்தது. காந்தி தன் மத வேடத்தை சந்தேகத்திற்கு இடமாகும்படி கலைத்துக் காட்டியபோது இந்துமதம் சுதந்திர இந்தியாவில் அவரை முதல் பலியாகக் காவு கொண்டது.

பார்பனப் பகுப்பு முறையில் வர்ணப் பிரிவு நடைமுறை வாழ்வுக்குப் பொருத்தமாய் இருந்ததில்லை. பார்ப்பனர்கள் நிறம் சார்ந்து தங்கள் மேலாண்மையை நிறுவிக் கொள்ளவும் இனக் கலப்பைத் தவிர்க்கவும் செய்துகொண்ட பாகுபாட்டு முறை அது. இந்தப் பகுப்பு முறைகளில் தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருந்தன. வடக்கே சூத்திரர்கள் என்போர் ஆகக் கீழானவர்கள். ஆனால் தெற்கே அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப் பட்டவர்கள். தெற்கே சூத்திரர் என்பது ஆங்கிலேயன் கொடுத்தானே திவான் பகதூர், ராவ் பகதூர் என்றெல்லாம் அது போன்ற ஒரு பட்டப் பெயராகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது. வடக்கே சூத்திரர்கள் கல்வி பெற முடியாது. ஆனால் தெற்கே இவர்கள் சூத்திரப் பட்டம் பெறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே 'பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று வாழ்ந்தவர்கள். தென்னாட்டில் வர்ணப் பாகுபாட்டுக்கு வழியே இல்லை. ஆயினும் ஒரு பாண்டிய மன்னன்

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பாலொருவன் கற்பின்
மேற்பாலொருவன் அவன்கட் படுமே

என்று எழுதி வைத்திருக்கிறான். வேற்றுமையே தெரியாத ஒரு நிலையில் நாற்பால் பாகுபாட்டை அவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். அரசர்களும் மற்றவர்களும் பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று பிரவாகன் கேள்வி எழுப்பியுள்ளாரே, பார்ப்பனர்களே ஆளாத ஒரு நிலப்பரப்பில் எப்படி என்று தெரியா விட்டாலும் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிற தல்லவா? ஏற்பட்டது மாத்திரமல்லாமல் இராஜேந்திர சோழன் அப்பன் இருக்கிறானே இராஜராஜன், அவன் காலந்தொட்டே பொதுப் பள்ளிகளெல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்களாய்ச் சுருங்கிப் போக, வேதபாடசாலைகள் தங்கக்காசுகளை மாணாக்கர்களுக்குக் கல்வி மானியமாகக் கொடுத்து அரசாங்கப் பொறுப்பில் நடத்தப்பட்டன. தென்னாட்டில் வர்ணம் என்று ஒன்று இல்லையாதலால் வர்ணம் என்பது சாதியைக் குறிக்கும் சொல்லாகவே இன்றளவும் புழங்கப்பட்டு வருகிறது.

சொந்தமாக ஒரு பெயர் வைத்துக் கொள்ளக்கூடத் துப்பில்லாத, இத்தனை கேடுகாலங்களையும் உள்ளடக்கிய இந்துமதத்தைத்தான் முடிந்தமட் டிலும் ஜனநாயகப் படுத்து வதாகவும் சமத்துவ நோக்குடையதாகவும் ஆக்கப்போவதாக சாங் கியன் சவடால் அடிப்பதும், 'இத்தகைய போக்குக்கு அதிகமும் இடந்தரக்கூடியதாக இந்து மதம் மட்டுமே உள்ளதாக” பிரவாகன் சான்றிதழ் வழங்குவதும் கடைந்தெடுத்த பொய்யுரை மட்டுமல்ல, அவர்கள் இருவரும் ஒரே படகில் சவாரி செய்யும் கள்ளப் பரிவர்த்தனைக்காரர்கள் என்பதும் தெள்ளத்தெளி வாகிறது. வரலாறு நெடுகிலும் இப்படி சேவை செய்யும் சாங்கியன் களும் அதை சிலாகித்துப் புனகாங்கிதமடையும் பிரவாகன்களும் குறைவில் லாமல் தென்படத் தான் செய்கிறார்கள்.

