தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் ழயயீயீல ஞடிபேயட என்கிற வாசகம் இருந்தது.
காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பிறகு ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியிலிருந்து “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு வருகிறது. அதாவது, இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு அது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் இரண்டு பண்பாட்டுத் தாக்குதல்களை உணர முடியும். ழயயீயீல ஞடிபேயட என்பதிலே உலகமயமாதலின் வெளிப்பாடு; மீண்டுமொரு பொங்கலிட கோயிலுக்கு வாருங்கள் என்ற அழைப்பிலே இந்துத்வாவின் வெளிப்பாடு. நம் முன்னால் நிற்கிற மிகப்பெரிய இரண்டு பேரழிவுகள் இவை.

எந்த வகையான பண்பாட்டுத் தாக்குதல்கள் நம்மீது தொடுக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு பண்பாட்டின் வேர்கள் எவை என்பதை நாம் அறிய வேண்டும். வரலாற்றை அறிதல் என்பதிலேதான் வரலாற்றில் வாழ்தல் என்பது உருவாகும். எனவே நாம் நமது வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். நம்முடைய பண்பாட்டின் வரலாறு எது?

முதலில் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும். ``பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தின் உறுப்பாக இருந்து கற்கும் திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதி'' என்று எட்வர்ட் பார்மன் டையர் பண்பாட்டை வரையறுக்கிறார். 1877-ல் அவர் ‘பண்பாடு என்றால் என்ன’ என்று எழுதிய நூலின் வாசகம் இது. பிறகு பண்பாடு பற்றி நிறைய விளக்கங்கள் வந்திருக்கின்றன.

அந்த வகையில் பார்க்கிறபோது இந்தப் பண்பாடு என்பதற்கும் விஞ்ஞானபூர்வமான ஓர் ஆய்வு தேவைப்படுகிறது. இது இரு வகையாக வெளிப்படும். 1. ஏற்கெனவே நிலவுகிற சமுதாய அமைப்பைக் கொண்டு செலுத்துகிற அரசு அமைப்பு, அதனுடைய அதிகார உறுப்புகள் அதாவது ஆட்சி அமைப்பு, ராணுவம், காவல் என ஆயுதங்களாலே இயக்கப்படுகிற ஒரு வடிவம். 2. பண்பாட்டு வடிவம். ஓர் அரசு இந்த சமுதாயம் முழுவதும் வன்முறை எந்திரங்களால்தான் இயக்கப்படுகிறது என்பதை மார்க்ஸ் வரை யறுத்தார். ஆனால் ஆலிவர் கிராம்சி கூடுதலாகக் கூறுகிறார். பண்பாட்டு மேலாதிக்கம் என்பது இவை எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என மார்க்சியத்தை இன்னும் வளப் படுத்தினார். ஆனால் இவற்றினால் மட்டுமே ஒரு மேலாண்மை மற்றும் ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்படுவதாக நான் கருதவில்லை. மாறாக மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் சமூக ஒப்புதலை மக்களிடமிருந்து மேட்டிமையாளர்கள் பெற்றுக் கொள்வதன் மூலம் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது என்று கிராம்சி குறிப்பிடுகிறார். எனவே பண்பாடு என்பது ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. மேலாண்மை அல்லது ஆதிக்க சக்திகளுடைய ஆட்சி அதிகாரம் என்பது மக்களுடைய அங்கீகாரத்தோடு நிறுவப்படுகிறது. பண்பாட்டு தளத் திலே இதற்கான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழர் திருமணங்கள் கடந்த காலத்திலே எப்படி நடந்தன என்பதை நாம் அறிவோம். இப்போதும்கூட கிராமப்புறங்களிலே ஓரிரு இடங்களில் நடக்கிற திருமணங்கள் சங்க காலத் திருமணங்களை ஞாபகப்படுத்துகின்றன. முற்றத்திலே புதுமணல் பரப்பி பந்தல் காலிட்டு அந்த ஊரிலே இருக்கிற பெரியவர்கள் அந்த சமுதாயத்தின் பழக்க வழக்கம் பற்றி அறிந்த அறிவார்ந்த ஒரு நபர் அல்லது அந்தக் குழுவிலே, குடும்பத்திலே மூத்தவர் அல்லது அந்த சமுதாயத்திலே இருக்கிற பெரியவர் இவர்களுடைய தலைமையிலே அந்தத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அந்த மாதிரி திருமணங்களை நானே நேரடியாக-சாட்சியாகக் கண்டிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான கிராமப்புறங்களிலே நடத்தப்படுகிற திருமணங்கள்கூட பக்கத்திலே இருக்கிற சிறுநகரங்களிலே பெரு நகரங்களிலே திருமண மண்டபங்களில் நடத்தப்படுகின்றன. இது ஒரு பொது கலாச்சாரம் என்பதற்குள்ளே வாழ்க்கையைக் கொண்டு வந்துவிடுகிறது.

