மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் வருணாசிரமத்தின் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பு, இந்தியாவில் பல்வேறு சாதிகளின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

- மண்டல் குழு அறிக்கை, தொகுதி ஒன்று, ப.16.

vp singh1979 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 340 இன் கீழ், கல்வியிலும், சமூகத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களின் நலன்களைக் குறித்து ஆராய, பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு அதன் தலைவரின் பெயரால் மண்டல் குழு என்று அழைக்கப்பட்டது. மண்டல் குழு தனது அறிக்கையை 1980 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. மொத்தம் 3,743 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளாக அடையாளம் காட்டிய மண்டல் குழு, அவை பின்தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம் சாதியே என்று தனது பரிந்துரையில் குறிப்பிட்டது. மண்டல் குழுவின் கணக்குப்படி, இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் விழுக்காடு 52% ஆகும். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நடுவண் அரசின் வேலைவாய்ப்பில் 12.55% மட்டுமே பெற்றிருந்தனர் என்றும் மண்டல் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

நடுவண் அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவதே இந்தச் சமத்துவமற்ற நிலையைப் போக்குவதற்கான வழி என்றும் மண்டல் குழு பரிந்துரை செய்தது.

ஜனதா அரசுக்குப் பின்னர் வந்த இந்திரா மற்றும் இராஜிவ் காந்தியின் அரசுகள், மண்டல் குழுவின் பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டன. 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, மண்டல் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் ஆணையை 13.08.1990- இல் வெளியிட்டது.

இந்த அறிவிப்பினை அடுத்து, இந்தியாவின் வட மாநிலங்களில் மிகப் பெரும் போராட்டங்கள் வெடித்தன. தில்லிப் பல்கலைக்கழக மாணவர் இராஜிவ் கோஸ்வாமி தீக்குளித்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 62 பேர் உயிரிழந்தனர். கலவரங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அடுத்த மாதமே உச்சநீதிமன்றத்தில் இவ்வாணையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுத் தடையாணை பெறப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் பேணிக் காக்கப்படுவதைக் கண்ட பார்ப்பனீயம் தனது வழக்கமான கலவர ஆயுதத்தைக் கையிலெடுத்தது. ஆம்! நேரடியாக இட ஒதுக்கீட்டை எதிர்க்க முடியாத பாஜக, இராமர் கோயில் விவகாரத்தைக் கையிலெடுத்தது. 1990 செப்டம்பர் 25 அன்று அத்வானி அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இரத யாத்திரையைத் தொடங்கினார். வெறுப்பரசியலை வளர்க்கும் நோக்கத்துடன், மத உணர்வைத் தூண்டும் வகையில் நடைபெற்ற இரத யாத்திரை, பீகார் மாநிலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. லாலு பிரசாத்தின் அரசு, அத்வானியைக் கைது செய்தது. ஆனாலும், இரத யாத்திரையின் தூண்டுதலால் உத்தரப் பிரதேசத்தில் குவிந்த கரசேவகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பாபர் மசூதியைத் தகர்க்க முற்பட்டனர். அப்போது இராணுவத்திற்கும், கரசேவகர்களுக்கும் நடைபெற்ற மோதலில், 20 கரசேவகர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் சாம்பலாக்கப்பட்டு, பானைகளில் சாம்பல் சேகரிக்கப்பட்டது. சாம்பல் சேகரிக்கப்பட்ட பானைகளை உத்தரப் பிரதேசத்தின் வீதிகளில் விசுவ இந்து பரிசத் அமைப்பினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மாண்டு போன தியாகிகளுக்காகப் பழி வாங்க வேண்டும் என்று இந்துக்கள் தூண்டப்பட்டனர். இசுலாமியர்களின் இருப்பிடங்கள் சூறையாடப்பட்டன. இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். இரத யாத்திரை ‘இரத்த’ யாத்திரையானது.

அத்வானி கைது செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக் கொண்டதையடுத்து, வி.பி. சிங் அரசு கவிழ்ந்தது. நாடாளுமன்றத்தில் வி.பி. சிங் அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக இருந்தது தி.மு.க. ஆனால் வாக்களிக்க தி.மு.க.விடம் எம்.பி.க்கள் இல்லை. ஆனால் அ.தி.மு.க.வின் ஏராளமான எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். 1991 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 85-இல் இருந்து, 120 ஆக உயர்ந்தது. பா.ஜ.க. என்னும் மரம் கலவரத்தைத் தூண்டாமல் காய்த்ததே இல்லை என்பது வரலாறு.

B.P.Mandalஇதனிடையே, மண்டல் குழு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை 16.11.1992 அன்று வழங்கியது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில், ஆறு பேர் மண்டல் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவாகவும், மூவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இறுதியில் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மண்டல் குழுவின் பரிந்துரைகளின்படி, நடுவண் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கி, வி.பி. சிங் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 1991- இல் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கிய காங்கிரஸ் அரசின் உத்தரவு செல்லாது என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. எனினும் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று தீர்ப்பில் சொல்லப்பட்டது, தமிழகத்தில் 1980 முதல் 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 69% இட ஒதுக்கீட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் தொடர் முயற்சியாலும், போராட்டத்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 31- சி பிரிவின்கீழ் தமிழக அரசால் தனிச்சட்டம் இயற்றப்பட்டு, தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமை பாதுகாக்கப்பட்டது என்பது தனி வரலாறு.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 27 ஆவது ஆண்டை எட்டும் இந்த வேளையிலும், நடுவண் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோரின் விழுக்காடு 15% கூடத் தாண்டவில்லை என்பது மாபெரும் அநீதி. இதனைக் களைய வேண்டும் என்பதை வலியுறுத்தவே 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சமூக நீதி மாநாட்டில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப் பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் தீர்ப்பின் நோக்கம் நிறைவு பெறும். ஆயிரமாண்டு கால அநீதிக்குத் தீர்வு கிடைக்கும்.

- வெற்றிச்செல்வன்