பால்ய பருவத்தில் ஒருமுறை இரவு மொட்டை மாடியில் அப்பாவுடன் படுத்திருந்தேன்.  அப்பா வானத்து மேகங்களின் அமைப்பை பார்த்துவிட்டு, நிலவைச் சுற்றி வெற்று விரலால் ஒரு வட்டம் வரைந்தார். அவர் வரைந்த திசையினை உற்றுக் கவனித்த போது நிலவைச்சுற்றி மேகங்கள் வட்டமாகக் கூடு கட்டியது போன்ற அமைப்பை நானும் என் தங்கையும் பார்த்தோம். அப்பா சொன்னார் ”நாளை அல்லது நாளைய மறுதினம் மழைபெய்யும், நீ, வேணுமின்னா பாரேன்” என்றார். அப்போது மழைக்காலம் கூட இல்லை. ஆனால் அப்பா சொன்னது போலவே மழை வெளுத்து வாங்கியது. எங்களுக்கெல்லாம் பெருத்த வியப்பு. விவசாயியின் மகனான அப்பாவுக்கு வானியல் பற்றிய தெளிவும் அனுபவம் கற்றுத்தந்த அறிவும் மிகச்சரியாகக் கணிக்க கற்றுக் கொடுத்திருந்தது என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்.

மின்னிக்கொண்டிருக்கிற வானத்தைப் பார்த்து அப்பா ”மின்னுவனவெல்லாம் பின்னுக்கு” போகிற போக்கில் சொல்வார்.  அவர் சொல்லுக்கென்றே பெருமழை ஒன்று வானத்தில் அடைகாத்துக் காத்துக் கொண்டிருக்கும். ஆச்சரியம்தான், இப்படித்தான் வானத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டுகொண்டு அடுத்த மாற்றங்களை நம் முன்னோர்கள் வெகு லகுவாக சொன்னார்கள். ஆனால் காலநிலை மாற மாற நம் கணிப்புகளைப் பொய்ப்பித்து பல பருவநிலை மாற்றங்களை உலகம் அடைந்து கொண்டு வருகிறது. பருவம் தவறிய மழை, தாங்க முடியாத குளிர், நடுப்பகல் பனிமூட்டம் என பல மாற்றங்களை எதிர்கொள்கிறோம். துருவங்கள் உருகுகின்றன, பருவங்கள் மாறுகின்றன. வானம் ஒவ்வொருநாளும் ஒரு வேடிக்கை  நிகழ்த்துகிறது.

அதெல்லாம் கிடக்கட்டும், ’நாளை மழை வருமா? வராதா? அதுமட்டும் சொல்லுங்கள் போதும்’ என்று மாடிக்குச் சென்று துணியைக் காயப் போடுபவர் முதல் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பவர் வரை கேட்கும் முதன்மைக் கேள்வி. மனிதன் எழுப்பும் எல்லா புதிர்களுக்கும் அறிவியல் தன்னகத்தே விடைகளை வைத்திருக்கின்றவே.  நம் கைகளில் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் செயலி இதனைச் சாத்தியப் படுத்துகிறது.

ப்ளே ஸ்டோர் சென்று AccuWeather with Superior Accuracy என்று தட்டச்சு செய்யுங்கள். செஞ்சூரியன் போன்ற சின்னத்துடன் உங்களுக்கு ஒரு செயலி தோன்றும். இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் GPS இயக்குங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை அதுவாகவே தேர்வு செய்து கொள்ளும். நொடிப்பொழுதில் உங்களுக்கு இது வானிலையினை அறிவிக்கும்.

ஆமாம், வானிலை குறித்து அறிய பல்வேறு தளங்கள் இருந்தாலும் துல்லியமான பல்வேறு வானிலைத் தகவல் சேவை மூலம் நம்மை வெகுவாகக் கவருகிறது.  இதனை திரையில் தீம் ஆக நிறுவிக்கொண்டால் சூரியன் தகிக்கும் போது வெயில் போலவும் மழையடித்தால் சாரல் பொழிவது போலவும் வானம் இறங்கி வண்ணத்திரைக்குள் வந்து விடும்.  ஒவ்வொரு மணித்துளியும் இது தானாகவே வானிலைக்கு ஏற்றதுபோல் மாறிவிடுகிறது. மழை வருமா வராதா என்ற கேள்வி மட்டுமல்ல இப்போது என்ன வெப்பநிலை நிலவுகிறது என்றும் உங்களுக்கு முன்கூட்டியே எச்சரித்துவிடும்.