மேலாண்மை செலுத்துகிற ஆதிக்க சக்திகளின் கலாச் சாரம்தான் இன்றைக்கு பொது கலாச்சாரமாக இருக்கிறது. மக்களுடைய கலாச்சாரம் என்பது பொது கலாச்சாரமாக இல்லை. ஆகவே திருமண மண்டபம் என்ற வடிவம் வந்தவுடனே திருமணம் என்பது பார்ப்பனர்களால் ஓதப்படுகிற மந்திரங்களில் நடத்தப்படுவதாக மாறுகிறது. ஆகவே இன்றைக்குப் பண்பாட்டு வடிவம் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. வாழ்வின் பல்வேறு வடிவங்களிலே அது வெளிப்படுகிறது.

சீர்திருத்த திருமணங்கள் பற்றி இப்போது நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். விதவை மறுமணம் என்பது ராஜாராம் மோகன்ராய் காலத்திலிருந்து பால்ய விவாகம் தடுப்பு என்பதிலிருந்து தொடங்கி, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலே மிகவேகமான சீர்திருத்தமாக வைக்கப்பட்டது. இன்றைக்கும் அது பேசப்படுகிறது. ஆனால் கைம்மை நோன்பு, விதவையாக இருப்பது அல்லது வேறொரு திருமணம் செய்து கொள்வது, சாதாரண தமிழ்க் குடியிலே இயல்பாக இருக்கிற எதார்த்தம்.

இந்த சமூகத்திலே ஒதுக்கப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கைம்மை நோற்பதில்லை. அவர்களுக்கு ஒரு கணவனைப் பிடிக்காதபோது வேறு கணவனைத் தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. எனவே அவர்கள் விவாகரத்து செய்கிறார்கள். அதற்கு அறுத்துக் கட்டுதல் என்று பெயர். நவ நாகரிகமாக விவாகரத்து என்று சொல்கிறோம்.

வேறொரு ஆணை மணந்து கொள்கிறபோது ஏற்கெனவே இருந்த கணவன் மூலம் பெற்ற குழந்தைகள் ஆணுடையதா? பெண்ணுடையதா? இந்து திருமணச் சட்டங்கள் ஆணுக்குச் சாதகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அறுத்துக் கட்டுகிற பழக்கமுடைய இந்த மக்கள் பெண்ணுக்கு முதல் கணவனாலே பிறந்த குழந்தைகளையும் அவள் இரண்டாவது ஆணுடன் வாழச் செல்கிறபோது அழைத்துச் செல்கிறாள். இதுகாலம் வரை இந்த வழக்கம் இருந்துகொண்டு வருகிறது. பூமணியின் பிறகு நாவலிலே இது வரும்.

இது நமது அடித்தள மக்களின் பண்பாடு. இந்தப் பண்பாட்டிலிருந்து எல்லாமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

இன்னொரு பேராபத்து. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல உலகமயமாதல். இந்த உலகமயமாதல் என்பது தனியார்மயம் தாராளமயம்-இவற்றினால் கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதுதான் உலகமயமாதலின் சாரம். கல்வி வியாபாரமயமாதலின் விளைவுதான் கும்பகோணத்திலே 88 குழந்தைகளின் சாவு. இதன் தொடக்கத்தினை முன்பே பலர் தொடங்கி வைத்து விட்டார்கள். குறிப்பாக கல்வி வியாபாரமாக்குதலைத் தொடங்கி வைத்த பெருமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சாரும்.

