இந்தியாவில் 15வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை இருந்த 14 குடியரசுத் தலைவர்களில ஆறு பேர் பார்ப்பனர்கள், மூவர் இஸ்லாமியர், ஒருவர் பார்ப்பனர் அல்லாத முன்னேறிய வகுப்பை சார்ந்த சஞ்சீவ ரெட்டி, ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கியானி ஜெயில் சிங், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் இருவர், மகளிர் ஒருவர் திருமதி பிரதீபா பாட்டில்.

 முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க நீண்ட பரிசீலனைகளை மேற்கொண்டன. ஆளும் கட்சியான பாஜக, பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு என்னும் வேட்பாளரைக் களம் இறக்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் மேனாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களை நிறுத்தி உள்ளன. yashwanth sinhaகுடியரசுத் தலைவர் தேர்தலில் 1969இல் தி.மு.கழகம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் வி. வி. கிரி அவர்களை வேட்பாளராக நிறுத்தினார். ஆனால் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களை நிறுத்தியது. இயல்பாக ஆளும் கட்சி நிறுத்தும் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார். ஆனால் அன்றைய தினம் 25 எம்.பி.-க்களை கொண்ட திமுக, ஆளுங்கட்சிக்கு எதிராக நிறுத்தப்பட்ட வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்தது. அதுமட்டுமல்ல 1983இல் பிரதமர் இந்திரா காந்தி பார்ப்பன சமுதாயத்தைச் சார்ந்த ஆர். வெங்கட்ராமன் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் களமிறக்க நினைத்தபோது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக கியானி ஜெயில் சிங் அவர்களை நிறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் வைத்து வென்றவர் அன்றைய தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். ஆறு முன்னேறிய மற்றும் இஸ்லாமிய குடியரசுத் தலைவர்களுக்கு பின் முதன்முதலாக ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவர் ஆனது அப்போதுதான். அதுபோலவே பதினோரு ஆண்கள் தொடர்ந்து வகித்து வந்த குடியரசுத் தலைவர் பதவியை முதன்முதலாக ஒரு பெண்ணை, பிரதீபா பாட்டில் அவர்களைத் தேர்வு செய்யப் பரிந்துரை செய்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர் தான்.

 அந்த வரிசையில் இப்போது முதன்முதலாக ஒரு பழங்குடி இனத்தைச் சார்ந்தவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. அவர் பிறந்த இனம் பழங்குடி இனம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவரைப் பழங்குடி மக்களின் பிரதிநிதி என்பதையும் ஏற்க முடியாது. திரெளபதி முர்மு அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மாநில அமைச்சராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்த முன் அனுபவம் உள்ளவர். என்றாலும் அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோதுதான் பல்லாயிரம் பழங்குடி மக்கள் வசித்த நிலங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க அரசு முடிவெடுத்தது. தங்கள் வாழ்விடங்களைக் காலி செய்ய மாட்டோம் என்று போராடிய பழங்குடி மக்கள் மீது அரசு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, அவர்களைச் சுட்டுப் பொசுக்கிய போது அவர்களுக்காக குரல் கொடுக்காமல், தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள இக்கொடுமைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வர்தான், இன்று பழங்குடி மக்களின் பிரதிநிதியாகக் காட்டப்படுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்?

தமிழ்நாட்டைச் சார்ந்த ஸ்டேன் சாமிகள் ஜார்கண்டில் உள்ள பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடும் சிறையில் தள்ளப்பட்டு அங்கேயே கொல்லப்பட்டபோது இந்தப் பழங்குடி ஆளுநர் துரும்பைக்கூட நகர்த்த வில்லை.

மதவாத இந்துத்துவா சக்திகள் எப்போதும் காட்டிக் கொடுக்கும் சுயநலவாதிகளைத்தான் உச்சி முகந்து பாராட்டும். தந்தையை காட்டிக் கொடுத்த பிரகலாதன்தான் அவர்களுக்குப் போற்றத்தக்கவன். உடன் பிறந்தவர்களைக் காட்டிக் கொடுத்த விபீஷணனுக்கு தான் ஆழ்வார் பட்டம். அந்த வகையில் தன் இன மக்களுக்குத் துரோகம் செய்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆக்கியுள்ளனர்.

 காங்கிரஸ் கட்சி பட்டியல் இனத்தைச் சேர்ந்த பேரறிஞர் கே. ஆர். நாராயணன் அவர்களைக் குடியரசுத் தலைவர் ஆக்கியது. அதே சமயம் அதே இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை பாஜக குடியரசுத் தலைவர் ஆக்கியது. அதனால் பட்டியலின மக்கள் பெற்ற நன்மை என்ன? குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பூரி ஜெகநாதர் கோயிலுக்குச் சென்றபோது அங்கு பார்ப்பனப் புரோகிதர்கள் ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் கோவிலுக்குள் வந்ததால் அது தீட்டுப் பட்டதாகச் சொல்லி அந்த இடத்தைக் கழுவி விட்டனர்.இது தீண்டாமைச் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். அதை மதவாத பாஜக அரசு வேடிக்கை பார்த்தது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மூவருக்கும் கொடுக்கப்பட்ட ஒரு வரவேற்பில் மோடியும் அமித் ஷாவும் சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெறுகின்றனர். பட்டியல் இனத்தைச் சார்ந்த குடியரசுத் தலைவரை ஓரத்தில் நடக்க வைத்து ஓரவஞ்சனை செய்தது இந்த பாஜக அரசுதான்.

 எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஸ்வந்த் சின்கா ஒரு ஆர்எஸ்எஸ் வார்ப்புதான் என்றாலும் ஆர்எஸ்எஸ்-ஐயும், பாஜகவையும் அவற்றின் மதவாதப் போக்குகளையும் வெறுத்து வெளியேறி வந்தவர் அவர். ஆர்எஸ்எஸ்-இன் பாஜகவை உள்ளும் புறமும் முற்றும் அறிந்தவர். இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றார். மூத்தவர், முதிர்ந்தவர்.

இன்றைக்கு உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஸ்வந்த் சின்கா வெற்றி பெற்றால்தான் இந்தியாவின் ஜனநாயகம் தழைக்கும். எதேச்சதிகார பாஜக அரசுக்குச் சரியான கடிவாளம் போட வேண்டும் என்றால் அதற்கு யஸ்வந்த் சின்கா வென்றாக வேண்டும். தமிழ்நாடு அமைச்சரவையில் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கூட கிடப்பில் போட்டு வைக்கும் தமிழ்நாட்டின் ஆளுநர் ரவிக்கும், ஒன்றிய அரசுக்கும் உரிய கடிவாளம் போட யஸ்வந்த் சின்கா குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா குடியரசுத் தலைவர் யஷ்வந்த் சின்கா அவர்களால் கையெழுத்திடப்பட்டு சட்ட வடிவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களாகிய நம்முடைய எதிர்பார்ப்பு.

வெல்லட்டும் யஸ்வந்த் சின்கா.

- பொள்ளாச்சி மா.உமாபதி