cauvery river

எதுவும் நடக்காது மே 3 ஆம் தேதி என்ற எதிர்பார்ப்பின்படி, காவிரி வரைவுத் திட்டம் (scheme) என்று பெயருக்கு ஒரு திட்டத்தைக் கூட. உச்ச நீதிமன்றத்தில் அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது.  கர்நாடகத் தேர்தலுக்காகப்  பிரதமர், அமைச்சர்கள் அனைவரும் அங்கு சென்று விட்டனராம். எனவே மேலும் இரண்டு வாரங்கள் கால நீட்டிப்பு கேட்டுள்ளது மோடி அரசு.

தமிழக மக்களுக்கு வெளிப்படையாக ஒரு பச்சைத் துரோகத்தை மத்திய அரசு செய்துள்ளது என்றால், நீதிமன்றமோ, வழக்கையே திசை திருப்பியுள்ளது. கர்நாடக அரசை நோக்கி, உடனடியாக, 4 டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும், இல்லையேல் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கின்றது.

கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை என்பதுதானே வழக்கு. அதனால்தானே, மத்திய அரசை நாம் அணுகினோம். அங்கும் தீர்வு கிடைக்காமல்தானே நடுவர் மன்றம் அமைந்தது. அதிலும் பயனின்றித்தானே உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது. அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில் அல்லவா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில்தான், ஸ்கீம் என்றால் என்ன என்று, ‘ஒன்றுமே தெரியாத’ மத்திய  அரசு விளக்கம் கேட்டது.

மீண்டும் முதல் கட்டத்திற்கு வந்து, கர்நாடக அரசைப் பார்த்து, உடனே தண்ணீர் விடு என்றால் என்ன பொருள்? அதுவும் இப்போது அங்கே, அதிகாரமற்ற வெறும் பாதுகாவல் அரசு (Care taker government) மட்டுமே உள்ளது. இங்கே தண்ணீர் இல்லை, இருந்தாலும் விடுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

எல்லோருமாகச் சேர்ந்து ஒரு கூத்துப்பட்டறை நடத்துகின்றனர். ஆம், அரங்கேறிக் கொண்டிருக்கிறது ‘ஆரியக் கூத்து.’