கார் உற்பத்தியில் முதன்மையானதாகக் கருதப்படும் நிறுவனம், ஃபோர்டு நிறுவனம்.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் 1995 ஆம் ஆண்டில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி சென்னை மறைமலைநகரிலும், பின்னர் குஜராத் சனாந்த் என்ற இடத்திலும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியைத் தொடங்கியது.

ஆண்டுக்கு 2 இலட்சம் கார்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது இந்நிறுவனம்

 இப்பொழுது உற்பத்தியை நிறுத்துவதாக அதாவது ஆலையை இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளது.

அண்மைக் காலமாக மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து 4 இலட்சம் கார்கள் உற்பத்தி செய்ய, 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்ற செய்தி வெளிவந்த போதும் ஃபோர்டு - மஹிந்திரா ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமல் போய்விட்டது.

ஆனால் ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்த அறிக்கை ஒர் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 இத்தொழிற்சாலையை நம்பி 4 ஆயிரம் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், 30 ஆயிரக்திற்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிறுவனத்திற்காக உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு உற்பத்தி நிறுவனங்கள், அதன் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ் நாட்டின் தொழில் துறையில் நலிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடன், ஃபோர்டு நிர்வாகத்துடன் பேசுகிறார் என்ற செய்தி தொழிலாளர்களுக்குப் பெரும் ஆறுதலைத் தருகிறது.

ஃபோர்டு தொழில் நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவது குறித்து டாடா நிறுவன உயர் அதிகாரிகள் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசிய நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் இது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நல்ல ஆட்சியைத் தந்து கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முயற்சி வெற்றி பெறும், தொழிலாளர்கள் அமைதி பெறுவர் என்ற நம்பிக்கை துளிர்க்கத் தொடங்கி விட்டது.

***

 "கண்டா வரச் சொல்லுங்க!"

"சென்னை, பூந்தமல்லியில இருக்கிற குயின்ஸ்லேண்ட் நிலம், காஞ்சி மாவட்டத்தின் ரெண்டு கோயில்களின் சொத்து. துணிச்சல் இருந்தா அதுல கைவச்சுப் பாக்கட்டும்ன்னேன். அப்பிடிச் செய்ஞ்சிட்டா, நானே வந்து பாராட்டுறேன்"என்று கொக்கரித்தார் ஹெச். ராஜா.

இப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அங்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 70 ஏக்கர் நிலத்தின் மீது நடவடிக்கை எடுத்து விட்டார். ஆனால் அதனைப் பாராட்டுவதற்கு வருவதாகச் சொன்ன ஹெச். ராஜாவைக் காணவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுப்பியுள்ள பிடி வாரண்டுக்குப் பயந்து எங்கோ பதுங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

கண்டா வரச் சொல்லுங்க!

***

 உழைக்கும் மக்கள் சோம்பேறிகளாம்!

2005ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டது. அங்கங்கே தூர் வாருதல் போன்ற பணிகள் நடைபெற்றன. சிற்றூர்களில் வாழும் ஏழை மக்களுக்குப் பெரும் உதவியாகவும் அத்திட்டம் அமைந்தது. இப்போது அதனை 150 நாள் வேலைத்திட்டமாக மாற்றும் அறிவிப்பு வந்துள்ளது.

இது பொறுக்கவில்லை சிலருக்கு! நூறு நாள் வேலைத்திட்டம் நாசக்காரத் திட்டமாம். கிராமத்து மக்களைச் சோம்பிக் கிடக்க வைக்கிறதாம். எல்லோரும் ஏரிக்கரையில் அமர்ந்து சீட்டாடுகிறார்களாம். இதனால் விவசாயம் வீணாகி விட்டதாம்" - சொல்கிறார் ஒரு சூரப் புலி! அதனை ஆதரிக்கிறார் ஒரு அண்ணாமலை!

இந்த மக்கள் விரோதிகளைக் கண்டு குமுறுகின்றனர் உழைக்கும் மக்கள்! அந்த வெட்டிப் பேச்சாளர்களை நேரில் வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்கின்றனர் அவர்கள்.

- கருஞ்சட்டைத் தமிழர்