'மதம் மாறும் தலித்துகள் அங்கேயும் தலித்துகளாய்த்தானே இருக்கிறார்கள்” என்று இந்தப் படகு சவாரிக்காரர்கள் பகடி செய்கிறார்கள். ஆமாம், இருக்கிறார்கள். ஆனால் இந்த நொள்ளைக்கண் மதச்சார்பற்ற அரசுக்கு இது தெரிய வில்லையே? இந்து தலித்துகளுக்கு வழங்கும் உதவிகளை கிறஸ்தவ, முஸ்லீம் தலித்துகளுக்கு வழங்க மறுக்கிறதே? அப்படியெனில் அதன் பொது சிவில் சட்டம் எப்படிப்பட்ட தாயிருக்கும்? பெரும்பான்மையான இந்து மதத்துக்குச் சாய்மானம் உள்ளதாகத்தானே இருக்கும்? அதை ஏற்க மறுக்கும், அல்லது அச்சம் தெரிவிக்கும் முஸ்லீம்களைக் கொச்சைப்படுத்திகிறாரே சாங்கியன்? அவர் எப்படிப்பட்ட இந்துவாய் இருப்பார்?

90 சதவீதம், அல்லது 80 அல்லது 70 சதவீதம் இந்துக்கள் தானுண்டு தன் சாமியுண்டு என்று, சாதி வித்தியாசம் பார்க்காமல் கோயிலுக்குச் சென்று கும்பிட்டுக் கொண்டிருப்பதாக ஒரு கடைந்தெடுத்த பொய்யைக் கூசாமல் சொல்கிறார் சாங்கியன். 70 சதவீதம் வேண்டாம் வெறும் 10 சதவீதம் இந்துக்கள் அப்படியொரு பரந்த மனப்பான்மையைப் பெற்றுவிட்டால் இந்நேரம் சாதியே காணாமல் போயிருக்கும், அல்லது அதன் படிநிலை வேற்றுமை தகர்ந்து போயிருக்கும். அவர் சொல்வது எப்போது உண்மையாயிருக்கும் எனில் உரிமை கோராத தலித்துகளைக் கொண்ட பழைய அசைவில்லாத சமூகத்தில் அது சாத்தியப்படலாம். உண்மையில் அவர் மனத்தில் என்ன ஓடுகிறது? ''தலித்துகளுக்கு அடங்கிக் கிடப்பது புதுசா என்ன? அவர்களைக் குறுக்கே விட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தின் அமைதியையும் பெருமையையும் குலைத்துக் கொள்ள வேண்டுமா?” என்று கேள்வி கேட்பவராக இருக்கிறாரா? கடைசியாக 'ஜனநாயக இந்து”வைக் கொண்டுவந்து உள்ளே நுழைக் கிறார். இவர் என்ன, புதிய இந்து மதத்தை உருவாக்கும் தம்பிரான் பிள்ளையா அல்லது இருக்கும் மதத்துக்குப் புதிய பெயர் சூட்டும் பெரிய தனக்காரரா?

இந்தியாவானது நிலவுடைமைச் சமுதாயமாகத் திரண்டு, அதில் தலித்துகள் கூலிக்கு யாசித்து நிற்கும் தொண்டூழியச் சிறுபான்மையினராகக் கட்டமைப்புச் செய்யப்பட்டிருப்பது உலகிலேயே ஆகக் கொடியதும் உடைத்தெறிய எளிதல்லாததுமான திகைப்பூட்டும் அடிமைச் சாசனம். இதனோடு வாக்குரிமையில் மட்டும் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் ஜனநாயகமும் இணைந்துகொண்டது. ஜனநாயகம் என்பது குடிகார நொண்டிக்குதிரை மாதிரி. அது விழுந்து விழுந்து எழுந்தாடும்; ஆனால் இடத்தைவிட்டு நகராது. நகர்ந்திருந்தால் 'விடுதலை பெற்ற இந்த 60 ஆண்டுகளில் தலித்துகளை மகிழ்ந்தேற்றுக்கொள்கிற 'ஜனநாயக இந்துக்களை” உருவாக்கியிருக்க வேண்டாமா?

