உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக பொதுநல வழக்கு என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்சின் திட்டங்களை செயல்படுத்த வழக்கு போடும் பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற சங்கி வழக்கறிஞர் இலவசத் திட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் தன்னையும் இணைத்துக் கொண்டு இந்த வழக்குக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.

free ticket for womenஇந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்றும், ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனைப் பரிசீலிக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஏற்கெனவே மோடி அவர்கள் “இலவசத் திட்டங்களின் போக்கைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், சில மாநிலங்களில் இலங்கை நாட்டில் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்படும்" என்று கடந்த ஏப்ரல் மாதமே திருவாய் மலர்ந்ததையும் நாம் பார்க்க வேண்டும்.

இந்த வழக்கின் பிரதான இலக்கு என்பது தமிழ்நாடுதான் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக மாற்றி விட்டன, இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர், தமிழ்நாடு இதனால் மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே இதற்கு மாற்றாக எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என பிஜேபியும், சீமான் போன்றவர்களும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றார்கள்.

ஏற்கெனவே பெரிய அரசியல் விழிப்புணர்வு ஏதுமில்லாமல் தக்கை மனிதர்களாக இருக்கும் பெரும்பாலான தமிழக இளைஞர்கள் இந்தப் பொய் பிரச்சாரத்திற்கு எளிதில் இரையாகி விடுகின்றார்கள். சாமானிய மக்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்களை இலவசம் என்று கொச்சைப்படுத்தும் இந்தக் கும்பல்கள் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்படும் லட்சக்கணக்கான கோடி வரிச்சலுகைகள் பற்றி மறந்தும் கூட வாய் திறப்பதில்லை.

பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க இலவசமாக 24 மணி நேரமும் மின்சாரம், தண்ணீர், சாலைவசதி, நிலம் என அனைத்துமே அரசால் தரப்படுகின்றது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவை இந்திய அரசின் எந்தச் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாமல் இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு குட்டி காலனிகளாகவே செயல்பட்டு வருகின்றன.

இலவசங்களுக்கு எதிராக பேசுபவர்கள் விவசாயிகளிடம் இருந்து அடித்துப் பிடுங்கி பெருமுதலாளிகளுக்கு நிலத்தை இலவசமாக கொடுப்பதைப் பற்றியோ, அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிச்சலுகைகள் கொடுப்பதை பற்றியெல்லாம் வாயே திறப்பது கிடையாது.

கடந்த 2005-2006 ஆம் ஆண்டு தொடங்கி 2013-2014ஆம் ஆண்டு வரை கார்ப்ரேட்டுகளுக்கு இந்திய அரசாங்கம் அளித்த வரிச்சலுகை மட்டும் 36 லட்சம் கோடி ஆகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்திய வங்கிகள் மூலம் அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளின் கிட்டத்தட்ட பத்து லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.அதேபோல், கடந்த இரண்டு (2019-20, 2020-21) ஆண்டுகளில் கார்ப்பரேட் வரி ரத்து மூலம் அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி பதவியேற்றதில் இருந்து பல இலட்சக்கணக்காண கோடி ரூபாயை வரிச்சலுகையாக பெருமுதலாளிகளுக்கு வாரி இறைத்திருக்கின்றார். அவரின் நண்பர்களான அதானி, அம்பானி போன்றவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றார்கள்.

நீரவ் மோடி, மல்லையா போன்றவர்கள் இந்திய மக்களின் சேமிப்பு பணம் ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு மோடியின் துணையுடன் தப்பிச் சென்றிருக்கின்றார்கள்.

இந்திய மக்கள் உழைத்துச் சேர்த்த இலட்சக் கணக்கான கோடி ரூபாய் பணத்தை வரிச்சலுகை என்ற பெயரிலும், வங்கிக் கடன் என்ற பெயரிலும் அள்ளி கொடுத்து அவர்களை கொழுக்க வைக்கும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக தனது சுண்டு விரலைக் கூட நீட்ட துப்பில்லாத இலவச எதிர்ப்பு பிராணிகள் சாமானிய உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சில ஆயிரங்கள் கூட பெருமானமில்லாத பொருட்களைப் பார்த்து வயிறு எரிவதும் அதனால்தான் நாடு நாசமாய் போகின்றது என்று புலம்புவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

ஒருவேளை இவர்கள் சொல்லும் நலத் திட்டங்களால்தான் தமிழ்நாடு உருப்படாமல் போய்விட்டது என்றால் இது எல்லாம் கொடுக்காத மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை அல்லாவா பெற்றிருக்க வேண்டும்? ஆனால் உண்மை நிலை என்ன?. தமிழ்நாடு இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அனைத்து வகையிலும் முன்னணி மாநிலமாக அல்லவா உள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்தியா சென் தமிழ்நாட்டில் மருத்துவம், பொதுவிநியோகத் திட்டம், சத்துணவுத் திட்டம் போன்றவை இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட எவ்வாறு சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றது என்பதை பட்டியலிட்டு இருக்கின்றார். அவற்றில் இருந்து சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

