யானை, கடல், ரயில். இம்மூன்றும் எப்போதும் வாழ்வில் அலுக்காதவை. இவற்றை எப்போது மீண்டும் மீண்டும் பார்த்தாலும் அதன் மீதான ஈர்ப்பு எப்போதும் நமக்குக் குறைவதில்லை. யானையைக் காண முடியாமலும் கடல் காண முடியாமலும் நம்மில் பலர் இருக்க கூடும். ஆனால் ஒருபோதும் ரயிலில் பயணம் செய்யாதவர் எண்ணிக்கை அரிது. அவ்வாறு ஒருமுறையேனும் ரயில் பயணம் செய்ய வாய்ப்பு அமையாதோர் எதையோ வாழ்வில் இழந்தவராவார். அன்னையைப் போன்று அலுப்பில்லாமல் தாளாட்டி நம்மை விரும்பும் இடத்திற்குக் கடத்தும் மிக நல்ல அறிவியல் கண்டுபிடிப்பு.

அதிகமான ஜனக்கொத்தை அள்ளிக்கொண்டு குதூகலமாக ஓடும் ரயிலினைப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி. பயணம் நினைத்தபடி அமைந்துவிட்டால் பெருமகிழ்ச்சி. தொடரிதான் எப்போதும் உங்களை ஆளுமை செய்யுமே ஒழியே நீங்கள் அதனை ஆளுமை செய்யலாகாது. ஆனால் அதனை அறியலாம். அதன் பயன்பாட்டினை நாம் பெறலாம். இதற்கு ஆண்ட்ராய்டு தொழில் நுட்பம் எப்படிப் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

Google Play Storeக்கு சென்று NTES என்று தட்டச்சு செய்து National Train Enquiry System செயலியினை நிறுவிக் கொள்ளுங்கள். இந்தச் செயலிக்கு UserName, Password ஏதும் தேவையில்லை. கைக்குள் அனைத்து விவரங்களும் வந்துவிடும். உங்களுடைய தொடரி எப்போது எங்கு வரும் என்ற விவரங்களை வரிசையில் கால் கடுக்கக் காத்திருக்கத் தேவையில்லை. Spot your Train என்ற option வழியே சென்று உங்கள் Train No. யும், பயண நாளையும் உள்ளீடு செய்யுங்கள். அடுத்த நொடிப்பொழுதே உங்கள் வண்டி இப்போது எங்கே இருக்கிறது. சரியான நேரத்திற்கு வருமா? தாமதமாக வருமா? என்ற விவரங்களை நீங்கள் பெறலாம்.

இரவு நேரப் பயணத்தில் விழிக்கும் போதும் போது நமது வண்டி எங்கே நிற்கிறது என்ற கேள்வி நமக்குள் வரும். இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களும் ஒன்று போலவே காட்சி தருகின்றன. எங்கே இருக்கிறோம் என்பதை பிறரின் உதவியின்றி அறிவது சற்று சிரமான ஒன்றுதான். குளிரூட்டப்பட்ட பெட்டி எனில் இன்னும் மோசம். சில நேரங்களில் இரவா, பகலா என்று கூடத் தெரிவதில்லை. இரண்டாம் வகுப்பு பயணிகளைப்போல குளிர்சாதனப் பெட்டிப் பயணிகள் இயல்பாகப் பேசுவதும் அரிதாகிவிடுகிறது. சரி இருக்கட்டும். ரயில் சேவையினை நாம் முழுமையாகப்பெறவும் தகவலினைத் துல்லியாமாகப்பெறவும் இந்த செயலி வழியே முடியும்.

சரி, இப்போது ஒரு ரயில் நிலையத்தின் நடை மேடையில் நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இருக்கும் ஊரின் பெயரையும் நீங்கள் செல்லவிருக்கும் ஊரின் பெயரையும் உள்ளீடு செய்யுங்கள் போதும். இன்னும் இரண்டு மணிநேரத்திற்கும் நான்கு மணி நேரத்திற்கும் எத்தனை வண்டிகள் உள்ளன. அவற்றின் பயண நேரம் என்ன? எத்தனை மணிக்குச் சென்றடையும் என்ற விவரங்கள் பெறலாம்.

