சேலம் `முகடு' கலை இலக்கிய அமைப்பு சார்பில் சென்னை மரப்பாச்சிக்குழுவின் குறிஞ்சிப்பாட்டு நாடகம் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது.

Mugadu நாடகம் குறித்த விமர்சனப் பார்வையை முன்வைத்து சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன் கூறுகையில், "கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு காதல் பற்றியது. இந்த நாடகத்திற்குக் குறிஞ்சிப்பாட்டு என்ற தலைப்பு பொருந்துமா?" என்ற கேள்வியோடு தொடங்கி, "பழமையான கதை வடிவத்தை முன்வைத்து இன்றைய சமூகப் பிரச்சனை வெளிப்படும் விதத்தில் நாடகம் அமைந்திருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற புலம் பெயர்தல் என்கிற பிரச்சனை நாடகத்தின் மையக்கருத்தாக எடுத்தாளப் பட்டிருக்கிறது. சங்கப்பாடல், இக்காலப் பேச்சு வழக்கு, தகுமொழிவழக்கு எனப் பல்வேறு மொழி நடைகளை இன்குலாப் பயன்படுத்தியிருப்பதால் சீராக அமையவில்லையோ எனத் தோன்றுகிறது. கபிலர் - குறத்தி உறவு இருந்த தாகச் சொல்லப்பட்டிருப்பதும், விறலி பற்றி எடுத் தாளப்பட்டிருக்கும் பொருளும் முரணாகவே இருக்கின்றன. மதுரைக்காஞ்சியில் விறலியர் குடும்பப் பெண்களாக இருந்ததற்கான அடையாளம் உள்ளது" என்றார்.

நாடகம் பற்றிய பழைய நினைவுகளோடு தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார் கவிஞர் நமிழ்நாடன். "குறிஞ்சிப்பாட்டு ஒரு நவீன நாடகம் இல்லை. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தன்மைகளும் இந்நாடகத்தில் உயிரோட்டமாய் அமைந்திருக்கின்றன. வரலாறு தன்னைத்தானே திருப்பிப்போடுகிறது. அனு பவங்கள் மீண்டும் மீண்டும் படிப்பினையைத் தருகின்றன. இந்த வரலாற்றின் தன்மையை கலை ஞர்களால்தான் துல்லிய மாக வெளிப்படுத்த முடி யும். இந்நாடகத்தில் காலத்தை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக் காட்டுகிறார்கள்.

கபிலர், இனக்குழுத் தலைவர்கள், ஆக்கிரமிப்பு, வெளியேற்றம், காடுகள் அழிக்கப்படுதல், வன்முறை, புலம் பெயர்தல் எனப் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட மக்கள் பிரச்சனைகளைக் குறிஞ்சிப்பாட்டு ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிக் காட்டுகிறது. இன்றைய சூழலில் மரபை மீட்டுரு வாக்கம் செய்ய வேண்டிய பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது. குறிஞ்சிப்பாட்டு நாடகம் முற்றுப் பெறாமல் முடிந்திருப்பது, மக்கள் பிரச்சனை களையும், பிரச்சனையின் தீவிரத்தையும் உணர்த்திவிட்டு, உரிமைக்காகப் போராட வேண்டிய அவசியத்தை ஒவ்வொருவர் மனதிலும் எட்டி எழுப்பிவிட்டிருக்கிறது" என்றார்.

