1.

 

தூண்டிலின் கடைசி வீச்சில்

சிக்கிக்கொண்டது அந்த மீன்

செதில் பிளந்த முள்ளில்

ஒற்றைக்கண் சிதறிப்போயிருந்தது

 

தரையில் துடிதுடித்ததை

பாத்திர நீருக்குள் வாழ்வளித்தாள் சஹானா

 

வட்ட நதிக்குள் சுழலத் துவங்கிதற்கு

மொத்த மண்புழுக்களை உணவாயிட்டாள்

 

அப்போது நதியை நோக்கி

தன்னை ஒப்படைப்பதாக மீன் கூறியிருக்கலாம்

 

சிறிது நேரத்தில் மிதக்கத்துவங்கியதை

பெருநதியோடு சேர்ப்பித்தாள்

 

கடைசி மீனை நோக்கியும் தூண்டிலை

வீசச்சொன்னாள்
 

இருவரும் காத்திருக்கிறோம் பிடிபடுபவைகளை ரட்சிக்க.

  

2.

 

கிளி வளர்ப்பதைப்பற்றி கதையாய் சொன்னாள்

 

அதன் மூக்கின் நுனி பற்றியும்

வாலின் நீளம் குறித்தும்

நிறையப்பேசிக்கொண்டிருந்தாள் சஹானா

 

எப்போதுமே கீ கீ ன்னு கத்திக்கொண்டிருப்பதாய்

பேசுகையில் படபடத்தாள்

 

அடைபட்டிருக்கும் ஒற்றைக்கிளியை

நினைத்துக்கொண்டேயிருந்தேன்

 

நேற்றைக்கு அழுதுபடி சொல்லத்துவங்கினாள்

கூண்டுக்குள் நுழைந்த

பூனையின் சாமர்த்தியத்தை

சிறகுகள் இறைந்துக்கிடக்கும் அதன்

தனிமையை

 

நீல வானத்தில் சிறகடிக்கும் கிளியை

நினைத்துக்கொள்கிறேன்

கதவினைத் திறந்த பூனையையும்.

- கென்