அண்மையில் திமுக செயல்தலைவர் தளபதி ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றிருந்தது குறித்துப் பல்வேறு செய்திகளும், அவற்றைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. ஸ்ரீரங்கம் கோயிலில், சுக்ரபிரிதி யாகம் செய்த காரணத்தால், குமாரசாமி, கர்நாடக முதலமைச்சர் ஆகி விட்டதாக அவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டாலினும் அதே முதலமைச்சர்ஆசையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கு அவருக்குக் கோயில் வாயிலிலேயே கோயில் பட்டர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர் என்றும் செய்திகள் வெளியாகின. யானை மாலையிட, பட்டர்கள் வரவேற்கும் காட்சியைத் தொலைக்காட்சிகள் படமாகவே காட்டின.

stalin at srirangam

குறிப்பாகத் தினமலர் இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்ந்தது. “தேர்தலில் வாக்குகள் வேண்டுமென்றால், திமுகவினர் குடுமி வளர்த்துக் கொண்டு கோயிலுக்கே வந்து வழிபாடு செய்வார்கள்” என்று ‘மகா யோக்கியர்’ சோ எப்போதோ ஒருமுறை சொன்னதாகவும், அது இப்போது பலித்து விட்டதென்றும் புலனத்தில் (வாட்ஸ் அப்) செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. திராவிட இயக்கம் கடைசியில் இந்து மதத்திடம் வந்து சரணடைந்து விட்டடது என்று எழுதிப் பலர் மகிழ்ச்சிக் கூத்தாடினார்.

“எனக்குத் தெரிந்தவரை கடந்த ஐந்து நாள்களாக அங்கு யாகம் நடந்து வருகிறது. தான் முதல்வர் ஆகி விட வேண்டும் என்ற ஆசையில் ஸ்டாலின் இந்த யாகத்தை நடத்தியுள்ளார். பக்தி நல்லதுதான். ஆனால் யாகம் நடத்தி முதல்வர் ஆகி விட முடியாது” என்றார், அதிகாரிகளை விட ஊடகவியல் நண்பர்களிடம் மட்டுமே அதிகம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு தமிழக அமைச்சர். “கண்ணாடியைத் திருப்பினால், ஆட்டோ ஓடுமா?” என்று கேலி பேசினார் ஒரு கட்சித் தலைவர்.

இப்போது அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

திருச்சியில், திமுக சிறுபான்மை அணியினர் நடத்திய நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற தளபதி, ஸ்ரீரங்கத்தில் இரண்டு சோடிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காகச் ஸ்ரீரங்கம் சென்றார். அந்தத் திருமண மண்டபம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. கோயில் வாயிலைத் தாண்டியே அந்த மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது, கோயில் வாயிலில் ஒரு பெரும் கூட்டம் நின்று கொண்டிருந்தது. கோயில் யானையும் அங்கு நின்றது. கோயில் பட்டர்கள் அனைவரும் ‘பவ்வியமாக’ நிற்க, இசை முழங்க வரவேற்பும் நிகழ்ந்தது.

தன்னை வரவேற்கவே அனைவரும் கூடி நிற்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்ட தளபதி, அவர்களை மதிக்காமல் கடந்து செல்லக்கூடாது என்ற நாகரிகம் கருதித் தன் மகிழுந்தை விட்டு இறங்கினார். பட்டர்கள் பொன்னாடை போர்த்தினர். யானை மாலையிட்டது. தளபதி நெற்றியில் பட்டர்கள் குங்குமம் வைத்தனர். அவர்களின் வரவேற்பை நாகரிகம் கருதி ஏற்றுக்கொண்ட தளபதியை அவர்கள் கோயிலுக்குள் வருமாறு அழைத்தனர். “நேரமில்லை” என்று கூறி நயமாக மறுத்துவிட்டு, அவர்கள் முன்னிலையிலேயே அவர்கள் இட்ட குங்குமம் அல்லது திருநீற்றையும் அழித்துவிட்டு வண்டியில் ஏறி மண்டபம் சென்றார்.

இவ்வாறு நடந்தது என்பதை நான் சொல்லவில்லை, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு உள்ளிட்ட பல ஏடுகள் கூறியுள்ளன. நடந்ததற்கும் சொல்லப்படுவதற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளதே ஏன் என்பதை ஆராயுமுன், சொல்லப்பட்ட பொய்களுக்குள் எத்தனை முரண்பாடுகள் என்பதை முதலில் பார்க்கலாம்.

கோயிலில் யாகம் வளர்க்க வந்தார் என்கின்றனர். யாகம் வளர்க்க வந்தவர், கோயிலுக்குள் வரவே மறுத்து விட்டார் என்றும் கூறுகின்றனர். இந்து மதத்திடம் அடிபணிந்து விட்டார் என்று ‘ஆனந்தக் கூத்தாடும்‘ அவர்கள், நெற்றிக்குறியை அழித்ததன் மூலம் இந்து மதத்தை அவமதித்து விட்டார் என்றும் கூறுகின்றனர். குமாரசாமியைப் பின்பற்றி யாகம் வளர்க்க வந்தார் என்கின்றனர். ஆனால் அங்கு நடந்த திருமண வீட்டில், காவிரி ஆணையம் பற்றிக் குழப்பும் குமாரசாமியைக் கண்டித்துப் பேசியுள்ளார். அதனையும் நாளேடுகள் வெளியிட்டுள்ளன. எத்தனை எத்தனை முரண்கள்!!

உண்மை பேசினால் முரண் வராது. பொய் பேசும்போது முரண்களைத் தவிர்க்க முடியாது. இத்தனை பொய்களுக்கும் இத்தனை முரண்களுக்கும் என்ன காரணம்? பொய், பித்தலாட்டம் மூலமாகவேனும் திமுகவை அழித்துவிட வேண்டும் என்ற வஞ்சகம்தான் காரணம்.

பொய்யும், முரணும், வஞ்சகமும் வென்றதாக வரலாறு இல்லை. தோற்கும், அவை மறுபடியும் மறுபடியும் தோற்கும்!