நாடகத்தை நெறியாளுகை செய்திருந்த பேராசிரியர் அ.மங்கை பேசுகையில், "நாடகத்தைப் பொறுத்தவரை ஒரே மூச்சில் கதையை நிகழ்த்திக் காட்ட வேண்டியிருக்கிறது. என் இருபதாண்டு நாடக அனுபவம் எனக் குள் ஒரு கேள்வியை எழுப்புகிறது. ஒரு நாடகம் அந்த கணத்துடன் மட்டும் நிகழ்கிறதா? தொடர்கிறதா? நாடகம் அந்த கணத்துடன் முடிந்துவிடுவதில்லை பார்த்தவர்களின் அனுபவ வெளிப்பாடாக, வாய் மொழியாக அது தொடர்கிறது. ஒரு நாடகத்திற்குப் பனுவல், நெறியாள்கை இரண்டும் முக்கியமானவை. இதில் பங்குகொள்ளும் இருவரும் தோழமை உணர்வுடன் இருந்தால்தான் இதுபோன்ற நாடகங்களைக் கொடுக்க முடியும்.

கபிலரின் மனவெளிக்குள் நிகழும் கனவுதான் இந்தக் குறிஞ்சிப்பாட்டு. பாணர் கூட்டத்தின் வாயிலாக அந்தக் கனவு நிகழ்த்தப்பட்டது. ஒரே மேடையில், கனவில் நிகழும் பல்வேறு காட்சிகளையும் ஒருங்கிணைத்து வெளிப்படுத்தினோம். இந்த நாடகத்தில் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களையே நான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். ஏனென்றால் இவர்கள்தான் நாளைய தமிழாசிரியர்கள். ஒரு சங்கப் பாடலை விளக்கும் போது புலம் பெயர்தலை, சுற்றுச்சூழல் அழிப்பை, இழப்பைச் சொல்லி இளைய சமூகத்திற்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டும். இதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். திருமணத் திற்காக எவன் முன்பும் தலைகுனிந்து நிற்கமாட்டோம் என்று சொல்லக்கூடிய சுதந்திரப் பெண்களாகவே `அங்கவை, சங்கவை இங்கு காட்டப்பட்டுள்ளனர். இன் னோர் இடத்தில், குடும்பப் பெண்களைச் சந்தேகப்படும் ஆணின் மனநிலையை எதிர்க்கும் வகையில்,' `பரவா யில்லை நாங்கள் விறலியர்' என்று சொல்லி ஆண்களைப் பார்த்துச் சிரிப்பது போலக் காட்சி யமைத்திருந்ததும் கபிலரின் கனவில் குறத்தியுடன் அவருக்குக் காதல் இருப்பதாகக் காட்டுவதும் பார்ப்பனிய, ஆணாதிக்கச் சிந்தனைகளுக்கு எதிரான வெளிப் பாடுதான்" என்று கூறினார்.

பல்வேறு கேள்விகளையும் நாட்புடன் உணர்ந்து தனது பதிலைத் தெளிவாக வெளிப்படுத்தினார் கவிஞர் இன்குலாப். அவர் கூறுகையில், "நான் நாடகத்தை எழுதும் போது மனதளவில் அதை நிகழ்த்திப் பார்க்கிறேன். நாடகங்களில் காலத்தின் குறியீடாக சில சொற்களைப் பயன்படுத்துகிறேன். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் காதல், வீரம், புலம்பெயர்தல் என அவர்களது வாழ்வை நாடகம் எடுத்துரைப்பதால் இந்நாடகத்திற்கு `குறிஞ்சிப்பாட்டு' எனப் பெயர் வைத்தேன். சங்க காலத்தில் நடைபெற்ற போர்கள், புலம் பெயர்தல் போன்ற நிகழ்வுகள் சமகால நிகழ்வுகளோடு பொருத்திக் காட்டப்படுவதால் காலத்தையும், இடத்தையும் சிதைக்கிற நாடகமாகக் குறிஞ்சிப்பாட்டு இருக்கிறது.

காதல், அந்தணன் - குறத்தி என ஜாதி பார்த்து வருவதில்லை, குறத்தியின் காதல் பன்னத்தியின் காதலைவிடக் குறைவுடையதா? கனவு மரபு பார்த்து வருவதில்லை. இம்மாதியான மரபு மீறல்கள் தேவை என்று நினைக்கிறேன்" என்றார்.

தொகுப்பு : சங்கவை