1964 ல் நான் மதுரை தியாகாரய கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மதியம் வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண் டிருந்தபோது எல்லாப் பேருந்துகளும் ஒரு திசை நோக்கித் திருப்பப்படுகின்றன. மதுரையில் அப்போது டிவிஎஸ் என்ற பேருந்து மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ஏறிச் சென்று மதுரை ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள சரஸ்வதி உயர்நிலைப் பள்ளி இடிந்து 44 மாணவிகள் சவமானதைக் கண்டேன். அதைப்பற்றி தோழர் பச்சையப்பன் என்கிற நாட்டுப் புறக் கவிஞர் “படபடவென வருகுது ரயிலு கிடுகிடுவென நடுங்குது ஸ்கூலு” என்று நாட்டுப்புறப் பாடல் வடிவிலே ஒரு பாடலை எழுதியிருப்பார். அந்த மாணவிகளை இடிபாடுகளிலிருந்து காப்பாற்றுகிற வேலையை டிவிஎஸ் நிறுவனத்தினுடைய தொழிலாளர்கள்தான் செய்தார்கள். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 1967 ல் திராவிட இயக்கத்தின் ஆட்சி வந்தபோது 44 மாணவிகளின் கொலைக்குக் காரணமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் அதே பள்ளிக் கூடத்தை அதே பெயரில் வேறொரு இடத்திலே புதிதாகக் கட்டி நடத்தி வருகிறார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்தவுடன் சாதி பண
அடிப்படையில் அய்க்கியமாகி விடு கிறார். இயக்கத்தைச் சார்ந்தவர்களின் எல்லா ஆசீர்வாதங்களும் அவருக்கு இருக்கிறது. ஆகவே அன்றைக்கு கல்வி வணிக மயமாகி வந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

உலகமயமாதல் என்பது எல்லாவற்றிலும் ஊடுருவி வருகிறது. பொருளாதார வேட்டையின் காரணமாக உள்ளுக்குள் நுழைகிற பன்னாட்டு நிறுவனங்கள் வெறும் பொருளாதார வேட்டையை மட்டும் நடத்துவதில்லை. அவை பண்பாட்டுத் தளத்தையும் குறிவைக்கின்றன. மலேசிய முன்னாள் பிரதமர் சொன்னார் : ``கொக்கோ கோலா நிறுவனத்தை மலேசியாவுக்குள்ளே நுழைய விட்டதுதான் எங்களுடைய பெரிய தவறாக ஆகிவிட்டது. மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே சுரண்டிக் கொண்டு போய்விட்டது மட்டுமல்ல எங்கள் பண்பாட்டையே அவர்கள் தகர்த்து விட்டார்கள்'' என்று குறிப்பிட்டார். அது போலவே ஒரு கொகோ கோலா அல்லது பெப்சி நிறுவனம் நம்மூர் காளி மார்க் வின்சென்ட் சோடா மாப்பிள்ளை விநாயகர் போன்ற வற்றை தூக்கிச் சாப்பிட்டு விட்டது.

12,000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்த கல்லூரி விரிவுரையாளர்களை-பேராசிரியர்களை வெளியே அனுப்பி விடுகிறார்கள். நிரந்தரமான, அமைதியான குடும்பம் என்ற அமைப்புக்குள்ளான இந்த வாழ்க்கையிலே இருந்து அவர்களைப் பிரித்து, அலைந்து திரியும் வாழ்க்கையை அவர்களுக்கு உருவாக்குகிறார்கள். அலைந்து திரியும் வாழ்க்கை என்பது அலைந்து திரியும் மனநிலையை உருவாக்குவதாகவே இருக் கிறது. இதுதான் நுகர்வு கலாச்சாரத்துக்கான அடிப்படை. நடுநிலையற்ற மனம் எதன்மீதும் நம்பிக்கை இல்லாத மனம் வேறொரு பண்பாட்டுக்கு அவர்களை இழுத்துப் போகிறது. இவ்வகையான கூறுகளும் இந்த சமுதாயத்திலே இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே உலக அளவிலான அபாயம் உலகமயமாதல்; உள்நாட்டு அபாயம் இந்துத்வா. இந்த இரு அபாயங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். இதற்கான மாற்றுத் தளங்களை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம்? இதற்காக அரசியல் துறையிலும் பண்பாட்டுத் தளத்திலும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய காலகட்டத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இக்கால தமிழ் இலக்கியத்தில் தகுதி திறன் மேம்பாடு உன்னதம் பற்றியெல்லாம் பேசுபவர்கள் உலக மயமாதல் இந்துத்வா ஆகியவை பற்றிப் பேசுவதில்லை. இலக்கியப் படைப்புகளிலே இவைபற்றிப் பேச முடியவில்லை என்றால் வேறு அரங்கிலே ஊடகங்களிலே பேச வேண்டும். அரசியல் நீக்கமற்ற இலக்கியங்களை உருவாக்குவது என்ற போராட்டத்தையும் நாம் தொடங்க வேண்டும்.

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சைதை கிளைப் பேரவையில் `நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டு சவால்கள்' என்ற தலைப்பில் தோழர் சூரியதீபன் ஆற்றிய உரையின் சுருக்கம். எழுத்துருவம் : சூரியசந்திரன்)