ஆனந்தவிகடன் வார இதழில், கமல்ஹாசன் ஒரு தொடர் எழுதி வருகின்றார். அதில் இந்தவாரம், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் விடுத்துள்ள விடை ஒன்றில், “எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

kamal 265இதற்காக அவர் மீது வாரணாசி நீதிமன்றத்தில், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கும் முயற்சி நடைபெறுகிறது. பாஜகவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன், புதிய தலைமுறை தொலைக்காட்சியில், குஷ்புவின் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்ததை நினைவு படுத்துகின்றார். அதாவது கமல் மீதும் பல ஊர்களில் வழக்குத் தொடரும் எண்ணம் உள்ளது என்ற உண்மை வெளிவந்துள்ளது.

இதனைத் தாண்டி, கமல், தீவிரவாதிகளின் ஆதரவாளர் ஆகிவிட்டார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். கமலே ஒரு தீவிரவாதி, அவரைக் கைது செய்யுங்கள் என்று சொல்லும் அடுத்த கட்டத்திற்கு பாஜகவினர் சென்றாலும் வியப்படைய ஒன்றுமில்லை.

உண்மையில், கமலின் விடை சரியான அழுத்தம் உடையதாக இல்லை என்றே கூற வேண்டும். ஏதோ இப்போதுதான், இந்துமத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகள் ஆகியுள்ளது போல அவர் சொல்லியிருக்கிறார். அதற்கே அவர்கள் தாண்டிக் குதிக்கின்றனர். வன்முறையில் மட்டுமே நம்பிக்கை உள்ள மத அடிப்படைவாதக் குழுக்களே அவர்களிடம் மிகுதி. அன்று தொடங்கி இன்று வரையில் வன்முறையில் வளர்ந்தவை தான் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள் இவற்றைத் தாண்டி, பகல்பூர், மாலேகான் குண்டுவெடிப்பு, மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற தவறான தகவலின் அடிப்படையில் ஒரு பெரியவரை அடித்தே கொன்றது என ஆயிரம் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

நரேந்திர தோபால்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகிய நான்கு எழுத்தாளர்களைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிகள் எவை? தமிழ்நாட்டில், மண்டைக்காடு கலவரத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கு இருந்தது என்பதை நீதிபதி வேணுகோபால் குழு வெளிப்படையாகவே சுட்டியிருந்தது.

இவ்வாறு, இந்துமத அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் ஊரறிந்த ஒன்று. இதற்கும், தங்களை இந்துக்கள் என்று கருதிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதே போலத்தான், குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் யாரோ ஒரு சில இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அங்கே மட்டும் சற்றும் கூசாமல், ‘இஸ்லாமியத் தீவிரவாதம்‘ என்னும் தொடரைப் பயன்படுத்துகின்றனர்.

சரி, இப்போது கமலை ஏன் மிரட்ட முயல்கின்றனர்? இது கமலை மிரட்டுவதன்று. கருத்துரிமையை மிரட்டுவது. யாரும் எங்களைப் பற்றிப் பேசிவிடக் கூடாது. திரைப்படத்தில் கூட, ஜி.எஸ்.டி வரியைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்னும் சர்வாதிகாரப் போக்கே இது.

பா.ஜ.க.வின் இந்தப் போக்கை, அவர்ளுக்கு ஆதரவாக இருந்தவர்களே இன்று புரிந்து எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்பு வரை ஆதரவான கருத்துகளை எழுதிய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, “மோடியின் சர்வாதிகாரப் போக்கை” இப்போது கண்டித்துள்ளார். சென்ற தேர்தலில் அவர்களுக்காக வாக்குகளைக் கேட்ட மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி, தன் செய்கைக்காக மக்களிடம் இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

அடக்கி ஒடுக்கி அனைவரையும் அடிபணிய வைத்துவிடலாம் என்னும் காலம் மலையேறிவிட்டது. அடிக்க அடிக்கப் பந்து எழும் என்பதுதான் அறிவியல். அதனை அவர்கள் உணர வேண்டும். நமக்குள் இருக்கிற சிற்சில வேறுபாடுகளை மறந்து, பாசிசத்திற்கு எதிராகவும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் நாடு பிழைக்கும் என்பதை ஜனநாயகவாதிகளும் உணர வேண்டும்.