அடடா அருமை அவைத்தலைவர் அவர்களே! வெளிப்படுத்த வேண்டிய செய்தியை, வெளிப்படுத்த வேண்டிய இடத்த்தில், வெளிப்படுத்த வேண்டிய முறையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

appavu 224அண்மையில் சிம்லாவில் நடைபெற்ற அனைத்திந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டில், தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவு அவர்கள் ஆற்றியுள்ள உரை, இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. தமிழ்நாட்டின் சார்பில் அவர் பேசியுள்ள போதிலும், ஒவ்வொரு மாநிலத்தின் தேவையையும் அது எதிரொலித்துள்ளது!

அப்பாவு அவர்கள் தன் உரையில் இரண்டு முதன்மையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இரண்டுமே மிக மிக நியாயமானவை. ஜனநாயகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பக் கூடியவை!

தமிழ்நாடு மக்களின் எண்ணங்களை எடுத்துச் சொல்லக்கூடிய அவைதான் சட்டமன்றம். எனினும் அந்த அவையில் ஒரு மனதாகவோ, பெரும்பான்மை அடிப்படையிலோ நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உடனடியாகச் சட்டம் ஆகிவிடுவதில்லை. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றபின்பே அவை சட்டங்களாகும். குடியரசுத் தலைவருக்கு ஒவ்வொரு தீர்மானமும் அந்தந்த மாநில ஆளுநர் வழியாகவே அனுப்பப்படும்.

அந்தத் தீர்மானங்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம், அல்லது திருத்தம் கோரித் திருப்பி அனுப்பலாம். ஆனால் இங்கே என்ன நடக்கிறது என்றால், பல தீர்மானங்கள் “கருந்துளை”யில் சிக்கிக் கொள்ளும் பொருள்கள் ஆகிவிடுகின்றன. எந்த விடையும் ஆளுநரிடம் வருவதில்லை. அந்தத் தீர்மானங்கள் என்ன ஆயின என்றே யாருக்கும் தெரியாது.

இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவர், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்த வேண்டும் (“We have to work together to set a binding time frame within which Bills have to be assented to, returned or reserved for the consideration of the Hon’ble President of India by the Hon’ble Governors) என்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அடுத்ததாக குடியரசுத் தலைவர் குறித்தும் ஒரு வினாவை எழுப்பியுள்ளார். சில நேரங்களில் ஆளுநர் தில்லிக்கு அனுப்பி வைத்தப் பிறகும், குடியரசுத் தலைவர் உடனே நடவடிக்கை எடுப்பதில்லை. ஒருவேளை, குடியரசுத் தலைவர் அதனை ஏற்கவில்லை என்றால், எந்தக் காரணமும் கூறாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்.

குடியரசுத்தலைவருக்கு உள்ள அதிகாரத்தில் நம் அவைத்தலைவர் தலையிடவில்லை. ஆனால் மிக நியாயமான, பொட்டில் அறைந்தாற்போன்ற ஒரு வினாவை அங்கு முன்வைத்திருக்கிறார். காரணத்தைச் சொன்னால்தானே, திருத்தங்கள் தேவைப்பட்டாலும் அவற்றைச் செய்து மீண்டும் அனுப்ப முடியும்! காரணம் தெரிந்துகொள்ளும் தகுதி கூட, ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் இல்லையா? ( “Therefore, are not the people entitled to know atleast the reason for which the Bill was not assented to? “) என்று கேட்டுள்ளார்.

காரணமே சொல்லாமல் ஒரு தீர்மானத்தைத் திருப்பி அனுப்புவது, அந்தத் தீர்மானத்தையோ, அந்த மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியையோ, சட்டமன்றத்தையோ அவமதிப்பது மட்டும் இல்லை. வாக்களித்த மக்களை ஒட்டுமொத்தமாக அவமதிப்பது என்பதை அப்பாவு அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்.

தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு ஆளுநருக்குக் காலக் கெடு எதுவுமில்லை, திருப்பி அனுப்பப்படுவதற்கான காரணத்தைக் குடியரசுத் தலைவர் சொல்ல வேண்டியதுமில்லை என்றால், இதற்குப் பெயர் ஜனநாயகமா?

தமிழ்நாடு எழுப்பியுள்ள இந்தக் கேள்வி இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது!

உரிமைக் குரல் எழுப்பிய அவைத்தலைவர் அவர்களுக்கும், உரிமைப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவே கடமைப்பட்டுள்ளது!

சுப.வீரபாண்டியன்