இந்த செயலியில் பிடித்த அம்சம் என்னவென்றால் காற்று எந்தத் திசையில் இருந்து அடிக்கிறது. அது எவ்வளவு வேகத்தில் அடிக்கிறது என்பதை தமது சாதனங்கள் மூலம் பெறும் தகவலில் இருந்து சரியாகச் சொல்லிவிடுகிறது. நாள்தோறும் நமது வாட்ஸ் ஆப் குழுவில் வானிலை தொடர்பாக வரும் அறிக்கைகள் ஏதும் நம்பும்படி இல்லை. இது நம்பகமான தகவல் இல்லை, வதந்தியா என ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றவாறு   இந்தச் செயலியைச் சொடுக்கினால் போதும் வானிலை குறித்த செய்தியை, பத்தியாக, காணொளியாக, படமாகத் தந்துவிடுகிறது.  ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் இது Update செய்யப்படுகிறது.

இந்த வானிலை அறிக்கை உங்கள் பகுதி மட்டுமல்ல, நீங்கள் பயணம் செய்யுமிடம் உலகின் எந்தப் பகுதியானாலும் அந்த இடத்தின் பெயரினை உள்ளீடு செய்தால்  இன்னும் பதினைந்து நாள்களுக்கான வானிலை நிகழ்வுகளை இது உங்களுக்குச் சொல்லிவிடும். Visibility  என்ற பகுதியில் எவ்வளவு தூரம் உங்களுக்குப் பார்வை புலப்படும் என்பதை மீட்டர் அளவில் தெரிவித்துவிடும். கூடவே காற்றில் உள்ள ஈரப்பதம், சூழியலில் உள்ள மாசு ஆகியன குறித்தும் எடுத்துச் சொல்லுகிறது. இந்தச் செயலியின் வடிவமைக்கப்பட்ட விதத்தில் இருந்தே பல செய்திகளை நாம் அறிய முடிகிறது. பல பயனர்களின் பாராட்டுகளை இந்தச் செயலி பெற்றதால் ப்ளே ஸ்டோரின் ஆசிரியர் குழு இந்தச் செயலியைப் பரிந்துரைக்கின்றனர். எனவேதான் அதிகப் பயனர்கள் இந்தச் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு நாள் பொழுதில் சூரியன் எத்தனை மணிக்கு உதிக்கும் எத்தனை மணிக்கு மறையும் என்பதெல்லாம் இந்த செயலி புட்டு புட்டு வைத்துவிடும். இந்த செயலியினால், புவிப்பந்தில் எந்தெந்த நாடுகளில் என்ன மாதிரியான பருவநிலை மாற்றங்கள் உள்ளன. தற்சமயம் என்ன விதமான நிலைமை உள்ளது என்பதை, செய்தி, காணொளிப்படங்களாக நாம் அறியலாம். புவிப்பந்தின் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் மழை மேகங்கள் நகரும் திசையினை நாம் தெரிந்து கொள்ளலாம். Real Fee மற்றும் Accu Weather நிறுவனங்கள் தமக்கென தனித்துவத்தின் வழியே நல்லதொரு சேவையை வழங்கிப் பல நாடுகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு வருகின்றன.

வடக்கிலிருந்து தெற்கே வரும் பிரதமர் நமக்கு என்ன செய்யப்போகிறார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி வரும் காற்று நமக்கு மழைதருமா? புயல் தருமா என்பதை இந்தச் செயலி  நமக்கு ஒளிவு மறைவற்றுத் தருகிறது.  ஒருவேளை மழை வேண்டுமானால் பொய்த்துப் போகும், ஒரு போதும் சூரியனும் அது தரும் ஆற்றலும் பொய்ப்பதில்லை என்பதைக் காலமும் காலநிலையும் நமக்கு உணர்த்தும் பேருண்மை.

இந்தச் செயலியினைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் https://play. google.com/store/apps/details?id=com. accuweather.android&hl=en