“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்”

என்று பாரதியார் பாடினார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குடியரசுத் தலைவர் விருதுக்கான அறிவிப்பில் தமிழ் மொழியை எங்கும் காணமுடியவில்லை.

சமஸ்கிருதம், பாலி / பிராகிருதம், அரபி, பாரசீகம், செம்மொழி தகுதி பெற்ற ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அப்பட்டமாகத் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

தமிழை ‘நீச’ பாஷையாகக் கருதும் கொள்கை கொண்ட மத்திய ம(னி)த  வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இப்படித்தான் செய்யும். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் திருவள்ளுவர் தொடங்கி தமிழ்த்தாய் வாழ்த்து வரை தமிழை முடிந்த  அளவிற்கு அவமதிப்பு செய்திருக்கிறார்கள்.

ஆண்டாள் விவகாரத்தில் ஆகாயத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தவர்கள் இப்போது ஆளே காணவில்லை. தெய்வத்தமிழ் ஆன்மிகத் தமிழ் என்று மொழிக்கு உரிமை கொண்டாடியவர்களின் உண்மை முகம் இப்போது மீண்டும் உலகிற்குத் துலங்கியிருக்கிறது.

தமிழை, தமிழர்களை அவமதிக்கும் போக்கு கொண்ட மத்திய அரசை எதிர்த்துத் தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருப்போர் ஒரு நாள் எழுந்து குரல் கொடுப்பார்கள் என்று நாம் எண்ணுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதே ஆகும். மத்திய அரசின் இந்தப் போக்கைத் தமிழ்நாட்டின் பல்வேறு தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள். இந்தக் குரல் தமிழ்மொழிக்கு மட்டுமானது அல்ல. சமஸ்கிருத / இந்தி ஆதிக்கத்திற்குள் நசுங்கும் மற்ற மொழிகளுக்குமானது.

உலகமெல்லாம் போற்றப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி இங்கு மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. ஆயிரம் கரங்கள் மறைத்தாலும், ஆரியம் போல் உலகவழக்கழிந்து ஒழிந்து சிதையா சீரிளமைத் திறம் கொண்ட தமிழ் என்னும் ஆதவனை மறைக்க முடியாது.