“இந்தியாவின் பல பகுதிகளில் பல மருத்துவ அடிப்படைகள் புறந்தள்ளப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகின்றன. உதாரணமாக நோயை வருமுன் தடுக்கும் நோக்கத்தோடு எடுக்கப்படுகிற பொது சுகாதார நடவடிக்கைகள் மீது நிலைத்த கவனம் செலுத்தப்படுகின்றது. அத்தகையத் தடுப்பு நடவடிக்கைகளின் விளைவுகளில் ஒன்றான குழந்தைத் தடுப்பூசி விகிதம் உயர்வாக உள்ளது. 2005-2006ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களைவிட அதிகமாக தமிழ்நாட்டில் 80 சதவீதத்திற்கு கூடுதலாக குழந்தைகளுக்கு தடுப்பூசிப் போடப்பட்டது.

இதைப் போல அரசு மருத்துவமனைகளுக்குக் குறித்த நேரத்தில் இலவச மருத்துகளை வழங்குவதற்காக மருந்துக் குழுமம் (Pharmaceutical corporation) ஒன்றை தமிழ்நாடு ஏற்படுத்தியது; மேலும் கணிணி பதிவுகள் கொண்ட சிறப்பாக மருந்துகளை விநியோகிக்கும் முறையையும் உருவாக்கியது. பிற மாநிலங்கள் பலவற்றில் இதற்கு நேர் எதிரான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம், மருந்துகளை அருகிலுள்ள தனியார் மருந்து கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு மருந்து சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. (அம் மருந்து கடைகளும், மருந்து சீட்டு எழுதிய மருத்துவர்களும் லாபத்தை பங்கு போட்டுக் கொள்வது பொதுவான நடைமுறையாகிப் போனது).”

“தமிழ்நாட்டின் பிற சமூக நலத் திட்டங்கள் பலவற்றிலும் இத்தகைய படைப்பூக்கத்தோடு கூடிய செயல் ஊக்கத்தை காண முடிகின்றது. உதாரணமாக ஆரம்பப் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு. (தற்போது காலை உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கின்றது). இத்திட்டம் தொடங்கப்பட்ட சமயத்தில் ‘கவர்ச்சித் திட்டம்’ என்று விமர்சிக்கப்பட்டாலும், இதுவே பின்னர் தேசிய மதிய உணவுத் திட்டத்திற்கான முன்னோடியாக அமைந்தது. இன்று தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகள், குறிப்பாக அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு, காலை உணவு மட்டுமல்லாமல் சீருடை, பாடப்புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் உடல்நலப் பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.”

“அனைவருக்கும் முழுமையாக சமூக நலன் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் மீதான தமிழ்நாட்டின் உறுதிப்பாடு அதன் அனுபவத்தில் காணப்படும் மற்றொரு முக்கியமான அம்சமாகும். இதற்கு மிகச் சரியான உதாரணமாக அதன் பொது விநியோக முறையைச் சொல்லலாம்.

இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் இலவசமாக குறைந்தபட்சம் 20 கிலோ அரிசியும் மானிய விலையில் பருப்பு போன்ற உணவுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. 1977இல் பொது விநியோக முறையை குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டும் என்று வரையறுக்க முயற்சித்த போது தொடர்ச்சியாக பல போராட்டங்கள் எழுந்தன. அதன் காரணமாக அம்முயற்சி ஒரே வாரத்தில் கைவிடப்பட்டது. பொது மருத்துவம், மதிய உணவு, குழந்தை பராமரிப்பு, வேலை வாய்ப்பு உத்திரவாதம், பொது போக்குவரத்து மற்றும் குடிநீர், மின்வசதி, போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்திலும் ‘அனைவருக்கும்’ (வழங்குவது) என்ற கொள்கை நடைமுறையாகிறது.”

“பொது சேவைகளை அனைவருக்கும் சிறப்பாக வழங்வதற்கான உறுதிப்பாட்டை தமிழ்நாடு எப்போது எப்படிப் பெற்றது என்ற கேள்வி எழுகிறது. 1920இல் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட பல முன்னோடி சமூக மாற்றங்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகள் பெற்றுள்ள அரசியல் அதிகாரம், கவர்ச்சிகர அரசியலின் பிடிமானம் மற்றும் தமிழ் சமூகத்தில் ஆக்கப்பூர்வமான பெண் அமைப்புகள் என்று இக்கேள்விக்கு பலதரப்பட்ட விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவையோடு, தமிழ்நாட்டு சமூக வரலாற்றின் பிற அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் சமகால சாதனைகளோடு இவற்றிற்குள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் ஆய்வுக்குரியவை. விளக்கங்கள் பலதரப்பட்டவையாக இருப்பினும் அவை யாவும் ஏதோ ஒரு வகையில் ஜனநாயக இயக்கத்தின் வலிமையை உணர்த்துவதில் ஒன்றுபடுகின்றன.” (ஆதாரம்: நிச்சயமற்ற பெருமை - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்: ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென்).