அது போலவே Train Schedule என்ற பகுதி வழியே, ஒரு நிலையத்தில் இந்தத் தொடரி நிற்குமா நிற்காதா? எத்தனை மணித்துளிகள் நிற்கும் என்ற விவரங்களைப் பெறலாம். இது உங்கள் நண்பருக்காக வரும் வழியில் சந்திக்கும் நேரத்தினை அழகாகத் திட்டமிடலாம். இல்லை சில நேரங்களில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது உணவுப் பண்டங்கள் வாங்கி வருதற்குள் ரயில் புறப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் உங்களுக்குத் தேவையில்லை. இந்தச் செயலி இந்தியன் ரயில்வே நிர்வாகத்தின் மூலமாக இயக்கப் பெறுவதால் தகவல் 99% நம்பலாம்.

பயணம் செய்யும் போதும் நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரம் எவ்வளவு என்பது வண்டியின் பயண நிரலிலேயே உள்ளது. நிலையத்தின் எழுத்துக் குறியீடுகளோடு தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரே இடத்திற்குச் செல்லும் இருவேறு தொடர்வண்டிகள் எத்தனை நிலையங்கள் நிற்கும் என்பதைத் தெரிந்துகொண்டு கூட நாம் பயணத்தினை முடிவு செய்து அதற்குத் தகுந்தவாறு பயணச்சீட்டை நாம் பதிவு செய்யலாம். சில நேரங்களில் இருக்கை கிடைக்கிறதே என்று பல ஊர்களுக்குச் சுற்றிச் சுற்றிச் செல்லும் வண்டியினைத் தேர்வு செய்துவிட்டு அதிக இன்னலுக்குள்ளாவோம். இதைத் தவிர்க்கலாம்.

பெருமழைக்காலம் மற்றும் அசாதாரண நேரத்தில் ரயில் வண்டிகள் ரத்து செய்யப்படுவதும் மாற்றுப்பாதையில் விடுவதும், கால தாமதமாக இயக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்று. அப்போதெல்லாம் தொலைகாட்சி மற்றும் இதர செய்திகளுக்காகக் காத்திருப்போம். அல்லது ரயில்வே தொலைபேசி எண்ணான 139க்கு அழைப்போம். 1 அழுத்தவும் 2 அழுத்தவும் என்ற அறிவிப்பு நம்மை எரிச்சலூட்டுவது மட்டுமல்லாமல் சரியான தகவலைப் பெறுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இது போன்ற பொறுமையினைச் சோதிக்கும் நிலை இனி இல்லை.

நம் கைகளில் உள்ள திறன் பேசி வழியே இந்தச் செயலியினைத் தட்டினால் போதும். மாற்றம் செய்யப்பட்ட தடத்தின் விவரங்களின் பட்டியலினைக் கொட்டித் தீர்க்கிறது. அது மட்டுமல்லாமல் மாற்றம் செய்யப்பட்ட நேரத்தின்படி எங்கே, எப்போது புறப்பட்ட எந்தெந்த நிலையத்தில் எப்போதும் நிற்கும் என்ற நேரப்பட்டியலினைத் தந்துவிடுகிறது.

நீங்கள் அடிக்கடி பயனம் செய்யும் ரயில் ராசதானியோ அல்லது பாண்டியனாகவோ இருக்கட்டும். அதுபற்றிக் கவலையில்லை. அதனை Favouriteமீ எனக்குறித்துவிட்டால் போதும் நீங்கள் ஒவ்வொரு முறையும் ரயில் எண்களைத் தட்டாமல் மிக எளிதாகப் பயண நிரலினைக் கண்காணித்துக் கொள்ள முடியும். இந்தியன் ரயில்வே தொடர்பாக எண்ணற்ற செயலி இருந்த போதும் இது அரசு நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் செயலி என்பதால் நம்பகத்தன்மை அதிகமாக உள்ளது. இதர செயலிகள் தனியார் வழியே செயல்படுவதால் விளம்பரம் அதிகம், நம்பகத்தன்மை குறைவு.

ஆளும் இந்திய நடுவண் அரசுக்கு ‘மதம்’ பிடித்திருக்கிறது. அரசு ரயிலுக்குத் ‘தாமதம்’ பிடித்திருக்கிறது. நாம் தாமதங்களை அறிந்து நமது செயல் திட்டங்களைச் சரிவர வகுத்துக்கொள்வோம். இனி புறப்படுங்கள் தோழர்களே பயணம். ரயில் பயணம் செய்யும் அனைவரிடமும் இருக்க வேண்டிய செயலி இது.