மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தை முதல்முதலாக எழுப்பியது திராவிட இயக்கம்.

மறைந்த முரசொலி மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்ற பெருநூல் அதன் பிரகடனம். இப்போது மாநில சுயாட்சி மாநாடு ஒன்றினைச் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தியுள்ளது.

பா.ஜ.க.வின் மதவாத வெறியைத் தன்னுள் ஏற்றிக் கொள்ளாத அந்தக் காங்கிரஸ் காலத்திலேயே, மாநில சுயாட்சி என்ற சித்தாந்தம் மேலெழத் தொடங்கிவிட்டது தமிழ்நாட்டில்.

இன்று பா.ஜ.க.வின் மிருக பலத்தால் அமைந்துள்ளது மத்தியில் அதன் ஆட்சி.

அதற்காகப் பன்முகத் தண்மைக் கொண்ட இந்தியாவை, ஒற்றை ஆளுமையின் கீழ் கொண்டுவருவது எப்படிச் சரியாகும்?

இது இந்திய அனைத்து மாநில உரிமைகளையும் ஒழித்துக் கட்டுவதற்கான சதி அல்லவா-!

நீட் தேர்வுத் திணிப்பு, ஜி.எஸ்.டி. வரி, நவோதயா பள்ளிகளை வலுக்கட்டாயமாகத் திணித்தல், சமஸ்கிருத பாடத்திட்டத்தைக் கொண்டுவர எடுக்கும் முயற்சி, வந்தே மாதரம், மாட்டிறைச்சித் தடை இப்படிச் சமூக நீதியை உருக்குலைத்து மாநில அரசு அதிகாரங்களை நசுக்கிக் கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கிறது பா.ஜ.க. அரசு.

சிந்து நாகரிகத்தை விட முந்தையதும், சிறப்பு வாய்ந்ததுமாக இருக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியை இழுத்து மூடி அழிக்க நினைக்கிறது.

காரணம் வந்தேறிப் பார்ப்பனர்கள் இந்தியாவைச் சொந்தம் கொண்டாடுவதைத் தகர்த்தெறிகிறது கீழடி அகழ்வாய்வு.

இதனால்தான் ‘‘மத்திய பா.ஜ.க. ஆட்சியால் ஏற்பட்டுள்ள விளைவினால்தான், இன்றைக்கு மாநில சுயாட்சி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்று தி.மு.க. செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

இது தமிழகம் என்ற மாநிலத்தின் பிரச்னை மற்றுமன்று. அனைத்து இந்திய மாநிலங்களின் பிரச்னை இது.

மாநிலங்களின் உரிமைகளுக்கான உயிர்நாடிப் போராட்டம் என்றே இதை சொல்லவேண்டும்.

மாநில சுயாட்சி என்பது சமூக நீதிக்குள் அடங்கும்.

இச்சமூக நீதியைக் காக்க இந்திய அளவில் மாநில சுயாட்சி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.

இதன் முதல் மாநாடு அனைத்து இந்தியத் தலைவர்களையும் இணைத்துத் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று நடத்த வேண்டிய அவசியம் இன்றைய காலத்தின் கட்டாயம்.