'ஜனநாயக இந்து” என்னும் பதத்தை நல்லவிதமாகப் பயன்படுத்திப் பார்க்கவே விரும்புகிறேன். ஆனாலும் அது ஒரு 'நல்ல விதமான கழிசடைப் பத”மாகவே நம் முகத்தில் அறைகிறது. 'ஜனநாயக இந்து” என்பதன் ஆழ்ந்தகன்ற பொருளை பெ.மணியரசன்- இராசேந்திர சோழன் போன்றவர்கள்தாம் விளக்க வேண்டும். 3000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சிறு வருத்தம்கூடத் தெரிவிக்காத மோடி அமோக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதலமைச்சராகி விட்டார். அவர் ஒரு நல்ல ஜனநாயக இந்துவா, இல்லையா? இல்லை யென்றால் எப்படி? இந்துவை ஜனநாயகப்படுத்துவது வேறெப்படியாகும்? கோயிலைப் புறக்கணிக்கக் கூடாது என்றால் அதனுள்ளிருக்கும் குருக்களையும்தானே. அவனோடு சேர்த்து வேதங்களையும், மனு தர்மத்தையும்தானே. கரையான் எடுத்த புற்று கருநாகத்தை வெளி யேற்றிய பிறகல்லவா கரையானுக்குச் சொந்தமாகும்?

வழிபாட்டுணர்வில் தமிழன் தமிழனாயிருக்கும் கணங்கள் அவன் நடுவீட்டுச் சாமியையும் குலதெய்வத்தையும் கொண்டாடும் வரைதான். அந்தக் கணங்களில் சாமியும் அவனும் ஒன்றுக்குள் ஒன்றாய் இருக்கிறார்கள். அந்த எல்லையைவிட்டு வெளியேறி, பெருந்தெய்வ வழிபாட்டுக்கு வரும்போது அவன் பார்ப்பனனால் 'நில்” என்றால் நிற்கவும், 'செல்” என்றால் செல்லவும் பழக்கப்படுத்தப்பட்ட நாய்க்குட்டி. நாய்க்குட்டியாவது சீற்றம் வந்தால் கடித்துக் குதறிவிட்டு அடிபட்டுச் சாகும். இவனோ தன்னைத்தானே கடித்துக்கொண்டு சாகப் பழக்கப்பட்ட தொழும்பன். அப்படிப்பட்ட ஒரு நல்ல இந்துவாகத்தானே, பெருந்தெய்வக் கோயிலுக்குள் பெயரற்றவனாக நுழைந்து, விழுந்து கும்பிட்டு, கையேந்தி, பிரசாதம் வாங்கி, புத்தி போட்டுக்கொண்டு வெளியேறுகிறான்?

பெ. மணியரசன்- இராசேந்திர சோழனுக்குப் பெரியார் மீது கேள்வியற்ற மரியாதை ஒன்றும் கிடையாது. சுயசிந்தனையைச் செழுமைப்படுத்திக் கொள்கிறவனுக்கு அது தேவையும் இல்லை. ஆனால் அவர்களது சுயசிந்தனை தமிழ்த் தேசியம் என்னும் பெயரில் நவீன இந்துத்துவ பெரியாரிஸ்டுகளாக அவர்களை வளர்த்தெடுக்குமோ என்னவோ. இந்தத் தமிழ்த் தேசியர்கள் 'மருத்துவர் ஐயா”வையும் உள்ளிழுத்துக்கொண்டு ஜனநாயகப்படுத்தப்பட்ட நல்ல இந்துக்களின் தென்னாட்டு பால்தாக்கரேக் களாக வடிவெடுப்பார்களாயிருக்கும். பால்தாக்கரேக்கு மண்முகமும் இந்துத்துவமும் ஒன்று. தமிழனுக்கு அவை இரண்டும் காந்தத் தண்டின் எதிர்த் துருவங்கள்போல. அவை ஒட்டாதவரைதான் அவன் தமிழன்.

