stalin mk1969 ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்கள் இறந்தபோது, கைபிசைந்து நின்றது காலம். இனி யார் என்று கேட்டது எதிர்காலம்! எல்லாவற்றிற்குமான ஒற்றை விடையாய் உயர்ந்து நின்றார் கலைஞர் அன்று!

இப்போது அந்தக் கலைஞரைக் கழகமும், தமிழகமும் இழந்து நிற்கிறது. இந்தக் கப்பலின் மாலுமி இனி யார் என்று தேட வேண்டிய தேவை இல்லாமல், அனைவரும் ஏற்கும் ஒரே தலைவனாய்த் தளபதி இன்று அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் அவர் ஆற்றிய உரை, தமிழக வரலாற்றில் நெடுநாள் நின்று பேசும். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய நான்கு தூண்களால் கட்டப்பட்டுள்ள திமுக என்னும் கோட்டையைக் கட்டிக் காப்பேன் என்ற உறுதியோடு தொடங்குகிறது அந்த உரை. இந்தியா முழுவதும் காவிச் சாயம் பூச நினைக்கும் மத்திய அரசுக்குப் பாடம் புகட்டவும், முதுகெலும்பில்லாத மாநில அரசைத் தூக்கி எறியவும் அறைகூவல் விடுக்கிறது தளபதியின் முழக்கம்!

நம் கோட்டையின் அடித்தளம் எது, கொத்த வரும் கழுகின் கூர் நகங்கள் எவை என இரண்டையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் அந்த உரை நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை விளக்கு!

அறிஞர் அண்ணாவின் காலம் காங்கிரசோடு போராடிய காலம். தலைவர் கலைஞரின் காலமோ, நம்மைப் போலவே கொடி, கட்சியின் பெயர், நம் அறிஞரின் படம் என எல்லாம் வைத்திருந்த போலிகளோடு போராடிய காலம். இதோ இப்போதுதான், ஒளிந்திருக்கும் உண்மை எதிரியின் உருவம் தெரியத் தொடங்கியுள்ளது.

ஆரிய-திராவிடப் போரின் அடுத்த கட்டம் தொடங்குகிறது. அழைக்கிறது போர்க்களம்... தலைவர் ஸ்டாலின் பின்னால் அணிவகுக்கட்டும் தமிழகம்!