காஞ்சீவரம் தமிழ்த்திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது. சென்றாண்டு கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன். அன்று தங்கர்பச்சானின் அழகி திரைப்படம் வெளியாகியிருந்த நாள். ஒளிப்பதிவாளர் ஒருவர் தொடர்ந்து என்னை சென்னைக்கு எனது ‘சாயத்திரை’ நாவலை திரைப்படம் ஆக்கும் திட்டத்திற்கான ஆலோசனைக்காக கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்... அன்றுதான் வாய்த்தது. ஆலோசனையின் போது நாவலின் இறுக்கம் காரணமாகவும், திரைக்கதை ஆக்குவதில் இருந்த சிக்கல்கள் காரணமாகவும் அந்த ஒளிப்பதிவாளர் வேறொரு மையத்தை, அது நெசவாளர் வாழ்க்கை பற்றி இருந்ததால் (நான் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால்) அதை திரைக்கதை ஆக்குவது பற்றி ஆலோசித்தோம்.

கதையின் மையம் முடிவானது. 3 நாட்களுக்குப் பின் திருப்பூர் திரும்பிய நான் ஒரு வாரத்துக்குள் 30 சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன் ஒளிப்பதிவாளர் வெகு சீக்கிரம் என்பதால் வெகுவாக மகிழ்ந்தார். திரைக்கதைக்கு தற்காலிகமாக ‘பட்டு’ என்று பெயர் இட்டோம். ஒளிப்பதிவாளர் அதை குறைந்த பட்ஜெட் படமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். காஞ்சிபுரம் சென்று இடங்கள் கூட பார்த்து வந்தார். தேவைப்படும்போது கூப்பிடுவதாகச் சொன்னார். பலரிடம் அந்த திரைக்கதையை பார்வைக்கு அனுப்பியதையும் அவர் பின்னர் பகிர்ந்து கொண்டார். தயாரிப்பில் நிச்சயம் ஈடுபடுவேன் என்றார்.

வேறு செய்திகள் இல்லாமல் நாட்கள் கழிந்தன. சில ஆண்டுகளுக்குப் பின்... கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது ‘பட்டு’ திரைக்கதையை எழுதியவன் என்றார். ரேவதியும் ‘அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள்’ என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாகச் சொன்னார். பிறகு காஞ்சீவரம் திரைப்படம் பற்றி ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தியை படித்துவிட்டு அவரிடம் தொடர்பு கொண்டபோது, ‘தனக்கு பார்க்க கிடைக்கவில்லை. செய்தி தெரியவில்லை’ என்றார்.

கேரளா சர்வதேச திரைப்படவிழாவிற்கு தொடர்ச்சியாகச் செல்பவன் நான். சென்ற டிசம்பரில் திருவனந்தபுரத்திற்கு சென்றபோது ‘காஞ்சீவரம்’ திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது. திரையிடப்பட்ட அன்று பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. எனது திரைக்கதையில் ஒரு நெசவாளர் வீட்டு முதிர்கன்னிப் பெண் தனக்கான கல்யாணப் பட்டுப் புடவையை தானே நெய்து கொள்வாள். குடிகார தகப்பன். திருமணக்கனவு நிறைவேறாத போது தற்கொலை செய்து கொள்வாள். அவளது பிணத்திற்கு தந்தை அவள் நெய்த பட்டு சேலையை போர்த்துவார். நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. திரைப்பட விழாவிற்காக வந்த தமிழ்நாட்டு நண்பர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக அறை நண்பர் விசுவாமித்திரனுடனும் பிறகு தமிழ்ப் பத்திரிக்கை நண்பர்களிடமும் இதைச் சொன்னேன். தளவாய் சுந்தரம் போன்றவர்களிடமும். முதல் மரியாதை பட அனுபவம் 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது இது போலத்தான்.  

(www.thinnai.com)

மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம் 

காஞ்சீவரம் பற்றி “இனி ஒரு”வில் பதிவு ஆகியிருப்பதை அறிந்தேன். நான் எழுதிய “பட்டு” திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர் இன்றைய பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியுமான் பெண் கவிஞர், ஒரு மலையாள இயக்குனர், ஒரு இயக்குனர் ஆகியோரிடம் செழுமைப்படுத்த தந்ததாக என்னிடம் சொல்லியிருந்தார். அது போல் வேறு யார்யாரிடம் சென்றன என்பது தெரியவில்லை. “ஒரு ரவுண்டு போய்விட்டு வந்து இந்த ரூபமும் அடைந்திருக்கலாம். “சினிமாவிலே இதெல்லாம் சகஜமப்பா” என்று ஆறுதல் படுத்திக் கொள்வதுண்டு. எனது திரைக்கதை சுதந்திர போராட்ட காலத்தை சார்ந்ததல்ல. அதில் பெண் பாத்திரத்தைப் பிரதானமாக்கி இருந்தேன். இதில் அப்பா பிரதானமாகி இருக்கிறார்.