மேலும், போராட்டக் களத்தில் முழக்கமிடும் லட்சியவாதி சாத்திய மானதைத்தான் கேட்க வேண்டும், ஏற்கவேண்டும் எனில், கிடைக்கப் போவது குதிரை தன் சிலுப்பலில் உதிர்க்கும் கடைசி வால்மயிராகத்தான் இருக்கும். 'கருப்பையை எடுத்தெறி” என்று ஒரு முழக்கம் வைத்தால் அதன் ஆகுபொருள் "அதை நிரப்பிக்கொள்வதும் நிரப்பிக்கொள்ளாததும் என் அதிகாரத்தில் இருக்க வேண்டும்” என்று முன்மொழிவதற்கான பெண்ணுரிமைதான் அல்லவா! அல்லாமல், ''சிருஷ்டியை ஸ்டாப் பண்ணன்னா சொல்றா. என்ன பேத்தல்” என்னும் திண்ணைக் கிழங்களின் பொழுதுபோக்கு விசாரங்களை அரசியல் தத்துவங்களாக்கிப் பார்த்தால் எப்படி?

இவையெல்லாம் எங்கே போய் முடிகிறதெனில், ஒரு தலித் தன் தொழில்முறை வசதிகளைப் பெருக்கிக் கொண்டு, தொழில் தர்மம் பேணும் நல்ல தலித்தாக சுதந்திரமாய் வாழலாம் என்னும் எல்லைக் கோட்டில்தான். நல்ல தலித் என்பவன் தன்னை எஜமான விசுவாசத்தாலும் அடிமை மோகத்தாலும் நிரப்பிக் கொண்டவன்தானே? இந்திய ஜனநாயகத்தில் ஜனநாயகப்படுத்தப்பட்ட இந்து இதைமட்டுமே அனுமதிக்கிறவனாய் இருப்பதுதானே? 'இந்தியாவில் இந்து மதத்தைவிட்டு வேறு எந்த மதத்துக்குப் போனாலும் ஒரு தலித் தலித்தாகவேதான் இருக்க நேர்கிறது என்பதால், அவன் பேசாமல் இந்து மதத்தில் இருந்து கொண்டே தன் உரிமைக்குப் போராடலாமே” என்பதொன்றே ஒரு ஜனநாயகப்படுத்தப்பட்ட இந்துவின் வெகு "நியாயமான” ஆலோசனையாக இருக்கிறது. இதில் உள்ள சிறப்பு என்னவெனில், ஆலோசனை சொல்கிறவன் அறிந்தோ அறியாமலோ ஒரு தலித் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதை வெகு பதைப்புணர்வோடு எதிர்க்கிறான்; அதற்காக நியாயம் பேசுகிறான். அதே நேரத்தில் இந்திய மண்ணில் பரவிய எல்லா மதங்களையும் இந்து மதம் சீரழித்துவிட்டதற்காக அவன் வருத்தப் படவில்லை.

அது அவனுக்கு முக்கியமான விஷயமாகவும் படவில்லை. ஆகவே, வெளிப்படை யான நடைமுறை இருப்பை ஒரு நியாயமான தீர்வாக முன்வைப்பதில் நிறைவடைகிறான். இந்துக்கள் எங்கே சிறுபான்மை யாகிவிடுவார்களோ என்ற அச்சத்தால் தான் தலித்துகள் இந்துக்களாக உள்வாங்கப் பட்டார்கள் என்பதோ, இந்திய மதங்களான பௌத்தம், ஜைனம், சீக்கியம் முதலானவை இந்து மதத்தின் அங்கங்களாகக் கற்பிக்கப்பட்டு அடையாளம் அழிக்கப்படுகின்றன என்பதோ அவன் கவனத்துக்கு வருவதில்லை. இந்துக்களில் தலித்துகள் சிறுபான்மை யினராய் இருப்பதுதான் அவர்கள் விடுதலைக்கு விடப்படும் முதல் அறைகூவலா யிருக்கிறது என்பதை அவன் மறந்துவிடுகிறான்.