இன்று இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஒரளவு சிறப்பான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது என்றால் அது எல்லாம் ஏதோ ஒரே இரவில் நடந்த அதிசயமல்ல. இதற்காக ஒவ்வொரு ஆட்சியிலும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டிருக்கின்றன. நீதிக்கட்சி தலைவர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த போதே மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அது காமராஜர் காலத்தில் விரிவு படுத்தப்பட்டு, எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டமானது. மதிய உணவோடு வாரம் முழுவதும் முட்டைகள் அளிக்கும் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். இதனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் கல்விச்சூழல் மேம்பட்டது.

தமிழ்நாட்டை ஆண்ட திமுகவாக இருக்கட்டும், அதிமுகவாக இருக்கட்டும் இந்த இரண்டு கட்சிகளும் மக்களை பசியில் இருந்து விடுவிக்க தம்மால் ஆன அனைத்து முயற்சியையும் செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

1967-ல் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று தொடங்கப்பட்டது. இன்று வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்திற்கு இலவசமாக 20 கிலோ அரிசி தரும் நிலைக்கு வந்திருக்கின்றது.

இது தவிர மாநிலம் முழுவதும் செயல்படும் 200க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் ஐந்து ரூபாய் இருந்தால் கூட வயிறு நிறைய உண்ண முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்போது தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ போன்று ஆந்திர மாநிலத்திலும் “அண்ணா அம்ருத ஹஸ்தம்” என்ற பெயரில் செயல்படுத்தப்படுகின்றது.

இவை எல்லாம் ஏதோ அரசு மக்களுக்கு இலவசமாக கொடுக்கின்றது என்று கொச்சைப் படுத்திவிட முடியாது. இவை அனைத்தும் அந்த மக்களின் வரிப்பணத்தில் இருந்தே கொடுக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான சாமானிய மக்களை ஓட்டுவங்கியாக கொண்டிருக்கும் இக்கட்சிகள் இது போன்ற திட்டங்கள் மூலம் அவர்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைத்திருக்கின்றார்கள்.

கலைஞர் கொண்டுவந்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் போன்றவை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைந்த பட்சமாகவாவது விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியிருக்கின்றது.

மேலும் கலைஞரால் கொண்டு வரப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திட்டம் , ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட விலையில்லா கிரைண்டர், மிக்சி, ஃபேன் கிராமப்புறப் பெண்களுக்குக் கால்நடைகள் வழங்கும் திட்டம், தற்போது ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்டு இருக்கும் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்புவரை படித்த பெண்கள் மேல்படிப்பு படிக்கும் போது அவர்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை தரும் திட்டம் போன்றவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்பட்டிருக்கின்றன.

இவை எல்லாமே மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசு கொடுத்ததுதானே ஒழிய யாரும் அவர்களின் கைக்காசில் இருந்து கொடுத்தது அல்ல. இருப்பினும் இந்தியாவில் மற்ற மாநிலத்தை ஆண்ட கட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக என இரண்டுமே தமிழகத்தில் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பெரும்பாலான மக்கள்நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு சாராய விற்பனையை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவை ஒரு கரும்புள்ளியாக, இழிவாக இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அது உண்மையும் கூட.

இந்திய அரசின் ஆதிக்கப் பிடியில் சிக்கி, அதன் பொருளாதாரக் கொள்கை, அதிகார முறைகேடுகளுக்கு இடையில்தான் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் வளர்ந்திருக்கின்றது. சமூக நீதி கொள்கையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.

யாரெல்லாம் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்களோ யாரெல்லாம் தீவிர முதலாளித்துவத்தின் அடிவருடிகளாக இருக்கின்றார்களோ அவர்கள் தான் மக்கள் நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றார்கள்.

நாட்டில் உள்ள உழைப்போர் எண்ணிக்கையில் 93 சதவீத தொழிலாளர்கள் அமைப்புசாரா முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எந்தவித பணிப் பாதுகாப்போ, நிரந்தர தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளோ கிடைப்பதில்லை. இந்தியாவில் 24 சதவீதம் மக்களின் மாதாந்திர வருமானமே 3 ஆயிரம் ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் என்பவை மிக முக்கியமானதாகும். மோடி சொல்வது போல இலவச திட்டங்களை செயல்படுத்துவதால் இலங்கையை போன்ற நிலை நிச்சயம் ஏற்படாது. அதை செயல்படுத்தாமல் பணக்காரர்களை மட்டுமே கொழுக்க வைத்தால்தான் அப்படியொரு நிலை நிச்சயம் ஏற்படும்.

- செ.கார்கி

Pin It