மலர் மன்னன் நான் குறிப்பிட்ட “முதல் மரியாதை” அனுபவம் பற்றி கேட்டிருந்தார். “முதல் மரியாதை எனது “கவுண்டர் கிளப்” குறு நாவலின் மையத்தை ஒத்திருந்தது. அந்தக் குறுநாவல் “தீபம்” இதழில் வந்தது. இயக்குனர் பாரதிராஜா, கதாசிரியர் செல்வராஜ் ஆகியோ ருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி னேன். இரண்டு முறை திரும்பி வந்தன. மூன்றாம் முறை பெற்றுக் கொண்ட பாரதிராஜா பதில் அனுப்பியிருந்தார். அவரின் வழக்கறிஞர் மூலம்: “கடிதம் அனுப்பியிருக்கும் ஆர்.பி.சுப்ரமணியனுக்கும், சுப்ரபாரதிமணியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை”. ஆர்.பி.சுப்ரமணியன் என்பது என் இயற்பெயர். நான்தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. அப்போது தீபம் பத்திரிக்கை அலுவலகத்தில் மறைந்த எழுத்தாளர் என்.ஆர்.தாசனை சந்தித்தேன். அவரின் “வெறும் மண்” என்ற நாடகத்தைத் தழுவி பாலச்சந்தர் “அபூர்வ ராகங்கள்” எடுத்ததை மையமாகக் கொண்டு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தவர். அவரின் அனுபவத்தைச் சொன்னார்: “முதல் ஏழு ஆண்டுகள் வாய்தாதான். பிறகு 3 ஆண்டுகள் விசாரணை. முடிவில் ஆமாம் கதையில் ஒற்றுமை உள்ளது. 1000 ரூபாய் அபராதம் என்று விதித்தார்கள். நான் சென்னைக்காரன். வழக்கறிஞர் செந்தில்நாதன் எனது நண்பர். எனவே அலைந்தோம். நீங்கள் ஹைதராபாத்தில் இருக்கிறீர்கள். சென்னைக்கு அலைய முடியுமா.” நான் அப்போது ஹைதராபாத்தில் வசித்து வந்தேன். எனவே வழக்கை விட்டுவிட்டேன்.

எனது “கவுண்டர் கிளப்” மையம் இது. கவுண்டர் ஒருவர் கிராமம் ஒன்றில் கிளப்-டீ கடை வைத்திருப்பார். மனைவியுடன் உறவு இருக்காது. ஒரு பெண் - தாழ்ந்த ஜாதி தனது தந்தையுடன் அந்த கிராமத்திற்கு வேலை தேடி வருவாள். கவுண்டரின் நிற்கதி தெரியவரும். இருவரும் நட்பு கொள்வார்கள். கவுண்டரின் மனைவி கவுண்டர் ஊரில் இல்லாத ஒரு நாளில் அவளை தெருவில் வைத்து அடித்து அவமானப்படுத்துவாள். ஊர் திரும்பிய கவுண்டர் அதிர்ந்து போவார். அப்பெண் தற்கொலை செய்து கொள்வாள். அவளின் நினைவாக டைம் பீஸ் கடிகாரம் உட்பட பல இருக்கும். தலை மயிரில் கோத்த பாசிமணி உட்பட. மையம் இது.

படத்தில் சிவாஜி, ராதா ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிவாஜியின் மாப்பிள்ளை, சத்தியராஜ் கதைகள் கிளைக்கதைகள் தனி. படத்தில் கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம் இதில் ஒரு பகுதியாக வந்திருக்கும்.

எனது “சாயத்திரை” நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருந்ததை பெற்றுக் கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போது 5 பேர் உள்ளனர். சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் “ஆன்லைனில்” ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ், பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். 15 நாளில் முழு திரைக்கதையை “ஆன்லைனில்” எழுதி முடித்தேன். அது என்ன பாடுபடப் போகிறதோ.

திரைப்படத்துறையைச் சார்ந்த ஒரு நண்பர் சொல்வார்: ‘பத்து குயர் பேப்பர் வாங்கிக் குடுத்து இதுதான் சன்மானம்முனு அனுப்பிச்சிருவாங்க.” 

சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா...  

(www.inioru.com)