mkstalinஅன்று சர்வாதிகாரி ஹிட்லருக்கு முடிவுரை எழுதினார் புரட்சியாளர் ஸ்டாலின். அதே போன்று இன்று நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் மோடி - அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துத் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்ட பழனிச்சாமி - பன்னீர்செல்வம் கூட்டத்தினருக்கு எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் முடிவுரை எழுதப் போகிறார் மு.க.ஸ்டாலின்.

பாசிச பா.ஜ.கவுடன் கரம் கோர்க்க பச்சைக் கொடி காட்டியிருந்தால் அம்மையார் ஜெயலலிதா மறைந்தபோதே மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் கொல்லைப் புறமாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்பதோடு பா.ஜ.கவைத் துணிவோடு எதிர்த்து நின்றார்.

தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த போது, அவரது விருப்பப்படி பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகிலேயே அவரது உடலை அடக்கம் செய்ய தி.மு.க விரும்பியது. அதற்கு அடிமை அ.தி.மு.க அரசு அனுமதி மறுத்தது. அப்போது அனுமதி பெற தங்களைத் தொடர்பு கொள்வார்கள் என பா.ஜ.க எண்ணியது.

அதன் மூலம் தி.மு.கவைத் தங்கள் வலைக்குள் கொண்டு வந்துவிடத் துடித்தது. ஆயினும் மு.க.ஸ்டாலின் தி.மு.க வழக்கறிஞரணி மூலம் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். தலைவர் கலைஞரின் கடைசி ஆசையையும் நிறைவேற்றிக் காட்டினார்.

தி.மு.க தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின் "நாடு முழுவதும் காவி வண்ணம் அடிக்க பா.ஜ.க நினைக்கிறது. அதை ஒரு போதும் நிறைவேற்ற விட மாட்டோம்" என்று சூளுரை மேற்கொண்டார். சொன்னதைப் போலவே 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்தார். நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.முகவை உயர்த்தினார்.

அவரைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் வலுவானக் கூட்டணியை அமைத்திருந்தால் பா.ஜ.க ஆட்சியை இழந்து இருக்கும். மீண்டும் வென்ற பா.ஜ.க நாடாளுமன்றத்தில் "ஜெய் ராம்! பாரத் மாதா கீ ஜே!" என்று கொக்கரித்த போது தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து வென்ற நமது 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் "தமிழ் வாழ்க! தந்தை பெரியார் வாழ்க! பேரறிஞர் அண்ணா வாழ்க! தலைவர் கலைஞர் வாழ்க!" என்று முழங்கி பா.ஜ.கவிற்குப் பதிலடி கொடுத்தனர்.

இந்தியாவைக் காவிமயமாக்கத் துடிக்கும் பா.ஜ.கவின் செயல்திட்டங்களான "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளான் சட்டங்கள்" போன்றவற்றை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் துணிவோடு எதிர்த்து நின்றார்.

அதனால் தான் பா.ஜ.க அல்லாத அரசு ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அமைந்த போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கௌரவிக்கப்பட்டார்.

தி.மு.க தலைவராக தான் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி (39 / 40) பெற்றதைப் போலவே ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பெருவெற்றி (மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் - 244 & ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் - 2095) பெற்றார். ஆளும் அ.தி.மு.க 214 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களையும், 1792 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களையும் தான் பெற்றது.

அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட காட்டுப்பள்ளித் துறைமுகம், ஜாதி வெறியர்களால் நடத்தப்படும் ஆணவப் படுகொலைகள், பொள்ளாச்சி பாலியல் சம்பவம், பெண் எஸ்.பிக்கு சிறப்பு டி.ஜி.பி பாலியல் தொந்தரவு, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை - மகன் படுகொலை, தமிழக அரசுப் பணியிடங்களுக்கு வெளி மாநிலத்தவர் நியமனம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சேலம் எட்டு வழிச் சாலைக்கு விவசாய நிலங்கள் பறிப்பு, தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யம் என தமிழ்நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

செயலற்றுக் கிடந்த அ.தி.மு.க ஆட்சியைத் தனது அறிக்கைகள் மூலமும் தி.மு.க வழக்கறிஞரணி தொடர்ந்த வழக்குகள் மூலமும் செயல்பட வைத்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். மக்களிடம் வரவேற்பைப் பெற்ற அ.தி.மு.க அரசின் ஒரு சில அறிவிப்புகளும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் முந்தைய அறிக்கைகளே.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆளும் அரசுகள் எவ்வித உதவிகளையும் செய்யாத போது "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் மூலம் மக்களின் தேவையறிந்து தக்க உதவிகளை தி.மு.கவினர் மூலம் செய்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற பரப்புரை மற்றும் கழகத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப்பயணம் மூலம் பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகளைக் கேட்டுத் தி.மு.க தேர்தல் அறிக்கை, அடுத்தப் பத்தாண்டிற்கான தொலைநோக்குத் திட்டம் போன்றவற்றைத் தயாரித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆகவேதான் தமிழ்நாட்டில் தற்போது "ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு" என்ற ஒருமித்த குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாசிச பா.ஜ.க மற்றும் அடிமை அ.தி.மு.கவிடம் இருந்து தமிழகத்தை மீட்கும் இந்தத் தேர்தலில் பெரியாரிய மார்க்சிய அம்பேத்காரிய தோழர்கள் அனைவரும் இணைந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

சர்வாதிகாரம் வீழட்டும் ! மக்களாட்சி மலரட்டும் !!

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து