இந்து மதத்தினர் சிறுபான்மையினராகிவிட்டால் அதன் உடனடி எதிர்விளைவாக, சாதி ஏற்றத்தாழ்வுகளும் மனுதர்மங்களும் நொறுங்கிப் போவதும், இந்தப் புத்தாக்கத்தால் பிற மதங்களில் ஊடுருவியுள்ள சாதியப் பார்வைகள், அம்மதங்களின் உலகப் பெரும்பான்மையினரின் நெறுக்குதல் களால் துடைத்தெறியப்படும் என்பதும் தலித்துகளுக்கான விடுதலையை விளக்கப்படுத்தும் மாபெரும் அம்சமாயிருக்கும். ஒட்டுமொத்த மதமாற்றம் உடனடிச் சாத்தியமில்லை என்றாலும், தலித்துகளின் அலையலையான மதமாற்றம் இந்துக்களை வெறிகொள்ள வைக்கும் அதே நேரத்தில் மனிதர்களாய் இருக்கவும் நிர்ப்பந்திக்கும். புரட்சிகர சமூக மாற்றங்கள் உடனடிச் சேதாரங்களை நிகழ்த்தும். ஆனால் அடுத்துவரும் காலங்களில் தலித்துகள் தலித் அடையாளங் களைத் தொலைத்தவர்களாய்ப் பிறப்பார்கள். ஜனநாயகப்படுத்தப்பட்ட இந்துவுக்கு இது உடன்பாடாய் இருக்குமெனில் அவன் ஏன் இந்துவாக ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்பது கேள்வியாகிறது. இவை யெல்லாம் சாத்தியமா என்று நகைக்கிறவன் அடிப்படையில் இந்துவாக இருக்கச் சபிக்கப்பட்டவன் எனபதைத் தவிர வேறென்ன?

வாசகர் கருத்துக்கள்
J. Kumaresan
2009-02-27 12:32:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I had a question that Why Rajendira Cholan has allowed such nefarious articles by Pravahana and Sangiayan? Your article clarified. In fact I have made brief reply to those articles with facts and figures. Your reply article has come much better than my reply. As you said they want idiotic manu Papan’s leadership. I have seen no good argument presented by both of writers in contrast they tried to confuse the reader, as usual papan like cho. I appreciate your article and same time may refuse to read Monmozhi in my word “Mamumozhi” as they wont say any new other than Manu words. Please keep it up. I shall write to on VDM man. I am from Vadalur

Dr. V. Pandian
2009-03-01 11:33:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இஸ்லாத்துக்கு மாறினால் அங்கு அடிப்படைவாதம் ஒரு ஆபத்து.

கிருஸ்துவத்துக்கு மாறினால் ஏகாதிபத்திய ஆபத்து உள்ளது. பெந்தகோஸ்துகள் கூட அந்த முறையிலேயே, இனம், மொழி கடந்த கிருஸ்துவர்களாக, ஏகாதிபத்தியத்திற்காக திட்டமிட்டு உருவாக்கப் படுகின்றனர் என்ற உண்மையும் உள்ளது.

பௌத்தத்திற்கு மாறினால் இலங்கை அச்சுறுத்துகிறது! அங்கே என்ன வாழ்கிறது? அங்கு தமிழினத்தையே பௌத்தம் தானே கொன்றழிக்கிறது?

ஜைனம் ஒரு பச்சை பணியா மதம்.

இந்துவிலிருந்து மாறவேண்டும். நல்ல வழி என்ன?

மன வலிமை உள்ளவனுக்கு தெய்வங்கள் தேவையில்லை.

சாமான்ய மனிதனுக்கு ஆன்மீகம் தேவை.

பேராசிரியர் குணா, பேராசிரியிர் நெடுஞ்செழியன் ஆகியவர்கள் ஆசீவகம் பற்றி ஆய்வு செய்கின்றனர். அது பார்ப்பானுக்கு முந்திய தமிழர் ஆன்மீகம்!

அந்த தமிழரின் மரபு வழிப்பட்ட ஆன்மீகத்தை மீட்டெடுக்க முடியுமா?

ஆசீவகம் பகுத்தறிவு கூறுகள் மிகுந்த ஆன்மீகமே! அதை மீட்டெடுத்து, செழுமைப்படுத்தி வழமைக்கு கொண்டு வர முடியுமா?

Dr. V. Pandian
2009-03-02 09:24:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நீங்கள் சொல்லும் இராசேந்திர சோழனின் கட்டுரைகளை நான் படித்த்தில்லை. ஆனால், மத நம்பிக்கைகள் வளர்ந்த வண்ணமே தானே இருக்கின்றன? பகுத்தறிவாளர்களின் எதிர்ப்பை அருவடை செய்கின்றவர்கள் பார்ப்பனர்கள் தானே?

அந்த வகையில் மணியரசனின் கருத்து,, எனக்குத் தெரிந்த வரை, இந்து மதத்தை அதே வேலையாக எதிர்க்கவும் வேண்டாம், ஆதரிக்கவும் வேண்டாம் என்பதே! நமது முதல் இலக்கு என்ன? தேசிய அரசு உருவான பிறகு இதை எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாளலாம்.

நான் அறிந்த வரை, திராவிடக் கட்சி, ஒரு நபரின் பெயரின் பின் சாதிப்பெயர் இருக்கக்கூடாதென்று சட்டம் போட்டு, பெயரிலாவது சாதியை நீக்கி இருக்கிறோமல்லவா? ஆனால், அதற்குமேல் அவர்களது சுயநலமும், இந்திய தேசிய நலனும் அனுமதிக்கவில்லை.

ஒன்றை ஒழிக்கும் போது, அந்த இடத்தில் இன்னொன்று இருந்தால் தான் முடியும். அது பௌத்தமாக இருக்க வேண்டாம் என்பது எனது கருத்து. அது சிங்கள மதம் என்பதால் மட்டுமல்ல. பௌத்தத்தின் மூலமே ஆசீவகம் தான். ஆக, நம்மிடம் கொள்கைகள் உள்ளபோது எதற்காக இரவல்?

ஐயனார் என்ற சிறு தெய்வ வழிபாடு இந்து மதம் சார்ந்ததல்ல. ( இது ஆசீவக துறவிகளை வழிபடுதல்; ஒழிக்கப்பட்ட ஆசிவகத்தின் செயல்முறை எச்சம்). மாரியம்மையும் மருத நில மக்களின் சிறு தெய்வ வழிபாடு தான். மாயோன் முல்லை நில மக்களின் தெய்வம். சேயோன் குறிஞ்சி நில மக்களின் தெய்வம். குறிஞ்சி நில மக்களின் இனப்பெருக்க வழிபடு பொருள் 'சிவந்த ஆலங்கம்' சிவலிங்கம். பாலை நில மக்களின் தெய்வம் அச்சுறுத்தும் காளி. (பற்றாக்குறையில் வாழும் இம்மக்களின் தொழில் கொள்ளையடித்தல், ஆக, அச்சுறுத்தும் காளி).

இந்த அடிப்படையில் கூட புதிய மதத்தை மீட்டெடுக்கலாம்.


தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்
2009-03-05 06:45:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கவிதாசரணின் கட்டுரைக்கான பதிலை ப்ரவாஹன் அவ்விவாதத்தின் இறுதியில் அளித்தார். அதனுடைய ஒலிப்பதிவு:

http://www.sishri.org/debate/pravahan2.mp3 (http://www.sishri.org/content.html)

இது விரைவில் எழுத்துவடிவில் www.sishri.org இணையதளத்தில் வெளிவரும்.